Monday, February 6, 2012

மரண சிந்தனைகள்




மரணம் என்றால் என்ன? உடலை விட்டு உயிர் பிரிவதா? அதுதான் மரணமா?

ஒருவகையில் மரணம் என்பது உடலை விட்டு இந்த உயிர் பிரிவதுதான். ஏன் உடலைவிட்டு இந்த உயிர் பிரிகிறது? இந்த உடல் தான் வாழ தகுதியில்லை என்று உயிர் கருதுகிறபோது இந்த உடலை துறக்கத் தீர்மானிக்கிறது. அதைத்தான் மரணம் என்கிறோம்.

சரி. இது மட்டும்தான் மரணமா? இல்லை. நிறைய மரணங்கள் வாழ்க்கையில் உண்டு. ஒரு குழந்தை பிறக்கும்போது அது தூய்மையாய் இருக்கிறது. நம் இதயத்தில் உள்ள உயிரில் பல உள்ளுயிர்கள் உள்ளன. நாம் வளர வளர அத்தனை உள்ளுயிர்களும் இந்த பேருயிருக்குள் வளரத்துவங்குகின்றன. இந்த உள்ளுயிர்களை நாம் குணங்கள் என்றும் பேரிட்டு அழைக்கிறோம்.

இவற்றின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. கடவுள் ஒருவரே இவ்வுயிர்கள் கணக்கில் வைக்க முடியும். இவற்றை ஒரு மனிதன் எப்படி பயன்படுத்துகிறானோ அவ்விதமாகவே அவன் நல்லவனாகவோ தீயவனாகவோ மாறுகிறான்.

குழந்தையானது வளரும்போது தாய்ப்பாலுக்காக தாயை ஏமாற்றுகிறது பாருங்கள். அங்கே நிகழ்கிறது முதல் உள்ளுயிரின் மரணம். பள்ளியில் படிக்கும்போது, விளையாடும்போது பொய் சொல்கிறது பாருங்கள். அங்கே நிகழ்கிறது அடுத்த மரணம்.

களவு செய்யும்போது அடுத்த மரணம் நிகழ்கிறது. அடுத்தவர் பொருளை இச்சிக்கும்போது அடுத்த மரணம். வளர்ந்து வாலிபனான பிறகு முறையற்ற காதல், காமம் என்று சீரழிகிறது பாருங்கள். அப்போது நிகழ்கிறது அடுத்த மரணம்.

இப்படியாக மரணம் மரணம் மரணம் என்று நமக்குள் மரணங்களே நிகழ்ந்து கொண்டு இருப்பதால் நமக்குள் உள்ள அந்த தீய மனிதனே வளர்ந்துதான் இன்று பேயாட்டம் ஆடுகிறான். கடைசியில் இந்தப் பேருயிர் உடலை விட்டுப் பிரிந்து விடுகிறது.

மாறாக சிறு வயதிலிருந்தே முறையாக நல்லொழுக்கங்களை பெற்றோர் சொல்லிக் கொடுத்து வளர்க்கும்போது நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் (உள்ளுயிர்கள்) வளர்ந்து பெரியவராகும்போது நமக்குள் இருக்கும் அந்த நல்ல மனிதன் வளர்ந்து நமக்கும் நம் குடும்பத்துக்கும் நம் சமுதாயத்துக்கும் நம் நாட்டிற்கும் ஏன் இந்த முழு உலகத்துக்குமே பயன்தரும் அற்புதமான மனிதனாகிறான். பூரண ஆயுள் எனும் கட்டிடத்துக்கு நல்ல குணங்களே அஸ்திபாரங்களாகும்.

ஜீவனுள்ளவனாவதும் மரணவாசனையுடையவனாய் மாறுவதும் நம் கையில்தான் இருக்கிறது.

இறப்பிற்காக நாம் அழ வேண்டுமா? நிச்சயம் வேண்டும். நெருங்கியவர் பிரிந்தால் நெஞ்சம் தாங்குமா?

பட்டினத்தார் என்ன சொல்கிறார் தெரியுமா?

“அழுதால் பயனென்ன? நொந்தால் பயனென்ன? ஆவதில்லை
தொழுதால் பயனென்ன? நின்னை ஒருவர் கடவுரைத்த
பழுதால் பயனென்ன? நன்மையம் தீமையும் பங்கயத்தோன்
எழுதாப்படி வருமோ? சலியாதிரு என்ஏழை நெஞ்சே!”

இதே பட்டினத்தார்தான் தன் தாய் இறந்தபோது பாடிய பாடலைக் கேளுங்கள்:-

“ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்த கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?

முந்தித் தவம்கிடந்து முந்நூறுநாள் சுமந்தே
அந்திப் பகலாய்ச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்?

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன்?

அரிசியோ நான்இடுவேன், ஆத்தாள் தனக்கு?
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு?

வேகுதே தீயதனில், வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ! மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.”

- இந்தப் பாடலை பாடும்போது அல்லது வாசிக்கும் போது அழாமல் இருக்க முடியுமா?



டிஸ்கி:

பதிவர் மாயஉலகம் ராஜேஷ் அவர்களின் நினைவாக நாளை அதாவது செவ்வாயன்று பதிவுகள் இடாமல் துக்கம் அனுஷ்டித்து பதிவர்கள் அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம். நன்றி!.




.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

7 comments:

  1. அருமையான பதிவு..

    ReplyDelete
  2. இழப்பு என்பது மீட்டெடுக்க முடியாத ஒன்று.
    அதன் வலி மிகக் கொடியது.
    நண்பர் மாய உலகம் ராஜேஷிற்கு என்
    மௌன அஞ்சலிகள்.

    ReplyDelete
  3. நல்லதொரு படைப்பு....

    ராஜேஷ் அவருக்க்காக அஞ்சலி செலுத்துவோம்

    ReplyDelete
  4. Timely...நண்பர் ராஜேஷிற்கு என்
    அஞ்சலி...

    ReplyDelete
  5. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  6. இழப்பின் வீரியத்தைச் சொல்லிப் போகும் பதிவு
    மனம் கனக்கச் செய்து போகிறது
    பதிவுடன் பட்டினத்தடிகளின் பாடல்களையும்
    இணைத்துக் கொடுத்தவிதம் மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இழப்பின் வலி அதிகமே அருமையான பதிவு .

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.