Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Thursday, November 6, 2014

உணவும் உண்ணும் முறைகளும்


நாம் உண்ணும் உணவும் அந்த உணவை உண்ணும் முறைகளும் ரொம்பவே நம் வாழ்க்கையை பாதிக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் அவைதான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. ரொம்ப சீரியஸாய் சிந்திக்கிற மேட்டர்தான் இது.

உணவைத் தேர்ந்தெடுத்தல்

உணவைத் தேர்ந்தெடுத்தலும், அவைகளை சமைக்கும் முறைகளும், சாப்பிடும் அளவும், சாப்பிடும் நேரங்களும் மிகவும் முக்கியமானவையாகும். இவைகளில் அலட்சியம் கூடவே கூடாது.
1.   சரிவிகித உணவைத் தேர்ந்தெடுங்கள். உப்பும், உரைப்பும், எண்ணெயும், இனிப்பும் மிகுந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள். அல்லது கூடிய மட்டும் குறைத்து விடுங்கள்.
2.   பச்சையான இலையுள்ள காய்கறிகள் மிகுந்த சத்துள்ளவை. உடலைப் பராமரிப்பதில் மிகுந்த வல்லமை உடையவை. கரும் பச்சை நிற காய்கறிகள் மிகுந்த ஊட்டச்சத்து மிக்கவையாகும். மேலும் அவை கொழுப்புச் சத்துக் குறைந்தவை. 

உணவைத் தயாரித்தல்

1.   பொதுவாக காய்கறிகள் நீரில் கரையக் கூடிய விட்டமின்களை மிகுதியாகக் கொண்டவை. ஆகவே காய்கறிகளை அதிக நேரம் தண்ணீரில் போட்டு வைக்காதீர்கள். அதிக நேரம் தண்ணீரில் அலசவும் செய்யாதீர்கள். அதிலும் வெந்நீரில் அலசிவிடாதீர்கள். பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடும் அபாயம் இருக்கிறது.. குளிர்ந்த நீரிலேயே அலசுங்கள்.
2.   இரண்டாவதாக காய்கறிகளை அதிக நேரம் பொறிக்காதீர்கள் அல்லது வறுக்காதீர்கள். அதாவது எண்ணெயில் போட்டு அதிக நேரம் வறுப்பதால் அல்லது பொறிப்பதால் விட்டமின்கள் A, D, E and K ஆகியவை அழிந்து விடும் அபாயம் இருக்கிறது. மேலும் மிகுந்த சத்துள்ள ஒமேகா 3 அமிலமும் அழிந்து விடும அபாயம் உண்டு. ஆகவே கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து கொஞ்ச நேரம் மட்டும் வறுங்கள். அல்லது பொறியுங்கள். ஊட்டச் சத்துக்களை காத்துக்கொள்ளுங்கள். கூடிய மட்டும் பொறிக்காமல் வேக வைத்தும் அல்லது வெறுமனேயும் காய்கறிகளை சாப்பிட்டு பழகினால் ரொம்ப நல்லது.
3.   உணவை அடிக்கடி சூடுபடுத்துங்கள். ஏனென்றால் ஒரு தடவை சூடுபடுத்தும்போது பாக்டீரியாக்களும் கிருமிகளும் அழிந்துவிட்டாலும், உணவு குளிர்ந்து விட்டால் நேரமாகி விட்டால் மறுபடியும் பாக்டீரியாக்கள் உருவாகி விடுகின்றன. ஆகவே உணவு உண்ணும் முன்பு சூடுபடுத்தியே உண்ணுங்கள். 

உணவை உண்ணுதல்

1.   உணவை கூடிய மட்டும் நன்றாக மென்று உண்ணுங்கள். நாம் ஒவ்வொரு முறை மெல்லும்போதும் பரோட்டின் (Parotin) என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது உடல் மற்றும் முகம் வயதாவதை தடுக்கும் ஹார்மோனாகும். ஆகவே உணவை நன்றாக மென்று உண்டால் சீக்கிரம் முதுமையாவதையும் தடுக்கலாம். இளமைத் தோற்றமும் பெறலாம் இயற்கையான எளிமையான முறையில். இதை என்றுமே மறந்துவிடாதீர்கள்.  மேலும் நன்றாக மென்று உண்ணும்போது நம் எச்சிலும் உணவுடன் கலந்து உணவை சீக்கிரம் நொதிக்கச் செய்து சீரணம் ஆகி உடலுக்கு நன்மை விளைகிறது. சீரணம் வயிற்றில் அல்ல வாயில்தான் முதலில் ஆரம்பிக்கிறது என்பதை ஒருநாளும் மறந்துவிடாதீர்கள்.

இவ்வாறு உணவை தேர்ந்தெடுத்து நன்றாக உண்ணும் முறைகளை பின்பற்றினால நூறாண்டு வாழலாம். அல்லது மரணம் வரும் வரை வியாதியின்றி நிம்மதியாக வாழலாம்.

வாழ்க நலமுடன்…!



.

Saturday, October 6, 2012

உணவு எப்படி இருக்க வேண்டும்? - மகாத்மா காந்தி



ஹரிஜன் இதழில் 25.01.1942 அன்று காந்திஜி எழுதியிருக்கிற ஒரு சிறிய கட்டுரையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். எதையெல்லாம் நாம் சாப்பிடலாம் என்று நிறைய பேர் நிறைய ஐடியா சொன்னாலும் நம்ம காந்திஜி என்ன சொல்றார்னு பார்த்து விடலாம். இனி நேரடியாக கட்டுரைக்குப் போய்விடலாம்.


குறைந்த அளவு ஆகாரம்

"ஒரு சமயத்தில் ஒரே ஒரு தானியத்தை மட்டும் உபயோகியுங்கள். கறிகாய், பழங்கள் ஆகியவற்றுடன் சப்பாத்தி, சாதம், பருப்புகள், பால், நெய், வெல்லம், எண்ணெய் முதலியவற்றைச் சாதாரணமாகச் சேர்த்து குடும்பங்களில் உபயோகிக்கிறார்கள். இந்தச் சேர்க்கை தேக ஆரோக்கியத்துக்கு ஒவ்வாதது என்று நான் கருதுகிறேன்.

பால், பாலாடைக்கட்டி, முட்டைகள் அல்லது மாமிசம் இவற்றைச் சாப்பிட்டு மிருகப் புரதத்தைப் பெறுகிறவர்கள், தாவரப் புரதம் மாத்திரமே ஏழைகளுக்கு கிடைக்கிறது. பணக்காரர்கள் பருப்பையும், எண்ணெயையும் சாப்பிடுவதை விட்டுவிட்டால் மிருகப் புரதமோ, மிருகக் கொழுப்போ கிடைக்காத ஏழைகளுக்கு அத்தியாவசியமான இவை இரண்டும் தாராளமாகக் கிடைக்கும்.

மேலும், சாப்பிடும் தானியம் நீர் கலந்ததாக இருக்கக் கூடாது. உலர்ந்ததாக, குழம்பு ஊற்றிக் கொள்ளாமல் சாப்பிட்டால் பாதியளவு தானியமே போதுமானது. வெங்காயம், காரட், ராடிஷ் (சிவப்பு முள்ளங்கி), பச்சையாக தின்னக் கூடிய கீரைகள், தக்காளி ஆகியவற்றைப் பச்சையாகக் கலந்து வைத்துக்கொண்டு சாப்பிடுவது நல்லது.

சமைத்த காய்கறிகள் எட்டு அவுன்ஸ் சாப்பிடுவதற்குப் பதிலாக ஒன்று அல்லது இரண்டு அவுன்ஸ் பச்சைக் காய்கறி கலப்பே போதுமானது. சப்பாத்தியையோ ரொட்டியையோ பாலில் நனைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது. இப்படிச் சாப்பிட்டு பழகுவதற்கு, முதற்படியாக ஒரு வேளை பச்சைக் காய்கறியுடன் சப்பாத்தி அல்லது ரொட்டியும், மற்றொரு வேளை சமைத்த கறிகாயுடன் பாலோ தயிரோ சாப்பிடலாம்.

தித்திப்பு பலகாரங்களை அடியோடு விட்டுவிட வேண்டும். அதற்குப் பதிலாக சிறிய அளவில் வெல்லத்தையோ, சர்க்கரையையோ பாலுடனோ, ரொட்டியுடனோ, தனியாகவோ சாப்பிடலாம்.

பழங்களை சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கப் பழங்கள் கொஞ்ச அளவில்தான் தேவை. அதிகப் பணச் செலவாகும் பொருள் இது. பணக்காரர்களை விட பழங்கள் ஏழைகளுக்கும் நோயாளிகளுக்குமே அதிகமாகத் தேவைப்படுபவை. பணக்காரர்கள் அளவுக்கு மீறிப் பழங்களை தின்றுவிடுவதால், அவை ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் கிடைக்காது போய்விடுகின்றன.

ஊட்டச்சத்து சாத்திரத்தை ஆராய்ந்த எந்த மருத்துவரும் நான் யோசனை கூறியிருக்கும் ஆகாரம் உடலுக்கு எந்த தீங்கையும் விளைவிக்காது: அதற்கு மாறாக நல்ல தேக ஆரோக்கியம் பெற உதவும் என்பதற்கு அத்தாட்சி கூறுவர்."

- மகாத்மா காந்தி
25.01.1942.





.

Friday, April 13, 2012

அரிசி ஒயின் (Rice Wine) சாப்பிட்டிருக்கிறீர்களா?

நம்முடைய உடல் கொழுப்பு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு (Sugar), உடல் பருமன், தோல் பிரச்சினைகள் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் இவை அனைத்தையும் கட்டுப்படுத்தும் அருமையான மருந்துதான் இந்த அரிசி ஒயின் ஆகும். உணவே மருந்து என்று சொல்வார்களே அதுதான் இது. இந்த உணவு மிகச் சிறந்த மருந்தாகும். வயது வந்தவர்கள் மட்டுமல்ல. குழந்தைகளும் இதைச் சாப்பிடலாம். சீனா, கொரியா, ஜப்பான் தேசங்களில் இன்றும் பயன்படுத்தப் பட்டு வருகிற உணவாகும் இது. இதை எப்படித் தயார் செய்வது பார்க்கலாம்.

செய்முறை:

1. ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் போதுமான அளவு அரிசியை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேருங்கள். கஞ்சி போன்ற பதம் வருமாறு தண்ணீரின் அளவு இருக்கட்டும். கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.




2. இப்போது அதனுடன் சிறிதளவு ஈஸ்ட் சேருங்கள். பேக்கரியில் கேக் தயாரிப்பதற்கு பயன்படுத்துவார்களே அதே ஈஸ்ட் தான்.

3. இப்போது அந்த கண்ணாடிப் பாத்திரத்தை காற்றுப் புகாதவாறு இறுக்க மூடி விடுங்கள். உலோக மூடி அல்லது பாலித்தீன் பேக் கொண்டு மூடி விடலாம். அறை வெப்பநிலையில் மூன்று அல்லது நான்கு நாட்கள் அப்படியே வைத்து விடுங்கள்.

4. மூன்று அல்லது நான்கு நாட்கள் கழித்து அந்த அரிசிக் கஞ்சியை திறந்து பாருங்கள். அது நன்றாக உருகி தண்ணீரைப் போல் மாறியிருக்கும். ஒயினைப் போல் ஒரு வாடை அடிக்கும். அப்படியானால் உணவு தயாராகி விட்டது என்று பொருள்.

5. இப்போது அந்த உணவுடன் தேனையோ அல்லது சர்க்கரையையோ போதுமான அளவு சேருங்கள். இப்போது அது இனிப்பான ஒயினைப் போல் அல்லது பால் உணவைப் போல் இருக்கும்.

இதுவே இந்த ஆரோக்கிய பானத்தை தயார் செய்யும் முறையாகும். மங்கோலியா, சீனா, கொரியா மற்றும் ஜப்பான் தேசங்களில் இதைச் சாப்பிடுகிற மக்கள் மேற்கண்ட கோளாறுகளுக்கு இது அற்புதமான மருந்தாகும் என்று சாட்சி சொல்கிறார்கள். தைரியமாக சாப்பிடலாம். பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்றும் சொல்கிறார்கள் அம்மக்கள். ஒரு தடவை சாப்பிட்டாலே இதன் மருத்துவக் குணம் அற்புதமாக வெளிப்படுவதாக சொல்கிறார்கள். நாமும்தான் சாப்பிட்டுப் பார்ப்போமே.



.

Monday, January 30, 2012

காய்கறி வாங்குவது ஒரு கலை - தெரியுமா உங்களுக்கு?






நிறைய பேருக்கு காய்கறி வாங்கத் தெரிவதில்லை. இது கசப்பான உண்மை. கேட்டால் அதெல்லாம் என் மனைவி பார்த்துக்கொள்வாள் என்பார்கள். நிறைய பெண்களுக்கும் கூட இதைப்பற்றி சரியாக தெரிவதில்லை. அதற்காகத்தான் இந்தப் பதிவு.


காய்கறி வாங்குவது ஒரு கலைதான். நல்ல காய்கறியாகவும் வாங்க வேண்டும். அவை வீணாகாதபடி பாதுகாக்கவும் வேண்டும்.

சரி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.




வாழைக்காய்

முதலில் வாழைக்காய். வாழைக்காயை கறியாகவோ வதக்கலாகவோ செய்ய வேண்டுமென்றால் காம்பு ஒடிந்த இடத்தில் சற்று வெள்ளையாக இருப்பதைப் பார்த்து வாங்கவேண்டும். சற்று இளசாக இருந்தாலும் பரவாயில்லை.வறுவல், பஜ்ஜி முதலியவை செய்யவேண்டுமென்றால் நல்ல பச்சை நிறத்தில் முற்றியதாக பார்த்து வாங்கவேண்டும்.வாங்கி வந்தபிறகு காயைச் சுத்தமாக பால் போக கழுவிவிட்டு, ஒரு வாளித் தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும் பழுக்காமலும் இருக்கும்.




உருளைக்கிழங்கு

செம்மண்ணில் பயிரான உருளைக் கிழங்குகளே உயர்வானவை. கெட்டியாகவும் தழும்புகள் இல்லாமலும் ஓட்டைகள் இல்லாமலும் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும்.பச்சையாகவோ அல்லது பச்சை நிறத் தழும்புகள் உள்ள உருளைக்கிழங்குகள் நன்றாக இருப்பதில்லை. சிறுமுளை கண்டவற்றையும், தோல் சுருங்கியவற்றையும் வாங்குதல் கூடாது.




முள்ளங்கி

முள்ளங்கியை, சற்றுப் பருத்து நீண்டிருப்பதாகவும், நடுவில் இலைகளும் ஓரத்தில் பச்சை இலைகளும் இருப்பதாகவும் பார்த்து வாங்கவேண்டும். கையால் தட்டிப் பார்த்தால் சில பொத் பொத்தென்று சத்தம் கேட்கும். சோளத் தட்டுப் போல் இருக்கும். அவைகளை வாங்குதல் கூடாது. சமைக்க உதவாது. முக்கியமான ஒன்று வாங்கிய அன்றோ அல்லது மறுநாளோ சமைத்துவிட வேண்டும்.




முருங்கைக்காய்

முருங்கைக்காயை நல்ல கரும்பச்சை நிறத்தில் சற்றுப் பருமானாகவும் (ரொம்ப இல்ல) உருண்டையாகவும் இருந்தால் வாங்க வேண்டும். பட்டையாக இருந்தால் வாங்கக் கூடாது. இரண்டு முனைகளையும் பிடித்துக் கொண்டு லேசாக முறுக்கினால் சற்று வளைந்துகொடுக்க வேண்டும். அது இளசாக இருக்கும். கட்டைபோல் இருந்தாலோ அல்லது முறுக்கும்பொழுது மளமளவென்று சத்தம் கேட்டாலோ வாங்காதீர்கள். அது முற்றலாய் இருக்கும். முப்பட்டையாகவோ, சற்று மஞ்சள் கலந்த பச்சைநிறத்திலோ, விதைகள் வெளியே தெரியும்படியாகவோ, முட்டி முட்டியாகவோ இருந்தால் காய் முற்றலென்று தெரிந்துகொள்ளலாம். காய்களை வாங்கி வந்தவுடன் ஒரு வாளித்தண்ணீரில் பாதிக்காய்கள் முழுகும்படி போட்டு வைக்கவேண்டும்.




தக்காளி

தக்காளியைக் கெட்டியாக உருண்டையாக, செங்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். முண்டும் முரடுமாக இருந்தால் சற்று அதிகமாகவும், சதைப்பகுதி குறைவாகவும் இருக்கும். உடனே சமைக்க வேண்டுமென்றால் நன்றாக பழுத்திருந்தாலும் கெட்டியாக இருக்கும்படி பார்த்து வாங்கவேண்டும். பழம் மெத்து மெத்தென்று இருந்தால் சாறு கெட்டுப்போயிருக்கும். காம்புக்கு அருகே நல்ல பச்சையாகவும், அடிப்பாகத்தில் சிவப்பாகவும் இருப்பதை பார்த்து வாங்கினால் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். நாளைக்கு பழம் வேண்டுமென்றால் அரிசி டப்பாவில் போட்டு வைத்தால் நன்றாக பழுத்துவிடும்.




பீன்ஸ்

பீன்ஸ் புதியவையாக இருந்தால் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். ஒடித்தால் வெடுக்கென்று உடையும். சமைப்பதற்கு அதுதான் நல்லது. முற்றின காய்கள் வெளிர்ப்பச்சையாக இருக்கும். நாள்பட்டவையாக இருந்தாலும் வதங்கி வெளிர்ப்பச்சை காட்டும் அவை சமையலுக்கு உதவாதவை. விதைகள் புடைத்துக்கொண்டிருந்தால் தோல் பயன்படாது. விதைகளைத்தான் உபயோகப்படுத்த முடியும். இவை மெத்தென்றோ ஈரமாகவோ இருந்தால் சீக்கிரத்தில் அழுகிப் போய்விடும். இவற்றை ஒன்றோடொன்று படாமல் காற்றோட்டமாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பூஞ்சைக்காளான் பிடித்து விடும்.




அவரைக்காய்

அவரைக்காய் வாங்குதற்கும் ஏறக்குறைய பீன்ஸ் போலத்தான். அதன் நடைமுறைகள்தான். மேலும் அவரை முற்றியிருந்தாலும் மளுக்கென்று உடையாது. சமையலுக்கு பிஞ்சு அவரைக்காயே உகந்தது.




கத்தரிக்காய்

கத்தரிக்காயை சிறு ஓட்டைகூட இல்லாமல் பார்த்து வாங்கினால்தான் உள்ளே புழு இல்லாமல் இருக்கும். காய் முழுவதும் ஒரே நிறத்தில் பளபளவென்று இருத்தல் வேண்டும். காம்புடன் கூடிய வால்பகுதி நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். காம்பு குச்சி போன்று இருந்தால் காய் முற்றல். இலைப்பகுதி குட்டையாக இருந்தாலும் முற்றலே. ஆழ்ந்த ஊதா நிறத்தில் உள்ள காய்கள் நல்லது. பச்சை நிற காய்களும் ஏற்றவையே. பச்சைக் காயில் மேலே வெள்ளை வரிகள் இருந்தால் கசக்கும். குழம்பே கசப்பாகிவிடும். காம்பிள் முள் இருந்தால் நல்லவையே. காம்பு கறுத்து சுருங்கியிருந்தால் நாள்பட்ட காய் என்று அர்த்தம். காயை நறுக்கியவுடன் அரிசி கழுவும் நீரில்போட்டால் கறுப்பாகாமல் இருந்தால் நல்ல காய் என்ற அர்த்தம்.




வெண்டைக்காய்

வெண்டைக்காயில் பச்சைநிற காய்தான் சுவையுள்ளது. மஞ்சளாகவும், வெள்ளையாகவும் இருந்தால் வாங்கவேண்டாம். ருசி இருக்காது. வெண்டைக் காயின் நுனியை உடைத்தால் பட்டென்று உடையவேண்டும். அதுதான் பிஞ்சு. உடையாமல் வளைந்துகொடுத்தாலோ அல்லது இரண்டாக பிளந்தாலோ அது முற்றல். காம்பு சுருங்கியிருந்தாலும் முற்றல். ஓட்டை இல்லாமல் வாங்குங்கள். புழு இருக்க வாய்ப்புண்டு.




வெங்காயம்

வெங்காயத்தில் நாட்டு வெங்காயம் சாம்பார் வெங்காயம்தான் ருசியானது. உடம்புக்கும் நல்லது. பொதெபொதெவென்று ஊறியதை வாங்கக் கூடாது. வெங்காயத்தின நடுவில் சோளத்தட்டு போல இருந்தால் வாங்கக் கூடாது. வெங்காயத்தின் நுனிப் பாகத்தை அழுத்தினால் கெட்டியாக இருக்க வேண்டும். நுனி மெத்தென்று இருந்தால் அழுகத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.




முட்டைக்கோஸ்

இலைகள் வெள்ளையாக இருக்கும் முட்டைக்கோஸ்கள் சற்று முரடாக இருக்கும். பச்சையாக உள்ளவை இளசாக இருக்கும். காய் உருவத்தில் சிறிது கெட்டியாக கனமாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும். நடுக்காம்பு வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருந்ததால் காய் புதியது என்று அர்த்தம். வாங்கும்போது காம்பை முகர்ந்து பார்த்து வாங்கவேண்டும். பழையது நாற்றமடிக்கும்.




பீர்க்கங்காய்

பச்சைப் பசேல் என்று இருக்குமாறு பார்த்து பீர்க்கங்காய் வாங்க வேண்டும். காயின் மேலுள்ள நரம்புகள் மிகவும் எடுப்பாக இருந்து வெள்ளைப் புள்ளிகளும் இருந்து காம்பு வறண்டு இருந்தால் முற்றலாகும். சற்று மெல்லிய காய்களை, நன்றாக பச்சையாக இருக்கும்படியும் நரம்புகள் உள்ளடங்கி இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும். பிஞ்சுக்காய் மேலே வரிகளுடன் மேலே வரிகளுடன் மெல்லியதாக நீண்டிருக்கும். பச்சையாக இருக்கும்.




சேப்பங்கிழங்கு

சேப்பங்கிழங்கு நீளவாட்டத்தைவிட உருண்டை வடிவமாக இருப்பதைப் பார்த்து வாங்கினால் சவுகரியாக இருக்கும். மேலே நிமிண்டிப் பார்த்தால் தோல் வரும். உள்ளெ வெள்ளையாக இருந்தால் நல்ல கிழங்கு. ஆனால் நீள்வட்டக் கிழங்கில் சத்து அதிகம்.




புடலங்காய்

புடலங்காய் நீண்டு மெல்லியதாக இருந்து மளுக்கென்று உடைந்தால் நல்ல பிஞ்சுக்காய். சுவையாக இருக்கும்.




பச்சை மிளகாய்

பச்சை மிளகாயில் காம்பும் காயும் பச்சையாக இருந்தால் புதியது. காம்புகள் சுருங்கியிருந்தாலும், கறுத்து இருந்தாலும் பழையது.


எலுமிச்சம் பழம்
நல்ல மஞ்சளாகவும், தோல் மெல்லியதாகவும் இருக்கும்படி பார்த்து வாங்கினால் நல்லது. காய் மெத்தென்று அமுங்கினாலும், காம்புக்கு அருகில் கன்றியிருந்தாலும் நாட்பட்ட பழமாகும். வாங்க வேண்டாம்.




கொத்துமல்லி, கருவேப்பிலை

கடைசியாக இந்த கருவேப்பிலை, கொத்துமல்லி. கொத்துமல்லி, கீரை வகைகளில் பழுப்பு இல்லாமலும், பூ இல்லாமலும் பார்த்துவாங்க வேண்டும். கறிவேப்பிலையில் சிறிய வகையே மிக்க மணமுள்ளது. மெலிதாக நீண்ட இலைகளில் அவ்வளவு மணம் இருப்பதில்லை.

என்னங்க... காய்கறி எப்படி வாங்கணும்னு தெரிஞ்சுக்கிட்டிங்களா?...
ஹலோ... எங்க சார் போறீங்க.... ஓ....இவ்வளவு நாள் தெரியாத விஷயம் தெரிஞ்சுகிட்டதால மனைவிகிட்ட சவால் விட்டுட்டு மார்க்கெட்டுக்கு கிளம்புறிங்களா? பார்த்து கவனமா வாங்குங்க.... பல்பு கில்பு வாங்கிராதீங்க....(ஹி....ஹி...) வரட்டுங்களா?!!!....)

நலமுடன் வாழ்க!...





.