Friday, March 30, 2012

பதினாறு செல்வங்கள் எவை எவை?




பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா? அதன் விளக்கம் பின்வருமாறு:-

பதினாறு செல்வங்கள்:

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத
குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)


இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் அறுதியிட்டு கூறினர். உண்மைதானே? என்ன நான் சொல்றது?

வாழ்க நலமுடன்...!






.

ஆசை விதை




பற்கள் முளைக்கவில்லை
ஆனாலும்
கடிக்க ஆசை

கொம்பு முளைக்கவில்லை
ஆனாலும்
முட்ட ஆசை

கால்கள் எழும்பவில்லை
ஆனாலும்
நடக்க ஆசை

கைகள் உருப்பெறவில்லை
ஆனாலும்
எடுக்க ஆசை

பிஞ்சு என்றனர்
ஆனாலும்
பழுக்க ஆசை

இப்போதும்
என் ஆசை விதைகள்
முளைத்துக்கொண்டேதான்
இருக்கின்றன

ஆனால்...
எப்போதும்
விதைகளோடு மட்டுமே
முடிந்து விடுகிறது
என்
அறுவடைகள்.

Wednesday, March 28, 2012

முதலாளிகள் வேலையாட்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?



ஒரு நிறுவனமோ அல்லது கடையோ செழிப்பாக இருக்க, செம்மையான முறையில் செயல்பட முதலாளியும், தொழிலாளியும் ஆரோக்கியமான மனோநிலையில் இருக்க வேண்டும். முதலாளிகள் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் வேலையாட்கள் அற்புதமாக செயல்படுவார்கள். அதற்கான சில டிப்ஸ் பின்வருமாறு:


1. வெற்றிக்கான 80/20 சட்டத்தை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள். அதாவது எண்பது சதவீத நேரங்களில் நான் சரியான தீர்மானங்களை எடுப்பேன். ஆனால் இருபது சதவீத நேரங்களில் நானும் தவறான தீர்மானங்கள் எடுக்கிறேன். தவறுகளைச் செய்கிறேன். அல்லது சிறப்பாக செய்திருக்க மாட்டேன். என்னுடைய பணியாளர்களுக்கும் இதே 80/20 சட்டத்தின்படியான சுதந்திரத்தை அளிக்கிறேன். அவர்கள் தவறு செய்யவும் வாய்ப்புண்டு என்பதை அறிகிறேன்.

2. நம் பணியாளர்களின் முன்னேற்றத்தை சோதிக்கலாம். தவறில்லை. ஆனால் எப்போதும் அவர்களையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இப்படித்தான் வேலை செய்ய வேண்டுமென கூறக் கூடாது. நம்முடைய ‘நிபுணத்துவ’ அணுகுமுறைக்குச் சாதகமாக அவர்களின் வேலையைத் தள்ளிவிடக் கூடாது. தலைவராக நீங்களிருப்பதால் மற்றவர்களுக்கு சாதகமாக இருக்கும் பொருட்டு அவர்களுடைய தீர்மானங்களை மாற்றக் கூடாது.

3. நீங்கள் அதிகாரம் அளிப்பவரிடம் (வேலையாளிடம்) நம்பிக்கையுடனிருக்க வேண்டும்.

4. உங்கள் முறைப்படிதான் அது செய்யப்பட வேண்டும் என்ற முறையிலிருந்து விடுபட்டு இளைப்பாறுங்கள்.

5. வேகமாகச் செய்யும் ஆசையிடமிருந்து பொறுமையுடனிருங்கள்.

6. அதிகாரத்தை அளிப்பதில் உள்ள உங்கள் சுதந்தரத்தின் மூலம் மற்றவர்களின் முன்னேற்றத்தைக் காணுங்கள்.

7. தகுதியுள்ள மக்களைத் தேர்ந்தெடுங்கள்.

8. அவர்கள் மீதுள்ள உறுதியை வெளிப்படுத்துங்கள்.

9.அவர்களுடைய கடமைகளைத் தெளிவாக்குங்கள்.

10. சரியான அதிகாரத்தை அவர்களுக்கு அளியுங்கள்.

11. எப்படி வேலை செய்ய வேண்டுமென அவர்களுக்கு அடிக்கடி கூறாதீர்கள்.

12. எதற்கெல்லாம் உங்களுக்கு கணக்கு கூறவேண்டுமென்பதை அவர்களுக்கு கூறுங்கள்.

13. அவர்கள் செயல்படும் முறையைக் கவனியுங்கள்.

14. எப்போதாவது தவறு செய்வதற்கு இடமளியுங்கள். சாத்தியமிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.

15. சிறப்பாக செய்யப்பட்ட வேலைகளுக்கு புகழையும், பெருமைகளையும் அளியுங்கள்.

இந்த வழிமுறைகளையெல்லாம் கடைப்பிடித்துப் பாருங்கள். உங்கள் வேலையாட்கள் மிகச்சிறப்பாக செயல்படுவார்கள்.



டிஸ்கி:

‘தலைவர்கள் செய்யும் பத்து தவறுகள்’ என்ற நூலிலிருந்து ஹான்ஸ் பின்ஸல் (Hans Finzel).

Sunday, March 25, 2012

என் சிவந்த கைக்காரா...!





இன்னும் எத்தனை காலம்
என் சிவந்த கைக்காரா

யார் குளிக்க
திசை திரும்புகின்றன
உன்
நதிகள்

சிதைந்து போயின
உன்
பரவசப் பொழுதுகள்

நேரத்தை உட்கொண்டு
நீ
உதிர்த்த பணப்பூக்களால்

இங்கே
தேவதைகள்
அர்ச்சிக்கப்படுகிறார்கள்

உன்
இரத்தத்தைப் பிழிந்து
பழரசம் அருந்துகின்றன
இந்த
கருப்பு ஓநாய்கள்

உன்
அறியாமைதான்
இவர்களுக்கு ஆடை

உன்
கையாலாகாத்தனம்தான்
இவர்களுக்கு செருப்பு

என்னிடம் வா!
யுத்தம் பழகு

துருப்பிடித்துப் போன
உன்
ஆயுதங்களை
பழுதுபார்த்து தருகிறேன்

மூங்கில் குணம் மாற்று
பாரதி மீசை பொருத்து
சிவாஜியின் வாளை எடு

புறப்படு இப்போது
உன் பார்வைக்கு
புயல்களும் அடங்கும்

எட்டு எடுத்து
நீ வைக்கும்
ஒவ்வோர் அடிக்கும்
பூமி அதிரும்

பிறகென்ன
ஓர் புரட்சி துவக்கிவிட்டு
புன்னகையோடு வா!

இதோ
நான்
பூமாலையுடன்
காத்திருக்கிறேன்...!



.

வயிற்றுவலியை சாதாரணமா நினைக்காதீங்க!




உங்கள் உள்ளுறுப்புகள் உருகும் நோய் பற்றி தெரியுமா உங்களுக்கு. என்ன உள்ளுறுப்புகள் உருகுமா? அதென்ன மெழுகா? என்னய்யா கதை விடுறீங்க? அப்படிங்கறீங்களா? இக்கட்டுரையை முதல்ல படியுங்க ப்ளீஸ்.

உள்ளுறுப்புகள் உருகுமா? ஆம். உருகும். நமது உள்ளுறுப்புகள் உருகும் என்பதை யாருமே நம்ப மாட்டார்கள். ஆனால் அது உண்மை. லட்சக்கணக்கான மக்கள் இந்நோயினால் உலகம் முழுவதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

சாதாரணமாக நமக்கு வயிற்று வலி வருகிறது. சில வயிற்றுவலிகள் சாதாரணமானவைதான். பிரச்சினை இல்லை என்று விட்டுவிடலாம். ஆனால் எளிய பரிசோதனைகளுக்கு அகப்படாத வயிற்று வலிகள் மிகவும் ஆபத்தானவைகள். மருந்து சாப்பிட்டும் சரியாகாமல் வெகு நாட்களாக வயிறு வலித்துக் கொண்டே இருந்தால் இந்த உள்ளுறுப்பு உருகும் நோய்க்கு நீங்கள் ஆட்பட்டிருக்கலாம்.

நம் வயிற்றின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கணையம்தான் (Pancreas) இந்நோய்க்கு முக்கிய காரணமாகிறது. இந்த கணையத்தில் ஏற்படுகிற கோளாறு அல்லது வீக்கம் கணைய அழற்சி எனப்படுகிறது (Pancreatitis). கணைய சுரப்பியின் தாறுமாறாக சுரத்தலே இந்த கோளாறுக்கு காரணம். அதன் மூலம் உணவு செரிக்க கணையம் சுரக்கும் என்சைம்களின் அளவு எல்லையைத் தாண்டுவதால் இப்படி கோளாறுகள் ஏற்படுகிறது.

சாதாரணமாக தொடர்ந்து ஏற்படும் வயிற்றுவலியானது சில நேரம் இந்த கணைய அழற்சிக்கு அறிகுறியாக இருக்கலாம். இது மிகவும் மோசமான ஒரு நோயாகும். ஆனால் நம்மில் சிலர் தொடர்ச்சியான வயிற்றுவலிக்கு மெடிக்கலில் மருந்து வாங்கி சாப்பிட்டு சரியாகிவிடும் என்று கருதிவிடுகிறோம். ஆனால் விளைவுகள் மேலும் மோசமாகிவிடுகின்றன.

நம்மில் நிறைய பேருக்கு கணையம் என்றால் என்ன? அதன் வேலைகள் என்னென்ன? என்று கூடத் தெரியாமல் இருக்கிறார்கள். இதயம், நுரையீரல் ஆகியவை என்னவென்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்தக் கணையம் என்றால் என்ன என்று கேட்டால் ‘ஙே’ என்று விழிப்பார்கள்.




கணையம் என்றால் என்ன என்று இரத்தினச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். மேலே உள்ள படத்தைப் பாருங்கள். வயிற்றின் மத்திய பாகத்தில் அவரைக்காய் போல குறுக்காக இருக்கிறதே அதுதான் கணையம் (Pancreas).

கணையம் சிறிய உறுப்பாக இருந்தாலும் நம்முடைய உடலில் மிகப் பெரிய வேலையைச் செய்கிறது. மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெருசு. இது நாம் உண்ணும் உணவைச் செரிக்க உதவும் நொதிப்பொருளை (என்சைம்னாதான் புரியும். இல்லே) சுரக்கிறது.

உணவுப்பொருட்களை மாவு போல ஆக்கி சத்துக்களை பிரித்தெடுக்க பெரும் உதவி செய்கிறது. திட உணவு இதனால்தான் திரவ உணவாகி, சத்துக்களாக பிரிக்கப்படுகிறது. கொழுப்பு, புரோட்டீன், கார்போஹைட்ரேட்ஸ் ஆகியவை பிரித்து உடலெங்கும் சக்தியூட்டுவதற்காக அனுப்பப்படுகின்றன. வயிற்றில் சுரக்கும் இந்த அமிலத்தை கட்டுப்படுத்தும் மற்றுமொரு திரவத்தையும் இது சுரக்கிறது.

இந்த என்சைம்கள் சரியாக சுரக்கப்படவில்லை எனில் உண்ணும் உணவு செரிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டு மலச்சிக்கல் உட்பட பல முக்கிய கோளாறுகள் உண்டாகி விடுகின்றன. மலம் மிகவும் கெட்டியாகப் போகும். அல்லது தண்ணீரைப் போல கழியும். இந்நிலை தொடர்ந்தால் பிரச்சினை பெரிதாகும். இச்சுரப்பிகளின் கோளாறுகளினால் உணவானது சரியாக கிரகிக்க முடியாமல் போய்விடும். எடை குறைதல் உண்டாகும்.

கணையத்தில் ஏற்படும் கட்டி அல்லது வீக்கம் அல்லது இந்த சுரப்புக் கோளாறுகள் காரணமாக வயிற்று வலி உண்டாகிறது. நாள்பட்ட வயிற்றுவலியை தொடர்ந்து அலட்சியம் செய்வோமானால் ஒரு கட்டத்தில் கணையமானது உருகத் தொடங்குகிறது. அதாவது உடையத் தொடங்குகிறது. அல்லது அழியத் தொடங்குகிறது.

பழுதடைந்த கணையம் சுரக்கும் அதிக அளவிலான திரவமானது உடலிலுள்ள மற்ற உறுப்புகளையும் சென்று கரைக்கத் துவங்குகிறது. அதாவது உருக்கத் தொடங்கி விடுகிறது. இறுதியில் மரணம் உண்டாகிறது.




மது அருந்துபவர்களுக்கு இந்த வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆகவே அதிக அளவில் மது அருந்தும் பழக்கமுள்ளவர்கள் சி.டி. ஸ்கேன் போன்ற பெரிய சோதனைகளை உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்து இந்நோய் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குறிப்பாக மது அருந்தும் பழக்கத்தை உடனடியாக விட்டு விடுங்கள். எதுக்குங்க பொல்லாப்பு?!

வாழ்க நலமுடன்!







டிஸ்கி:

கடுமையான பணிப்பளு காரணமாக பல நாட்கள் (இரண்டு வாரங்களுக்கும் மேலாக) வலைப் பக்கம் வரமுடியாமல் போய்விட்டது. கருத்துரை எதுவும் இட முடியாமலும் போய்விட்டது. நண்பர்கள் மன்னிக்க. இனி தொடர்ந்து வரலாம் என்று நினைக்கிறேன். பார்க்கலாம். எல்லாம் காலத்தின் கையில்.

ஒரு வேண்டுகோள்:

புதிய வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தும் இணைய இதழான வலைச்சரத்தில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு நான் ஆசிரியராக பொறுப்பேற்று உள்ளேன. ஆகையால் நீங்கள் அனைவரும் வலைச்சரத்திற்கு வருகை தந்து கருத்துரைகள் இட்டு எனக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி!






.

Thursday, March 22, 2012

அணுஉலைத் திறப்பு

பத்திரிக்கை அடித்து
அத்தனை பேருக்கும்
அனுப்பப்பட்டது
எல்லாரும் வாருங்கள்
குதூகலம்
கொண்டாட்டம்
கோலாகல விழா
இன்று...
எரிமலையைத் திறக்கவிருக்கிறோம்.

Friday, March 9, 2012

நீ அழகிதான்... ஆனால்




நகரத்துக்குள்
குடியிருப்பதாய்
நீ
சொல்லிக்கொண்டாலும்
உன் இருப்பிடம்
கல்லறைதானென்று
எனக்குத் தெரியும்

பலிகடாக்களாய்
மாற்றத்தான்
கொண்டுசெல்லப்படுகிறோம்
என்பதை
அறியாத
என் இளம் தோழமைகளின்
ஏமாந்து போன
இதயமல்ல
என் இதயம்

உன் வழி
கல்லறைக்குப் போகும் வழியென்று
நானறிவேன்

திருமண வீடுகளை
அலங்கரிக்கும்
மலர்களை
சாவு ஊர்வலத்துக்கு
பயன்படுத்துபவள்
நீ

நீ
அழகிதான்
ஆனால்
ஆபத்தானவள்

நீ
சௌந்தர்யவதிதான்
ஆனால்
சாவுக்கேதுவானவள்

நீ
மெதுமெதுவாய்...
உயிரைக் கொல்லும்
அமுத விஷம்

அடியே பொய்ப்பிரசங்கி!
உன் மாய போதகத்தால்
மயங்கிவிட
நான் ஒன்றும்
புத்திகெட்ட
பேதையல்ல

ஏ மாயையே!
என்னை விட்டு
அகன்று போ!

அழித்துவிட
நான் ஒன்றும்
கோலமல்ல
பூகோளப்படம்

கொன்றுவிட
நான் ஒன்றும்
கோழியல்ல
வானப்பறவை

உன் வலைக்குள்
சிக்காத
பிரபஞ்சப் பறவை!




.

Thursday, March 8, 2012

சமையலறைக் குருவியே...!



என் இனிய தோழி
இன்று
மகளிர் தினமாம்

போதும்
இந்த
யுக உறக்கம்
இன்றாவது
கண்விழி...!

உன்னைச் சுற்றியுள்ள
ஆண்களுக்காக
நீயாய் உருவாக்கிக்கொண்ட
அந்த
உலகத்தை விட்டு
இன்றாவது
வெளியே வா!

உனக்காக
இங்கு
ஓர் புதிய உலகம்
காத்திருக்கிறது

இடம் கொடுக்கவேண்டும்தான்
ஆனால்
இடத்தையே கொடுத்துவிடக் கூடாது

சமையலறையிலேயே கூடுகட்டி
குடியிருப்பவளே!

வானம் தாண்டி
வியாபித்திருக்கும்
பிரபஞ்சம் அழைக்கிறது

வா! விரைந்தோடி வா!

வந்தெழுது
வானக் கவிதைகள்

உன் தூரிகைகள்
மானுட ஓவியங்கள்
வரையட்டும்

நீ
நிமிரு
திசைகள்
குனியும்...!




.

சாதாரண மனிதன் (An Ordinary Guy)




சின்ன சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத்துளி:-

எனக்குத் தெரிந்த மனிதர் ஒருவர் உண்டு. ஆள் பார்க்க சாதுவாய் இருப்பார். யாரிடமும் அதிகமாய் பேசுவதில்லை. எல்லாரும் அவரை சாதாரண மனிதனாகத்தான் பார்த்தனர். அவரும் அடிக்கடி நான் ஒரு சாதாரண மனிதனே என்றே சொல்லுவார். ஆனால் அவரை நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். அவர் எவ்வளவு பெரிய மனிதரென்று.

அரிமா சங்கத்தில் உறுப்பினர். அடிக்கடி தவறாமல் இரத்ததானம் செய்வார். ஒரு சிறிய குழு ஒன்று ஆரம்பித்து அவர்களெல்லாம் தங்களுக்கு நெருங்கியவர்கள், அலுவலகப் பணியாளர்களிடம் சிறு தொகைகளை வசூலித்து லட்சக்கணக்கில் அந்த நிதியை உயிருக்குப் போராடும் இதயநோயாளிகள் மற்றும் இதர நோயாளிகளுக்கு அளித்து அவர்கள் உயிரைக் காப்பாற்றி, இவ்வாறு அரிய பல செயல்களை சத்தமின்றி செய்வார். ஆனால் எதையும் வெளிக்காட்டுவதில்லை. வெற்றுத் தம்பட்டமும் அடித்துக்கொள்வதில்லை.

அதன் காரணமாக நிறைய பேருக்கு அவரது இன்னொரு முகம் தெரியாது. இப்படிப்பட்ட மனிதர்களை எங்கும் காணலாம். இன்னொரு கூட்டம் உண்டு. அவர்கள் செய்வது அற்ப காரியமாயிருக்கும். ஆனால் அதற்கு இவர்கள் அடிக்கிற தம்பட்டம் இருக்கிறதே. அப்பப்பா! போஸ்டர் அடித்து விளம்பரம் அடிக்காத குறையாக தங்களை வெளிக்காட்டுவார்கள்.

ஆனால் சூரியனுடைய கதிர்களை இருட்டு மறைக்க முடியாதோ அப்படி இந்த சாதாரண மனிதர்கள் ஒருநாள் நட்சத்திரம் போல் பிரகாசிப்பார்கள். அவர்களின் ஒளி என்றும் மறையாது. ஆனால் இந்த தம்பட்ட பார்ட்டிகளின் சரக்கும் ஒருநாள் வெளியே வந்து நாறியும் போகும். அன்று தங்கள் முகத்தை தொங்கப் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள்?


“சாதாரண மனிதர்கள் ஒரு நாள் அசாதாரண மனிதர்களாய் மதிக்கப்படுவார்கள். அசாதாரண மனிதர்களைப் போல நடிப்பவர்களின் வேஷம் ஒருநாள் கண்டிப்பாக கலையும்”



.

Wednesday, March 7, 2012

ஊழித்தீ......!




பிணமென்று பேர்பெறவா
இந்த பிச்சைக்கார நாடகங்கள்?
ஊரறியாது உலகறியாது
செய்வதால் உலகநீதியென்று
நீடித்த பெயர்பெறப் போகிறதா?

மனிதர்களை அழித்துவிட்டு
மிருகங்களை உற்பத்தி செய்யும்
தொழிற்சாலைகளுக்கா நாங்கள்
இந்த
யுகவேள்விகள் செய்தோம்

அடிமைச் சங்கிலிகள்
உடைத்தெறிந்தது
இரும்புச் சிறைகளில்
அடைபடுவதற்கா?

அக்கினிக் கோட்டைகளை
தகர்த்தெறிந்தது
ஆழித்தீயில் வேகுவதற்கா?

குத்துவிளக்குகள் ஏற்றியது
கோபுரங்களை கொளுத்தவா?

போதும்
இனி பொறுப்பதில்லை
நாங்கள்
இன்னொரு வேள்விக்கு
தயாராகிவிட்டோம்

வேள்விக்கு முன்
தப்பி ஓடிவிடுங்கள்
ஏனெனில்
இது
ஊழித்தீ..........!

இதை அணைக்க
சமுத்திரங்களாலும் முடியாது!







.

சின்ன சின்ன சிந்தனைகள் - பார்த்தலும் கேட்டலும்




சின்ன சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத் துளி. ஒரு பள்ளியில் ஒரு பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்று நடந்தது. எல்லா ஆசியர்களும், பெற்றோர்களும், மாணவர்களும், கற்றறிந்த பெரியோர் பலரும் கூடியிருந்தனர். பலரும் பல தலைப்புகளில் அருமையாக பேசினர்.

கடைசியாக பேச மேடையேறிய ஒரு பெற்றோர் இவ்விதமாக கூறினர், “ எங்களுக்கு நல்ல பிள்ளைகள்தான் வேண்டும். நாங்க நினைத்தது போல எங்கள் பிள்ளைகள் இல்லை. அவர்களை மாற்ற வேண்டியது உங்க பொறுப்பு” என்று அங்கிருந்த ஆசிரியர்களைப் பார்த்து கூறிவிட்டு மேடையைவிட்டு இறங்கினர்.

அடுத்து மேடையேறின ஒரு மாணவர் குழு இவ்விதமாய் மைக்கில் கூறியது. “எங்களுக்கு நல்ல பெற்றோர்கள்தான் வேண்டும். நாங்க நினைத்தது போல எங்கள் பெற்றோர்கள் இல்லை. அவர்களை மாற்றுவது யார்?” என்று கேட்ட கேள்விக்கு அந்த அவையில் மௌனமே நிலவியது.

இது ஒரு உதாரணத்துக்குத்தான். மாணவர்களின் மாற்றத்தை விரும்பும் பெற்றோர் அவர்களுக்காக தங்களை மாற்றிக்கொள்ளத் தயாரில்லை. இதுதான் பெரும்பாலான பெற்றோர்களின் நிலைமை. நீங்கள் காலை 8 மணிக்கு கண்விழித்துவிட்டு பிள்ளைகளை 5 மணிக்கே எழும்பி படிக்க வேண்டும் என்று கூறுவது எவ்வளவு பெரிய தவறு?!




பிள்ளைகளுக்கான பெற்றோராக நாம் மாறுகிறோமா? என்று பெற்றோர்கள் கொஞ்சம் சிந்தித்துத்தான் ஆகவேண்டும். முதலில் பெற்றோர்கள் தங்கள் பழக்கவழக்கங்களையும், நடத்தைகளையும் தூய்மைப் படுத்த வேண்டும். நீங்கள் சுறுசுறுப்புள்ளவர்களாய் இருந்தால் உங்கள் பிள்ளைகளும் சுறுசுறுப்புள்ளவர்களாய் இருப்பார்கள்.

உங்கள் வாழ்க்கைதான் அவர்களுக்கு கண்ணாடி. கண்ணாடி எப்படி இருக்கிறதோ அப்படித்தான் உருவமும் இருக்கும். மறவாதிருங்கள் ! 'உங்களைப் பார்த்துத்தான் அவர்கள் பார்க்க கற்றுக்கொள்கிறார்கள். உங்களைப் பார்த்துத்தான் கேட்கவும் கற்றுக்கொள்கிறார்கள்'.

உங்கள் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் உங்கள் வாழ்க்கை அமையட்டும். ஏதோ ஒரு சினிமா ஹீரோவோ அல்ல ஹீரோயினோ அல்ல. நீங்களே அவர்களுக்கு ரோல் மாடலாய் மாறுங்கள்! அவர்கள் வாழ்க்கை இனிக்கும்! உங்கள் வாழ்க்கையும் கூடத்தான்.





“ பிள்ளைகள் பெற்றோரின் சொத்துக்களை மட்டுமல்ல. அவர்களின் பழக்கவழங்கங்களையும், நடத்தைகளையும் கூட சுதந்தரித்துக்கொள்கிறார்கள்”




******

டிஸ்கி:
பிளாக் எழுத வந்த புதிதில் இந்த சின்ன சின்ன சிந்தனைகள் தொடரை தினமும் எழுதி வந்தேன். பிறகு விட்டுவிட்டேன். இப்போது தொடர்ந்து எழுதலாம் என்று தீர்மானித்துள்ளேன். பார்க்கலாம். எப்படி போகிறதென்று.




.

Sunday, March 4, 2012

புதிய இதயம் வேண்டும்




ஓ மனிதர்களே!
என்னைப் புரிந்துகொள்ள
ஓர் புதிய இதயம்
வேண்டும் உங்களுக்கு
உங்க பழைய
இதயங்களை
கழற்றி வைத்துவிட்டு வாருங்கள்

எறும்பு கடித்தாலும்
வீக்கத்தை மறந்துவிட்டு
எறும்புக்காக அழும்
இதயங்களுக்குப் புரியும்
என் இதயம்

கையை வெட்டியவுடன்
இரத்தத்தை மழித்துவிட்டு
அவன் காயத்திற்கு
மருந்துபோடும்
இதயங்களுக்குப் புரியும்
என் இதயம்

இரும்பு இதயங்கள் பலருக்கு
தாமிர இதயங்கள் பலருக்கு
அலுமினிய இதயங்கள் பலருக்கு
பிளாட்டின இதயங்கள் பலருக்கு

மலரிதயங்களோ சிலருக்கு
என் இதயமோ அதிலிருக்கு

போகட்டும்
அறுவை சிகிச்சை
செய்துகொள்ளுங்கள்

ஏனென்றால்
இதயமாற்று சிகிச்சை
இடம்பெறாதவரை
சாத்தியமில்லை
இந்த புரிதல்கள்....!










.

Saturday, March 3, 2012

அழுதால் மனப் பாரம் குறையும்




அந்த ஊரில் இளம்பெண் ஒருத்தி இருந்தாள். அவளுடைய கணவன் இராணுவத்தில் பணிபுரிந்தான். எதிரிகளிடமிருந்து நாட்டைக் காக்கும் பணிக்காக போர்க்களம் சென்றிருந்தான் அவன்.

கைக்குழந்தையுடன் இருந்த அவள் தன் கணவனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள். போர்க்களத்தில் கொல்லப்பட்ட அவனுடைய உடல்தான் வந்து சேர்ந்தது.

தன் கணவனின் உடலைக் கண்ட அவள் அதிர்ச்சி அடைந்து பித்துப்பிடித்தவள் போல் ஆனாள். யாரிடமும் ஏதும் பேசாமல் அமைதியாகிவிட்டாள்.

உறவினர்கள் எல்லோரும் வந்து சேர்ந்தனர். கணவனின் பூத உடல் கடைசி மரியாதைக்காக நடுக் கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தது. உறவினர்கள் அனைவரும் கதறி கதறி அழுது கொண்டிருந்தனர். ஆனால் அவளோ அழாமல் சூனியம் கொண்டவள்போல் வெறித்துப் பார்த்துக்கொண்டே அமைதியாக இருந்தாள்.

அப்போது அங்கிருந்த ஒரு மூதாட்டி " வாய்விட்டு அழுதால்தான் இவள் மனப் பாரம் குறையும். இப்படியே பித்துப் பிடித்தவள் போல் இருந்தால் இவளும் கூட இறந்துவிடுவாள். இவளின் கைக்குழந்தையின் நிலையும் பரிதாபமாகிவிடுமே. யாராவது ஏதாவது செய்து அவளை அழ வையுங்கள். அழ வையுங்கள் " என்று கூப்பாடு போட்டாள்.

சிலர் முன்வந்து அவளை அழவைக்க என்னவெல்லாமோ செய்து பார்த்தனர். அவளோ அழவில்லை. நேரமும் கடந்து சென்றுகொண்டே இருந்தது. வெகுநேரமாயிற்று. எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

கடைசியாக, அங்கிருந்த ஒரு சிறு பெண் விளையாடிக்கொண்டிருந்த அவளின் கைக்குழந்தையை எடுத்து வந்து அவள் மடியில் வைத்தாள். அவ்வளவுதான். தன் குழந்தையைப் பார்த்த அவளின் சோகம் எல்லை மீறியது. " மகனே! நம்மைத் தவிக்கவிட்டுப் போய்விட்டாரே உங்கப்பா! நான் என்ன செய்வேன்" என்று குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினாள்.



'அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்!'







.

கடுமையான கோடைவெப்பத்தைத் (Heat Stroke) தடுக்க ஓர் சுலபமான வழி !




இதோ. கோடைக் காலம் துவங்கப்போகிறது. இந்த கோடைவெப்பத்தை தடுப்பது எப்படி? பார்ப்போம். கோடைக் காலங்களில் நாம் சாதாரணமாக பார்க்கும் ஒரு விஷயம் என்னவென்றால் சாலைகளில் நடந்துகொண்டிருப்பவர்கள் திடீரென மயங்கி விழுந்துவிடுகிறார்கள். நல்ல உடல் திடகாத்திரமாக இருப்பவர்களுக்கே இவ்வித மயக்கம் வருவதைப் போன்ற நிலை உண்டாகலாம். உடல் களைப்பாகவும் உணரலாம். இந்த வெப்பத்தாக்குதலிருந்து (Heat Stroke) தப்பிப்பது எப்படி?

மருத்துவர்கள் என்ன அறிவுரை சொல்கிறார்கள்? நிறைய தண்ணீர் குடியுங்கள். உப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என்று. அதாவது உப்பும் தண்ணீரும் சேர்ந்த கலவை. அது நம்முடைய உடல் நீரிழப்பு (De-Hydration) ஆவதைத் தடுக்கும். அது சரியா அல்லது தவறா?

நியாயப்படி அது சரிதான். மருத்துவர்களும் மருத்துவத்துறையினரும் சொல்வது போல் அது உண்மையென்றே சொல்கிறார்கள். ஒத்துக்கொண்டாலும் அதில் சில சந்தேகங்களும் உண்டு. என்னவென்றால் அதில் உள்ள உப்பைக் குறித்துப் பார்ப்போம். நம்முடைய வியர்வையும் உப்பாகவே இருக்கிறது. அதாவது வெப்பத்தால் அதிகமாக வியர்க்கிறது. அதனால் நீரிழப்பு (உப்பு இழப்பு) ஏற்படுகிறது. அதை ஈடுகட்ட இந்த உப்புக் கரைசல் என்றால் அது தவறாகிறது. உப்பானது நம்முடைய இரத்தத்தில் உள்ள நீரை மேலும் குறைக்கவே செய்கிறது. பிறகு எப்படி இது ஈடுகட்டுகிறது என்று தெரியவில்லை.




நிறைய பேர் உப்பை அதிகமாத் தின்பதால்தான் உயர்இரத்த அழுத்தம் (Hupertension) வந்து இறந்துவிடுகிறார்கள் என்பது மருத்துவ உலகம் அறிந்த உண்மையாகும். ஏற்கனவே நாம் போதுமான அளவு உப்பை நமது உணவில் சேர்த்துத்தான் வருகிறோம். இந்த நிலையில் மேலும் மேலும் உப்பைச் சேர்த்தால் வெப்பத்தாக்குதல் (Heat Stroke) நிலையிலிருந்து எப்படி தப்பிப்பது? என்பது ஒரு மாற்று சிந்தனையாகவே இருக்கிறது.

அப்படியானால் இந்த வெப்பத்தாக்குதலிலிருந்து எப்படி தப்பிப்பது? வேறு ஏதேனும் வழி உண்டா? இருக்கிறது. விடை பால்தான். ஆம் மிகச்சிறந்த வழி பால்குடிப்பதுதான்.




பாலானது போதுமான அளவில் புரோட்டினையும் வெப்பத்தாக்குதலிலிருந்து உடலையும் காக்கிற திறனைப் பெற்றிருக்கிறது.

பாலில் உள்ள அல்புமின் (Albumin) என்ற வேதிப்பொருள் நம்முடைய இரத்தத்தில் உள்ள தண்ணீரை சமநிலைப்படுத்தும் பணியை அருமையாகச் செய்கிறது. மேலும் நீங்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்த்தால் பலன் இரட்டிப்பாகிறது.

இனி கோடைக் காலத்தில் வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஒரு டம்ளர் நிறைய பால் அருந்திவிட்டு வெளியே செல்லுங்கள். கோடை வெப்பத்தைத் தணியுங்கள். மலிவான சிறந்த வழி இது ஒன்றே!

வாழ்க நலமுடன் !







.

Friday, March 2, 2012

ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத பழமொழிகள் இருபது

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த இயற்கையோடிணைந்த வாழ்வு நமக்கு ஒரு பாடம். அவர்கள் எழுதிவைத்த அற்புத பழமொழிகள் கீழே:-

1. ஒல்லியான உடம்பு உறுதியான உடம்பு.

2. கொழுப்பு மண்டி குண்டி பெருத்தால் குந்தி எழுந்தால் கூட கூப்பாடு போடணும்.

3. அன்றே கொல்வது காட்டுப்புளி. நின்று கொல்வது வீட்டுப் புளி.

4. அளவான உறக்கம் வளமான வாழ்வு

5. உழைக்காத உடம்பு உழுத்துப்போன உலக்கை.

6. மூன்று வேளை உள்ளே. மூன்று வேளை வெளியே.

7. சாப்பிடும்போது தண்ணீரைத் தடை செய்.

8. உண்ணா நோன்பு உயிர் வாழும் நோன்பு

9. உடற்பயிற்சி உடம்புக்கான கவசம்.

10. வெயிலை மறந்தால் வாழ்வெல்லாம் துயரே.

11. சனி நீராடு

12.வெள்ளைச் சீனி வெள்ளை நிற நஞ்சு

13. இயல்பான வாழ்வுக்கு இயற்கை உணவு.

14. பசியோடு அமர்ந்து பசியோடு எழு.

15. நீரை அருந்து. உணவைக் குடி.

16. உண்ணும் உணவே மருந்து.

17. முப்போதும் மோர் குடி.

18. ஆண் பெண் உறவு முறிந்தால் உறவும் திரிஞ்சு போகும்.

19. கலவி நுணுக்கம் வாழ்க்கையின் பேரின்பம்

20. உட்காரும் இடத்தில் உறங்கி எழு.



.

Thursday, March 1, 2012

வாழை இலையில் சாப்பிடுவது உண்மையில் நல்லதா?




இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்.

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும். அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான். ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

நம்முடைய திருவிழாக்களிலும், திருமண வீடுகள், சடங்கு வீடுகள் மற்றும் எல்லா விழாக்களிலும் சாப்பிட வாழை இலை போடும்போது கவனித்திருக்கிறீர்களா? (இப்போ பெரும்பாலும் இந்த பழக்கம் மறைந்து பேப்பரில் சாப்பிடுகிற பழக்கம் வந்து விட்டது. என்னே பரிதாபம்?!) அவ்விடங்களில் எல்லாம் வாழை இலையை முற்றிலும் சுத்தப்படுத்தியா சாப்பிடுகிறோம். ஏதோ பெயருக்கு கொஞ்சம் தண்ணீர் தெளித்து விட்டு சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம்.

சிலருக்கு இலைகளில் தூசி, தும்புகள், அழுக்கு என்று என்னவெல்லாமோ இருக்கும். தெளிக்கும் தண்ணீர் கூடு எவ்வளவு அசுத்தமும் கிருமிகளும் நிறைந்ததாகக் கூட இருக்கும். ஆனால் பாருங்கள். அவ்விதமாய் சாப்பிடுபவர்களுக்கு ஏதாவது வியாதி வந்து அல்லது வயிற்றுக் கோளாறு வருகிறதா? இல்லையே. காரணம் என்ன தெரியுமா? வாழை இலையின் மகிமைதான். எவ்வித கிருமியையும் அழித்துவிடக் கூடிய அதன் மருத்துவத் தன்மைதான்.

ஆகவே மக்களே! இனியாவது தட்டுகளுக்கு பதில் கூடுமானவரை வாழை இலையைப் பயன்படுத்துங்கள். வியாதியின்றி வாழுங்கள்!

வாழ்க நலமுடன் !





.

குளிர்பானங்களை அதிக அளவில் அருந்துபவர்களுக்கு ஆஸ்துமா இலவசம்!

பெப்சி, கோகோ-கோலா மற்றும் இதர குளிர்பானங்களை தினமும் அதிக அளவில் அருந்தி வருபவரா நீங்கள்? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்குத்தான். அதிக அளவில் இவற்றை அருந்துபவர்களுக்கு ஆஸ்துமாவும், நுரையீரல் நோயும் வர அதிக வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்ட் பல்கலைக் கழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் சூமின் சீ என்பவர் தலைமையில் ஒரு குழுவாக தீவிர ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர். அதாவது மார்ச் 2008 முதல் ஜூன் 2010 வரை இரண்டு வருடங்களில் அதிக அளவில் குளிர்பானங்களை அருந்தியவர்களை ஆராய்ச்சி செய்தனர். கிட்டத்தட்ட 16,907 நபர்களை இவ்வித ஆராய்ச்சிக்கு உட்படுத்திய போது முடிவுகள் திடுக்கிடச் செய்தன.
இவ்வித குளிர்பானங்களில் கோக், பெப்சி லெமன் ஜூஸ், மினரல் வாட்டர் முதலியவையும் அடங்கும்.

தெற்கு ஆஸ்திரேலியா பகுதியில் உள்ள வயதுக்கு வந்த பையன்கள் மற்றும் பெண்களில் பத்தில் ஒருவர் தினமும் இவ்வித குளிர்பானங்களை அரை லிட்டருக்கும் அதிகமாக அருந்தி வந்தனர். இவ்வித நபர்களிடம் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் (மூச்சுத்திணறல்) வரும் வாய்ப்பு மிக அதிகமாக இருந்தது.

மொத்தத்தில் தினமும் அரை லிட்டருக்கும் அதிகமாக இவ்வித குளிர்பானங்களை அருந்தி வந்தவர்களில் 13.3 சதவீதம் மக்கள் ஆஸ்துமாவினாலும் 15.6 சதவீதம் மக்கள் மூச்சுக்கோளாறு பிரச்சினையினாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். சிகரெட் புகைப்பவர்களுக்கு பாதிப்பு அதை விட அதிகமாக இருந்ததாம்.

ஆகையால் நம்ம ஊரு இளநீர், மோர், தயிர் போன்ற பானங்களே மிகச்சிறந்தவை ஆகும். ஓ.கே.வா மக்களே?!



.