Saturday, September 15, 2012

சண்டக்கோழிகள்

அமைதியான அந்த ஊரை அதிர வைத்தன அந்த இரண்டு சண்டக்கோழிகளும். ஒரு கோழி தன் எஜமானனிடம் சென்று “போட்டி ஒன்றை ஏற்பாடு செய்யுங்கள்! தெரியட்டும் யார் பெரியவன் என்று” என கர்ஜித்தது. மற்றொரு கோழி தன் எஜமானனிடம் சென்று “அவனா நானா என்று பார்க்கணும். வையுங்கள் போட்டியை” என்று சீறியது. ஊர் கூடி முடிவு செய்தது வைத்தே விடுவது போட்டியல்ல தேர்தலென்று.

பிரச்சாரம் அனல் பறந்தது. இரண்டு பிரிவாய் பிரிந்த கோழிகள் ஒன்றையொன்று தாக்கி போஸ்டர் அடித்தன. நாகரீகமாய் தொடங்கிய வார்த்தை யுத்தம் போகப் போக நாறியது. எல்லை மீறியது. அசிங்க வார்த்தைகள் அச்சில் ஏறின. கோஷங்கள் மாறின. கோஷ்டிகளும் மாறின. கட்சித் தாவலும், ஆட்கடத்தலும் சகஜமாயின.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருந்தபோது இடியாக வந்திறங்கியது ஓர் செய்தி. பறவைக்காய்ச்சல் நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்து வந்தது அந்த ஊருக்குள். கிராம சபை கூடியது. அரசாங்க மருத்துவர் எழுந்து “கோழிகள், பறவைகளை முழுவதுமாக அழிக்காவிட்டால் ஊர் இருந்த இடத்தில் சுடுகாடுதான் இருக்கும்” என்று எச்சரிக்கை விடுத்துச் சென்றார்.

அவ்வளவுதான். மறுநாள்....

குப்பையோடு குப்பையாய் தலை நசுங்கிக் கிடந்தன அந்த


ச...ண்...ட...க்...கோ...ழி...க...ள்...!




.