Tuesday, November 29, 2011

சிகரெட் - சில உண்மைகள்

நீங்கள் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா? அப்படியானால் இப்பதிவு உங்களுக்குத்தான். புகை பிடிப்பவர்கள் தங்கள் பணத்தையும் தங்கள் நுரையீரலையும் தாங்களே அழித்துக்கொள்கிறார்கள். மற்ற பழக்கங்களை விடுகிறது போல இப்பழக்கத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடிகிறதில்லை. பலர் இப்பழக்கத்தை விட்டுவிட நினைக்கிறார்கள். ஆனால் முடிவதில்லை. ஜெயிக்கிற சதவீதத்தை விட தோற்கிற சதவீதமே மிக அதிகம்.

ஏன் பலர் இதில் தோல்வியடைகிறார்கள்?
மனஉறுதி இல்லாதது மட்டுமே இதற்குக் காரணமா? இல்லை இல்லை. நீங்கள் ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனால் உண்மை என்னவென்றால் சிகரெட்டுக்கு அடிமையானவர்கள் அதன் பிடியிலிருந்து மீள்வதென்பது எமனின் பிடியிலிருந்து மீள்வதுதான்.

நம்முடைய மூளையில் நிறைய நுண்ணிய உணர்கடத்திகள் (Receptors) உள்ளன. அவற்றில் சில வகைதான் இந்த நிகோடின் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் உள்ளன. நீங்கள் புகை பிடிக்கும்போது சிகரெட்டின் நிகோடின் ஆனது இந்த உணர்கடத்திகளிடம்தான் முதலில் செல்கிறது. பின்னர் இந்த உணர்கடத்திகள் நமது மூளையின் மற்றொரு பகுதியான டோபாமின் (Dapomine) என்ற உணர்கடத்திகளுக்கு இந்த நிகோடினை அனுப்புகிறது. இந்த டோபாமின்கள் தான் நமக்கு சந்தோஷத்தை தருகிற உணர்கடத்திகளாகும். ஆனால் இந்த டோபாமின்கள் இந்த நிகோடினால் உண்டாகும் சந்தோஷத்தை வெகுநேரம் தன்னிடம் வைத்திருக்காமல் துப்பி விடுகிறது. மேலும் கொஞ்ச நேரத்தில் மறுபடியும் அந்த சந்தோஷத்திற்காக ஏங்கத் துவங்கி விடுவதால் நமக்கு மீண்டும் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் துளிர்விடுகிறது.

தற்போது விஞ்ஞானிகள் ஒரு புதிய உணர்கடத்திகளை (Verenicline) செயற்கையாக உற்பத்தி செய்ய தீவிரமான ஆராய்ச்சியில் இருக்கிறார்கள். இந்த வெரனிக்ளின்கள் மார்க்கட்டுக்கு வந்துவிட்டால் உங்கள் பாடு கொண்டாட்டம்தான். ஏனென்றால் அதன்பிறகு சிகரெட் விடுவதை எளிதில் நிறுத்திவிட முடியும். இவை டோபாமின்களின் சந்தோஷ உணர்வுகளின் உற்பத்தியை தடுத்துவிடக் கூடிய திறன் பெற்றவை. ஆகையினால் நீங்கள் சிகரெட் பிடித்தாலும் அதன் மூலம் திருப்தி கிடைக்காது. மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக இவற்றைப் பயன்படுத்தும்போது நிச்சயமாக நீங்கள் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிடுவீர்கள். (வேண்டாத பொண்டாட்டி கூட எத்தனை நாள் சார் வாழ முடியும்?). அதுவரைக்கும் காத்திருக்கப் போறீங்களா? மனஉறுதியோட இப்பழக்கத்தை விட முயற்சி பண்ணுங்க சார்.

சரி. இப்போது சிகரெட்டைக் குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகளை பார்க்கலாம்.

1. ஒவ்வொரு பத்து விநாடிகளுக்கும் ஒரு மனிதன் சிகரெட்டினால் மரணடைகிறான்.

2. சிகரெட்டின் கழிவுகள் மண்ணில் மக்குவதற்கே 25 வருடங்கள் ஆகுமாம் (மக்கா ஜாக்கிரதை).

3. நீங்கள் புகைக்கும் பிடிக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் உங்களின் ஆயுளில் 11 நிமிடங்களை குறைத்துவிடுமாம்.

4. பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னால் ஆங்கிலத்தில் சிகரெட் என்ற வார்த்தை கிடையாது. அதற்கு முன்பெல்லாம் சிகரட் போன்ற பானங்களை குடிப்பார்களாம். அதாவது பருகும் சிகரெட்.

5. மருத்துவ காரணங்களுக்காக கி.பி. 1559-ல் பிரான்சில் உள்ள பிரெஞ்சுத்தூதர் நிகோட் என்பவர்தான் இந்த நிகோடினை கண்டுபிடித்தார். (இப்படில்லாம் ஆகுமுன்னு தெரிஞ்சிருந்தா கண்டு பிடிச்சுருக்கமாட்டார் இல்ல)

6. தென் அமெரிக்க மக்கள் புகையிலையை 2000 வருடங்களுக்கு முன்பே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் பிரேசில்காரர்கள்தான் இந்த சிகரெட்டை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

7. முதன் முதலில் இதை பிரபலமாக்கியவர்கள் ஐரோப்பிய மாலுமிகளே.

8. உலகிலேயே அதிகம் சிகரடெ; புகைப்பவர்கள் கிரீஸ் நாட்டுக்காரர்கள்தான். அங்கு வயதுக்கு வந்த ஒரு வாலிபன் வருடத்திற்கு 3000 சிகரெட்டுகளை புகைத்துத் தள்ளுகிறானாம். (நீங்க எப்படி?)

சரிங்க. சிகரெட்டை பத்தி நிறைய விஷயங்களைச் சொல்லிவிட்டேன். இதைப் படிச்ச நீங்க மனஉறுதியோட இந்த பழக்கத்தை விட்டுட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். செய்வீங்களா?

மறுபடியும் சந்திப்போம் – அடுத்த பதிவில்.

முடிவில்லாத தேடல்

வாழ்க்கையின் புரிதல்கள்
எளிதில் நிகழ்வதில்லை
வாழ்ந்து பழகின போதும்

நரகத்தில் வாழ்ந்து கொண்டு
நந்தவனத்தில் வாழ்கிறதாய்
கனவு காணும் வாழ்க்கையின்
நிதர்சனங்கள்
புரிபடவில்லை இன்னும்

புரிந்ததாய் நடித்தாலும்
காட்டிக்கொடுக்கிறது
எண்ணமும் எழுத்தும்

இன்னும்
நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது வாழ்க்கை
முடிவில்லாத
அந்த தேடலை நோக்கி.....

Monday, November 28, 2011

எது புதுக்கவிதை

கருத்துவெள்ளம் பொங்கிப் பிரவாகித்து
யாப்பு அணை உடைத்து
சந்த தடைகள் தாண்டி
எதுகை மோனை ஏற்றங்கள் மீறி
பாரம்பரிய மதகுகள்
வெடித்துச் சிதற
பூமியை நிரப்பும்
ஜலப்பிரளயமே
புதுக்கவிதை.

Saturday, November 26, 2011

என் மனக்குதிரை

என் மனக்குதிரைக்கு
கடிவாளம் போட முயன்று
தோற்றுப்போனேன்
மாம்ச இச்சை கொண்டு
சீறி எழுந்தது
புல் கொடுத்தேன்
உண்ணாமல்
புலால் வேண்டும் என்றது
உலகோர் சிரிக்க மாட்டார்களாவென்றேன்
அதைப் பற்றி எனக்கு கவலையில்லை என்றது
காதல் கேட்டது
கொடுத்தபோது மறுத்து
காமம் கேட்டது
சரி என்று கொடுத்தபோது
இரண்டும் வேண்டும் என்றது
எப்படியோ போவென்று
கயிறறுத்து கிளம்பியபோது
காலடியில் குழைந்தது
நாடகம் புரியாது
திகைத்தது
என் கவிமனது.

Monday, November 21, 2011

யுத்தக்களம்

பரபரப்பாய் இருக்கிறது
அந்த யுத்தக்களம்
ஒல்லியாய்
குண்டாய்
தட்டையாய்
குட்டையாய்
ரகரகமாய்ப் பெண்கள்
ஆம்
பெண்களால்
பெண்களுக்காக
பெண்களைக் கொண்டு நடத்தப்படும்
யுத்தம் தான் அது
சிகப்பாய்
மஞ்சளாய்
ஊதாவாய்
பலப்பல நிறங்களில்
போராயுதங்களான
குடங்கள் அவர்கள் கைகளில்
பரபரக்கிறது
அந்த தெருக்குழாயடி.

Saturday, November 19, 2011

என் யுகப்பயணம்

என் காலச் சிறகுகளை மாட்டிக்கொண்டு
யுகவீதியில் பறக்க ஆரம்பித்தேன்
பிரபஞ்சவெளியில்
கோளாடு கோளாய்
நட்சத்திரங்களோடு நட்சத்திரங்களாய் பயணித்தேன்

எத்தனை மனிதர்கள்
எத்தனை தேசங்கள்
எத்தனை வரலாறு
என்று
எல்லாம் தாண்டி
கணிக்க முடியாத
ஒரு இருண்ட காலத்துக்குள்
பிரவேசித்தேன்

அங்கே
இனம்புரியாத விலங்குகளும்
பெயர் தெரியாத உயிரினங்களும் கண்டேன்
வினோதவகை விருட்சங்களும்
செடிகொடிகளும் கண்டேன்

எல்லாம் இருந்தன
மனிதனைத் தவிர

ஆகவே
திரும்பினேன் இந்த கெட்ட பூமிக்கு
மேலிருந்து பார்த்தேன்
எல்லாம் கெட்டதாய் இருந்தது
இருந்தாலும் என்ன
எனக்குப் பிடித்திருந்தது
இந்த வாழ்க்கையும்
அதன் போராட்டங்களும்.

நானோர் சிலந்தி

உறவு வலைகளை பின்னி பின்னி
ஓய்ந்து போன
நானோர் சிலந்தி

கஜினி முகம்மதுவைப் போல்
பதினெட்டு தடவை மட்டுமல்ல
பதினாயிரம் தடவை பின்னியாயிற்று

ஒவ்வொரு முறையும்
அறுத்தெரிந்தது
என் உறவுப் பூச்சிகள்

இன்னும் ஒரு முறை பின்னத்தான் ஆசை
இங்கல்ல

சுடுகாட்டில்……

Friday, November 18, 2011

சைக்கிள் காதலி

பேருந்து காதலி
இன்றிலிருந்து
பெப்பே காட்டிவிட்டாள்
ஆனாலும் என்ன
இருக்கவே இருக்கிறாள்
என் பழைய
சைக்கிள் காதலி.

வாழ்வை வளமாக்கும் பொன்மொழிகள்

நாம் அறிந்திராத அற்புதமான பொன்மொழிகள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். வாசியுங்கள். கடைப்பிடியுங்கள். வாழ்வை வளமாக்குங்கள்.

1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்

2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ
தெரிந்துகொள்.

3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.

4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை
ஆரம்பிக்கிறது.

5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.

6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட
மோசமான சாபமும் இல்லை.

7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.

8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு
வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.

9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை
உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.

10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.

11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது.
ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு
பெற்று விட்டான் என்பதே.

12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி
விடாதீர்கள்.

13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக்
கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப்
பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு
இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.

14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன்
பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின்
காவலன்.

15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும்,
கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.

16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு
எல்லாமே எளிதாகத் தோன்றும்.

17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும்
கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த
சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன்
ஆவான்.

19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல
பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.

20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ
விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.

Thursday, November 17, 2011

இந்திய ஆட்சியாளர்களே!

பெட்ரோல் விலையை கூட்டுகிறீர்கள்
கூட்டுங்கள்
இன்னும் கூட்டிக்கொள்ளுங்கள்

பருப்பு விலையைக் கூட்டுகிறீர்கள்
கூட்டுங்கள்
இன்னும் கூட்டிக்கொள்ளுங்கள்

அத்தியாவசிய பொருட்கள் அத்தனைமீதும்
வரிகளை அதிகமாக்குங்கள்
இன்னும் அதிகமாக்குங்கள்

ஆனால் ஒன்று
இப்படியே போனால்

ஒருநாள்…..

நீங்கள் ஆள
இந்தியா இருக்கும்
இந்தியர்கள் இருக்கமாட்டார்கள்.

Wednesday, November 16, 2011

ஆன்மாவின் கண்ணீர்

அழுவது பலவீனமல்ல
அது என் ஆன்மாவின் கண்ணீர்

வலிதாங்கா இதயங்களின் வலிகளை
உள்வாங்கிய
என் மனப்பனி உருகிய
உதிர ஊற்று

கண்ணீரை அற்பமாய் எண்ணாதீர்கள்
ஏழை இதயங்களின் கண்ணீர்
தேசங்களை கரைக்கும்
எரிதிராவகங்களாகும்

எல்லா இதயமும் அழுவதில்லை
ஏனென்றால்
எல்லா இதயமும் இதயமல்ல

என் இனிய எதிரிகளே
என் ஆன்மாவின் கண்ணீரை
புரிந்துகொள்ளுங்கள்
அது பிரளயமாய் மாறும்போது
உங்கள் வஞ்சக அணைகள்
தாக்குப்பிடிக்காது.

Tuesday, November 15, 2011

நிஜங்கள் சோடை போவதில்லை

கனவுகளின் நீட்சி அதிகம்தான்
ஆனால் நிஜங்கள் சோடை போவதில்லை.

கனவுகளின் காட்சி அதிகம்தான்
ஆனால் நிஜங்கள் சோடை போவதில்லை

கனவுகளின் திரட்சி அதிகம்தான்
ஆனால் நிஜங்கள் சோடை போவதில்லை

காரணம்

கனவுகள் மாயை
நிஜங்கள் உண்மை

Saturday, November 12, 2011

நொறுங்கத் தின்றால் நூறு வயதா? - ஓர் மருத்துவரீதியான அலசல்

நம் எல்லோருக்குமே நீண்ட நாட்கள் நொய்நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ ஆசைதான். ஆனால் அது சாத்தியமா? சில சுலபமான வழிகளை கடைப்பிடித்தால் சாத்தியமான விஷயம்தான் அது. எப்படி? தொடர்ந்து படியுங்கள்.

நொறுங்கத் தின்பது எப்படி நாம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ உதவுகிறது?

நீங்கள் தற்போது வழக்கமான முறையில் சாப்பிடுவதை மாற்றி உணவை நன்றாக சவைத்து, சுவைத்து, நொறுங்கத் தின்று பாருங்கள். அதிகமாக நாம் பற்களை வைத்து உணவை அரைத்து அசைபோடும் போது நம் மூளை நரம்புகள் நன்கு தூண்டிவிடப்படும். உணவை ஜீரணமாக்கத் தேவையான உமிழ்நீரை அது மிக அதிகமாக சுரக்கவைக்கும்.

ஒரு மருத்துவ ஆராய்ச்சி சொல்கிறது. நடக்கமுடியாமல் படுத்த படுக்கையாக இருந்த நோயாளிகள் இந்த நொறுங்கத் தின்னும் பழக்கத்தை தொடர்ந்து பழக்கப்படுத்தினபோது அவர்கள் மூளை நல்லவிதமாக செயல்பட்டு அதன் மூலம் நரம்பு மண்டலம் நன்கு செயல்பட்டு அவர்களால் ஆள்துணையின்றி நடக்க முடிந்ததாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. பாருங்கள்! எவ்வளவு அற்புதமான விஷயம்! மேலும் பலரின் பேச்சுத்திறனும் பெரிய அளவில் கூடியிருப்பதும் தெரியவந்தது.

நம் மூளையின் பலவிதமான செயல்பாடுகள் நம் பற்களோடு மிகுந்த தொடர்புடையவையாக இருக்கின்றன. அதனால்தான் பல்வலி வரும்போது சிலர் தலையைப் பிடித்துக்கொண்டிருக்கிறதை நீங்கள் கவனித்திருக்கலாம். நன்றாக பற்களால் அரைத்து உணவை உண்ணும் இந்த பழக்கத்தினால் நம்முடைய மூளை மிகுந்த அளவில் தூண்டப்படுகிறது. அதன் பிறகு தன்னுடைய கட்டளைகளை அற்புதமாக நம் உடல் முழுவதும் அனுப்புகிறது. மேலும் உணவானது பற்களால் அரைபடும்பொழுது ஒருவித சப்தம் பற்களுக்கிடையில் உண்டாகிறது. இதை நீங்கள் இதுவரைக்கும் கவனிக்காதிருந்தால் இப்போது கவனித்துப் பாருங்கள். இந்த சத்தமானது நம்முடைய மூளைக்கு மிகவும் பிடித்தமான ஒரு சத்தமாகும். இந்த சத்தம் நம்முடைய மூளைக்கு மிகுந்த புத்துணர்ச்சி அளித்து அளவில்லா ஆற்றலுடன் இயங்க வழிவகை செய்கிறது.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

பற்களின் வேர்ப்பகுதியானது (Periodontal Ligament) ஒருவித குஷன் போன்ற பகுதியைக் கொண்டது. இதில் பல நுண்ணிய உணர் இழைகள் உள்ளன. இவை உணர்வுகளை கடத்துவதில் அபார ஆற்றல் கொண்டவை. இவை மூளையின் நரம்பு மண்டலத்தோடு நெருங்கிய, நேரடித்தொடர்பு கொண்டவை. ஆகவே நாம் உணவை எவ்வளவு அதிகமாக மெல்லுகிறோமோ அல்லது அரைத்து உண்ணுகிறோமோ அந்த அளவுக்கு நம் மூளையும் பிரமாதமாக வேலை செய்கிறது. நம் மூளை பிரமாதமாக வேலை செய்யும்போது நம் உடலும் பிரமாதமாக வேலை செய்யத்தானே செய்யும்.

மூளையின் வயதும் கூடுகிறது

நொறுங்கத் தின்னும் பழக்கத்தினால் நம்முடைய மூளையில் உள்ள செல்களுக்கு நல்ல எக்ஸர்சைஸ் கிடைப்பதனால் அவை மிகுந்த செயல்திறனுடன் இயங்கும் நிலையை பெறுகிறது. ஆகவே நம் மூளைக்கு வயதாவதும் தடுக்கப்படுகிறது. ஆகையினால் நாம் சிந்திக்கும் திறனும் கற்றுக்கொள்ளும் திறனும் அபாரமாக கூடுகிறது.

குழந்தைகளுக்கு நாம் இந்த பழக்கத்தை கற்றுக்கொடுத்துவிட்டால் விரைவில் அவர்களின் மூளையின் செயல்திறன் அதிகரித்து, புத்திசாலிகளாக செயல்திறன் மிகுந்தவர்களாக மாறுவதை நீங்கள் காணமுடியும்.

வயதானவர்களுக்கு அவர்களின் மூளை வயதாவது தடுக்கப்படுவதனால் அவர்களின் செயல்திறன் கூடுகிறதை உணரலாம்.

என்ன? இன்றைக்கே நொறுங்கத்தின்னும் பழக்கத்தை ஆரம்பித்துவிடுவீர்கள்தானே?

மரத்துப்போன மனிதர்களுக்கு - கவிதை

ஓ மரத்துப்போன மனிதர்களே!

உங்கள் பூக்களை
என்னிடம் காண்பிக்க வேண்டாம்
உங்கள் வேர்களை
என்னிடம் காண்பியுங்கள்
நீராவது ஊற்றுகிறேன்
வேர்கள் வாடிப்போகுமே என்பதற்காக அல்ல
விதைகள் வீணாகிவிடக் கூடாது என்பதற்காகவே.

Friday, November 11, 2011

பிரச்சினைகளுக்குத் தீர்வு - சிந்தனை அழிப்பான் (Thoughts Eraser) - பயன்படுத்த ஆரம்பித்துவிட்டீர்களா இல்லையா?

சின்னச் சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத்துளி:

நான் ஒரு தடவை சாலையில் நடந்து கொண்டிருந்தபோது முகங்குப்புற விழுந்தேன். அடுத்த 10 நிமிடங்கள் என்ன நடந்தது என்று எனக்கு நினைவில்லை. நினைவு திரும்பியபோது என் வாயானது மண், மண் துகள்கள், சிறு கற்கள் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. உடனடியாக அவற்றைத் துப்ப முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டுத் துப்பி, நீரால் கழுவி வெகுநேரத்திற்கு பிறகே சகஜ நிலைக்குத் திரும்பினேன்.

இதைப்போலத்தான் நாம் சில நேரங்களில் இதைப்போல அசுத்தங்களை, ஆபாசங்களை நம்முடைய வாயின் ஓரத்தில் பதுக்கி வைத்திருக்கிறோம். சில நேரங்களில் சக மனிதர்களின் மீது பிரச்சினைக்குரிய நேரங்களில் அவற்றை துப்பி விடுகிறோம்.

நாம் எளிதாக துப்பி விடுகிறோம். ஆனால் அதன் விளைவுகளோ…. அப்பப்பா….! ஆசிட்டைவிட கடுமையான விளைவுகளை இவ்விதமான வார்த்தைகள் ஏற்படுத்தி விடுகின்றன. மோசமான குற்றச்சாட்டுகள், எரிச்சலான வார்த்தைகள், வாழ்க்கை முழுவதும் எண்ணி எண்ணி வேதனைப்படும் அளவிற்கான திராவக வார்த்தைகள் முதலியவற்றை நாகம் விஷத்தை உமிழ்வதைப் போல சக மனிதர்களின் மீது உமிழ்ந்து விடுகிறோம். ஒரு நிமிடமேனும் சிந்திப்போமில்லை.

தவறான வார்த்தைகளால் தலைமுறைகளும் அழிந்து போன வராறுகள் ஏராளம் உண்டு.

சரி. இதைத் தடுப்பது எப்படி? எப்படி இவ்வித சூழ்நிலைகளை மேற்கொள்ளுவது?

நம்முடைய வாயில் வரும் வார்த்தைகள் எங்கே உருவாகின்றன? நம்முடைய மூளையில்தான். நம்முடைய மூளையில் உருவாகும்போதே அவைகளை அழித்து விட்டோமானால் அவைகள் வார்த்தைகளாக உருவாகமால் தடுத்து விடலாம்.மாறாக உருவாக அனுமதித்து, அவைகளை சிந்தித்து சிந்தித்து திட்டங்களாக உருவாகி, எப்படி ஒரு தாயின் வயிற்றிலே கரு உருவாகி மாற்றங்கள் அடைந்து குழந்தையாக வெளிவருகிறதோ அப்படியே அந்த கெட்ட சிந்தனைகளும் தீய வார்த்தைகளாக, செயல்களாக மாறிவிடுகின்றன.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் உங்களுடைய மூளையில் சிந்தனை அழிப்பான் (Thoughts Eraser) ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். எப்போதெல்லாம் தீய எண்ணங்கள் உங்கள் மூளையில் தோன்றுகிறதோ அப்பொழுது உங்களுடைய சிந்தனை அழிப்பான் கொண்டு அழித்திடுங்கள். அப்போது அவைகள் வார்த்தைகளாக உருமாறுவது தடுக்கப்பட்டு விடுகிறது. வார்த்தைகள் தடுக்கப்பட்டு விடுவதால் தீய செயல்களும் உருவாவதும் தடுக்கப்பட்டு விடுகின்றது. இதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பழக்கத்தை நீங்கள் மேற்கொண்டால் மனித குலத்திற்கு எவ்வளவு பெரிய நன்மை உண்டாகும்? நினைத்துப் பாருங்கள்.

ஆகவே இனி அசாதரணமான பிரச்சினைகள் உங்களை சூழும்போது உங்கள் சிந்தனை அழிப்பானை பயன்படுத்துங்கள். உங்கள் பிரச்சினைகளை மேற்கொள்ளுங்கள்.

“ உங்கள் சிந்தனைகளில் கவனமாய் இருங்கள். ஏனென்றால் அவை எந்நேரமும் வார்த்தைகளாக மாறலாம் ”


தொடர்ந்து சந்திப்போம் - பதிவுகளில்.

Wednesday, November 9, 2011

மண்டையோட்டு வியாபாரம் - திடுக்கிடும் செய்தி

இன்றைய நாளிதழில் நான் படித்த திடுக்கிடும் செய்தி ஒன்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

கங்கை நதியின் கரையோரங்களில் வழக்கமாய் நடைபெறும் ஒரு காரியம் என்னவென்றால் நதிக்கரையோர கிராமங்களில் வசிக்கும் மனிதர்கள் தங்கள் குடும்பங்களில் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் பிணங்களை சடங்குகளெல்லாம் செய்து முடித்தபின் மலர்மாலை அலங்காரங்களோடு ஒரு கட்டையில் வைத்துக் கட்டி கங்கை நதியில் விட்டுவிடுவார்கள். அடக்கம் செய்ய மாட்டார்கள். இது அவர்களின் பழக்கமாகும்.

அந்த நதிக்கரையோர கிராமம் ஒன்றில் வசிப்பவன் பெயர் ராம்சிங். இவனுடைய வேலை என்ன தெரியுமா? ஆற்றில் மிதந்து வருகிற பிணங்களை எடுத்து அவற்றின் தலையை மட்டும் துண்டித்து எடுத்துவிட்டு உடல்களை ஆற்றில் வீசி எறிந்து விடுவானாம். தலையை பல நாட்கள் மண்ணுக்குள் புதைத்து வைத்து விடுவானாம். தலை அழுகி சதைகள் கழிந்த பிறகு மண்டையோடாய் மாறி இருக்கும். அதைத் தோண்டி எடுத்து ரூ.3000 முதல் ரூ.5000 வரை விலை வைத்து விற்று விடுவானாம். மண்டையோட்டை வைத்து மந்திரவாதம் செய்பவர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தனி நபர்கள் என்று பலருக்கும் இவ்விதமாக நல்ல லாபத்திற்கு விற்று விடுவானாம். இவ்விதமாய் இதுவரைக்கும் 300-க்கும் மேற்பட்ட மண்டையோடுகளை விற்பனை செய்து இருக்கிறானாம். சிறப்பு காவல்துறை புலனாய்வுக் குழுவினர் இரகசியமாக, நுணுக்கமாக கண்காணித்து இவனை கையும் களவுமாக பிடித்து இருக்கிறார்களாம்.

இன்னும் இதுபோல் எத்தனை பேர் இருக்கிறார்களோ தெரியவில்லை.

இந்த மண்டையோட்டு வியாபாராம் வடநாட்டில் மிகவும் பரபரப்பாய் பேசப்படுகிறதாம்.
நன்றி: தினத்தந்தி

Saturday, November 5, 2011

குறட்டைத் தொல்லை - சமாளிப்பது எப்படி?

சிலருக்கு இரவில் தூங்கும்போது குறட்டைச் சத்தம் அதிகமாக இருக்கும். ஆகவே பக்கத்தில் தூங்குபவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் இந்த குறட்டை பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. இந்த குறட்டைத் தொல்லைக்கு என்ன நிவாரணம்? ஒரு சின்ன அலசல்.

குறட்டைத் தொல்லை உலகம் முழுவதும் பலகோடி மக்களுக்கு தினமும் தொல்லை தரும் ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. 35 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஆண்களில் நூற்றுக்கு 20 பேரும் பெண்களில் நூற்றுக்கு 10 பேரும் குறட்டை விடுவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. அப்படியானால் இது உலகளாவிய பிரச்சினைதான். பெண்கள் குறைவாக குறட்டை விடுவதற்கு காரணம் அவர்களது உடலில் உள்ள Progesterone என்ற ஹார்மோன் என நம்பப்படுகிறது. மாதவிடாய் முற்றிலும் நின்றுவிட்ட பிறகு இந்த ஹார்மோன் அளவு குறைவதால் குறட்டை விடும் அளவும் அதிகரிக்கிறது.

குறட்டை எப்படி உருவாகிறது?

நாம் சுவாசிப்பதற்காக நமது நமது மூச்சை வெளிவிடும்போது நமது தொண்டை, மூக்கு, வாய் ஆகிய உறுப்புகள் வழியாக வெளியேறுகிறது. பகல் நேரத்தில் இவைகளைச் சுற்றியுள்ள தசைநார்கள் இறுக்கமடைந்து காற்று வெளியேறும் பாதையானது தடையின்றி காணப்படுவதால் சுலபமாக வெளியேறுகின்றது. ஆனால் இரவில் தசைநார்கள் தளர்வடைகின்றன. இதனால் காற்று வெளியேறும் பாதையானது குறுகலடைகின்றது. வெளியேறும் காற்று தொண்டை, மூக்கு, வாய் ஆகிவற்றின் தளர்வடைந்துள்ள தசை இழைகளில் மோதும்போது சத்தத்தை எழுப்புகின்றது. இதுவே குறட்டை ஒலியாக வெளிவருகின்றது.

யாருக்கு அதிகம்?

காற்றின் பாதையில் தடை அல்லது பிறவிக்குறைபாடு உள்ளவர்கள் எப்பொழுதும் இரவில் குறட்டை விடுபவர்களாக இருப்பார்கள். உதாரணமாக மூக்கு தண்டுவட சுவர் வளைந்திருப்பதாலும், நீர்ச் சதைகள் (Polyps) இருப்பதாலும் அடைபட்ட மூக்கில் தடைபட்ட காற்று செல்லும்போது அதிர்வினால் குறட்டைச் சத்தம் வரும். சிலருக்கு சில நோய்கள் காரணமாக தற்காலிகமாக குறட்டைப் பிரச்சினை உருவாகலாம். கடுமையான ஜலதோஷம், மூக்கடைப்பு, டான்சில் மற்றும் அடினாய்ட் ஆகியவற்றாலும் குறட்டை உருவாகலாம். அந்நோய்கள் குணமாகியவுடன் குறட்டையும் நீங்கிவிடும். ஒரு நபர் குறட்டையிலிருந்து விடுபட்டால் அவாpன் குடும்பத்தினருக்கு அதைவிட சந்தோஷம் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் குறட்டையின் சத்தம் சாதாரணமானது அல்ல. மோசமான குறட்டைச் சத்தம் 40 முதல் 60 டெசிபல் ஒலி அளவை எட்டலாம். அதாவது ஒரு காரின் எஞ்சின் அளவுக்கு சத்தத்தை உருவாக்கலாம். பக்கத்தில் படுத்திருப்பவர்களின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். பரிதாபம்தான்.

கட்டையான கழுத்தும், சிறிய நாடியும், தொங்கும் கீழ்த்தாடையும் உடையவர்களின் குறட்டையை நிறுத்துவது கஷ்டமான காரியம்தான். பற்களுக்கிடையில் இடைவெளி அதிகம் இருந்தாலும் குறட்டை உருவாகலாம். அப்படியானால் பல் மருத்துவரிடம் காண்பிக்கலாம். முன்பு குறிப்பிட்டது போல் மூக்குத்தண்டுச் சுவர் வளைந்திருந்தால் அல்லது டான்சில் அல்லது அடினாய்ட் வளர்ந்திருந்தால் காது மூக்கு தொண்டை நிபுணரிடம் (ENT Specialist) காண்பித்து சிகிச்சை எடுத்து. குறட்டைப் பிரச்சினையை தீர்க்கலாம்.

எடையும் காரணமாகலாம்

குறட்டைக்கு வேறு பல காரணங்களும் உள்ளன. எடை அதிகமாக உள்ளவர்களுக்கு குறட்டை அதிகம் வர வாய்ப்பு உள்ளது. இதற்கு காரணம் கொழுத்த கழுத்து அவர்களின் சுவாசக் குழாயை அழுத்துவதும், கொழுப்பு நிறைந்த சுவாசக் குழாய் அவர்களின் சுவாசத்தை தடுப்பதுமேயாகும்.

கொழுத்தவர்கள் அதிகம் குறட்டை விடுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. கொழுத்தவர்கள் பெரும்பாலும் மல்லாந்துதான் படுப்பார்கள். அதிக எடை காரணமாக பக்கவாட்டில் ஒருக்களித்து படுப்பது சிரமமாக இருப்பதால் அப்படி செய்கிறார்கள். இதுவும் குறட்டையை ஏற்படுத்துகிறது. நமது எடையை குறைத்து விட்டால் குறட்டை விடுவதும் தானாக நின்று விடும் அதிசயம் நடக்கிறது. அதிக எடை ஆபத்து. வேண்டாமே ப்ளீஸ்….

மதுபானம்

மது அருந்தும் பழக்கமுள்ளவர்களும் குறட்டைப் பிரச்சினையினால் பாதிக்கப் படுகிறார்கள். தொண்டையிலும் மூக்கிலும் உள்ள மெல்லிய சவ்வுகள் மதுபானத்தால் வீக்கமடைகின்றன. இதனால் சுவாசத்தின்போது காற்று உட்செல்வதும் வெளியேறுவதும் தடைபடுகிறது. இது குறட்டைக்கு வழிவகுக்கின்றது. மதுபானம் ஆழ்ந்த தூக்கத்தை வரவழைப்பதால் குறட்டையை உருவாக்குகிறது. மதுபானம் அருந்துபவர்கள் அதை நிறுத்தியவுடன் குறட்டைப் பிரச்சினையும் தீர்ந்துவிடும்.

மாத்திரைகள்

மதுபானத்தைப் போலவே தூக்க மாத்திரைகளும் குறட்டைக்கு வழிவகுக்கின்றன. இவை தொண்டைப் பகுதியிலும், சுவாசப் பாதையிலும் உள்ள தசைகளைத் தளரச் செய்வதால் குறட்டையை உருவாக்குகின்றன. மூக்கடைப்பு, சொறி, படை போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் ஒவ்வாமை எதிர் மாத்திரைகளும் (Antihistamine) குறட்டைக்குக் காரணமாகலாம்.

நீங்கள் இவ்விதமான மாத்திரைகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தால் உடனடியாக அதை நிறுத்திவிட வேண்டாம். அவற்றை ஏதாவது காரணமாகத்தான் உங்கள் மருத்துவர் பரிந்துரைத்திருப்பார். ஆகவே அத்தகைய மாத்திரைகளை நிறுத்துவது அல்லது மாற்றுவது குறித்து உங்கள் டாக்டரிடம் தகுந்த ஆலோசனை பெற்று செயல்படுங்கள்.

நிறுத்தும் வழி

குறட்டையை தற்காலிகமாக நிறுத்த பல சுலபமான வழிகள் இருக்கின்றன. குறட்டை வரும் நபர் மல்லாந்து படுத்திருந்தால் பக்கவாட்டில் அல்லது ஒருக்களித்து படுக்க வையுங்கள். குறட்டை நின்று விடும்.

இன்னொரு முறை என்னவென்றால் இரவு உடையின் பின்புறம் ஒரு டென்னிஸ் பந்தையோ அல்லது பஞ்சால் செய்யப்பட்ட பந்தையோ வைத்து தைத்துவிட்டால் அவர்கள் மல்லாந்து படுக்க முடியாது. பக்கவாட்டில்தான் படுக்க வேண்டியிருக்கும். அதனால் குறட்டை தொந்தரவும் இருக்காது. (ஆனால் இதனால் உங்கள் துணைவர் அல்லது துணைவியிடமிருந்து வரும் விளைவுகளை நீங்கள்தான் சந்திக்க வேண்டும். ஹி…ஹி…)


அடுத்த பதிவில் சந்திக்கிறேன் என் பதிவுலக சொந்தங்களே!

Wednesday, November 2, 2011

வியப்பூட்டும் உண்மைகள் - பகுதி 2

1. ஆங்கிலம் பேசுபவர்கள் அமெரிக்காவை விட
சீனாவில்தான் அதிகம் பேர் உள்ளனர்.

2. இங்கிலாந்தின் எலிசபெத் ராணி இறக்கும்பொது அவரிடம்
அணிந்துகொள்ள 3000 கவுன்களுக்கு மேல் இருந்ததாம்.

3. பிரபஞ்சத்தில் சுற்றும் கோள்களில் வீனஸ் மட்டுமே
இடமிருந்து வலமாக சூரியனை சுற்றி வருகிறது.

4. கடலில் வாழும் சில ஆக்டோபஸ் வகைகள் சிலநேரங்களில்
பசிக்கொடுமை காரணமாக தங்கள் கைகளையே பிய்த்து
தின்று விடுமாம்.

5. உங்கள் பிறந்தநாளை நீங்கள் கொண்டாடும் அதே
வேளையில் உலகம் முழுவதும் சுமார் 9 மில்லியன்
நபர்களும் பிறந்தநாள் கொண்டாடுவார்கள்.

6. ராமசேஸ் II என்ற எகிப்திய மன்னன் கி.மு. 1225-ஆம்
ஆண்டில் இறக்கும் போது அவனுக்கு 96 மகன்களும் 60
மகள்களும் இருந்தனராம்.

7. அமெரிக்காவில் 50 சதவிகித திருமணங்கள் மாலையிலேயே
நடக்கின்றனவாம்.

8. உலகத்திலேயே வியாதிகளைப் பரப்புவதில் நம்பர் ஒன் ஆக
இருப்பது நம் வீடுகளில் சாதாரணமாக காணப்படும்
ஈக்கள்தான்.

9. சிவப்புநிற தலைமுடியை உடைய வெளிநாட்டவர்களுக்கு
சராசரியாக 90000 முடிகள் இருக்குமாம். அதே வேளையில்
நம்மைப் போன்ற கருப்புநிற தலைமுடியை
உடையவர்களுக்கு 110000 முடிகள் இருக்குமாம்.

10. ஆடுகளுக்கு மேல் வரிசை முன்பற்கள் இருப்பதில்லை.