Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, November 12, 2014

உனக்கான என் நந்தவனம்





உனக்கான என் பாதைகள்
அப்படியேதான் இருக்கின்றன
ஆனால்
நடந்து செல்ல பாதங்களைத்தான்
இன்னும் காணோம்

உனக்கான என் நந்தவனம்
அப்படியேதான் இருக்கிறது
ஆனால்
கொஞ்சிப் பேசும்
குரல் மொழிகளைத்தான்
இன்னும் காணோம்

உனக்கான என் இதயம்
அப்படியேதான் இருக்கிறது
ஆனால்
அதில் ஜீவனாய் இருந்த
உன் பிம்பங்களைத்தான்
இன்னும் காணோம்

கனவுகளெல்லாம்
நிஜங்களாகக் கூடாதாவென
நினைத்த காலங்கள் போய்
நிஜங்களெல்லாமே கனவுகளாய்ப் போன
ஒரு இலையுதிர்க் காலத்தின்
இறுதி நாட்களுக்குள்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
நானும் உன் நினைவுகளும்.




Saturday, November 8, 2014

மின்னாத மின்னல்





இடிக்காத இடிக்கு
பெய்யும் மழை
மின்னாத மின்னலுக்கு
பொழிகின்ற மேகம்

சொல்லாத சொல்லுக்கு
சுழல்கின்ற மனம்
விதிக்காத விதிக்கு
கதை கட்டும் மக்கள்

இப்படி
போலிகளால் நிரம்பிய
இந்த வாழ்க்கை நாடகத்தில்
மாறுவேடப் போட்டிக்கு மட்டும்
குவிகின்றன
கோடிக்கணக்கான விண்ணப்பங்கள்.


.

Friday, November 7, 2014

வேட்டை நாய்கள்





வெறிநாய்கள் வெளியில் இல்லை
உள்ளேயே இருக்கிறது
வேட்டை நாய்கள் புறத்தில் இல்லை
அகத்திலேயே இருக்கிறது

கடித்து கடித்து குதறி
கடைசியில்
தோல் கிழிந்து
நிர்வாணமாய் நிற்கும் போதுதான்
நிதர்சனம் உரைக்கிறது
இந்த பாழும் மனதுக்கு

முற்றின பிறகு
ஞானம் வந்து எதற்கு
இன்றே
இளமை இருக்கும் போதே
விஷம் வைத்து
நாய்களைச் சாகடி
முதுமையில்
உலகம் உன்னை நிமிர்ந்து பார்க்கும்.


.

Thursday, November 6, 2014

சுய ஜெயம்





வானம் ஜெயிக்க
பூமி ஜெயிக்க
சந்திரனும் செவ்வாயும் ஜெயிக்க படித்த
இன்றைய தலைமுறைக்கு
சுயம் ஜெயிக்க
கற்றுக்கொடுக்காததால்
இமயத்தையே வெல்லும் இத்தலைமுறை
ஒரு சிறு ஏமாற்றத்துக்குக் கூட
ஈடுகொடுக்க முடியாமல்
தன் உயிரை
எமனுக்கு மொய் எழுதிவிடுகின்றது
உலகை ஜெயிக்கும் கல்வி மட்டுமல்ல
உள்ளத்தை ஜெயிக்கும் கல்வியும் அவசியமே.




(குறிப்பு: இது கவிதையா வசன கவிதையா புதுக்கவிதையா நவீனக் கவிதையா என்ற ஆராய்ச்சியை விட உள்ளம் கிழிக்கும் உண்மைகளைச் சொல்லத் துடிக்கும் ஒரு உள்ளத்தின் ஆதங்கம் வெளிப்படுத்தும் புது வடிவம்தான் இது என்பதே சரியாகும்)

.