Friday, December 30, 2011

என் பறை முழங்குகிறது




என் பறை முழங்குகிறது
டட்டடா டடட்ட டட்டடா ….

புது வருடம் பிறக்கிறது
புதுயுகமும் பூக்கிறது

******

ஓ பாவிகளே
மனந்திரும்புங்கள்!

நீங்கள் கனவான்கள்
என்றுதான் அழைக்கப்படுகிறீர்கள்

ஆனால்…..
கனவீனங்களை மொத்தமாய்க்
குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்கள்

*******


உங்கள் இதய வீட்டை
உற்றுப் பாருங்கள்

பொறாமைத் தூசியால்
நிறைந்திருக்கிறது
ஓர் அறை

ஆபாசக் குப்பைகள்
குவிந்து கிடக்கிறது
மற்றோர் அறை

******



சுவரெங்கும்
சிந்திக் கிடக்கிறது
வட்டிக்கு வாங்கினவர்களின் இரத்தம்

உங்கள் பீரோக்களுக்குள்
அடைந்து கிடக்கிறது
ஆயிரமாயிரம் ஆத்மாக்களின்
பிராணன்கள்

பாத்திரங்களாகிப் போன
பத்திரங்களுக்குள்ளே
ஒவ்வொரு வரிகளுக்குள்ளும்
உடைந்து கிடக்கிறது
உயிர்த்துளிகள்

******

உங்கள் நிர்வாணங்களுக்குள்தான்
மறைந்து கிடக்கின்றன
ஏழைகளின் ஆடைகள்


உங்களுக்கு பசியாற்ற வந்தனர்
தாய்மார்கள்
பட்டினிக் கிடக்கின்றன
அவர்களின்
பச்சிளங்குழந்தைகள்


பாவாடை நாடாக்களில்
ஊஞ்சல் கட்டியாடுவதை
பொழுதுபோக்குகளாய்க் கொண்டவர்களுக்கு
குழந்தைகளின் கதறல்
கேட்கவா போகிறது?

என் பறை முழங்குகிறது
டட்டடா டடட்ட டட்டடா ….




******

புது வருடம் பிறக்கிறது
புதுயுகமும் பூக்கிறது

ஓ பாவிகளே!
மனம் திரும்புங்கள்

உங்கள் மூட்டைப்பூச்சி வேலைகளை
நிறுத்தும் காலம்
இதோ வந்துவிட்டது!


அழுகிப்போன உங்கள்
இதயங்களை
அறுவைச் சிகிச்சை
செய்யும் காலம்
இதோ வந்துவிட்டது!

புது வருடம் பிறக்கிறது
புது யுகமும் பூக்கிறது

என் பறை முழங்குகிறது
டட்டடா டடட்ட டட்டடா …

******



இனியாவது
உங்கள் வீடுகளைச் சுத்தப்படுத்துங்கள்

அழுக்கு வருடங்களை
அகற்றிப் போடுங்கள்

முகமூடிகளை அகற்றிவிட்டு
முகங்களை
அணிந்துகொள்ளுங்கள்

கண்ணாடி உருவங்களை
கல்லெறிந்து உடைத்துவிட்டு
முகமுகமாய்
தரிசனமாகுங்கள்

காலப்புத்தகத்தில்
உங்கள்
தண்ணீர் எழுத்துக்களை
அழித்துவிட்டு
கல்லெழுத்துக்களை
பொறியுங்கள்

ஏழைகளின் கண்ணீர்
துடைக்கப்பட்டால்தான்
தேசத்தாயின் கண்ணீரும்
துடைக்கப்படும்

புது வருடம் பிறக்கிறது
புதுயுகம் பூக்கிறது

என் பறை முழங்குகிறது
டட்டடா டடட்ட டட்டடா ….


டிஸ்கி:


நான் பதிவெழுத வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகப்போகிறது. ஆனந்தவிகடனில் எனது வலைப்பூ வந்தது எனக்கு பெருமகிழ்சியைத் தந்தது. மேலும் பல நெகிழ்ச்சியான தருணங்கள் உண்டு. அவற்றை எனது 100-வது பதிவில் தெரிவிக்கிறேன்.

இதுவரைக்கும் என் வலைப்பூவிற்கு வருகைதந்து, வாக்குகள் இட்டு, பின்னூட்டமிட்டு, ஆதரவு தந்த பதிவர்கள் மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் !.







.

Wednesday, December 28, 2011

அன்பினால் எல்லாம் நடக்கும்

செல்வந்தர் ஒருவர் விலை உயர்ந்த குதிரை ஒன்றை வாங்கினார். அழகாக இருந்த அதன் மீது சவாரி செய்ய விரும்பினார். ஒவ்வொரு முறை அவர் அந்தக் குதிரையில் அமரும்போதும் அது மேலும் கீழும் துள்ளிப் பாய்ந்து அவரைக் கீழே தள்ளியது. இப்படியே பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. அவரும் பலவித முயற்சிகள் செய்து பார்த்தார். ஏதும் பயன் விளையவில்லை.

ஏராளமான பொருள் கொட்டி வாங்கிய அழகிய குதிரையில் சவாரி செய்ய முடியவில்லையே என்று வருந்தினார் அவர். அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவரைச் சந்தித்த செல்வர் தன் சிக்கலை எடுத்துச் சொன்னார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட அவர் “ நீர் குதிரையுடன் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறீர்? அதற்குத் தீனி வைக்கிறீரா? தண்ணீர் காட்டுகிறீரா? இல்லை அதன் உடலைத் தேய்த்து குளிப்பாட்டுகிறீரா? ” என்று கேட்டார்.

“ அதற்குத் தீனி வைப்பதும் குளிப்பாட்டுவதும் என் வேலையாட்களின் வேலை. சவாரி செய்ய மட்டும் நான் அதை வெளியே அழைத்து வருகிறேன். எதற்காகக் இதையெல்லாம் கேட்கிறீர்கள்? ” என்று கேட்டார் அந்த செல்வந்தர்.

“ நாளை முதல் அந்தக் குதிரையுடன் நீர் அதிக நேரத்தைச் செலவிடும். உம் கைகளாலேயே அதற்கு உணவு வையும். தண்ணீர் காட்டும். அதன் உடலைத் தேய்த்துக் குளிப்பாட்டும். உம் அன்பை அதனிடம் காட்டும். அதன் பிறகு பாரும். அன்பினால் எல்லாம் நடக்கும் “ என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார் அந்த ஞானி.

அவர் சொன்னபடியே செய்தார் செல்வந்தர். அவர் அன்பில் திளைத்தது குதிரை. அதன் பிறகுதான் அந்த மாயம் நடந்தது.

அதன் பிறகு அந்தக் குதிரை அவர் சவாரி செய்யும்போது எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அவரை மகிழ்ச்சியுடன் சுமந்து சென்றது குதிரை.





டிஸ்கி:

அரசாங்கப் பணி என்றாலே உங்களுக்குத் தெரியும். அதை விட நான் வேலை பார்க்கும் காவல்துறையைப் பற்றி கேட்கவே வேண்டாம். டிசம்பர் மாதம் வந்தாலே எனக்கு அலுவலகப் பணிகள் கழுத்தைப் பிடித்து விடும். பிசியான வேளைகளிலும் ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு பதிவுகளையும் பின்னூட்டங்களையும் இட்டு வருகிறேன். ஜனவரியிலிருந்து மறுபடியும் எல்லா பதிவுகளுக்கும் வழக்கம் போல வந்து பின்னூட்டம் மற்றும் வாக்குகள் இடுவேன். ஆகவே அன்பர்கள் என்னுடைய வருகையின்மையையும் பின்னூட்டம் இடாமையையும் பொறுத்தருள வேண்டும்.




.

Monday, December 26, 2011

பட்டதாரி இளைஞர்கள்





தேடித் தேடி சேகரித்து
விதைக்கப்பட்டன
விதைகள்
தோட்டமெங்கும்

புழு வந்தது
பூச்சி வந்தது

தேள் வந்தது
பாம்பும் வந்தது

செடிகள் மட்டும்
வரவில்லை
வரவே இல்லை…….!






.

Thursday, December 22, 2011

ஒரு நதியின் அழுகை




என் பிறந்த ஊரின் வழியாய்ப்
பிரயாணப்பட்டபோது

என் ஞாபகச் சில்லறைகள்
தெறித்துச் சிதறின


*****

ஏரல்
இதுதான் நான் பிறந்த ஊர்
தென்தமிழகத்தின் கடையோரமாய்
வயல்களோடும் வயல்வெளி நிலங்களோடும்
நீண்டு கிடக்கிறது
அந்த
பசுமை பூமி

*****

அந்த நாட்களில்
என் வசந்த ருதுக்களில்
என் தோழமையாய் இருந்ததெல்லாம்
அந்த நதி
தாமிரபரணி.

*****

அந்த நதித்தோழியோடுதான்
செலவழிந்தன
என் நேரச் சில்லறைகள்

*****


நீண்ட அந்த
வெண்மணற்பரப்புதான்
அவளின்
கூந்தல்

அந்தக் கூந்தலில்தான்
என் கூடுகள் இருந்தன.

*****

எனக்கான
அவளின் கதைகளும்
அவளுக்கான
என் கதைகளும்
அங்குதான் பறிமாறிக்கொள்ளப்பட்டன

*****

அதிகாலைகளில்
அவளை
நான்
முத்தமிடும்போதெல்லாம்
சிலிர்ப்படைந்து
தெளிப்பாளே
அந்த
நீர்த்திவலைகளில்தான்
என் பரவச நிமிடங்கள்
கரைந்து கிடக்கின்றன.

*****

அவளுக்குள் நான்
மூழ்கி எழும்போதெல்லாம்
பாய்ந்து பரவுமே
அமுத விஷம்

அதுவே
என் கவலைக் கிருமிகளை
அழித்தொழிக்கும்
மாமருந்து

*****

என் சொர்க்கநாட்களை
சேகரிக்க கற்றுத்தந்ததும்
அவள்தான்

என் நரக நாட்களை
அழித்துப்போடக் கற்றுத் தந்ததும்
அவள்தான்

*****

அவள் காதோரங்களில்
முளைத்திருக்கும்
அந்த நாணல் சீப்புகளில்தான்

என் பிரச்சினை முடிகளை
சீவியிருக்கிறேன்

*****

இன்று……

பேருந்தைவிட்டு இறங்கி
ஊர் எல்லையைக் கடந்து
நடக்கிறேன்

என் தோழியைக் காண…..


*****


அங்கு நான் கண்ட காட்சி.....

ஆள் மெலிந்திருந்தாள்
அய்யோ பாவம் என்றிருந்தாள்

அவளின் வனப்பை
காலம் திருடியிருந்தது

அவளின் கூந்தல்
வெட்டப்பட்டிருந்தது

அவளின் மரப்பூக்கள்
பறித்தெறியப் பட்டிருந்தன


*****


அவளுக்கான
என் கதைகள்
அப்படியேதான் இருக்கின்றன

எனக்கான
அவள் கதைகளில்தான்
கருச்சிதைவு ஏற்பட்டிருந்தது


*****

தன் நீர்க்கரங்களால்
என்னை அணைத்துக்கொண்டு
கதறினாள் என் தோழி

*****



போரினால் பாதிக்கப்பட்ட
நாடு போல் இருக்கிறது
என் இதயம்


சிந்தித்துக் கொண்டே
இருக்கிறேன்
அங்கு போகாமலே
இருந்திருக்கலாமோ என்று……….

********








.

Wednesday, December 21, 2011

மீசைக் கனவுகள்



இரவின் நீட்சிகள்
நீளும்
ஒவ்வொரு நொடிகளிலும்

நீண்ட கனவுகள்…..

அரச கனவுகள்
ஆண்டி கனவுகள்
ஆசை கனவுகள்
மீசைக் கனவுகள்

கனவுகள்தோறும்
நாடகங்கள்
எல்லா நாடகங்களிலும்
கோமாளியாய்.....
நான்

என் கனவுகள்தானே
ஏன் இப்படி?

சிரிக்கிறது
நிஜம்.





.

Tuesday, December 20, 2011

என் கோட்டோவியம்

யாரேனும் பார்த்தீர்களா
என் கோட்டோவியத்தை

அது
தொலைந்து போயிற்று

என் நேரங்களைத் தின்றுதான்
அந்த ஓவியம் கொழுத்தது

கோடுகளல்ல அவை
என் பொழுதுகள்

விற்பனைக்குத்தான் என்றால்
திரும்பக் கொடுத்துவிடுங்கள்

பதிலுக்கு
என்னையே தந்து விடுகிறேன்

ஏனென்றால்
அந்த ஓவியத்தில்தான்
நான் வாழ்கிறேன்

முற்றுப்பெறாத அந்த
ஓவியத்திற்குள்

ஓர் காவியம் இருக்கிறது.
.

Monday, December 19, 2011

பதிவர் சங்கம் தேவையா?

பதிவர் சங்கம் தேவையா
கேட்கிறது ஒரு கூட்டம்

தங்கத்தையும்
சங்கத்தையும்
நிறுக்கும் தராசின் முள்

சங்கம் பக்கமே சாயும்
என்பதை உலகறியும்

போரில்லா காலங்களில்
போராயுதங்களுக்கு அவசியமில்லைதான்

ஆனால்
போர் வந்துவிட்டால்.....
என்பதுதான் எங்கள் கேள்வி

ஊறுகாய் கெட்டுவிடவா போகிறது
என்கிறீர்கள் நீங்கள்

சாப்பாடே கெட்டுவிட்டால்.....
என்பதுதான் எங்கள் கேள்வி

பல்லக்கை
முன்னெடுத்து செல்கிறார்
புலவர் ஒருவர்

பாதையெங்கும் முள்ளெடுத்து
தூவுகிறீர்கள் நீங்கள்

விதைகளையெல்லாம்
அழிக்கிற கூட்டம் ஒன்று
காலம்தோறும்
இருக்கிறதால்தான்

பல சரித்திரங்களும்
சமாதிகளாயின

கருவிலிருக்கும்போதே
கழுத்தை நெறிக்காதீர்கள்

வளரட்டும் அவன்
அப்போது
மோதிப்பாருங்கள் !.....
.

Saturday, December 17, 2011

போபியா (Phobia), பயம் என்ன வேறுபாடு? - மருத்துவரீதியான ஓர் அலசல்

நண்பர் பிலாசபி பிரபாகரன் (Philosophy Prabhakaran) அவர்கள் என்னுடைய பதிவு ஒன்றில் பின்னூட்டத்தில் போபியாக்கள் பற்றி நீங்கள் பதிவொன்றை இட வேண்டும். இது வாசகர் விருப்பமாகும் என்று தெரிவித்திருந்தார். என்னுடைய கடுமையான அலுவலகப் பணி நெருக்கடி காரணமாக அது இத்தனை நாள் தள்ளிப் போயிற்று. இன்றுதான் அதற்கு சமயம் வாய்த்தது. அவருடைய விருப்பத்திற்கிணங்கவும் வாசகர்கள் தெரிந்துகொள்வதற்காகவும் போபியாக்கள் (Phobias) பற்றி இன்று கொஞ்சம் அலசலாம்.

போபியா என்றால் என்ன? போபியாவின் வகைகள் என்ன?

சிலர் நினைத்துக்கொண்டிருக்கலாம் போபியா என்பது பயம்தான் என்று. இல்லை. போபியா என்பது வேறு. பயம் என்பது வேறு. பயம் என்பது இயல்பானது. போபியா என்பது அசாதாரணமான பயம். அளவுக்கு மீறிய பயம். சுருக்கமாக சொன்னால் இயற்கைக்கு மாறான பேரச்சம் என்று சொல்லலாம்.

பயம் அவசியம். போபியா அநாவசியம். ஆனால் வாழ்க்கையில் நேரிடும் சில அசாதாரண சம்பவங்களினால் சிலர் இந்த போபியாக்களை தங்களுக்குள்ளே உருவாக்கிக் கொள்கிறார்கள். இது ஒரு மனநோய்தான். வேறு பயப்படும்படி ஒன்றுமில்லை. சில போபியாக்கள் ஆபத்தானவை.

ஆகவே போபியா என்பது இயற்கைக்கு மீறிய பேரச்சம் எனப்படுவதாகும்.
நூற்றுக்கணக்கான போபியா வகைகள் இருக்கின்றன. அகர வரிசைப்படி A- எழுத்தில் தொடங்கும் போபியாக்கள் பட்டியலை மட்டும் கீழே கொடுத்துள்ளேன். இன்னும் B யிலிருந்து Z வரைக்கும் எவ்வளவு இருக்கும் பாருங்கள். வேண்டாம். தலை சுற்றும். நாம் நேரடியா மேட்டருக்கு வருவோம். பொறுமையில்லாதவர்கள் பட்டியலை ஒரேத் தாவாக தாவிவிடுங்கள்.

Ablutophobia- Fear of washing or bathing.
Acarophobia- Fear of itching or of the insects that cause itching.
Acerophobia- Fear of sourness.
Achluophobia- Fear of darkness.
Acousticophobia- Fear of noise.
Acrophobia- Fear of heights.
Aerophobia- Fear of drafts, air swallowing, or airbourne noxious substances.
Aeroacrophobia- Fear of open high places.
Aeronausiphobia- Fear of vomiting secondary to airsickness.
Agateophobia- Fear of insanity.
Agliophobia- Fear of pain.
Agoraphobia- Fear of open spaces or of being in crowded, public places like markets. Fear of leaving a safe place.
Agraphobia- Fear of sexual abuse.
Agrizoophobia- Fear of wild animals.
Agyrophobia- Fear of streets or crossing the street.
Aichmophobia- Fear of needles or pointed objects.
Ailurophobia- Fear of cats.
Albuminurophobia- Fear of kidney disease.
Alektorophobia- Fear of chickens.
Algophobia- Fear of pain.
Alliumphobia- Fear of garlic.
Allodoxaphobia- Fear of opinions.
Altophobia- Fear of heights.
Amathophobia- Fear of dust.
Amaxophobia- Fear of riding in a car.
Ambulophobia- Fear of walking.
Amnesiphobia- Fear of amnesia.
Amychophobia- Fear of scratches or being scratched.
Anablephobia- Fear of looking up.
Ancraophobia- Fear of wind. (Anemophobia)
Androphobia- Fear of men.
Anemophobia- Fear of air drafts or wind.(Ancraophobia)
Anginophobia- Fear of angina, choking or narrowness.
Anglophobia- Fear of England or English culture, etc.
Angrophobia - Fear of anger or of becoming angry.
Ankylophobia- Fear of immobility of a joint.
Anthrophobia or Anthophobia- Fear of flowers.
Anthropophobia- Fear of people or society.
Antlophobia- Fear of floods.
Anuptaphobia- Fear of staying single.
Apeirophobia- Fear of infinity.
Aphenphosmphobia- Fear of being touched. (Haphephobia)
Apiphobia- Fear of bees.
Apotemnophobia- Fear of persons with amputations.
Arachibutyrophobia- Fear of peanut butter sticking to the roof of the mouth.
Arachnephobia or Arachnophobia- Fear of spiders.
Arithmophobia- Fear of numbers.
Arrhenphobia- Fear of men.
Arsonphobia- Fear of fire.
Asthenophobia- Fear of fainting or weakness.
Astraphobia or Astrapophobia- Fear of thunder and lightning.(Ceraunophobia, Keraunophobia)
Astrophobia- Fear of stars or celestial space.
Asymmetriphobia- Fear of asymmetrical things.
Ataxiophobia- Fear of ataxia. (muscular incoordination)
Ataxophobia- Fear of disorder or untidiness.
Atelophobia- Fear of imperfection.
Atephobia- Fear of ruin or ruins.
Athazagoraphobia- Fear of being forgotton or ignored or forgetting.
Atomosophobia- Fear of atomic explosions.
Atychiphobia- Fear of failure.
Aulophobia- Fear of flutes.
Aurophobia- Fear of gold.
Auroraphobia- Fear of Northern lights.
Autodysomophobia- Fear of one that has a vile odor.
Automatonophobia- Fear of ventriloquist's dummies, animatronic creatures, wax statues - anything that falsly represents a sentient being.
Automysophobia- Fear of being dirty.
Autophobia- Fear of being alone or of oneself.
Aviophobia or Aviatophobia- Fear of flying.

அமெரிக்காவில் மட்டும் 6 மில்லியன் மக்கள் ஏதேனும் ஒரு போபியாவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. எல்லா நாடுகளிலுமே 7 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை மக்கள் ஏதோ ஒரு போபியாவினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று மற்றொரு புள்ளிவிபரம் கூறுகிறது.


சிலர் திறந்த வெளியிலோ பொதுமக்கள் மத்தியிலோ போவதற்கும் பேசுவதற்கும் பயப்படும் போபியாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். மாறாக சிலர் தனிமையிலே இருப்பதற்கு பயப்படும் போபியாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். சிலருக்கு இருட்டைக் கண்டால் பயம். பகலில் கூட வீட்டிலே தனியாக இருக்க பயப்படுவார்கள். சிலருக்கு இரத்தத்தைக் கண்டதும் மயக்கமே வந்துவிடும். சிலருக்கு பாம்பு, பல்லி, கரப்பான் பூச்சி, தேள் போன்றவற்றைக் கண்டவுடனே மயக்கம் போட்டு விழுந்து விடுவார்கள். சிலர் உயரமான கட்டிடங்கள், மலை போன்றவற்றைக் கண்டதும் அலறுவார்கள். சிலர் கிருமிகள் கிருமிகள் என்று அளவுக்கு மீறி பயந்து நடுங்குவார்கள். ஒரு நாளைக்கு நூறு முறை கைகளைக் கழுவுவார்கள். ஒன்றும் வேண்டாம். ஹெல்மட்டைக் கண்டாலே அலறும் போபியாவினால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவ சரித்திரத்திலே உண்டு. ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?.

போபியாவினால் எவ்விதம் பாதிப்பு உண்டாகிறது?

பயம் என்பது இயற்கைதான். ஆனால் அளவுக்கு மீறிய பயம்தான் போபியாவாகும். உதாரணமாக நீங்கள் கார் அல்லது பைக் ஓட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு மலைப்பகுதியில் பெரிய மேட்டைக் கடந்து போக வேண்டி இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். ஆரம்பத்தில் இலேசாக இருக்கும் பயம் நாளடைவில் டிரைவிங்கே வேண்டாம் என்று முடிவெடுத்து விடுகிறீர்கள் என்றால் அங்கேதான் அது போபியா எனப்படுகிறது. இது நமக்கு மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பிரச்சினையை உண்டாக்குகிறது. சிலருக்கு இந்த போபியாவினால் அளவுக்கு மீறி பிரச்சினை ஏற்பட்டு இதய வியாதி வரை கொண்டு போய்விடும். ஒரு தடவை நாய் பயத்தினால் நீங்கள் பாதிக்கப்படும் போது நல்ல நாயைக் கண்டாலும் அலறி ஓடுவீர்கள். நீங்கள் ஓடும் போது நாயும் துரத்தத்தானே செய்யும்?!!!...

போபியாவின் அறிகுறிகள் என்னென்ன?

போபியா ஏற்பட்டிருக்கிறது என்றால் சில அறிகுறிகள் உண்டாகும். அளவுக்கு மீறிய அச்ச உணர்வினால் உடல் நடுங்குவது, வியர்ப்பது, மூளைச் சோர்வு, மூக்கு ஒழுகல், இதயத்துடிப்பு அளவுக்கு மீறுவது, சுவாசிக்கவே திணறுவது போன்ற உணர்வுகள்தான் போபியாவினால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகளாகும்.

எப்படி குணமாக்குவது?

தகுந்த நல்ல மனோதத்துவ சிகிச்சை நிபுணரிடம் காண்பித்து குணமடையலாம். ஒருவர் மூன்று விதங்களாய் பாதிக்கப்பட்டிருக்காலம். 1. Generalized Anxiety Disorder (GAD), 2. Obsessive Compulsive Disorder (OCD), 3. Post-Traumatic Stress Disorder (PTSD) என்ற மூன்று விதங்களில் பாதிக்கப்பட்டிருக்கலாம். பாதிப்பின் விதத்தைப் பொறுத்து சிகிச்சை அளிப்பார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.

fluoxetine (Prozac), sertraline (Zoloft), paroxetine (Paxil), fluvoxamine (Luvox), citalopram (Celexa), and escitalopram (Lexapro) என்று நிறைய மருந்துகள் உள்ளன. இதற்கு மேலும் நான் சொன்னால் நீங்கள் என்னை அடிக்க வருவீர்கள். எல்லாம் வாயில் நுழையாத மருத்துவச்சொற்கள்.
இன்னும் இந்த போபியாக்களைப் பற்றி ஏராளம் சொல்லலாம். ஆனால் தனிப் புத்தகமே போடவேண்டும். நண்பர் பிலாசபி பிரபாகரனே வருத்தப்பட்டு விடுவார். அட ஒரு பேச்சுக்குச் சொன்னா இந்த ஆளு இவ்வளவு ரம்பம் போடுறாரே அப்படின்னு கூட சொல்லிவிடலாம். ஆகவே இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் இவ்வித போபியாக்களினால் பாதிக்கப்பட்டிருப்பார்களானால் தகுந்த மனோதத்துவ நிபுணரிடம் காண்பித்து சிகிச்சை அளியுங்கள்.
நலமுடன் வாழ்க!.

Wednesday, December 14, 2011

நான் நிறமில்லாதவன்

நான் நிறமில்லாதவன்
நிறங்களை நிறைய கொண்டிருந்தும்
நான் நிறமில்லாதவன்

நிறங்களோடு வாழ்ந்தபோது
நிராகரித்த உலகம்
நிறமில்லாத வாழ்க்கையை
வரவேற்கிறது

ஏனென்றால்
நிறங்களோடு வாழ
இவ்வுலகம் விரும்புகிறது

நிறங்களோடு வாழ்பவனை
வெறுக்கிறது

ஆகவேதான்
நிறமில்லாமல் வாழ்கிறேன்.
.

Tuesday, December 13, 2011

நல்ல வியர்வையும் கெட்ட வியர்வையும் (Healthy Sweat and Unhealthy Sweat)– ஒரு மருத்துவரீதியான அலசல்.

வியர்வையில் கெட்ட வியர்வை நல்ல வியர்வை என்று இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம். பதில் ஆம் இருக்கிறது என்பதுதான். இதைப் பற்றி கொஞ்சம் அலசலாம். உங்கள் முதுகு மற்றும் மார்பு இவற்றைவிட உங்கள் உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், நெற்றி ஆகிய இடங்களில் மிகுதியான வியர்வை சுரப்பிகள் உண்டு. வயதாகும்போது முதலில் முதுமை அடையும் வியர்வைச் சுரப்பிகள் நம் கால்களில் உள்ள வியர்வை சுரப்பிகளாகும். வெப்பமான இடங்களில் அல்லது நேரடியாக சூரியஒளி தாக்கும் இடங்களில் வேலை பார்க்கும் நபர்கள் தங்கள் கால்களில்தான் முதலில் வெப்பத்தை உணருகிறார்கள்.

கடுமையான சூரியஒளித் தாக்குதல் மூலம் நம்முடைய கால்களில்தான் முதலில் தாக்குதல் உண்டாகி வலியும் அயர்ச்சியும் ஏற்படுகிறது. ஒரு ஆராய்ச்சி முடிவு இப்படி கூறுகிறது. 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக நீராவிக்குளியல் அல்லது வெந்நீர்க் குளியல் எடுப்பவர்கள் மற்றவர்களை விட அதிகமாக வியர்க்கிற தன்மையை அடைந்தார்கள் என்று.
அவர்களின் வியர்வைத்துளிகளை கிண்ணங்களில் பிடித்து உலர வைத்தபோது சிலருடைய வியர்வைத்துளிகள் விரைவில் உலர்ந்து விட்டதாகவும், சிலருடைய வியர்வைத்துளிகள் உலராமல் வெகுநேரம் ஈரப்பதத்துடன் இருந்ததாகவும் அந்த ஆராய்ச்சி சொல்கிறது. அப்படியானால் என்ன அர்த்தம்?

மருத்துவ விஞ்ஞானம் என்ன சொல்கிறது?
ஒருவருக்கு எப்படி வேர்க்கிறது என்பது அவருடைய உடல்நலத்தின் தன்மையை காண்பிக்கிறது. அவருடைய உடலின் நீர்த்தன்மையானது எப்படி அவருடைய தோலினால் சமன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து அவருடைய உடலின் ஆரோக்கியத்தையும் மதிப்பிட்டு விடலாம்.

வெப்பத்தில் அல்லது சூரிய ஒளியில் இருந்தும் ஒருவருக்கு சரியாக வேர்க்காதே போனால் அவருடைய உடல் ஆரோக்கியம் கெட்டிருக்கிறது என்பதுதான் பொருளாகும். அவருடைய வேர்வையில் உள்ள அமிலமானது நீர்த்தன்மை இல்லாமல் கெட்டிப்பட்டு விடுவதுதான் இப்படி வேர்க்காமல் போவதற்கான காரணமாகும். அதாவது அவருடைய தோல் மற்றும் உடல் இயக்கம் அவருடைய உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது இந்நிகழ்வு ஏற்படுகிறது.

கெட்ட வியர்வை என்பது அதிகமான அமிலத்தையும், கொழுப்பையும் கொண்டிருக்கும் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் உலகமெங்கும் ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு சூரிய ஒளியினால் அல்லது வெப்பத்தினால் மரணடைகிறார்கள். நீங்கள் வெப்பம் மிகுந்த நாட்டில் அல்லது இடத்தில் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு வியர்க்க வேண்டும். இந்த உடலின் செயலானது (Body Mechanism) நம்முடைய மூளையினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

நம்முடைய மூளையானது தோலினருகில் அமைந்திருக்கும் வியர்வைச் சுரப்பிகளின் மூடித்திறத்தல் வேலையைக் (Close and Open) கட்டுப்படுத்தி அமிலத்தை சுரக்கவைத்து வியர்வையாக மாற்றி தோலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது. வியர்க்காத மனிதர்களின் உடலில் இந்த வியர்வை இயக்கத்தில் கோளாறு இருக்கிறது என்று அர்த்தமாகும். கெட்ட வியர்வையினால் இரத்தமானது கெட்டிப்பட்டு விடுகிறது. நம்முடைய இரத்தத்தில் மற்றும் உடலில் சுரக்கும் மற்ற திரவங்களில் கடல் நீரில் உள்ளதைப்போலவே உப்பு கலந்த தண்ணீர் உள்ளது. இந்த உப்பானது நம்முடைய தசைகளும் மற்ற உறுப்புகளும் ஆரோக்கியமாக இயங்க அவசியமாகும்.

நமக்கு சுளுக்கு ஏன் ஏற்படுகிறது தெரியுமா?

நம்முடைய உடலில் இந்த உப்புத்தன்மை போதுமானதாக இல்லாத சமயங்களில்தான் இந்த சுளுக்கு ஏற்படுகிறது. நம்முடைய இரத்தத்தில் உள்ள பொருட்களின் சேர்மானங்களின் அளவை இந்த உப்புதான் கட்டுப்படுத்துகிறது. இந்த உப்பின் அளவு மிகவும் அதிகரிக்கும்போதும் பிரச்சினை ஏற்படுகிறது. இதன் அளவு மாறுபாடுதான் தேவையில்லாத இரசாயனப் பொருட்களை இரத்தத்தில் அதிகளவு உற்பத்தி செய்துவிடுகிறது.

சிலருக்கு தாகம் ஏற்படும்போது தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்க மறுக்கிறது. காரணம் இந்த உப்புத்தன்மை அளவு மாறுபடுவதுதான். தண்ணீர் குடித்தாலும் அதை நம் உடல் உட்கிரகிக்க முடியாமல் போவதால் தண்ணீர் அதன் வேதிப்பொருட்களோடு நம்முடைய சிறுநீராக மாறி சிறுநீர்த்துவாரம் மூலமாக வெளியேறுகிறது. நம்முடைய உடலானது ஒழுங்காக வியர்வையை சுரக்குமானால் வியர்வை சுரப்பிகள் குடிக்கும் தண்ணீரிலிருந்து உப்பை ஒழுங்காக உறிஞ்சி விடுகின்றன. அந்த உப்புதான் வியர்வை வெளியேறுவதை நிர்ணயிக்கிற சமாச்சாரமாய் இருக்கிறது.

எல்லாம் ஒழுங்காய் நடக்கும்போது வியர்வை மட்டும் நீர் போல வியர்வைத்துவாரங்கள் மூலம் நம் தோலில் வெளியேறுகிறது. இது நல்ல வியர்வையாகும்.

மாறாக இதில் கோளாறு ஆகும்போது உடலில் உள்ள வேறு இராசயன கூட்டுப்பொருட்களும் (Various Salt Compounds and other Minerals) வியர்வையோடு சேர்ந்து வியர்வைத் துவாரங்களின் வழியாக வெளிவருகிறது. இதுவே கெட்ட வியர்வை எனப்படுகிறது.


சரி. இந்த வியர்வைக் கோளாறை அதாவது கெட்ட வியர்வையைத் தடுக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

ஆம். இருக்கிறது. மிக எளிதான வழிதான் மருந்து மாத்திரை எதுவும் தேவையில்லை. உடற்பயிற்சிதான் அந்த வழி. கடுமையான உடற்பயிற்சிகள் அல்ல. எளிதான ஆனால் உடல் வேர்க்கும்படியான நடைப்பயிற்சியோ அல்லது உடற்பயிற்சியோ தினமும் 20 அல்லது 30 நிமிடங்கள் செய்தால் போதும் இந்த கெட்ட வியர்வை நாற்றத்திலிருந்து விடுதலை பெறலாம்.

கெட்ட வியர்வை நாற்றங்கள் உள்ளவர்கள் இவ்வாறு உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே மாற்றம் தெரியும். உடற்பயற்சி செய்து முடித்த உடனேயே வெளிவரும் வியர்வையைக் கவனியுங்கள். முதலில் கொழுப்பு போல நிறமுடைய கெட்ட வியர்வை எண்ணெய் போன்று வெளியேறும். நாளாக நாளாக வியர்வையின் நிறம் மாற ஆரம்பிக்கும். நாளடைவில் சுத்தமான தண்ணீர் போன்று நிலைமை வருகிற வரைக்கும் நீங்கள் உடற்பயிற்சியைத் தொடர வேண்டும். (அதன் பிறகும் தொடர்ந்தாலும் நல்லதுதானேங்க.). கொழுப்பும் குறையும். தொந்தியும் குறையுமல்லவா? உடற்பயிற்சியினால் எவ்வளவு நன்மை பார்த்தீர்களா? இன்றைக்கே தொடங்கி விடுங்கள்.

கெட்ட வியர்வையோடுதான் வாழுவேன் என்று நீங்கள் அடம் பிடித்தால் அவ்வளவுதான். நாளடைவில் இரத்தத்தின் உப்பைக் கட்டுப்படுத்துகிற தன்மை மாறுகிறதினால் ஹார்ட் அட்டாக் வர மிகுந்த வாய்ப்பிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள்தான் சூரிய ஒளித்தாக்குதலினால் மரணமடைகிறார்கள். இப்போது காரணம் புரிகிறதா?

“ வியர்வை சாதாரணமானதல்ல. அது நம் உடலின் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடி” என்பதை ஒருநாளும் மறவாதிருங்கள்.

நலமுடன் வாழ்க!.
.

Saturday, December 10, 2011

தீர்ப்புகள் திருத்தப்படும்

(முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையினால் மனம் நொந்து நான் எழுதிய கவிதை இது)

சிலந்திவலைகளாய்
ஆயிரம் பிரச்சினைகள் இருக்க

அணைப் பிரச்சினையை
ஏனய்யா எடுத்தீர்கள்
எங்கள் தேசத்து அரசியல்வாதிகளே

பூமித்தாயின் தலையில்
ஏன் ஆணி அடிக்கிறீர்கள்

நீங்கள் அடிக்கும்
ஒவ்வோர் ஆணியும்

திரும்பவில்லையா
பூகம்பங்களாய்....

நாய்களோடு விளையாடலாம்
நதிகளோடு விளையாடலாமா

இயற்கையை
கூறுபோட்டு
கூறுபோட்டு
விற்பனை செய்ததினால்தான்

இன்று
நம் வாழ்க்கையும்
கடைவீதியில்…

சோறு போடாவிட்டாலும்
பரவாயில்லை
எங்களை
கூறுபோடாதீர்கள்

அணை கட்டுவது தவறல்ல
அதற்கு
எங்கள் வாழ்க்கையை
ஏன் அஸ்திபாரமாக்குகிறீர்கள்

எங்கள் கேள்விகளை
நீங்கள்
அலட்சியப்படுத்தலாம்

எங்கள் வேள்விகளை
நீங்கள்
அலட்சியப்படுத்த முடியாது

அவ்வேள்வியில்
உங்கள் தாறுமாறுகள்
தகடுபொடிகளாகும்

தீர்ப்புகள் திருத்தப்படும்போது
ராஜ்ஜியங்களும் நகர்ந்துவிடும்
என்பதை நினைவில் வையுங்கள்

இப்படியே போனால்
இந்திய வரலாறு
திரும்பவும் எழுதப்படும்
வரலாற்றின் வண்ணங்களும்
மாற்றப்படும்

புதிய இந்தியாவிற்காக
எதையும் செய்யும்
எங்கள் கூட்டம்.
.

Thursday, December 8, 2011

மானுடம் பாடும் கவிதை

இது மானுடம் பாடும் கவிதை
காதல் காமம் தாண்டிய
கவிப்பயணம்

இது என் தவவேள்வி
வேகாதவைகளும் வெந்து விடும்
ஆகாதவைகளும் அவிந்து விடும்
அக்கினிக் குண்டம் இது

நான்
கோமாளிக் கூத்துக்கு
கவிபாட வரவில்லை
அடைபட்டிருக்கும் குயில்களின்
தொண்டைதிறக்க
கூவுகிறேன் உரக்க

என் பூபாளம்
பூமிவரை மட்டுமல்ல
அதற்கும் கீழே

என் வாணவேடிக்கை
வானம் வரை மட்டுமல்ல
அதற்கும் மேலே

வாசல்வரை வந்து
கூவிவிட்டு ஓடிவிடும்
சேவலல்ல நான்

உங்கள் வீட்டிற்குள்ளே வந்து
எக்காள சத்தமிடும்
ஏகாந்தப்பறவை
நான்

என் சிறகுகளில்
ஏறிக்கொள்ளுங்கள்

ஏனென்றால்
இது உலகப் பயணமல்ல
பிரபஞ்சப் பயணம்.
.

Tuesday, December 6, 2011

வியாதியின்றி வாழ சில ஆலோசனைகள்

நம்முடைய நவீன மருத்துவ விஞ்ஞானம் தலைசிறந்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் ஏன் பெருகி வரும் புதுப்புது வியாதிகளை நம்முடைய மருத்துவ விஞ்ஞானத்தால் குணப்படுத்த முடியவில்லை. ஏன் அவை தொடர்ந்து பெருகுகின்றன? வியாதியில்லாமல் வாழ முடியாதா? என்ற பல கேள்விகளுக்கு பதிலாக இந்த சின்ன அலசல்.

உதாரணமாக இந்த அலர்ஜியை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த அலர்ஜியில்தான் எத்தனை வகை? உணவு அலர்ஜி, உலோக அலர்ஜி, ஆஸ்துமா, தாவரங்களினால் உண்டாகும் அலர்ஜி, விலங்குகளினால் உண்டாகும் அலர்ஜி என்று எத்தனை விதவிதமான அலர்ஜிகள் இருக்கின்றன பாருங்கள். இவ்வகை அனைத்து அலர்ஜிக்களையும் நம்முடைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தால் முற்றிலும் குணமாக்க இயலுகிறதா என்ற கேள்விக்கு இல்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கிறது.

நவீன நுண்ணோக்கி (Microscope) மூலம் கண்ணோக்கினால் மில்லியன் கணக்கான வைரஸ்களும், பாக்டீரியாக்களும் காற்றிலும் தண்ணீரிலும் நம்மைச் சுற்றிலும் எங்கும் நிறைந்திருக்கிறதை நாம் காணலாம். இவற்றில் பாதியையேனும் நம்முடைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தால் கண்டுபிடிப்பதே சிரமமாயிருக்கிறது. பிறகு எப்படி இவற்றிற்கு சிகிச்சை அளிப்பது? இவற்றிற்கு என்னதான் தீர்வு?

பல வருடங்களுக்கு முன்னே பார்த்த அதே பாக்டீரியாக்களும் வைரஸ்களும் இப்போது தங்கள் கட்டமைப்பில் மாறியிருக்கின்றன. இதைக் கண்டு விஞ்ஞான உலகம் வாயடைத்துப் போய் இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க விதவிதமாய் ஆராய்ச்சிகள் பரபரப்பாய் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊதாரணமாக இந்த பன்றி காய்ச்சல் வைரஸை எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் இவற்றை முற்றிலும் குணமாக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. கட்டுப்படுத்த வேண்டுமானால் செய்யலாம். எய்ட்சும் அப்படித்தான்.

இந்த பூமிக்கு என்னதான் நேர்ந்துவிட்டது?
அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கின்றனர். இவ்வளவு மருத்துவ வசதிகள் இல்லாத அக்காலத்தில் எப்படி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்? தொடர்ந்து வாசியுங்கள்.

இந்த காலத்தில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதற்கான சிறிய பட்டியல் கீழே.

1.எவ்வித மருந்துகளுக்கும் கட்டுப்படாத கிருமிகள்
2.கிருமிகளில் உட்கட்டமைப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்
3.காய்கறிகளும், பழங்களும் தங்கள் சத்துக்களில் ஏற்பட்டுள்ள
குறைபாடுகள்
4.சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு.

நல்ல ஆரோக்கியமாக வாழ வழியில்லாமல் இந்த பூமி கேடடைந்து வருகிறது. ஆனால் இவற்றிலிருந்து தப்பித்து நிம்மதியாக ஆரோக்கியமாக வாழ வழியில்லையா என்ற ஆதங்கத்திற்கு பதில் உண்டு. என்ன வழி என்று கேட்கிறீர்களா?

நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதுதான் அந்த வழி. என்ன அந்த பழைய கால வாழ்க்கை முறை நமக்கு சரிப்பட்டு வருமா என்று சந்தேகப்படுபவர்கள் தொடர்ந்து வாசியுங்கள்.

நம்முடைய வாழ்க்கை முறைக்கும் நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன?
முதலில் நம்முடைய மனஆரோக்கியத்துக்கும் அவர்களின் மனஆரோக்கியத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம்.

நாம் அடிக்கடி கவலைப்படுகிறோம். நம்முடைய வீட்டைக்குறித்து, மனைவி பிள்ளைகளைக் குறித்து, வேலையைக்குறித்து, சுற்றுப்புறச் சூழலைக் குறித்து, நம்முடைய உணவு முறைகளைக் குறித்து மிகவும் கவலைப்படுகிறோம். இவைகளினால் உண்டாகிற மனஅழுத்தம்தான் நமக்கு பல வியாதிகளை உண்டுபண்ணுகிறது. நம்முடைய மூதாதையர்களுக்கு சில பிரச்சினைகளே இருந்தன. அதனால் மகிழ்ச்சியாய் வாழ்ந்தார்கள். ஆனால் நமக்கு நவீன விஞ்ஞானமும், நவீன மருத்துவமும் பலப்பல பிரச்சினைகளையும், வியாதிகளையும் உண்டுபண்ணுகின்றன.

அடுத்து உணவு முறைகளைப் பற்றிப் பார்ப்போம். உணவுமுறைகளில் நாம் எவ்விதங்களில் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது என்று பார்ப்போம். கீழே உள்ள பட்டியலைக் காணுங்கள்.

1.பேக்கேஜிங் செய்யப்பட்ட உணவுப்பொருட்களையோ பானங்களையோ
வாங்கி பயன்படுத்த கூடாது.

2.பாலீதீன் பைகளையோ, பிளாஸ்டிக் பொருட்களையோ
பயன்படுத்துவதை தவிருங்கள்.

3.சமையலில் மிச்சமான பொருட்களினால் மறுசுழற்சி முறையில் உணவுப்
பொருட்களை உண்டாக்குவதை தவிருங்கள். நேற்று உள்ள மீதி
உணவானாலும் சரி. பயன்படுத்தாதீர்கள்.

4. உங்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்களை நீங்களே வீட்டுத்தோட்டம் அமைத்து பயிரிட்டு அதை சாப்பிடப் பழகுங்கள். அல்லது அவ்வித காய்கறிகள், பழங்கள் விற்கும் தரமான கடைகளை விசாரித்து வாங்கி பயன்படுத்த ஆரம்பியுங்கள். வீட்டுத்தோட்ட பராமரிப்பு நம்முடைய மனதிற்கும் ஒரு இனிமையான அனுபவம் தந்து மனஅழுத்தத்தைக் குறைக்கிறது.

நம்முடைய முன்னோர்களின் ஆயட்காலத்தை ஒப்பிடும்போது நம்முடைய ஆயட்காலம் அதிகம்தான். நவீன மருத்துவம் இதைச் சாதித்தது உண்மைதான். ஆனால் அவர்கள் கொஞ்சகாலம் வாழ்ந்தாலும் நிம்மதியோடும் வியாதிகள் இல்லாமலும் வாழ்ந்தார்கள். நாம் அப்படியா வாழ்கிறோம்? !...

காரணம் மன அழுத்தம்தான். மன அழுத்தமானது நம்முடைய இரத்தத்தில் ஒருவித அமிலத்தை (Acid causing stress) உற்பத்தி செய்கிறது. அது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து நம்மை பலவீனர்களாக்கி விடுகிறது.

சரி. அப்படியானால் இந்த மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?
வேறென்ன? நம்முடைய புன்னகையும் சிரிப்பும்தான். ஆம் மனதை எப்போதும் நகைச்சுவை உணர்வுடனும் புத்துணர்வுடனும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். நல்ல புத்தகங்களை வாசியுங்கள். எப்போதும் புன்னகையுடன் வாழ்கிறவர்கள் மற்றவர்களைவிட நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அவர்களுக்கு மனஅழுத்தத்தால் இரத்தத்தில் உண்டாகிற அமிலம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவதால் வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகளும் குறைந்துபோகிறது.

முடிவாக,

நம்முடைய மனதைப் பேணுவோம். வியாயாதிகளின்றி வாழுவோம்.
நன்றி வணக்கம்.

Monday, December 5, 2011

சந்தைக்கு வந்த பூக்கள்

(என்னைப் பாதித்த ஒரு இளைஞனின் வாழ்க்கையினால் இக்கவிதைப்பூ மலர்ந்தது. அந்த இளைஞனின் மனோநிலையிலிருந்து எழுதினேன்.. மாற்றம் வந்தால் சரி.)




மாலினிக்கு நாலு வருஷம்
மாலாவுக்கு அஞ்சு வருஷம்
கோமதிக்கு கொஞ்சம் அதிகம்
ஏழு வருஷம்
கொடுத்து கொடுத்து
வேய்ந்த கூரையில்
பிய்ந்த ஓலைகளாய்
பாதி வாழ்க்கை முடிந்தாயிற்று
நான் பூத்த கருப்பையில்
என்னுடன் பூத்த
பெண் பூக்கள் மூன்று

முதிர்வடைந்து
பூச்சந்தைக்கு வந்தாச்சு
விற்பனைதான் நடக்கவில்லை

துணைப்பூக்களைத் தேடுகிறேன்
அவைகளுக்கல்ல
எனக்கு

அவைகளின் நிலைமை?

மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்.
***

Friday, December 2, 2011

வாழ்க்கை நடத்திய காம பாடம்

காமம் என்றால் என்ன
என்னிடம் கேட்டது வாழ்க்கை
புணர்ச்சி வேட்கையே காமம்
சொன்னது நான்

தவறு
காதலின் நீட்சியே காமம்
அன்புத் தென்றலின்
வேக முதிர்ச்சியே
அந்த
ஆரவாரப் புயல்

எங்கள் இளைஞர்களின் கருத்து
வேறுவிதமாய் உள்ளதே என்றேன் நான்
என்னவென வினவியது வாழ்க்கை

வாழ்வின் நோக்கமே காமம்
என்பதுதான்
இன்றைய இளைஞர்களின்
கோட்பாடும் கொள்கையும்

அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டுத்தான்
பிழைக்கிறது
சினிமாவும் பத்திரிக்கையும் என்றேன்

உண்மைதான்
அது முறையற்ற காமம்
அவர்கள் மாயவலையில்
விழும் ஈனமான்கள்
ஆனால் மெய்நிலை வேறு என்றது


விளக்கு என்றேன் வியப்புடன்
அழகாய் விளக்கியது வாழ்க்கை

பெரிய உணவுத் திருவிழா
வகை வகையான உணவு வகைகள்
திகட்டத் திகட்ட அலுக்காத அறுசுவைகள்
புதுமை புதுமை என
பிரம்மாண்டமாய் விளம்பரங்கள்

ஊரிலுள்ளோர் எல்லோரும் கூடினார்களாம்
அந்த அரங்கத்தில்

பிரம்மாண்ட மேஜை
பெரிய பட்டு விரிப்பு
எல்லோர் கண்களும் அதன் மேலே

திரை நீக்கப்பட்டது
இருந்தது என்ன தெரியுமா
நாம் அன்றாடம் சாப்பிடும்

சாதமும் சாம்பாரும்
ரசமும் பொறியலும்
அப்பளமும் கூட்டும்

வீட்டில் சாப்பிடாத
வெறிநாய்கள்

தட்டோடு நக்கின
காணாததை கண்டது போல.

இதுதான் காமம் என்றது வாழ்க்கை

எவ்வளவு அழகாய் சொல்லிவிட்டது வாழ்க்கை
பெருமிதமாய் பார்த்தேன்

என் அறிவு தோற்றுவிட்ட
வாழ்க்கையை நோக்கி.




சந்திப்போம் அடுத்த பதிவில்.

Thursday, December 1, 2011

செயல்களும் விளைவுகளும்

சின்ன சின்ன சிந்தனைகள் என்ற வரிசையில் சிந்தனைத்துளிகளை நான் தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன். என் முந்தைய பதிவுகளை படிப்பவர்களுக்கு அது தெரியும். அந்த வரிசையில் இன்றைய சிந்தனைத்துளி:
நாம் எவ்வளவோ செயல்களை வாழ்க்கையில் தொடர்ந்து செய்து வருகிறோம். நல்ல செயல்களையும் செய்கிறோம். தீய செயல்களையும் செய்கிறோம். இரண்டுமே பெரும் விளைவுகளை உண்டுபண்ணுகின்றன. இதைப்பற்றி இன்று கொஞ்சம் அலசலாம்.

1971-ஆம் வருடம் நவம்பர் 24-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் போர்ட்லாண்டு நகரிலிருந்து அமெரிக்கா நாட்டின் சீட்டில் நகருக்கு ஒரு விமானம் பறந்துகொண்டிருந்தது. அதில் பயணம் செய்த டி.பி.கூப்பர் என்கிற தீவிரவாதி அந்த விமானத்தை வெடிகுண்டை வைத்து மிரட்டி கடத்தினான். ரூ.20,00000/- அமெரிக்க டாலர்கள் பிணயத்தொகையாக தந்தால் பயணிகளை விட்டு விடுவதாக அரசாங்கத்தை மிரட்டினான். அரசாங்கமும் பயணிகளில் நலன் கருதி சம்மதித்தது. விமானத்தை தரையிறக்கி பணத்தைப் பெற்றுக்கொண்ட பின் மறுபடியும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து விமானத்தை மீண்டும் வானில் பறக்கச் சொல்லி நிபந்தனை விதித்தான். விமானம் வானில் பறந்தபோது தாழ்வாக பறக்கச் சொல்லி விமானிக்கு கட்டளையிட்டு, அவ்வாறு தாழ்வாக பறக்கும்போது ஒரு காட்டுப் பகுதியில் பாரசூட் மூலம் குதித்து தப்பி ஓடிவிட்டான். மாயமானவன் மாயமானவன்தான். இன்னும் அவன் பிடிபடவில்லை. காவல்துறையால் அவனை இன்னும் பிடிக்க முடியவில்லை. வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது.

பார்த்தீர்களா ஒரு மனிதனின் ஒரே ஒரு தீயசெயல்தான். ஆனால் அது அவனோடு நிற்காமல் முழு அரசாங்கத்தையும் நாட்டையுமே திகிலடையச்செய்து பாதிப்புக்குள்ளாக்கிவிட்டது. நாம் நம் குடும்பத்தில் ஓர் அங்கம். நம் குடும்பம் சமுதாயத்தில் ஓர் அங்கம். நம் சமுதாயம் நம் நாட்டில் ஓர் அங்கம். ஆகவே தனி ஆளாக நாம் முடிவெடுப்பினும் அது முழு தேசத்தையுமே பாதிக்கத்தான் செய்கிறது. உதாரணமாக குடும்பத் தகறாறுகளினால் உண்டாகும் வேதனையினால் ஒரு மனிதன் தற்கொலை செய்துகொள்ளும்போது என்ன நிகழ்கிறது பாருங்கள்? அவன் இறந்து விடுகிறான். அதன்பிறகு அந்த குடும்பத்திற்கு எவ்விதமான பிரச்சினைகள் உண்டாகிறது. அந்த குடும்பத்தலைவன் மரணமடைந்த பிறகு அவனது வாரிசுகள் எத்தனை துன்புறுகின்றனர். வயதுக்கு வந்த பிள்ளைகள் இருந்தாலும் பரவாயில்லை. சிறு பிள்ளைகளாக இருந்து விட்டால் அந்தோ பரிதாபம்தான். வறுமை நிலைக்குள்ளாகி உணவுக்கும் உடைக்குமே கையேந்துபவர்களாக மாறிவிடுகின்றனர். உலகத்துக்கும் குடும்பத்துக்கும் ஒரு ஏளனப்பொருளாகி விடுகின்றனர். தற்கொலை எதையுமே மாற்றுவதில்லை. மாறாக இருப்பவைகளையும் மோசமாக மாற்றி விடுகின்றது. இது ஒரு உதாரணம்தான். இதைப்போல இன்னும் நாம் செய்யம் சிறு மடத்தனங்கள் நம்முடைய வாழ்க்கையை மட்டுமல்லாம் நம்மைச் சார்ந்த முழு குடும்பத்தையுமே சிக்கலுக்குள்ளாக்குகின்றன. இறைவன் கொடுத்த வாழ்க்கையை இனிமையாக அனுபவிப்போம். துன்பங்களையும் வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு, இன்னும் சொல்லப்போனால் அவற்றை வரவேற்கத் துவங்கிவிடுவோமானால் துன்பங்களும் நமக்கு இன்பங்களாய் மாறிப்போகும். பிரச்சினைகளை சந்திக்கும்போதுதான் நம்முடைய முழு ஆற்றலும் வெளிப்படுகிறது. ஆகவே துன்பங்கள், பிரச்சினைகள் ஏற்படும்போது அவை உங்கள் திறமைக்கு விடப்பட்ட சவால் என்று நினைத்து அவற்றை சந்தியுங்கள். வாழ்வில் வளம் பெறுவீர்கள்.

“ உங்களுக்குள் நடக்கும் போரில் முதலில் வெற்றி பெறுங்கள். பிறகு உங்களுக்கு வெளியில் நடக்கும் போரிலும் எளிதாக வெற்றிபெறுவீர்கள். “

Tuesday, November 29, 2011

சிகரெட் - சில உண்மைகள்

நீங்கள் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா? அப்படியானால் இப்பதிவு உங்களுக்குத்தான். புகை பிடிப்பவர்கள் தங்கள் பணத்தையும் தங்கள் நுரையீரலையும் தாங்களே அழித்துக்கொள்கிறார்கள். மற்ற பழக்கங்களை விடுகிறது போல இப்பழக்கத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடிகிறதில்லை. பலர் இப்பழக்கத்தை விட்டுவிட நினைக்கிறார்கள். ஆனால் முடிவதில்லை. ஜெயிக்கிற சதவீதத்தை விட தோற்கிற சதவீதமே மிக அதிகம்.

ஏன் பலர் இதில் தோல்வியடைகிறார்கள்?
மனஉறுதி இல்லாதது மட்டுமே இதற்குக் காரணமா? இல்லை இல்லை. நீங்கள் ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனால் உண்மை என்னவென்றால் சிகரெட்டுக்கு அடிமையானவர்கள் அதன் பிடியிலிருந்து மீள்வதென்பது எமனின் பிடியிலிருந்து மீள்வதுதான்.

நம்முடைய மூளையில் நிறைய நுண்ணிய உணர்கடத்திகள் (Receptors) உள்ளன. அவற்றில் சில வகைதான் இந்த நிகோடின் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் உள்ளன. நீங்கள் புகை பிடிக்கும்போது சிகரெட்டின் நிகோடின் ஆனது இந்த உணர்கடத்திகளிடம்தான் முதலில் செல்கிறது. பின்னர் இந்த உணர்கடத்திகள் நமது மூளையின் மற்றொரு பகுதியான டோபாமின் (Dapomine) என்ற உணர்கடத்திகளுக்கு இந்த நிகோடினை அனுப்புகிறது. இந்த டோபாமின்கள் தான் நமக்கு சந்தோஷத்தை தருகிற உணர்கடத்திகளாகும். ஆனால் இந்த டோபாமின்கள் இந்த நிகோடினால் உண்டாகும் சந்தோஷத்தை வெகுநேரம் தன்னிடம் வைத்திருக்காமல் துப்பி விடுகிறது. மேலும் கொஞ்ச நேரத்தில் மறுபடியும் அந்த சந்தோஷத்திற்காக ஏங்கத் துவங்கி விடுவதால் நமக்கு மீண்டும் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் துளிர்விடுகிறது.

தற்போது விஞ்ஞானிகள் ஒரு புதிய உணர்கடத்திகளை (Verenicline) செயற்கையாக உற்பத்தி செய்ய தீவிரமான ஆராய்ச்சியில் இருக்கிறார்கள். இந்த வெரனிக்ளின்கள் மார்க்கட்டுக்கு வந்துவிட்டால் உங்கள் பாடு கொண்டாட்டம்தான். ஏனென்றால் அதன்பிறகு சிகரெட் விடுவதை எளிதில் நிறுத்திவிட முடியும். இவை டோபாமின்களின் சந்தோஷ உணர்வுகளின் உற்பத்தியை தடுத்துவிடக் கூடிய திறன் பெற்றவை. ஆகையினால் நீங்கள் சிகரெட் பிடித்தாலும் அதன் மூலம் திருப்தி கிடைக்காது. மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக இவற்றைப் பயன்படுத்தும்போது நிச்சயமாக நீங்கள் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிடுவீர்கள். (வேண்டாத பொண்டாட்டி கூட எத்தனை நாள் சார் வாழ முடியும்?). அதுவரைக்கும் காத்திருக்கப் போறீங்களா? மனஉறுதியோட இப்பழக்கத்தை விட முயற்சி பண்ணுங்க சார்.

சரி. இப்போது சிகரெட்டைக் குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகளை பார்க்கலாம்.

1. ஒவ்வொரு பத்து விநாடிகளுக்கும் ஒரு மனிதன் சிகரெட்டினால் மரணடைகிறான்.

2. சிகரெட்டின் கழிவுகள் மண்ணில் மக்குவதற்கே 25 வருடங்கள் ஆகுமாம் (மக்கா ஜாக்கிரதை).

3. நீங்கள் புகைக்கும் பிடிக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் உங்களின் ஆயுளில் 11 நிமிடங்களை குறைத்துவிடுமாம்.

4. பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னால் ஆங்கிலத்தில் சிகரெட் என்ற வார்த்தை கிடையாது. அதற்கு முன்பெல்லாம் சிகரட் போன்ற பானங்களை குடிப்பார்களாம். அதாவது பருகும் சிகரெட்.

5. மருத்துவ காரணங்களுக்காக கி.பி. 1559-ல் பிரான்சில் உள்ள பிரெஞ்சுத்தூதர் நிகோட் என்பவர்தான் இந்த நிகோடினை கண்டுபிடித்தார். (இப்படில்லாம் ஆகுமுன்னு தெரிஞ்சிருந்தா கண்டு பிடிச்சுருக்கமாட்டார் இல்ல)

6. தென் அமெரிக்க மக்கள் புகையிலையை 2000 வருடங்களுக்கு முன்பே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் பிரேசில்காரர்கள்தான் இந்த சிகரெட்டை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

7. முதன் முதலில் இதை பிரபலமாக்கியவர்கள் ஐரோப்பிய மாலுமிகளே.

8. உலகிலேயே அதிகம் சிகரடெ; புகைப்பவர்கள் கிரீஸ் நாட்டுக்காரர்கள்தான். அங்கு வயதுக்கு வந்த ஒரு வாலிபன் வருடத்திற்கு 3000 சிகரெட்டுகளை புகைத்துத் தள்ளுகிறானாம். (நீங்க எப்படி?)

சரிங்க. சிகரெட்டை பத்தி நிறைய விஷயங்களைச் சொல்லிவிட்டேன். இதைப் படிச்ச நீங்க மனஉறுதியோட இந்த பழக்கத்தை விட்டுட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். செய்வீங்களா?

மறுபடியும் சந்திப்போம் – அடுத்த பதிவில்.

முடிவில்லாத தேடல்

வாழ்க்கையின் புரிதல்கள்
எளிதில் நிகழ்வதில்லை
வாழ்ந்து பழகின போதும்

நரகத்தில் வாழ்ந்து கொண்டு
நந்தவனத்தில் வாழ்கிறதாய்
கனவு காணும் வாழ்க்கையின்
நிதர்சனங்கள்
புரிபடவில்லை இன்னும்

புரிந்ததாய் நடித்தாலும்
காட்டிக்கொடுக்கிறது
எண்ணமும் எழுத்தும்

இன்னும்
நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது வாழ்க்கை
முடிவில்லாத
அந்த தேடலை நோக்கி.....

Monday, November 28, 2011

எது புதுக்கவிதை

கருத்துவெள்ளம் பொங்கிப் பிரவாகித்து
யாப்பு அணை உடைத்து
சந்த தடைகள் தாண்டி
எதுகை மோனை ஏற்றங்கள் மீறி
பாரம்பரிய மதகுகள்
வெடித்துச் சிதற
பூமியை நிரப்பும்
ஜலப்பிரளயமே
புதுக்கவிதை.

Saturday, November 26, 2011

என் மனக்குதிரை

என் மனக்குதிரைக்கு
கடிவாளம் போட முயன்று
தோற்றுப்போனேன்
மாம்ச இச்சை கொண்டு
சீறி எழுந்தது
புல் கொடுத்தேன்
உண்ணாமல்
புலால் வேண்டும் என்றது
உலகோர் சிரிக்க மாட்டார்களாவென்றேன்
அதைப் பற்றி எனக்கு கவலையில்லை என்றது
காதல் கேட்டது
கொடுத்தபோது மறுத்து
காமம் கேட்டது
சரி என்று கொடுத்தபோது
இரண்டும் வேண்டும் என்றது
எப்படியோ போவென்று
கயிறறுத்து கிளம்பியபோது
காலடியில் குழைந்தது
நாடகம் புரியாது
திகைத்தது
என் கவிமனது.

Monday, November 21, 2011

யுத்தக்களம்

பரபரப்பாய் இருக்கிறது
அந்த யுத்தக்களம்
ஒல்லியாய்
குண்டாய்
தட்டையாய்
குட்டையாய்
ரகரகமாய்ப் பெண்கள்
ஆம்
பெண்களால்
பெண்களுக்காக
பெண்களைக் கொண்டு நடத்தப்படும்
யுத்தம் தான் அது
சிகப்பாய்
மஞ்சளாய்
ஊதாவாய்
பலப்பல நிறங்களில்
போராயுதங்களான
குடங்கள் அவர்கள் கைகளில்
பரபரக்கிறது
அந்த தெருக்குழாயடி.

Saturday, November 19, 2011

என் யுகப்பயணம்

என் காலச் சிறகுகளை மாட்டிக்கொண்டு
யுகவீதியில் பறக்க ஆரம்பித்தேன்
பிரபஞ்சவெளியில்
கோளாடு கோளாய்
நட்சத்திரங்களோடு நட்சத்திரங்களாய் பயணித்தேன்

எத்தனை மனிதர்கள்
எத்தனை தேசங்கள்
எத்தனை வரலாறு
என்று
எல்லாம் தாண்டி
கணிக்க முடியாத
ஒரு இருண்ட காலத்துக்குள்
பிரவேசித்தேன்

அங்கே
இனம்புரியாத விலங்குகளும்
பெயர் தெரியாத உயிரினங்களும் கண்டேன்
வினோதவகை விருட்சங்களும்
செடிகொடிகளும் கண்டேன்

எல்லாம் இருந்தன
மனிதனைத் தவிர

ஆகவே
திரும்பினேன் இந்த கெட்ட பூமிக்கு
மேலிருந்து பார்த்தேன்
எல்லாம் கெட்டதாய் இருந்தது
இருந்தாலும் என்ன
எனக்குப் பிடித்திருந்தது
இந்த வாழ்க்கையும்
அதன் போராட்டங்களும்.

நானோர் சிலந்தி

உறவு வலைகளை பின்னி பின்னி
ஓய்ந்து போன
நானோர் சிலந்தி

கஜினி முகம்மதுவைப் போல்
பதினெட்டு தடவை மட்டுமல்ல
பதினாயிரம் தடவை பின்னியாயிற்று

ஒவ்வொரு முறையும்
அறுத்தெரிந்தது
என் உறவுப் பூச்சிகள்

இன்னும் ஒரு முறை பின்னத்தான் ஆசை
இங்கல்ல

சுடுகாட்டில்……

Friday, November 18, 2011

சைக்கிள் காதலி

பேருந்து காதலி
இன்றிலிருந்து
பெப்பே காட்டிவிட்டாள்
ஆனாலும் என்ன
இருக்கவே இருக்கிறாள்
என் பழைய
சைக்கிள் காதலி.

வாழ்வை வளமாக்கும் பொன்மொழிகள்

நாம் அறிந்திராத அற்புதமான பொன்மொழிகள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். வாசியுங்கள். கடைப்பிடியுங்கள். வாழ்வை வளமாக்குங்கள்.

1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்

2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ
தெரிந்துகொள்.

3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.

4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை
ஆரம்பிக்கிறது.

5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.

6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட
மோசமான சாபமும் இல்லை.

7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.

8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு
வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.

9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை
உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.

10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.

11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது.
ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு
பெற்று விட்டான் என்பதே.

12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி
விடாதீர்கள்.

13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக்
கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப்
பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு
இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.

14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன்
பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின்
காவலன்.

15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும்,
கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.

16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு
எல்லாமே எளிதாகத் தோன்றும்.

17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும்
கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த
சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன்
ஆவான்.

19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல
பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.

20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ
விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.

Thursday, November 17, 2011

இந்திய ஆட்சியாளர்களே!

பெட்ரோல் விலையை கூட்டுகிறீர்கள்
கூட்டுங்கள்
இன்னும் கூட்டிக்கொள்ளுங்கள்

பருப்பு விலையைக் கூட்டுகிறீர்கள்
கூட்டுங்கள்
இன்னும் கூட்டிக்கொள்ளுங்கள்

அத்தியாவசிய பொருட்கள் அத்தனைமீதும்
வரிகளை அதிகமாக்குங்கள்
இன்னும் அதிகமாக்குங்கள்

ஆனால் ஒன்று
இப்படியே போனால்

ஒருநாள்…..

நீங்கள் ஆள
இந்தியா இருக்கும்
இந்தியர்கள் இருக்கமாட்டார்கள்.

Wednesday, November 16, 2011

ஆன்மாவின் கண்ணீர்

அழுவது பலவீனமல்ல
அது என் ஆன்மாவின் கண்ணீர்

வலிதாங்கா இதயங்களின் வலிகளை
உள்வாங்கிய
என் மனப்பனி உருகிய
உதிர ஊற்று

கண்ணீரை அற்பமாய் எண்ணாதீர்கள்
ஏழை இதயங்களின் கண்ணீர்
தேசங்களை கரைக்கும்
எரிதிராவகங்களாகும்

எல்லா இதயமும் அழுவதில்லை
ஏனென்றால்
எல்லா இதயமும் இதயமல்ல

என் இனிய எதிரிகளே
என் ஆன்மாவின் கண்ணீரை
புரிந்துகொள்ளுங்கள்
அது பிரளயமாய் மாறும்போது
உங்கள் வஞ்சக அணைகள்
தாக்குப்பிடிக்காது.

Tuesday, November 15, 2011

நிஜங்கள் சோடை போவதில்லை

கனவுகளின் நீட்சி அதிகம்தான்
ஆனால் நிஜங்கள் சோடை போவதில்லை.

கனவுகளின் காட்சி அதிகம்தான்
ஆனால் நிஜங்கள் சோடை போவதில்லை

கனவுகளின் திரட்சி அதிகம்தான்
ஆனால் நிஜங்கள் சோடை போவதில்லை

காரணம்

கனவுகள் மாயை
நிஜங்கள் உண்மை

Saturday, November 12, 2011

நொறுங்கத் தின்றால் நூறு வயதா? - ஓர் மருத்துவரீதியான அலசல்

நம் எல்லோருக்குமே நீண்ட நாட்கள் நொய்நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ ஆசைதான். ஆனால் அது சாத்தியமா? சில சுலபமான வழிகளை கடைப்பிடித்தால் சாத்தியமான விஷயம்தான் அது. எப்படி? தொடர்ந்து படியுங்கள்.

நொறுங்கத் தின்பது எப்படி நாம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ உதவுகிறது?

நீங்கள் தற்போது வழக்கமான முறையில் சாப்பிடுவதை மாற்றி உணவை நன்றாக சவைத்து, சுவைத்து, நொறுங்கத் தின்று பாருங்கள். அதிகமாக நாம் பற்களை வைத்து உணவை அரைத்து அசைபோடும் போது நம் மூளை நரம்புகள் நன்கு தூண்டிவிடப்படும். உணவை ஜீரணமாக்கத் தேவையான உமிழ்நீரை அது மிக அதிகமாக சுரக்கவைக்கும்.

ஒரு மருத்துவ ஆராய்ச்சி சொல்கிறது. நடக்கமுடியாமல் படுத்த படுக்கையாக இருந்த நோயாளிகள் இந்த நொறுங்கத் தின்னும் பழக்கத்தை தொடர்ந்து பழக்கப்படுத்தினபோது அவர்கள் மூளை நல்லவிதமாக செயல்பட்டு அதன் மூலம் நரம்பு மண்டலம் நன்கு செயல்பட்டு அவர்களால் ஆள்துணையின்றி நடக்க முடிந்ததாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. பாருங்கள்! எவ்வளவு அற்புதமான விஷயம்! மேலும் பலரின் பேச்சுத்திறனும் பெரிய அளவில் கூடியிருப்பதும் தெரியவந்தது.

நம் மூளையின் பலவிதமான செயல்பாடுகள் நம் பற்களோடு மிகுந்த தொடர்புடையவையாக இருக்கின்றன. அதனால்தான் பல்வலி வரும்போது சிலர் தலையைப் பிடித்துக்கொண்டிருக்கிறதை நீங்கள் கவனித்திருக்கலாம். நன்றாக பற்களால் அரைத்து உணவை உண்ணும் இந்த பழக்கத்தினால் நம்முடைய மூளை மிகுந்த அளவில் தூண்டப்படுகிறது. அதன் பிறகு தன்னுடைய கட்டளைகளை அற்புதமாக நம் உடல் முழுவதும் அனுப்புகிறது. மேலும் உணவானது பற்களால் அரைபடும்பொழுது ஒருவித சப்தம் பற்களுக்கிடையில் உண்டாகிறது. இதை நீங்கள் இதுவரைக்கும் கவனிக்காதிருந்தால் இப்போது கவனித்துப் பாருங்கள். இந்த சத்தமானது நம்முடைய மூளைக்கு மிகவும் பிடித்தமான ஒரு சத்தமாகும். இந்த சத்தம் நம்முடைய மூளைக்கு மிகுந்த புத்துணர்ச்சி அளித்து அளவில்லா ஆற்றலுடன் இயங்க வழிவகை செய்கிறது.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

பற்களின் வேர்ப்பகுதியானது (Periodontal Ligament) ஒருவித குஷன் போன்ற பகுதியைக் கொண்டது. இதில் பல நுண்ணிய உணர் இழைகள் உள்ளன. இவை உணர்வுகளை கடத்துவதில் அபார ஆற்றல் கொண்டவை. இவை மூளையின் நரம்பு மண்டலத்தோடு நெருங்கிய, நேரடித்தொடர்பு கொண்டவை. ஆகவே நாம் உணவை எவ்வளவு அதிகமாக மெல்லுகிறோமோ அல்லது அரைத்து உண்ணுகிறோமோ அந்த அளவுக்கு நம் மூளையும் பிரமாதமாக வேலை செய்கிறது. நம் மூளை பிரமாதமாக வேலை செய்யும்போது நம் உடலும் பிரமாதமாக வேலை செய்யத்தானே செய்யும்.

மூளையின் வயதும் கூடுகிறது

நொறுங்கத் தின்னும் பழக்கத்தினால் நம்முடைய மூளையில் உள்ள செல்களுக்கு நல்ல எக்ஸர்சைஸ் கிடைப்பதனால் அவை மிகுந்த செயல்திறனுடன் இயங்கும் நிலையை பெறுகிறது. ஆகவே நம் மூளைக்கு வயதாவதும் தடுக்கப்படுகிறது. ஆகையினால் நாம் சிந்திக்கும் திறனும் கற்றுக்கொள்ளும் திறனும் அபாரமாக கூடுகிறது.

குழந்தைகளுக்கு நாம் இந்த பழக்கத்தை கற்றுக்கொடுத்துவிட்டால் விரைவில் அவர்களின் மூளையின் செயல்திறன் அதிகரித்து, புத்திசாலிகளாக செயல்திறன் மிகுந்தவர்களாக மாறுவதை நீங்கள் காணமுடியும்.

வயதானவர்களுக்கு அவர்களின் மூளை வயதாவது தடுக்கப்படுவதனால் அவர்களின் செயல்திறன் கூடுகிறதை உணரலாம்.

என்ன? இன்றைக்கே நொறுங்கத்தின்னும் பழக்கத்தை ஆரம்பித்துவிடுவீர்கள்தானே?

மரத்துப்போன மனிதர்களுக்கு - கவிதை

ஓ மரத்துப்போன மனிதர்களே!

உங்கள் பூக்களை
என்னிடம் காண்பிக்க வேண்டாம்
உங்கள் வேர்களை
என்னிடம் காண்பியுங்கள்
நீராவது ஊற்றுகிறேன்
வேர்கள் வாடிப்போகுமே என்பதற்காக அல்ல
விதைகள் வீணாகிவிடக் கூடாது என்பதற்காகவே.

Friday, November 11, 2011

பிரச்சினைகளுக்குத் தீர்வு - சிந்தனை அழிப்பான் (Thoughts Eraser) - பயன்படுத்த ஆரம்பித்துவிட்டீர்களா இல்லையா?

சின்னச் சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத்துளி:

நான் ஒரு தடவை சாலையில் நடந்து கொண்டிருந்தபோது முகங்குப்புற விழுந்தேன். அடுத்த 10 நிமிடங்கள் என்ன நடந்தது என்று எனக்கு நினைவில்லை. நினைவு திரும்பியபோது என் வாயானது மண், மண் துகள்கள், சிறு கற்கள் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. உடனடியாக அவற்றைத் துப்ப முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டுத் துப்பி, நீரால் கழுவி வெகுநேரத்திற்கு பிறகே சகஜ நிலைக்குத் திரும்பினேன்.

இதைப்போலத்தான் நாம் சில நேரங்களில் இதைப்போல அசுத்தங்களை, ஆபாசங்களை நம்முடைய வாயின் ஓரத்தில் பதுக்கி வைத்திருக்கிறோம். சில நேரங்களில் சக மனிதர்களின் மீது பிரச்சினைக்குரிய நேரங்களில் அவற்றை துப்பி விடுகிறோம்.

நாம் எளிதாக துப்பி விடுகிறோம். ஆனால் அதன் விளைவுகளோ…. அப்பப்பா….! ஆசிட்டைவிட கடுமையான விளைவுகளை இவ்விதமான வார்த்தைகள் ஏற்படுத்தி விடுகின்றன. மோசமான குற்றச்சாட்டுகள், எரிச்சலான வார்த்தைகள், வாழ்க்கை முழுவதும் எண்ணி எண்ணி வேதனைப்படும் அளவிற்கான திராவக வார்த்தைகள் முதலியவற்றை நாகம் விஷத்தை உமிழ்வதைப் போல சக மனிதர்களின் மீது உமிழ்ந்து விடுகிறோம். ஒரு நிமிடமேனும் சிந்திப்போமில்லை.

தவறான வார்த்தைகளால் தலைமுறைகளும் அழிந்து போன வராறுகள் ஏராளம் உண்டு.

சரி. இதைத் தடுப்பது எப்படி? எப்படி இவ்வித சூழ்நிலைகளை மேற்கொள்ளுவது?

நம்முடைய வாயில் வரும் வார்த்தைகள் எங்கே உருவாகின்றன? நம்முடைய மூளையில்தான். நம்முடைய மூளையில் உருவாகும்போதே அவைகளை அழித்து விட்டோமானால் அவைகள் வார்த்தைகளாக உருவாகமால் தடுத்து விடலாம்.மாறாக உருவாக அனுமதித்து, அவைகளை சிந்தித்து சிந்தித்து திட்டங்களாக உருவாகி, எப்படி ஒரு தாயின் வயிற்றிலே கரு உருவாகி மாற்றங்கள் அடைந்து குழந்தையாக வெளிவருகிறதோ அப்படியே அந்த கெட்ட சிந்தனைகளும் தீய வார்த்தைகளாக, செயல்களாக மாறிவிடுகின்றன.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் உங்களுடைய மூளையில் சிந்தனை அழிப்பான் (Thoughts Eraser) ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். எப்போதெல்லாம் தீய எண்ணங்கள் உங்கள் மூளையில் தோன்றுகிறதோ அப்பொழுது உங்களுடைய சிந்தனை அழிப்பான் கொண்டு அழித்திடுங்கள். அப்போது அவைகள் வார்த்தைகளாக உருமாறுவது தடுக்கப்பட்டு விடுகிறது. வார்த்தைகள் தடுக்கப்பட்டு விடுவதால் தீய செயல்களும் உருவாவதும் தடுக்கப்பட்டு விடுகின்றது. இதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பழக்கத்தை நீங்கள் மேற்கொண்டால் மனித குலத்திற்கு எவ்வளவு பெரிய நன்மை உண்டாகும்? நினைத்துப் பாருங்கள்.

ஆகவே இனி அசாதரணமான பிரச்சினைகள் உங்களை சூழும்போது உங்கள் சிந்தனை அழிப்பானை பயன்படுத்துங்கள். உங்கள் பிரச்சினைகளை மேற்கொள்ளுங்கள்.

“ உங்கள் சிந்தனைகளில் கவனமாய் இருங்கள். ஏனென்றால் அவை எந்நேரமும் வார்த்தைகளாக மாறலாம் ”


தொடர்ந்து சந்திப்போம் - பதிவுகளில்.

Wednesday, November 9, 2011

மண்டையோட்டு வியாபாரம் - திடுக்கிடும் செய்தி

இன்றைய நாளிதழில் நான் படித்த திடுக்கிடும் செய்தி ஒன்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

கங்கை நதியின் கரையோரங்களில் வழக்கமாய் நடைபெறும் ஒரு காரியம் என்னவென்றால் நதிக்கரையோர கிராமங்களில் வசிக்கும் மனிதர்கள் தங்கள் குடும்பங்களில் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் பிணங்களை சடங்குகளெல்லாம் செய்து முடித்தபின் மலர்மாலை அலங்காரங்களோடு ஒரு கட்டையில் வைத்துக் கட்டி கங்கை நதியில் விட்டுவிடுவார்கள். அடக்கம் செய்ய மாட்டார்கள். இது அவர்களின் பழக்கமாகும்.

அந்த நதிக்கரையோர கிராமம் ஒன்றில் வசிப்பவன் பெயர் ராம்சிங். இவனுடைய வேலை என்ன தெரியுமா? ஆற்றில் மிதந்து வருகிற பிணங்களை எடுத்து அவற்றின் தலையை மட்டும் துண்டித்து எடுத்துவிட்டு உடல்களை ஆற்றில் வீசி எறிந்து விடுவானாம். தலையை பல நாட்கள் மண்ணுக்குள் புதைத்து வைத்து விடுவானாம். தலை அழுகி சதைகள் கழிந்த பிறகு மண்டையோடாய் மாறி இருக்கும். அதைத் தோண்டி எடுத்து ரூ.3000 முதல் ரூ.5000 வரை விலை வைத்து விற்று விடுவானாம். மண்டையோட்டை வைத்து மந்திரவாதம் செய்பவர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தனி நபர்கள் என்று பலருக்கும் இவ்விதமாக நல்ல லாபத்திற்கு விற்று விடுவானாம். இவ்விதமாய் இதுவரைக்கும் 300-க்கும் மேற்பட்ட மண்டையோடுகளை விற்பனை செய்து இருக்கிறானாம். சிறப்பு காவல்துறை புலனாய்வுக் குழுவினர் இரகசியமாக, நுணுக்கமாக கண்காணித்து இவனை கையும் களவுமாக பிடித்து இருக்கிறார்களாம்.

இன்னும் இதுபோல் எத்தனை பேர் இருக்கிறார்களோ தெரியவில்லை.

இந்த மண்டையோட்டு வியாபாராம் வடநாட்டில் மிகவும் பரபரப்பாய் பேசப்படுகிறதாம்.




நன்றி: தினத்தந்தி

Saturday, November 5, 2011

குறட்டைத் தொல்லை - சமாளிப்பது எப்படி?

சிலருக்கு இரவில் தூங்கும்போது குறட்டைச் சத்தம் அதிகமாக இருக்கும். ஆகவே பக்கத்தில் தூங்குபவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் இந்த குறட்டை பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. இந்த குறட்டைத் தொல்லைக்கு என்ன நிவாரணம்? ஒரு சின்ன அலசல்.

குறட்டைத் தொல்லை உலகம் முழுவதும் பலகோடி மக்களுக்கு தினமும் தொல்லை தரும் ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. 35 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஆண்களில் நூற்றுக்கு 20 பேரும் பெண்களில் நூற்றுக்கு 10 பேரும் குறட்டை விடுவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. அப்படியானால் இது உலகளாவிய பிரச்சினைதான். பெண்கள் குறைவாக குறட்டை விடுவதற்கு காரணம் அவர்களது உடலில் உள்ள Progesterone என்ற ஹார்மோன் என நம்பப்படுகிறது. மாதவிடாய் முற்றிலும் நின்றுவிட்ட பிறகு இந்த ஹார்மோன் அளவு குறைவதால் குறட்டை விடும் அளவும் அதிகரிக்கிறது.

குறட்டை எப்படி உருவாகிறது?

நாம் சுவாசிப்பதற்காக நமது நமது மூச்சை வெளிவிடும்போது நமது தொண்டை, மூக்கு, வாய் ஆகிய உறுப்புகள் வழியாக வெளியேறுகிறது. பகல் நேரத்தில் இவைகளைச் சுற்றியுள்ள தசைநார்கள் இறுக்கமடைந்து காற்று வெளியேறும் பாதையானது தடையின்றி காணப்படுவதால் சுலபமாக வெளியேறுகின்றது. ஆனால் இரவில் தசைநார்கள் தளர்வடைகின்றன. இதனால் காற்று வெளியேறும் பாதையானது குறுகலடைகின்றது. வெளியேறும் காற்று தொண்டை, மூக்கு, வாய் ஆகிவற்றின் தளர்வடைந்துள்ள தசை இழைகளில் மோதும்போது சத்தத்தை எழுப்புகின்றது. இதுவே குறட்டை ஒலியாக வெளிவருகின்றது.

யாருக்கு அதிகம்?

காற்றின் பாதையில் தடை அல்லது பிறவிக்குறைபாடு உள்ளவர்கள் எப்பொழுதும் இரவில் குறட்டை விடுபவர்களாக இருப்பார்கள். உதாரணமாக மூக்கு தண்டுவட சுவர் வளைந்திருப்பதாலும், நீர்ச் சதைகள் (Polyps) இருப்பதாலும் அடைபட்ட மூக்கில் தடைபட்ட காற்று செல்லும்போது அதிர்வினால் குறட்டைச் சத்தம் வரும். சிலருக்கு சில நோய்கள் காரணமாக தற்காலிகமாக குறட்டைப் பிரச்சினை உருவாகலாம். கடுமையான ஜலதோஷம், மூக்கடைப்பு, டான்சில் மற்றும் அடினாய்ட் ஆகியவற்றாலும் குறட்டை உருவாகலாம். அந்நோய்கள் குணமாகியவுடன் குறட்டையும் நீங்கிவிடும். ஒரு நபர் குறட்டையிலிருந்து விடுபட்டால் அவாpன் குடும்பத்தினருக்கு அதைவிட சந்தோஷம் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் குறட்டையின் சத்தம் சாதாரணமானது அல்ல. மோசமான குறட்டைச் சத்தம் 40 முதல் 60 டெசிபல் ஒலி அளவை எட்டலாம். அதாவது ஒரு காரின் எஞ்சின் அளவுக்கு சத்தத்தை உருவாக்கலாம். பக்கத்தில் படுத்திருப்பவர்களின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். பரிதாபம்தான்.

கட்டையான கழுத்தும், சிறிய நாடியும், தொங்கும் கீழ்த்தாடையும் உடையவர்களின் குறட்டையை நிறுத்துவது கஷ்டமான காரியம்தான். பற்களுக்கிடையில் இடைவெளி அதிகம் இருந்தாலும் குறட்டை உருவாகலாம். அப்படியானால் பல் மருத்துவரிடம் காண்பிக்கலாம். முன்பு குறிப்பிட்டது போல் மூக்குத்தண்டுச் சுவர் வளைந்திருந்தால் அல்லது டான்சில் அல்லது அடினாய்ட் வளர்ந்திருந்தால் காது மூக்கு தொண்டை நிபுணரிடம் (ENT Specialist) காண்பித்து சிகிச்சை எடுத்து. குறட்டைப் பிரச்சினையை தீர்க்கலாம்.

எடையும் காரணமாகலாம்

குறட்டைக்கு வேறு பல காரணங்களும் உள்ளன. எடை அதிகமாக உள்ளவர்களுக்கு குறட்டை அதிகம் வர வாய்ப்பு உள்ளது. இதற்கு காரணம் கொழுத்த கழுத்து அவர்களின் சுவாசக் குழாயை அழுத்துவதும், கொழுப்பு நிறைந்த சுவாசக் குழாய் அவர்களின் சுவாசத்தை தடுப்பதுமேயாகும்.

கொழுத்தவர்கள் அதிகம் குறட்டை விடுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. கொழுத்தவர்கள் பெரும்பாலும் மல்லாந்துதான் படுப்பார்கள். அதிக எடை காரணமாக பக்கவாட்டில் ஒருக்களித்து படுப்பது சிரமமாக இருப்பதால் அப்படி செய்கிறார்கள். இதுவும் குறட்டையை ஏற்படுத்துகிறது. நமது எடையை குறைத்து விட்டால் குறட்டை விடுவதும் தானாக நின்று விடும் அதிசயம் நடக்கிறது. அதிக எடை ஆபத்து. வேண்டாமே ப்ளீஸ்….

மதுபானம்

மது அருந்தும் பழக்கமுள்ளவர்களும் குறட்டைப் பிரச்சினையினால் பாதிக்கப் படுகிறார்கள். தொண்டையிலும் மூக்கிலும் உள்ள மெல்லிய சவ்வுகள் மதுபானத்தால் வீக்கமடைகின்றன. இதனால் சுவாசத்தின்போது காற்று உட்செல்வதும் வெளியேறுவதும் தடைபடுகிறது. இது குறட்டைக்கு வழிவகுக்கின்றது. மதுபானம் ஆழ்ந்த தூக்கத்தை வரவழைப்பதால் குறட்டையை உருவாக்குகிறது. மதுபானம் அருந்துபவர்கள் அதை நிறுத்தியவுடன் குறட்டைப் பிரச்சினையும் தீர்ந்துவிடும்.

மாத்திரைகள்

மதுபானத்தைப் போலவே தூக்க மாத்திரைகளும் குறட்டைக்கு வழிவகுக்கின்றன. இவை தொண்டைப் பகுதியிலும், சுவாசப் பாதையிலும் உள்ள தசைகளைத் தளரச் செய்வதால் குறட்டையை உருவாக்குகின்றன. மூக்கடைப்பு, சொறி, படை போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் ஒவ்வாமை எதிர் மாத்திரைகளும் (Antihistamine) குறட்டைக்குக் காரணமாகலாம்.

நீங்கள் இவ்விதமான மாத்திரைகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தால் உடனடியாக அதை நிறுத்திவிட வேண்டாம். அவற்றை ஏதாவது காரணமாகத்தான் உங்கள் மருத்துவர் பரிந்துரைத்திருப்பார். ஆகவே அத்தகைய மாத்திரைகளை நிறுத்துவது அல்லது மாற்றுவது குறித்து உங்கள் டாக்டரிடம் தகுந்த ஆலோசனை பெற்று செயல்படுங்கள்.

நிறுத்தும் வழி

குறட்டையை தற்காலிகமாக நிறுத்த பல சுலபமான வழிகள் இருக்கின்றன. குறட்டை வரும் நபர் மல்லாந்து படுத்திருந்தால் பக்கவாட்டில் அல்லது ஒருக்களித்து படுக்க வையுங்கள். குறட்டை நின்று விடும்.

இன்னொரு முறை என்னவென்றால் இரவு உடையின் பின்புறம் ஒரு டென்னிஸ் பந்தையோ அல்லது பஞ்சால் செய்யப்பட்ட பந்தையோ வைத்து தைத்துவிட்டால் அவர்கள் மல்லாந்து படுக்க முடியாது. பக்கவாட்டில்தான் படுக்க வேண்டியிருக்கும். அதனால் குறட்டை தொந்தரவும் இருக்காது. (ஆனால் இதனால் உங்கள் துணைவர் அல்லது துணைவியிடமிருந்து வரும் விளைவுகளை நீங்கள்தான் சந்திக்க வேண்டும். ஹி…ஹி…)


அடுத்த பதிவில் சந்திக்கிறேன் என் பதிவுலக சொந்தங்களே!

Wednesday, November 2, 2011

வியப்பூட்டும் உண்மைகள் - பகுதி 2

1. ஆங்கிலம் பேசுபவர்கள் அமெரிக்காவை விட
சீனாவில்தான் அதிகம் பேர் உள்ளனர்.

2. இங்கிலாந்தின் எலிசபெத் ராணி இறக்கும்பொது அவரிடம்
அணிந்துகொள்ள 3000 கவுன்களுக்கு மேல் இருந்ததாம்.

3. பிரபஞ்சத்தில் சுற்றும் கோள்களில் வீனஸ் மட்டுமே
இடமிருந்து வலமாக சூரியனை சுற்றி வருகிறது.

4. கடலில் வாழும் சில ஆக்டோபஸ் வகைகள் சிலநேரங்களில்
பசிக்கொடுமை காரணமாக தங்கள் கைகளையே பிய்த்து
தின்று விடுமாம்.

5. உங்கள் பிறந்தநாளை நீங்கள் கொண்டாடும் அதே
வேளையில் உலகம் முழுவதும் சுமார் 9 மில்லியன்
நபர்களும் பிறந்தநாள் கொண்டாடுவார்கள்.

6. ராமசேஸ் II என்ற எகிப்திய மன்னன் கி.மு. 1225-ஆம்
ஆண்டில் இறக்கும் போது அவனுக்கு 96 மகன்களும் 60
மகள்களும் இருந்தனராம்.

7. அமெரிக்காவில் 50 சதவிகித திருமணங்கள் மாலையிலேயே
நடக்கின்றனவாம்.

8. உலகத்திலேயே வியாதிகளைப் பரப்புவதில் நம்பர் ஒன் ஆக
இருப்பது நம் வீடுகளில் சாதாரணமாக காணப்படும்
ஈக்கள்தான்.

9. சிவப்புநிற தலைமுடியை உடைய வெளிநாட்டவர்களுக்கு
சராசரியாக 90000 முடிகள் இருக்குமாம். அதே வேளையில்
நம்மைப் போன்ற கருப்புநிற தலைமுடியை
உடையவர்களுக்கு 110000 முடிகள் இருக்குமாம்.

10. ஆடுகளுக்கு மேல் வரிசை முன்பற்கள் இருப்பதில்லை.

Friday, October 28, 2011

வியப்பூட்டும் உண்மைகள்! - நம்ம ஸ்டைல்...ல.

சில விஷயங்களை அறிந்துகொள்ளும்போது அட அப்படியா? என்று ஓர் ஆச்சர்ய உணர்வு தோன்றும். அப்படிப்பட்ட சில விஷயங்களை துணுக்குகளாக தருகிறேன்.

1. துருக்கியின் தலைநகரான் இஸ்தான்புல் நகரம் இரண்டு கண்டங்களில்
அமைந்துள்ளது. ( நமக்கு தெலுங்கானவையே சமாளிக்க முடியலயே.
எப்படித்தான் எல்லைப் பிரச்சினையை சமாளிக்குறாங்களோ? தெரியல.)

2. 80 சதவீத அமெரிக்கர்கள் தாங்கள் மீண்டும் திருமணம்
செய்ய நேரிட்டால் தற்போது வாழ்ந்து வரும்
மனைவியையே திருமணம் செய்வதாக
தெரிவித்துள்ளார்கள். (புது பிசாசுக்கு பழைய பேயே
பரவாயில்லை அப்படின்னு நினைச்சாங்களோ
என்னவோ?)

3. கம்போடியா நாட்டில் ஓடும் டொன்லெ சாப் என்கிற
நதியானது வருடத்தில் 6 மாதம் வடக்கு நோக்கியும் மீதி 6 மாதம்
தெற்கு நோக்கியும் ஓடுகிறது.
( நம்ம காவிரிகூட மீதிநாளும் நம்ம பக்கம் திரும்பிட்டா
காவிரி பிரச்சினை வராதுல்ல)

4. சாதாரணமாய் நாம் உபயோகப்படுத்தும் பென்சிலை
வைத்து கோடு போட்டால் 35 மைல் நீளத்துக்கு வருமாம்.
(இனிமே தேர்தலுக்கெல்லாம் பென்சிலை
வைத்தே விளம்பரம் பண்ணிரலாம் போலிருக்கே)

6. மனிதன் பிறக்கும்போது 300 எலும்புகளுடன் பிறக்கிறான்.
ஆனால் நன்கு வளர்ந்த பின்பு 206 எலும்புகள் மட்டுமே
உள்ளவனாய் மாறுகிறான். காரணம் பலவீனமான
எலும்புகள் பலமுள்ள எலும்புகளோடு ஒன்றோடு ஒன்று இணைந்து
விடுவதுதான். (இனிமே உன் எலும்பை எண்ணிருவேன்னு யாரயும்
சொல்லாதீங்க. எண்ணிக்கை தப்பாயிடும்)

7. அமெரிக்காவின் நாசா விண்ணில் நிறுவியுள்ள ஹப்பிள் டெலஸ்கோப்பானது
பூமியை ஒருமுறை சுற்றுவதற்கு 97 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது.
இதற்கு அது எடுத்துக்கொள்ளும் சக்தி எவ்வளவு தெரியுமா?
வெறும் 30 பல்புகள் எரியத் தேவையான சக்திதான்.
(நம்ம அரசு அலுவலங்களில் பணிபுரிபவர்களுக்கு
ஹப்பிளை வைத்து டியூசன் எடுக்கலாமோ?)

8. உலகமெங்கும் நடக்கும் திருமண பந்தங்களில் 70
சதவிகித ஆண்களும், 60 சதிவிகித பெண்களும் தங்கள்
வாழ்க்கை துணைக்கு துரோகம் செய்வதாய் ஒரு ஆராய்ச்சி
அறிக்கை தெரிவிக்கிறது.
(அட. சே! என்னப்பா இதெல்லாம் போய் வெளிய சொல்லிக்கிட்டு!)

9. ஒரு ஆண்டில் விமான விபத்துக்களால் நடக்கும் மரணங்களை விட
கழுதைகள் கடித்து ஆண்டுதோறும் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை
அதிகமாம்.(அடேங்கப்பா! கழுதைங்ககிட்டயும் ஜாக்கிரதையாதான்
இருக்கணும் போல)

10. ஏர்க்கண்டிஷன் கண்டுபிடிப்பதற்கு முன்னர் அந்த காலத்தில் அறையை
கூலாக வைத்திருக்க வெள்ளைத் திரைகளை மக்கள்
பயன்படுத்தியிருக்கிறார்கள்.
(நம்ம ஊருக்கு இதுல்லாம் சரிப்பட்டு வருமுங்களா?)

Tuesday, October 25, 2011

செல்லம்மாவுக்கு ஒரு கவிதை!

என் செல்லக்கிளியே செல்லம்மா!

இன்று தீபாவளியாம்
நாடே குதூகலமாய் இருக்கிறது

நாமும் இருக்க வேண்டுமாம்
நாமெங்கே இருக்க

நல்ல துணி உடுத்தி எத்தன நாளாச்சி
நல்ல சோறு துன்னு எத்தன நாளாச்சி

எங்க ராசய்யா முதலாளி
போனசுன்னு கொடுத்த 500 ரூபா

நம்ம சின்னக்குட்டி மைனாவுக்கு
கவுன் எடுக்க சரியாப் போச்சி

நம்ம ராமுப் பயலுக்கு
பிளாட்பாரத்துல
எதையெடுத்தாலும் அம்பது ரூபான்னு சொன்னவன்கிட்ட
துணி எடுத்தாச்சு

ஆனாலும் ராமு பார்வையில
திராவகம் கொட்டுச்சு

நம்ம நெஞ்சுலயும் இரத்தம்தான் கொட்டுச்சு

துணியில்ல
வெடியில்ல

தீபாவளியாம்
கொண்டாட்டமாம்

தீபாவளி வருஷாவருஷம்தான் வருது
நமக்கு விடிவெப்போ?
நம்ம கஷ்டத்துக்கு முடிவெப்போ?

கண்ணீருடன் சின்னய்யா!

Monday, October 24, 2011

என்னைக் கவர்ந்த பொன்மொழிகள் வரிசை - 2:

1. மனிதனுக்கு ஆசையால் விருப்பமும்,
விருப்பத்தால் கோபமும், கோபத்தால் மயக்கமும், மயக்கத்தால்
புத்திநாசமும், புத்திநாசத்தால் அழிவும் ஏற்படுகிறது.

2. நீண்ட நாள் வாழவேண்டும் என்பது எல்லாருடைய ஆசையும்.
ஆனால் நன்றாக வாழ நினைப்பவர்கள் குறைவு.

3. ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும், மாறக்கூடாது.
ஆசை அண்டினால் அழுகையும் அண்டும்.

4. பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது. இதயத்தின் ஈரமும் வேண்டும்.

5. பணமும் மகிழ்ச்சியும் நிரந்தர விரோதிகள். ஒன்று தங்குமிடத்தில்
மற்றொன்று தங்குவதில்லை.

6. முழுக்க முழுக்க எட்டிக் காயாக இருக்காதீர்கள். இந்த உலகம்
உங்களை உமிந்து விடும்.

7. துருப்பிடித்து தேய்வதைவிட உழைத்துத் தேய்வது மேலானது.

8. உழைப்பும் நம்பிக்கையும் சேருமிடத்தில் ஏழ்மை இருக்காது.

9. தீய குணங்களை சுலபமாக விடமுடிவதில்லை. ஆனால்
நல்ல குணங்களை சுலபமாக விட்டு விட முடிகிறது.

10. ஒழுக்கம் என்பது மரம். புகழ் என்பது அதன் நிழல்.
நிழலைப் பற்றியே அதிகமாக அதிகமாக நினைக்கிறோம்.
ஏனோ மரத்தை மறந்துவிடுகிறோம்.

Saturday, October 22, 2011

உங்கள் இதயத்தை டீ-பிராக்மெண்ட் (Defragment) செய்துவிட்டீர்களா?

சின்னச் சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத்துளி:


கணினியில் டீ-பிராக்மெண்ட் என்ற வார்த்தையை கிட்டத்தட்ட கணினி வைத்திருப்பவர்கள் அல்லது கணினியில் வேலை செய்பவர்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்காக ஒரு சிறு விளக்கம்.



கணினியில் நாம் பதியும் தகவல்கள் எல்லாமே கணினியில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பதியப்படும். துண்டு துண்டுகளாக வெவ்வேறு இடங்களில் பதியப்படும் தகவல்கள் குப்பைகள் போல் நிறைந்து, நாளாக நாளாக என்ன ஆகும் என்றால் ஏதாவது ஒரு தகவலை நாம் தேடும்போது கணினி திணறத் தொடங்கும். கணினியில் உள்ள தகவலை தேடும் ஹெட் பகுதி மிகவும் கஷ்டப்பட்டு தகவலை தேடி எடுத்து நமக்குத் தருவதால் மிகுந்த காலதாமதமாகும். கணினியின் வேலை செய்யும் திறன் குறையத்தொடங்கும். அடம்பிடிக்கும். அப்போது தான் டீ-பிராக்மெண்ட் செய்வது அவசியமாகிறது. கணினியில் உள்ள ஒரு புரோக்ராமை (விண்டோசில் அது Default ஆகவே இருக்கும்) நாம் செயல்பட கட்டளையிடும் போது அது டீ-பிராக்மெண்ட் செய்யத்தொடங்கும். ஆங்காங்கே உள்ள பைல்களை எல்லாம் ஒவ்வொரு குழுவாக சேர்த்து வைக்கும். இது வெகு நேரமாக நடைபெறும். ஒரு மணி நேரம் கூட ஆகலாம். குழுரீதியாக சேர்த்து வைக்கும் வேலை முடிந்து விடுவதால் இனி நாம் புதிதாக உருவாக்கி பதியும் பைல்கள் அந்த குழுவில் வரிசையாக அடுக்கி வைக்கப்படும். ஆகவே ஏதாவது பைலை நாம் தேடும்போது எளிதாக தேடித் தரும். கணினியின் வேகம் கூடியிருப்பதை நாம் கண்டுகொள்ளலாம்.

நம்முடைய இதயத்தை கணினியின் நினைவகத்துடன் (ஹார்ட் டிஸ்க்) ஒப்பிடலாம். கணினியின் நினைவகத்தில்தான் நாம் கணினியில் சேமிக்கும் ஒவ்வொரு தகவலும் சேமிக்கப்படுகிறது. அதே போல்தான் நம்முடைய நினைவுகளும், நினைவெச்சங்களும் இதயத்தில்தான் சேர்த்து வைக்கப்படுகின்றன.


கணினியைப் போல நம்முடைய இதயத்திலும் குப்பைகள் போல தேவையில்லாத எண்ணங்களால் நிறைந்து ஒரு கட்டத்தில் சிந்தனைகளும் அசுத்தமான சிந்தனைகளாகி செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது. அதைத்தான் நாம் டென்ஷன், மன அழுத்தம் என பலபேரிட்டு அழைக்கிறோம். இந்நிலையில்தான் நம்முடைய இதயத்தை டீ-பிராக்மெண்ட் செய்யவேண்டிய நிலை உருவாகிறது. நல்ல புத்தகங்களை வாசித்தல், சிறந்த மனிதர்களிடம் ஆலோசனை பெறுதல், தெய்வபக்தி முதலிய காரியங்களால் நாம் நம்முடைய மனதை (இதயத்தை) டீ-பிராக்மெணட் செய்ய அர்ப்பணிக்கும்போது நம்முடைய இதயமும் சுத்தமாகி தெளிந்த கண்ணாடி போல் ஆகிறது. வாழ்க்கையும் இனிக்கிறது.

என்ன உங்கள் இதயத்தை டீ-பிராக்மெண்ட் செய்ய கிளம்பி விட்டீர்களா?

Thursday, October 20, 2011

என்னைக் கவர்ந்த பொன்மொழிகள் 10:

பொன்மொழிகள் நமது முன்னோர்கள் நமக்கு தந்த பொக்கிஷங்கள். அவற்றை நாம் எப்போதும் பயன்படுத்துவதில்லை. நான் படித்த, ருசித்த பொன்மொழிகள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

1. எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கிறது.

2. அதிகம் கற்றவனாயிரு. ஆனால் பிடிவாதக்காரனாயிருக்காதே.

3. அறியாமையைவிட இழிவான அடிமைத்தனம் வேறு கிடையாது.

4. தன் துன்பத்தை வெளிக்காட்டாமல் இருப்பவனை விட
தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல் இருப்பவனே அறிவாளி.

5. மனம் விட்டுப் பேசுவதை விட சிறந்த அறிவு வேறில்லை.

6. அழகுள்ள பெண் கண்களுக்கு விருந்து.
குணமுள்ள பெண் மனதுக்கு விருந்து.
முன்னது ஆபரணம். பின்னது பொக்கிஷம்.

7. பிறரைக் கெடுத்து தான் மட்டும் வாழ நினைத்தால் அது ஆசை.
தான் மட்டும் வாழ நினைத்தால் அது பற்று.
தானும் தன் இனமும் தன் நாடும் வாழ நினைத்தால் அது அன்பு.
சராசரமும் வாழ நினைத்தால் அது அருள் எனப்படும்.

8. இதயத்தோடு போராடுவதே உண்மையான போராட்டமாகும்.

9. பெண்கள் இதயத்தால் ஆளுகிறார்கள்.
ஆண்கள் மூளையால் அடிமையாகிறார்கள்.

10. ஆசிரியரும் பெற்றோரும் நமக்குப் பேசக் கற்றுத் தருகின்றனர்.
ஆனால் இந்த உலகமோ வாயை மூடிக்கொண்டிருக்க
கற்றுத் தருகிறது.



அடுத்த பொன்மொழிகள் 10 அடுத்த பதிவில்.

Wednesday, October 19, 2011

உங்கள் வாழ்க்கை உங்களுக்கு திருப்தியளிக்கிறதா?

சின்னச் சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத் துளி:

நான் சிறுவயதாயிருக்கும்போது என் தந்தை ஒரு சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட ஒரு வரைபடத்தை அல்லது ஒரு ஓவியத்தை என்னிடம் தருவார். அது குழப்பி, கலைத்து வைக்கப்பட்டிருக்கும். அதை ஒன்று சேர்க்கவேண்டும் என்று அவர் எனக்குச் சொல்லுவார். நானும் வெகுநேரம் போராடி கடைசியில் ஒன்று சேர்த்து முழு ஓவியமாக அல்லது வரைபடமாக சேர்த்து ஒரு வெள்ளைத்தாளில் பசை கொண்டு ஒட்டி அவரிடம் கொடுப்பேன். அப்போது எனக்கு உண்டாகும் மகிழ்ச்சி இருக்கிறதே. அப்பப்பா! உலகத்தையே வென்றது போல் இருக்கும்.

நம்முடைய வாழ்க்கையும் இதைப்போல பல துண்டுகளாக சிதறி கிடக்கிறது. கல்வி, வேலை, பணம், மனைவி, பிள்ளைகள், குடும்பம், நண்பர்கள் என்று ஒவ்வொரு துண்டுகளையும் நேர்த்தியாய் ஒரு குயவன் பானையை நெய்வது போல அழகாய் நம் வாழ்க்கை வரைபடத்தில் இணைக்கிறோம். சிறு வயது முதல் இதே வேலையைத்தான் நாம் செய்து வருகிறோம். வயது ஏற ஏற ஒவ்வொன்றாய் இணைக்கிறோம்.


இந்த இணைப்பு வேலைக்கு இரண்டு வகை பசைகளை உயயோகிக்கிறோம். நன்மை எனும் பசை ஒன்று. தீமை எனும் பசை ஒன்று. நன்மை எனும் பசையில் உள்ள கலவை நல்ல எண்ணங்கள், நற்செயல்கள், நன்றியறிகிற தன்மை, பிறருக்கு தீங்கு விளைவிக்காமை முதலிய இன்னும் பெரிய லிஸ்ட்டே போட வேண்டிய அளவுக்கு உள்ள நன்மையான காரியங்களை உள்ளடக்கியது.

அதேபோல தீமை எனும் பசையில் உள்ள கலவை தீய எண்ணங்கள், தீயசெயல்கள், நன்றியறிதலில்லாத தன்மை, பிறருக்கு எப்போதும் தீங்கு விளைவித்தல் முதலிய வேறு என்னென்ன கெட்ட காரியங்கள் உண்டோ அத்தனையைம் உள்ளடக்கியது.

எந்த பசையை உபயோகிக்கவும் உங்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எந்த பசையை நீங்கள் உபயோகிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் வாழ்க்கை இன்பமயமாகவோ அல்லது துன்பமயமாகவோ அமையும். இது நிதர்சனமான மறுக்க முடியாத உண்மை. நீங்களே உங்கள் வாழ்க்கையை அலசி ஆராய்ந்து பார்த்தால் நான் சொல்வதில் உள்ள உண்மை உங்களுக்கு விளங்கும்.

இந்த இணைக்கும் வேலையில் சில நேரங்களில் தவறு நேரிடுகிறது. அப்போது அதனால் ஏற்படும் இன்னல்களினால் துன்பமுறுகிறோம்.

எத்தனை துண்டுகளை எப்படி இணைக்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் உங்கள் வாழ்க்கை. சிலர் இந்த துண்டுகளை காற்றில் பறக்கவிட்டு விடுகிறார்கள். துன்பமுற்று அலறுகிறார்கள்.

சிலர் நேர்த்தியாய் ஒன்று சேர்த்து இன்பமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

எல்லா துண்டுகளையும் ஒரு மனிதன் இணைக்க முடியுமா? முடியாது. ஏன்? என்று கேட்கிறீர்களா?

நீங்கள் எல்லா துண்டுகளையும் இணைக்க வேண்டுமென்றால் அங்குதான் இறைவனோடு உள்ள தொடர்பு குறிதத விஷயம் வருகிறது. நம் வாழ்க்கையில் கடவுளுக்கென்று ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை வேறு யாராலும் நிரப்ப முடியாது. சிகரெட்டோ, மதுவோ, மாதுவோ, சினிமாவோ வேறு எதுவும் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது.

முடிவாக, நம் வாழ்க்கை வரைபடத்தில் கடவுளுக்கென்று ஒரு வெற்றிடம் உண்டு. அதை நிரப்புகிற வரை நமக்கு வாழ்க்கை திருப்தியளிப்பதில்லை.

இப்போது புரிகிறதா? ஏன் நமக்கு வாழ்க்கை திருப்தியளிக்கவில்லை என்று.

Tuesday, October 18, 2011

நான் ரசித்த ஜோக்ஸ் 10:

நான் படித்து ரசித்த ஜோக்குகள் சிலவற்றை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

1. “ டாக்டர், எனக்குப் பிரஷர் அதிகமா இருக்கு “
“ என்ன பிரஷர்? லோ-பிரஷரா? ஹை-பிரஷரா? “
“ அந்தப் பிரஷர் இல்லை. நாலா பக்கமும் கடன்காரங்க
பிரஷர் அதிகமாயிருக்கு. ஆயிரம் ரூபாய் கடன் தாரிங்களா? “

2. கணவன்: வீட்டை நீதான் பெருக்கினியா?
மனைவி: ஆமா! எப்படி கண்டுபிடிச்சீங்க? நீட்டா இருக்கா?
கணவன்: அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. நேத்து
நைட்டு பையிலருந்து சில்லறை கீழெ
விழுந்துடுச்சு. வேலைக்காரின்னா எடுத்து
பத்திரமா வச்சிருப்பா. இப்ப இல்ல. அதான் நீதான்
பெருக்கினியான்னு கேட்டேன்.

3. “ என் மனைவி இறந்துபோய்விட்டால் நான் மறுமணமே
செய்துக்க மாட்டேன்.”
“ அவளைப் போல மனைவி அமைய மாட்டாளேன்னு
அச்சமா?”
“இல்லை. அமைஞ்சுடுவாளோன்னு பயம்தான். “

4. நீதிபதி: உனக்கு என்ன வயசு?
கைதி: ஐம்பதுங்க.
நீதிபதி: முப்பத்தைஞ்சுன்னு போட்டிருக்கே.
கைதி: அது, வழக்கு ஆரம்பிச்சப்போ உள்ள வயசுங்க.

5. நர்ஸ்: தூங்குவதற்கு மாத்திரை போட்டுக்கச் சொன்னேனே. போட்டீங்களா?
நோயாளி: ஸாரி! மறந்து போய்த் தூங்கிட்டேன்.

6. ஒருவர்: அடுத்த பிறவியிலாவது கரப்பான் பூச்சியா
பிறக்கணும்.
மற்றவர்: ஏன்?
ஒருவர்: என் மனைவி அது ஒன்றுக்குத்தான் பயப்படறா?

7. “ அம்மா ராப்பிச்சை! சோறு போடுங்க! “
“ ஏம்பா நீ பகல்லகூட வந்தே போலிருக்கே “
“ அது ஓவர் டைமுங்க. “

8. மாமனார்: நான் செஞ்ச ஸ்வீட் எப்படி இருக்கு!
மாப்பிள்ளை: முதல் ஸ்வீட் இப்போது வேண்டாம்.இரண்டாவது ஸ்வீட்
எப்போதும் வேண்டாம்.

9. நீதிபதி: பாலத்துக்கு அடில வெடி வச்சி தகர்க்க திட்டம்
போட்டது நீதானே?
கைதி: பாலத்துக்கு அடில தீபாவளி கொண்டாடினேன். இது
தப்புங்களா?

10. கணவன்: நீ செஞ்ச உப்புமாவுல ஏதோ தப்பு
நடந்திருக்குன்னு நினைக்கிறேன்.
மனைவி: ஏன் நல்லா இல்லையா?
கணவன்: இல்ல வழக்கமா வர்ற வயித்துவலி வரலியே.
அதான் கேட்டேன்.


குறிப்பு: அடுத்த சிறந்த ஜோக்ஸ் பத்து மற்றொரு பதிவில்.

Monday, October 17, 2011

எதற்குமே சிரிக்க மாட்டேன் என்ற கொள்கை [ No Smiling Policy ]வைத்திருப்பவரா நீங்கள்?

சின்னச் சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத் துளி!

சிலர் எதற்குமே சிரிக்கமாட்டேன் என்ற கொள்கை உடையவராய் இருப்பார்கள். என் நண்பர் ஒருவர் ஒருநாள் என்னிடம் சொன்ன வார்த்தைகள் என் நினைவுக்கு வருகிறது. "சார்! எப்பவுமே சிரிச்சிகிட்டே இருக்கக்கூடாது சார். நம்மள இளிச்சவாயன்னு முடிவு பண்ணிருவாங்க. ஈஸியா
ஏமாத்திருவாங்க சார். பாத்து பக்குவமா இருங்க" அப்படின்னு சொன்னது என் நினைவுக்கு வருகிறது.
வாழ்க்கையைக் குறித்து இவரைப் போன்ற மனிதர்களின் அளவுகோல் எனக்கு வியப்பை தருகிறது. சில அசாதாரணமான சமயங்களைத் தவிர மற்ற எல்லா சமயங்களிலும் நிரந்தர புன்னகை ஒன்று நம் முகத்தில் பூத்திருப்பதில் தவறொன்றுமில்லை.

பொதுவாக நாம் புகைப்படம் எடுக்கும் நேரங்களில் எல்லாம் சிரித்த நிலையில்தான் இருப்போம். புகைப்பட கலைஞர்களும் நம்மை அப்படி புன்னகைக்கும்படி வற்புறுத்துவார்கள். அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் சில மாநிலங்களில் வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக புகைப்படம் எடுக்கும்போது சிரிக்கக்கூடாது என்று சட்டமே போட்டிருக்கிறார்கள் தெரியுமா? வியப்பாக இருக்கிறதா? ஏன் தெரியுமா? போலி வாகன ஓட்டுனர் உரிமதாரர்களை கண்டுபிடிக்கத்தான். பழைய குற்றவாளிகளை அவர்களின் புகைப்படங்களோடு அவர்களைப் பற்றிய முழு விபரங்களோடு கணினியில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். நீங்கள் புதிதாக லைசென்ஸ் எடுக்கும்போது உங்கள் புகைப்படங்களை பழைய புகைப்படங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். பழைய குற்றவாளிகள் புதிதாக லைசென்ஸ் வாங்கினால் சிஸ்டம் அவர்களை காட்டிக்கொடுத்து விடும். உங்கள் முகங்களை உணர்ச்சி அற்ற நிலையில் வைத்திருந்தால் மட்டுமே தொழில்நுட்பரீதியில் இது சாத்தியமாகும். மாறாக நீங்கள் சிரித்துக் கொண்டோ, கோபப்பட்டுக்கொண்டோ அல்லது வேறு எந்த உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தாலும் கணினி உங்களை அடையாளம் கண்டுகொள்ள திணறும். ஆகவே உங்கள் முகங்களை இப்படி சாதாரண நிலையில் (Neutral Facial Expression) வைக்கும்படி வற்புறுத்துகிறார்கள்.

கணினிக்கு சரி. நம் வாழ்கைக்கு இந்த கொள்கை ஒத்து வருமா? நிச்சயமாக இல்லை. நாம் ஒன்றும் இயந்திர மனிதர்கள் இல்லை. நமக்கு இதயம் என்று ஒன்று இருக்கிறது. நீங்கள் எப்படிப்பட்ட மனிதர்கள் என்பதை உங்கள் முகமே காட்டிக்கொடுத்து விடும். நீங்கள் நல்லவரா அல்லது தீயவரா? என்பதை உங்கள் முகத்தை வைத்து கண்டுபிடித்து விடலாம். ஆகவே எப்பொழும் புன்னகையோடு இருங்கள். உங்கள் கண்களை ஏறெடுத்து பாருங்கள். உங்களைச் சுற்றிலும் தேவையுள்ள எத்தனையோ பாவப்பட்ட ஜனங்கள் இருக்கிறார்கள்தானே? அவர்களை நோக்கி செல்லுங்கள். அவர்களுக்கு எவ்வளவோ தேவைகள் உண்டு. அவர்களை சந்தியுங்கள். அவர்களோடு ஒருவேளை உணவை பகிர்ந்து கொள்ளுங்கள் .குறைந்த பட்சம் அவர்கள் பிரச்சினைகளை காது கொடுத்து கேளுங்கள். அட ஒன்றும் வேண்டாம். அவர்களைப் பார்க்கும்போது ஜஸ்ட் ஒரு புன்னகையாவது புரியுங்கள். இது கூடவா உங்களால் முடியாது! உங்கள் ஒரு புன்னகை அவர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சியை தோற்றுவிக்கும். அட நேற்றுவரை இந்த மனிதர் உம் என்று முகத்தை வைத்துக் கொண்டிருப்பார். இன்று நம்மைப் பார்த்து புன்னகைக்கிறாரே என்று உங்களை வியப்போடும் அன்போடும் பார்ப்பார்கள்.

தன்னலமாக வாழாதிங்க! கொஞ்சம் பொதுநலத்தோடும் வாழ பழகிக்கோங்க ப்ளிஸ். ஆகவே புன்னகை சாதாரண விசயமல்ல அது மனித மனங்களில் மகிழ்ச்சியை கொடுக்கும் மிகச்சிறந்த செயலாகையால் அதை இன்றைக்கே செய்ய ஆரம்பித்து விடுங்கள்.

உங்கள் முகங்களில் புன்னகைப்பூ பூக்கும்போது உங்கள் துன்பப் பூ ஓடிவிடும். மறக்காதிங்க.

Saturday, October 15, 2011

சத்தம் இல்லாத உலகம் வேண்டும்.

இன்றைய சிந்தனைத்துளி:

சத்தம்! சத்தம்! ஒரே சத்தம்! வீட்டில் சத்தம். ரோட்டில் சத்தம். அலுவலகத்தில் சத்தம். எங்கெங்கு காணினும் சத்தமடா! என்று அலுத்துக்கொள்கிறீகளா. உண்மைதான். இது சத்தமான உலகம்தான். சத்தம், கூப்பாடு, அலறல் போன்ற சத்தங்கள் நிறைந்த உலகம்தான்.

சிலர் சத்தத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள். தங்கள் தனிமையை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலாமல் அச்சத்தைப் போக்கிக் கொள்ள சத்தத்தை பயன்படுத்துகிறார்கள்.

நம் வீட்டில் அனைவருக்கும் எங்காவது ஊருக்குப் போயிருப்பார்கள். இரவு நேரமாகிவிட்டால் பயத்தைப் போக்க டி.வியைச் சத்தமாக வைப்போம். இது எதற்காக? தங்கள் மனதில் தனிமையினால் ஏற்படும் அச்சத்தைப் போக்குவதற்காகத்தான்.

சிலர் தங்கள் சத்தங்களினால் நல்ல தங்கள் சிந்தனைகளையும் பூட்டி விடுகிறார்கள். எப்போதும் இசை கேட்பது, அரட்டை அடிப்பது, டி.வி. பார்ப்பது. என்று பிசியாக இருப்பது போல் நடித்துக்கொண்டு தங்கள் சிந்தனை ஊற்றுகளை அடைத்து விடுகிறார்கள். நல்ல சிந்தனைகள்தான் செயல்களாக மாறி நாட்டில் பெரிய பெரிய மாற்றங்களை உண்டாக்குகின்றன. ஆனால் இவர்கள் தனிமையில் இருப்பதையே தவிர்த்து விடுகிறார்கள்.

தனிமையை தவறாக பயன்படுத்தாமல் முறையாய் பயன்படுத்தியதால்தான் மனிதகுலத்திற்கு அரிய கண்டுபிடிப்புளெல்லாம் பொக்கிஷங்களாய் கிடைத்திருக்கின்றன.

உங்கள் தனிமையை பயனுள்ளதாய் அமைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு வளம் பெறும்.

அமைதியை விரும்புவர்களுக்கு இந்த உலகில் ஒதுங்க இடம் கிடைப்பது கஷ்டம்தான்.

சரி. நமக்கு அமைதி வேண்டும். என்ன செய்யலாம்?

ஒரு உதாரணம் சொல்கிறேன்.

குடம் நிறைய தண்ணீர் இருக்கிறது. தூக்கிப்பாருங்கள். என்ன கனம் கனக்கிறது? அதே குடத்தை நீங்கள் தண்ணீருக்குள் தூக்கிப் பார்த்திருக்கிறீர்களா? எவ்வளவு எளிதாய் இருக்கிறது.

இறைபக்தி உங்களுக்குள் பொங்கும்போது மனம் எளிதாகிவிடுகிறது.

எல்லாம் நான் நான் நான்தான். எல்லாவற்றிற்கும் நானே காரணம். நானேதான் எல்லாவற்றையும் சகிக்க வேண்டியிருக்கிறது என்ற எண்ணம்தான் உங்கள் துன்பத்திற்கு காரணம்.

சரி. வேறென்ன செய்வது என்கிறீர்களா?

நமது கடமையை ஒழுங்காய் செய்வோம். விளைவுகளை இறைவனிடம் விட்டுவிடுவோம். அப்போது அமைதி எனும் நதி உங்கள் உள்ளங்களில் வற்றாத ஜீவநதியாய் ஓடிக்கொண்டேயிருக்கும்.

Friday, October 14, 2011

உங்களுக்கு யார் எஜமானன் நீங்களா? உங்கள் வாயா?

இன்றைய சிந்தனைத் துளி:

வாழ்க்கையில் நடக்கும் எத்தனையோ பிரச்சினைகளுக்கு நம் வாய்தான் காரணமாகிறது. வாய் அடக்கம் இல்லாததால் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் கோடி கோடி பேர்.

எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் ஒன்று உண்டு. அந்த பெற்றோர்களுக்கு 5 பெண் பிள்ளைகள். அதில் இந்த பெண்தான் கடைக்குட்டி. நான்கு பெண்களுக்கும் திருமணமாகிவிட்டது. கணவன், பிள்ளைகளென்று சந்தோஷமாய் வாழுகிறார்கள். ஆனால் இந்த பெண்ணுக்கு இப்போது வயது 38 ஆகிவிட்டது. இன்னும் திருமணமாகவில்லை. அவளின் தாய், தகப்பனும், சகோதரனும் அழாத நாளில்லை. காரணம் இவளின் வாய்தான். பள்ளியில், கல்லூரியில், தெருவில் இவளின் கோபம், சண்டைகள் பிரசித்தம். “ நான் பேசினா கரெக்டா பேசுவேன். உள்ள ஒண்ணு வச்சி வெளிய ஒண்ணு பேச எனக்குத் தொpயாது” இதுதான் அவளது வழக்கமான டயலாக். இப்படி அவளாகவே அவளுக்குள் ஒரு வட்டம் போட்டுக்கொண்டு தான் பேசுவதுதான் சரி. மற்ற மனிதர்களெல்லாம் அயோக்கியர்கள். யாருக்கும் புத்தியில்லை என்று நினைத்துக்கொண்டு வாழ்ந்ததால் வந்த வினையைப் பாருங்கள். அவளைப் பார்த்தவுடனே எல்லோரும் ஒதுங்கி ஓடக் கூடிய நிலையை உண்டுபண்ணியிருந்த படியால் அவளைப் பெண் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் தலைதெறிக்க ஓடிவிட்டார்கள். இன்னும் கன்னிகழியாத மங்கையாய் வாழ்ந்து வருகிறாள்.

இது ஒரு சாம்பிள்தான். எத்தனையோ வீடுகளில் இதைப்போன்ற பெண்களும், ஆண்களும் இருந்துகொண்டுதான் வருகிறார்கள். இவர்கள் சாதித்தது என்ன?
இவர்களின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் என்ன? அவர்களின் வாய்தான்.

உங்களுக்கு நீங்கள் எஜமானாய் இல்லாமல் உங்கள் வாயை எஜமானாய் வைத்தால் உங்கள் வாழ்க்கை நலிவுபெறும். உறவுகள் உடையும். வாழ்க்கை எனும் பூந்தோட்டம் வசந்தமில்லாமல் வாடிப்போகும்.

பேருந்திற்குள் அமர்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். யோசித்துப் பாருங்கள் பேருந்தை கட்டுப்படுத்துவது எது?

ஸ்டியரிங்தானே? அந்த சிறிய கருவி எவ்வளவு பெரிய பேருந்தை கட்டுப்படுத்துகிறது. அது தன் கடடுப்பாட்டை இழந்து பழுதானால் என்னவாகும் யோசித்திர்களா?

ஸ்டிரியங்கைப் போல்தான் நாக்கும். நமது முழு வாழ்க்கையையும் கட்டுப்படுத்தும் கருவியாய் இருக்கிறது

ஆகவே, முடிவாக

உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே எஜமானாக இருங்கள். உங்கள் வாயை உங்கள் சொற்படி கேட்கும் வேலைக்காரனாக நடத்துங்கள்.

உங்கள் வாழ்க்கைப் பூமலரும்! வசந்தங்கள் தேடி வரும்.

Wednesday, October 12, 2011

நீங்கள் யாருக்கு சாப்பாடு போடுகீறீர்கள்?

நீங்கள் யாருக்கு சாப்பாடு போடுகீறீர்கள்?

தலைப்பைப் பார்த்ததும் உங்கள் கற்பனை எங்கே சென்றாலும் சரி. அது பற்றி எனக்கு கவலை இல்லை.

நீங்கள் வளமாய் சிந்திக்கவேண்டும். நம் சிந்தனைகள் வளம்பெற வேண்டும். அதன் மூலம் நீங்கள் பெருவாழ்வு பெற்று வாழவேண்டும் என்பதே என் நோக்கம். இந்த உடலுக்காக அதன் இச்சைகளுக்காக தீனிபோடும் எத்தனையோ வலைப்பதிவுகள் இணையத்தில் உண்டு. என்னுடைய வலைப்பதிவு வித்தியாசமாய் நம் ஆன்மாவுக்காக அந்த ஆன்மாவின் வாழ்விற்காக இருக்க வேண்டும் என்று விரும்பியே வலைப்பூவைத் தொடங்கினேன். தினமும் ஒரு நற்சிந்தனையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். நல்வாழ்வு வாழ நற்சிந்தனைகளே நமக்குத் தேவை. மன அழுத்தத்தினால் எத்தனையோ பேர் பாதிக்கப்பட்டு மன நலிவுற்று, உடல் நலிவுற்று, நோயுற்று வாழ்கின்றனர். முடிவில் தற்கொலை செய்து மாண்டு விடுவோரும் உள்ளனர். நம் வலைப்பதிவுகளை வாசிப்பவர்கள் மனநலம் பெற்று உயர்வாழ்வு வாழ வேண்டும் என்ற பெருவிருப்பத்துடன் எழுத தீர்மானித்துள்ளேன். சரி. அது போகட்டும். இன்றை நற்சிந்தனைக்கு வருவோம்.

இன்றைய தலைப்பென்ன?

நீங்கள் யாருக்கு சாப்பாடு போடுகிறீர்கள்?

நம் ஒவ்வொருவருக்குள்ளும் இரண்டு மனிதர்கள் வசிக்கின்றனர். உதாரணமாக உங்கள் பெயர் சுந்தர் என்று வைத்துக்கொள்ளுவோம். உங்களுக்குள் நல்ல சுந்தர் என்ற மனிதனும், கெட்ட சுந்தர் என்ற மனிதனும் உள்ளனர். வெளியே தெரிகிற சுந்தராகிய (அதாவது கண்களால் பார்க்கிற சுந்தர்) வெளிமனிதனாகிய சுந்தர் அவ்வளவு நல்ல ஆள் இல்லை. நல்ல ஆள் என்ன நல்ல ஆள். கெட்ட சுந்தர்தான். ஆனால உள்ளே உள்ள மனிதனாகிய (உள்மனிதன்) சுந்தர் எப்போதுமே நல்ல மனிதர்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் உபயோகப்படுத்தும் மனிதன் இந்த கெட்ட சுந்தராகிய வெளிமனிதனைத்தான். கோபம், வெறி, சண்டை, பெண் ஆசை, போக்கிரித்தனம், ரவுடித்தனம், பண ஆசை இன்னும் எத்தனை எத்தனை கெட்ட குணங்கள் உண்டோ அத்தனையும் நிறைந்தவன்தான் இந்த வெளிமனிதன். நம் உள்மனிதனை யாரும் பயன்படுத்துவதே இல்லை. அதுதான் இந்த மனிதகுலத்தின் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கிறது. மாறாக உள்ளே உள்ள உள்மனிதனோ அன்பு, பண்பு, பாசம், மனிதத்தன்மை, இன்னும் எத்தனை நல்ல குணங்கள் உண்டோ அத்தனை நல்ல குணங்களையும் உள்ளே வைத்துக்கொண்டிருக்கும் நல்ல மனிதனாவான். ஆனால் இந்த உள்மனிதனை யாரும் பயன்படுத்துவதே இல்லை. இப்போது இப்பதிவின் தலைப்பைப் பார்ப்போம். நீங்கள் யாருக்கு சாப்பாடு போடுகிறீர்கள்? உங்கள் உள்மனிதனுக்கா? அல்லது வெளிமனிதனுக்கா?

முதலில் உள்மனிதனைக் கவனிப்போம். உள்மனிதனுக்கு சாப்பாடு என்றால் நல்ல புத்தகங்களை வாசிப்பது, ஆபாச புத்தகங்களை தவிர்ப்பது, ஆபாசத் திரைப்படங்களைத் தவிர்ப்பது, தெய்வ பக்தி முதலிய நல்ல ஆகிய நல்ல காரியங்களை செய்யும்போது உங்கள் உள்மனிதனுக்கு நீங்கள் சாப்பாடு போடுகிறீர்கள். அவன் நல்ல திடமாக வளர்கிறான். உங்கள் ஆன்மாவும் வளர்ச்சி பெறுகிறது. அதன் மூலம் உங்கள் வாழ்வும் வளம்பெறும்.

மாறாக நீங்கள் உங்கள் வெளிமனிதனுக்கு சாப்பாடு எப்படி போடுகிறீர்கள் என்றால் என்ன நடக்கும்? ஆபாச புத்தகங்கள், ஆபாசத் திரைப்படங்கள், இன்டெர்நெட்டில் ஆபாசக்குப்பைகளை மேய்வது, கோபப்படுவது, மது அருந்துவது, சிகரெட் குடிப்பது, கஞ்சா, அபின் முதலிய போதை வஸ்த்துக்களை சாப்பிடுவது இன்னும் நாம் செய்யும் எத்தனையோ தீய செயல்கள் இவைதான் நம் வெளிமனிதனுக்கு சாப்பாடு கொடுக்கும் விஷயங்கள்.

நீங்கள் உங்கள் உள்மனிதனுக்கு நன்றாக சாப்பாடு போட்டு கொழுக்க வைத்தால் உங்கள் வாழ்க்கையும் செழிக்கும்.

மாறாக உங்கள் வெளிமனிதனுக்கு தொடர்ந்து சாப்பாடு போட்டு அவனை கொழுக்க வைத்தால் உங்கள் வாழ்க்கை நலிவடைந்து நாசமாய்ப் போகும்.

இப்போது சொல்லுங்கள்?

நீங்கள் யாருக்கு சாப்பாடு போடுவீர்கள்?



குறிப்பு: அடுத்த நற்சிந்தனை அடுத்த பதிவில்.

Tuesday, October 11, 2011

திருட்டுப்பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

திருட்டுப்பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

நம் பதிவுலக நண்பர்கள் சில பேர் திருட்டுப்பதிவைப் பற்றி எவ்வளவோ எழுதித்தான் வருகிறார்கள். ஆனாலும் இந்த திருட்டுப்பதிவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. ஆகவே இந்த பதிவைப் பார்த்த பின்பாவது திருந்த வேண்டும். இல்லையேல் வருந்தவேண்டியிருக்கும்.

திருட்டுப்பதிவு போடும் கயவர்களே!

உண்மையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை தெரிந்துதான் செய்கிறீர்களா? நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று நான் சொல்லட்டுமா? தாய்ப்பாலில் நீங்கள் விஷம் கலக்கிறீர்கள். ஆம். தாய்ப்பாலில் விஷம்தான் கலக்கிறீர்கள். இதைவிட அவமானகரமான விஷயம் வேறில்லை. ஒரு பதிவையிட எவ்வளவு கஷ்டம் தெரியுமா உங்களுக்கு?!. பதிவை இட சரக்கு இல்லையென்றால் ஏன் வலைப்பூ ஆரம்பிக்கிறீர்கள். அசிங்கமாக இல்லையா? ஒரு பதிவை இட எவ்வளவு நேரமெடுத்து, எவ்வளவு யோசித்து, மூளையை கசக்கி ஒரு தாய் பிள்ளையை பிரசவிக்கிறதுபோலத்தான் ஒவ்வொரு பதிவையும் இடவேண்டியிருக்கிறது. நீங்கள் எங்கள் பிள்ளைகளை எடுத்து உங்கள் பிள்ளைகளென்று பேரிட்டு பொய்ப்பெருமை பெற்றுக்கொள்கிறீர்கள். இனி இவ்விதம் செய்யாதீர்கள்! செய்தால் என்ன என்று கேட்கிறீர்களா?

உங்களை பதிவர்களென்று அழைத்துக்கொள்ளாமல் விபச்சாரிகள் என்று வேண்டுமானால அழைத்துக்கொள்ளுங்கள்..!!!.

குறிப்பு: பாதிக்கப்பட்ட வலைப்பதிவர்களின் சார்பாக இந்த சிறிய பதிவை இடுகிறேன். பின்பு சமயம் வாய்த்தால் பெரிய பதிவாக இடலாம் என நினைத்திருக்கிறேன். அதன் பிறகாவது இந்த கருங்காலிகள் திருந்துவார்களா என்று பார்ப்போம்.

Monday, October 10, 2011

எப்படி வாழ வேண்டும்?

இந்த பேஸ்புக் தலைமுறைக்கு இலக்கியம் என்றால் வேப்பங்காய்தான் என்பது எனக்குப் புரி கிறது. ஆனாலும் சங்க இலக்கியப் பூக்களிலுள்ள சில தேன்துளிகளை உங்களுக்கு பருகக் கொடுப்பது எனக்கு சரி என்று படுகிறது. பருகிய பின் நீங்களும் என் கருத்துக்கு தலையாட்டுவீர்கள் என்று நினைக்கிறேன். தொடர்ந்து படியுங்கள்.

மனிதர்களை இரண்டு வகையாக பிரி க்கலாம். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பவர்கள் ஒரு வகை. இப்படித்தான் வாழவேண்டும் என்பவர்கள் இரண்டாம் வகை. இரண்டாம் வகையினருக்காக சங்க இலக்கியமான தொல்காப்பியம் சில ஆலோசனைகளைச் சொல்கிறது?

என்னவென்று பார்ப்போமா?

பாடலையும் அதன் பொருளையும் தருகிறேன்.

முதலில் பாடல்.

“ பரி வும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊணுன் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்
தானஞ் செய்மின் தனம் பல தாங்குமின்
செய்நன்றி கொல்லன்மின் தீநட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வௌளைக் கோட்டியும் விரசில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லுந் தேகத்துக் குறுதுணை தேடுமின்
மல்லன் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கென. “

பாடலின் பொருள்:

ஆசையையும், ஆசையினால் ஏற்படும் துன்பத்தையும் விட்டொழியுங்கள்: தெய்வம் உண்டு என்று அறிந்துகொள்ளுங்கள்: அறிவுள்ளவர்களை ஆதரியுங்கள். பொய் கூறுவதற்கு பயப்படுங்கள். புறங்கூறலில் ஈடுபடாது (அதாங்க கோள்சொல்லுறது) உண்மையைப் போற்றுங்கள்: புலால் உணவை (அசைவ உணவு) விலக்குங்கள்: உயிர்க்கொலைகளைப் புரியாதீர்கள் (மர்டர் பண்ணாதீங்க): தானம் செய்யுங்கள்: தவம் பல செய்யுங்கள்: செய்ந்நன்றி மறவாதீர்கள்: தீய நட்பினரை இகழந்து நீக்குங்கள்: பொய்சாட்சி சொல்லாதீர்கள்: பயனற்ற சொற்களைப் பேசாதீர்கள்: நல்லோருடன் சேருங்கள்: கெட்டவர்களுடன் சேராதீர்கள்: பிறன்மனை விழைவதற்கு (மற்றவரி ன் மனைவியை செட் பண்றது) அஞ்சுங்கள்: உயிர்கள் யாவையும் நேசியுங்கள் . பாவம் செய்யாதிருங்கள்: பொய், களவு, காமம், அறிவிலார் சேர்க்கை என்பவற்றை விவேகமாக ஒழியுங்கள்: இளமை, செல்வம், யாக்கை (உடல்), நிலையாதன (நிலையற்ற தன்மை) என்னும் உண்மையை நினைவிற் கொள்ளுங்கள்: நாம் வாழுகின்ற நாட்களை எவ்வழியிலும் வீண்நாட்களாக்கி விடாமல் முடிந்தளவில் அறம்புரி யுங்கள்: மேலோர் ஆகுங்கள்: இவ்வாறு வளம் பொருந்திய இப்பூமியில்
வாழ்வாங்கு வாழ்வீர்கள்களாக!

இப்படித்தான் வாழவேண்டும் என்று தீர்மானித்து தொல்காப்பியத்தின் வழிகாட்டுதலின்படி நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைப்போம்.

அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

(எல்லாப் பதிவும் இப்படியே இருக்காது. பயப்படாதீங்க. அப்பப்ப நம்ம வலைப்பூ பக்கம் வர தவறாதீர்கள். இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.)

Saturday, October 8, 2011

என்றைக்காவது ஆரோக்கியமாக சிந்தித்திருக்கிறீர்களா?

என்றைக்காவது ஆரோக்கியமாக சிந்தித்திருக்கிறீர்கள? வாங்க. நம் சிந்தனைத் துணிகளை நற்சிந்தனை எனும் உஜாலாவில் நனைத்து மணக்க வைப்போம்.

இன்று… இந்த 21-ஆம் நூற்றாண்டில்… நம் சிந்தனைகள் மாசுபட்டுப் போய்விட்டன. செல்போன், இண்டெர்நெட், மெமரி கார்டுகள் உபயோகத்தில் நம் சிந்தனைகள் 99% காமவிகார சிந்தனைகளாகவே ஆகிவிட்டன. ஆடை அவிழ்த்துப் பார்க்கும் நம் பார்வைகள் மாற வேண்டும். உடுக்க உடையில்லாமல், உண்ண ஒருவேளை உணவில்லாமல் தவிக்கும் எத்தனையோ கோடி மக்களின் கண்ணீர்த்துளிகள் உலகெங்கும் சிந்தப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன ஒவ்வொரு மணித்துளிகளிலும். ஆனால் நாமோ செல்போன் மெமரிகார்டுகளில் ஆபாசக்குப்பையை அள்ளி வைத்துக்கொண்டு ரசித்துக்கொண்டிருக்கிறோம்.
எவன் அழிஞ்சா எனக்கென்ன? யார் எப்படிப் போனா எனக்கென்ன? என்று நம் கடமையைச் (???!!) சரியாகச் செய்துகொண்டேதான் இருக்கிறோம்.

அட என்ன சார் இது! பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கிங்களே!
எப்படிப்பட்ட அவசர யுகத்தில இருக்கோம். நாலு பேர மிதிச்சு ஏறிப் போய்க்கிட்டே இருந்தாத்தான் நாம நல்லா இருக்கமுடியும். போங்க… போங்க சார்.. வேலையைப் பார்த்துகிட்டு. அப்படின்னு சொல்றீங்களா?.....

கொஞ்சம் சிந்திங்க சார்!

பெரும்பான்மை கூட்டம் அப்படி வாழட்டுமே. நாம ஒரு சிறுபான்மை கூட்டமா இருந்தாலும் பரவாயில்ல. நம்மள மாதிரி ஆள்கள் இருக்குறதுனாலதான் கடவுள் இந்த பூமியை அழிக்காம ரன் பண்ணிக்கிட்டு இருக்குறாரு. உங்களுக்கு தெரியுமா?

அதுனால் தயவு செய்து…. இனியாவது தினமும் யாருக்காவது உதவி செய்ங்க.
தினமும் காலையில் கண்விழித்தவுடன் இன்று நம்முடைய மனத்தாலாவது, பணத்தாலாவது, என் உழைப்பினாலாவது, ஒரு நன்மையாவது ஒருவருக்காவது செய்வேன் என்று தீர்மானம் எடுங்க.

இதுனால் என்ன நன்மை அப்படிங்கறீங்களா?

உங்க மனசு ஆரோக்கியமா இருக்கும். இன்னிக்கு ஒரு ஜீவனுக்காவது பிரயோஜனமா வாழ்ந்திருக்கோம் அப்படிங்கற எண்ணத்தாலு ஒரு பொpய சந்தோஷம் உண்டாகும். உங்க மனசு சந்தோஷப்படுறதால உங்க உடலும் சந்தோஷப்படும். அதாவது நோய்களை நோய்கிருமிகளை அழிக்கக் கூடிய எதிர் உயிரிகளும்அதிகமா உற்பத்தியாகும். மனதும் உடலும் உங்களை வாழ்த்தும்.

பிறகென்ன? ஆரோக்கியமா சிந்திக்க ஆரம்பிச்சிட்டீங்கதானே? வாழ்க வளமுடன்!

Friday, October 7, 2011

கோழிக்கனவும் என் கிரிக்கெட் கதையும்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியிடம் நம் அணி வாங்கிய செமத்தியான அடியை கண்ட உங்களைப்போலவே நானும் எரிச்சல் அடைந்து இனி கிரிக்கெட் பார்ப்பதில்லை என்று முடிவு செய்து நிம்மதியாக படுக்கையில் சரிந்தேன்.

ஒரு கனவு கண்டேன். இனி என் கனவு.

ஒரு பெட்டைக்கோழி குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தது. " சே! இனி இந்த சேவல் கிட்ட சேரக் கூடாது. எத்தனை தடவைதான் பிள்ளை பெத்துக்கிடறது. இனி நம்மள முடியாதுடா சாமி" என்று நினைத்தபடி விரதத்தை ஆரம்பித்தது. இரண்டு நாள் போயிருக்கும். அன்று குப்பைமேட்டில் வழக்கம்போல் குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தபோது வந்தது ஒரு ஆஜானுபாவான சேவல். கிட்ட வந்து கொஞ்சியபோது கோழிக்கு தேகம் உருகத் தொடங்கியது. பிறகென்ன? வழக்கம்போல ஆசைநாடகம் அரங்கேறியது அங்கே. 50 நாட்கள் கழித்து மறுபடியும் ஏழெட்டு குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டே நினைத்தது 'இது இயற்கையின் நியதி. சுயக்கட்டுப்பட்டினால் பலனில்லை" என்று.

கனவு முடிந்து கண்விழித்தேன். மாலையில் டிவியை ஆன் செய்தால் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட். பெங்களுரு Vs சவுத் ஆஸ்திரேலியா மேட்சை பார்க்க ஆரம்பித்தேன்.

கதைக்கும் கனவுக்கும் உள்ள ஒற்றுமையை நினைத்து சிரித்தேன்.

Tuesday, October 4, 2011

திருந்துவார்களா சில ஜென்மங்கள்?

சமீபத்தில் என் அலுவலக நண்பர் ஒருவர் சொன்ன நிஜ சம்பவம் இது. அவருடைய வாய்மொழியாகவே இதை தருகிறேன்.

“தூத்துக்குடி ரோட்டோரங்களில் சமீப காலமாக ஒரு பிச்சைக்காhp தனது நான்கு குழந்தைகளுடன் பிச்சையெடுப்பதைக் காணமுடிந்தது. அவளுக்கு நான்கு பிள்ளைகள். ஒரு வயதிலிருந்து 7 வயது வரை அடுக்கடுக்காய் நான்கு பிள்ளைகள். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் புருஷன் இவளை காதலித்து கல்யாணம் செய்து இருக்கிறான். குழந்தை உண்டாகும் வரைக்கும் குடும்பம் நடத்துவானாம். பிறகு எங்காவது ஓடிப்போய்விடுவானாம். பிறகு குழந்தை பிறந்ததும் மறுபடியும் வந்து விடுவானாம். இப்படியே நான்கு குழந்தைகள் பிறந்ததும் பிறகு ஓடிப்போனவன் மறுபடியும் வரவே இல்லையாம். இப்படிப்பட்ட நிலையில் சில மனித மிருகங்கள் இவளை வேட்டையாடியதில் இவள் மனநிலை பாதிக்கப்பட்டவளாய் மாறிவிட்டாளாம்”

இவை என் நண்பர் சுயமாய் முயன்று திரட்டிய தகவல்கள். கேட்டவுடன் என் கண்கள் பனித்;தது. தன் உடல்பசிக்காக ஒரு பெண்ணை பயன்படுத்தும் இவனைப் போன்ற கயவர்கள் என்று திருந்துவார்களோ? தொpயவில்லை.