Wednesday, November 12, 2014

உனக்கான என் நந்தவனம்





உனக்கான என் பாதைகள்
அப்படியேதான் இருக்கின்றன
ஆனால்
நடந்து செல்ல பாதங்களைத்தான்
இன்னும் காணோம்

உனக்கான என் நந்தவனம்
அப்படியேதான் இருக்கிறது
ஆனால்
கொஞ்சிப் பேசும்
குரல் மொழிகளைத்தான்
இன்னும் காணோம்

உனக்கான என் இதயம்
அப்படியேதான் இருக்கிறது
ஆனால்
அதில் ஜீவனாய் இருந்த
உன் பிம்பங்களைத்தான்
இன்னும் காணோம்

கனவுகளெல்லாம்
நிஜங்களாகக் கூடாதாவென
நினைத்த காலங்கள் போய்
நிஜங்களெல்லாமே கனவுகளாய்ப் போன
ஒரு இலையுதிர்க் காலத்தின்
இறுதி நாட்களுக்குள்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
நானும் உன் நினைவுகளும்.




Tuesday, November 11, 2014

உணவு விஷமாதல் (Food Poisoning) – சில உண்மைகள்




உணவு விஷமாதல் என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயமாகும். இதில் அலட்சியமாக இருந்தால் நம் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்படும். மேலும் அநாவசியமான மருத்துவச் செலவுகள் ஏற்படும். இதனை தவிர்ப்பது எப்படி? என பார்க்கலாம்



உணவு விஷமாவதில் நாம் அலட்சியமாக இருக்கிறோம் என்பதே அப்பட்டமான உண்மையாகும். நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று உண்மைகளைப் பற்றி பார்ப்போம்.



1.   கண்களையும், மூக்கையும் நம்பாதீர்கள்

உங்கள் கண்களையும் மூக்கையும் நம்பாதீர்கள். உணவை வெறுமனே கண்களால் பார்த்தும், மூக்கினால் நுகர்ந்தும் பார்த்தும் பாக்டீரியா வளரவில்லை என்று முடிவு செய்துவிடாதீர்கள். இது மிகவும் தவறு. பார்க்க நன்றாக இருக்கும் ஒரு உணவு, முகர நன்றாக இருக்கும் ஒரு உணவு கெட்டுப் போகவில்லை என்று முடிவு செய்வது மிகத் தவறு. உணவைக் கெட்டுப் போகப் பண்ணுபவை நிறைய வகையான பாக்டீரீயாக்கள். அதில் ஒரு சிலவைதான் நிறத்திலும், தரத்திலும், மணத்திலும் மாற்றங்களை உண்டு பண்ணும். மற்றபடி அநேக பாக்டீரீயாக்கள் நிறத்திலும், மணத்திலும், தரத்திலும் எவ்வித மாற்றத்தையும் உண்டு பண்ணாது. ஆனால் உணவை கெடுத்து இருக்கும். முகர்ந்து பார்த்து விட்டு அல்லது கண்ணால் பார்த்து விட்டு கெட்டுப் போகவில்லை என்று முடிவு செய்து விடாதீர்கள் தயவு செய்து. உதாரணம் சல்மோனல்லா (Salmonella), இ.கோலி (E. coli) என்ற இரு வகையான பாக்டீரீயாக்கள். இவை சத்தமின்றி உணவை கெடுக்கும் மோசமான உயிரினங்களாகும்.




2.   உணவை வெறுமனே சுட வைப்பதனால் மட்டும் உணவைப் பாதுகாக்க முடியாது

ஆம். உணவை நன்றாக சுட வைத்தாகி விட்டது. இனி பயமில்லை என்று முடிவு செய்து விடாதீர்கள்.  உதாரணமாக குளோஸ்ட்ரீடியம் பெர்பிரிஞ்சன்ஸ் (Clostridium Perfringens) என்னும் உணவைக் கெட்டுப் போகப் பண்ணும் பாக்டீரியா மிக உயர்ந்த வெப்ப நிலையில் வாழும் தன்மை கொண்டது. ஆக்சிஜனே இல்லாத சூழ்நிலையிலும் வாழும் தன்மை கொண்டது. அது உணவைச் சுட வைத்தாலும் கூட செத்து விடுவதில்லை. அப்படியானால் என்னதான் செய்வது என்கிறீர்களா? அதற்கும் ஒரு வழியை கடவுள் வைத்திருக்கிறார். அதாவது மிக குளிர்ந்த ஒரு வெப்பநிலையில் இது உருவாகாவும் செய்யாது. உயிர் வாழவும் செய்யாது. ஆகவே உணவை சமைத்து இரண்டு மணி நேரத்திற்கு பின் ப்ரிட்ஜில் அல்லது மிக குளிரான ஒரு இடத்தில் வைத்திருந்தால் இந்த குளோஸ்ட்ரீடியம் பெர்பிரிஞ்சன்ஸ் என்ற பாக்டீரீயா உருவாகவும் வளரவும் வாய்ப்பில்லை. ஆகவே உணவைச் சூடுபடுத்தி விட்டோம் என்று மெத்தனமாக இருந்து விடாதீர்கள். ஆனால் சுட வைப்பதில் பெரும்பாலான பாக்டீரீயாக்கள் இறந்து விடும் என்பதும் உண்மைதான். ஆகவே சுட வைத்தபின் பிரிட்ஜில் வைப்பது சாலச் சிறந்த வழியாகும்.



3.   கை கழுவும் பழக்கம்


ஆம். உணவை சமைக்கும் முன்பும், சாப்பிடும் முன்பும், கழிவறை உபயோகிக்கும் முன்பும், பின்பும் கட்டாயம் நன்றாக சோப்பு போட்டு கைகளைக் கழுவுவது மிக ஆரோக்கியமானது. அப்படிச் செய்யும் போது எல்லா வகையான
கிருமித் தாக்குதலுக்கும் தப்பி விடலாம். நம் கைகளில் உள்ள நோய்க் கி
ருமிகளே நம் பெரும்பாலான உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது என்கிறது மருத்துவ அறிவியல். ஆகவே சமைக்கும் முன்பு நன்றாக கைகளைக் கழுவி விடுங்கள். இதிலும் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால் குறைந்தது இருபது விநாடிகள் நன்றாக சோப் போட்டு கைகளை அலசுவதே உண்மையான கை கழுவுதல் ஆகும் என்று மருத்துவ அறிவியல் தெரிவிக்கிறது. அல்லாமல் சும்மா ஏதோ நாமும் கை கழுவினோம் என்று கைகளை தண்ணீரில் கழுவினீர்கள் என்றால் வேறு ஒன்றுமில்லை. நோய்க்கிருமிகளின் படையெடுப்புக்கு நீங்களே அழைப்பு விடுக்கிறீர்கள் என்றே அர்த்தமாகும்.



ஆகவே மேற்கூறிய மூன்று டிப்ஸ்களையும் பயன்படுத்தி உணவு கெட்டுப் போகாமல் பாதுகாத்து நன்றாக உண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.



வாழ்க நலமுடன்!



.

Monday, November 10, 2014

தூக்க டைரி தெரியுமா உங்களுக்கு?




நம்மில் அநேகருக்கு தூக்க டைரின்னா என்னன்னு தெரியாது. அது என்னவென்று தெரிந்து கொள்வதற்கு தூக்கத்தைப் பற்றி கொஞ்சம் உண்மைகளை தெரிந்துகொள்வது அவசியம். இன்றைய தலைமுறையில் நிறைய பேருக்கு தூங்குவதில் பிரச்சினை உள்ளது. சரியாக தூங்க முடியாமல் அவஸ்தைப்படுவோர் ஏராளம் பெருகி வருகின்றனர். காரணங்களை அலசுவோம்.

தூக்கமின்மை பிரச்சினை சிறியவர் பெரியவர் என்றில்லாமல் இன்று அநேகரை அவஸ்தைக்குள்ளாக்குகிற ஒன்றாய் இருக்கிறது. தூக்கமின்மையில் பல வகை உண்டு. பொதுவாக கீழ்க்காணும் நான்கு வகைகள் காணப்படுகின்றன.

1.   பகலிலும் தூக்கக் கலக்கத்துடன் ஒரு வித சோம்பல் உணர்வுடனே இருப்பது.
2.   இரவில் சரியான நேரத்துக்கு தூங்கச் செல்லாமல் இருப்பது.
3.   இரவில் அடிக்கடி விழித்துக்கொள்வது.
4.   இரவில் திடீரென கண்விழித்து விட்டால் அதன் பிறகு தூக்கம் வராமல் தவிப்பது.

மேற்கண்ட நான்கு வகைகளைத் தவிர இன்னும் பல பிரச்சினைகளும் இருக்கலாம். நம்முடைய மூளையில் ஒரு பகுதி ரெப்டிலியன் மூளை (Reptilian Brain) எனப்படுகிறது.  இந்த ரெப்டிலியன் மூளைதான் நம் தூக்கத்தை கட்டுப்படுத்துகிறது. சரியான அளவில் சரியான நேரத்தில் குறைந்தது 6 மணி நேரமாவது நாம் ஒழுங்காக தூங்கினால்தான் இந்த ரெப்டிலியன் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இல்லையென்றால் பகலில் நம்மை மிகவும் சோர்வாக வைத்துவிடும். ஒரு வேளையும் செய்ய விடாமல் கெடுத்துவிடும். ஆகவேதான் குறைந்த பட்ச தூக்கம் நமக்கு அவசியமாகிறது.

தூக்கமின்மை பிரச்சினையை தீர்க்க பல வழிகள் இருந்தாலும் சில முக்கியமான தீர்வுகளை இப்போது பார்க்கலாம். நன்றாக தூங்கிப் பழக கீழ்க்காணும் விஷயங்களை பின்பற்றுங்கள்.
1.சரியான நேரத்துக்கு தூங்கச் செல்லுங்கள். சரியான நேரத்துக்கு விழித்து விடுங்கள். இதை கட்டாய அனுபவத்திற்கு கொண்டு வாருங்கள்.
2. பகல் தூக்கத்தை தவிர்த்து விடுவது நல்லது. நோயாளிகள், வயதானவர்கள் என்றால் ஒரு அரை மணி நேர தூக்கம் போதும். பகலில் அதிக நேரம் படுக்கையில் கிடக்காதீர்கள்.
 3. இரவில் படுக்கச் செல்லும் முன் உங்கள் கவலைகளையெல்லாம்   
   மூட்டை கட்டி பரணில் போட்டு விடுங்கள். ஆம் கவலைதான்     
   தூக்கமின்மை பிரச்சினைக்கு முக்கிய காரணம் ஆகிறது. கவலைப்பட்டு
   ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. எல்லாம் நடக்கிற விதமாகவே  
   நடக்கும். ஆகவே கவலைகளை ஒழித்துவிடுங்கள் உறங்கச் செல்லும்
   முன்.
4.   உண்மையாகவே தூக்கம் வருகிற வரை படுக்கையில் சாயாதிருங்கள். ஆம். தூக்கம் வந்த பிறகே படுக்கைக்கு செல்லுங்கள்.

இப்போது நம்ம கட்டுரையின் தலைப்புக்கு வரலாம். ஆம். ஒரு தூக்க டைரி (Sleeping Diary) ஒன்றை பராமரியுங்கள். அது உங்கள் தூக்கத்தை குறித்து ஒரு பட்டியலை உங்களுக்குத் தரும். எதைச் சரி செய்ய வேண்டும் என்பதை உங்களுக்குச் சொல்லும். தூக்கமின்மை பிரச்சினையை சரி செய்ய இந்த தூக்க டைரி எழுதும பழக்கம் நல்லது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

தினமும் உங்கள் தூக்க டைரியில் நீஙகள் படுக்கைக்குச் செல்லும் நேரம், எழுந்திருக்கும் நேரம், படுக்கையில் படுத்து தூங்காமல் இருக்கும் நேரம், உங்கள் மொத்த தூக்கம் எத்தனை மணி நேரம் என இந்த மாதிரி தலைப்புகளில் பட்டியலிட்டு தினமும் தொடர்ந்து எழுதி வாருங்கள். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு அந்த தூக்க டைரியை எடுத்து கவனித்து படித்துப் பார்த்தால் உங்களுக்கே ஆச்சர்யமான தகவல்கள் கிடைக்கும். தூக்கமின்மைப் பிரச்சினையை எப்படி சமாளிக்க வேண்டும்? அதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? என்பதை தூக்க டைரி உங்களுக்கு கற்றுக் கொடுக்கும்.

அதனால மக்களே! தூக்க டைரி எழுதிப் பழகுங்க. தூக்கமின்மைப் பிரச்சினைக்கு நீங்களே வழி கண்டுபிடிங்க.

வாழ்க நலமுடன்…!


.

Sunday, November 9, 2014

சாதாரண கட்டிக்கும் கேன்சர் கட்டிக்கும் என்ன வித்தியாசம்?




நம் உடலில் தோன்றும் சாதாரண கட்டியையும், கேன்சர் கட்டியையும் எப்படி வேறுபடுத்தி கண்டறிவது? என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கும்.

கட்டிகளைப் பற்றி நிறைய மூட நம்பிக்கைகள் நம்மிடையே உண்டு. சிலர் சொல்வார்கள் உள்ளங் கையிலோ அல்லது உள்ளங் காலிலோ வந்துவிட்டாலே அது புற்றுநோய்க் கட்டிதான் என்று அடித்துக் கூறி மற்றவர்களை பயமுறுத்துவார்கள். சிலர் சொல்வார்கள். கட்டியில் முடி முளைத்தால் அது கேன்சர் கட்டி என்பார்கள். வேறு சிலர் கட்டியில் உள்ள முடியைப் பிடுங்கி விட்டால் அது கேன்சர் கட்டி ஆகி விடும் என்பார்கள். ஆனால் இவை எல்லாமே வெறும் கட்டுக் கதைகள்தான். மருத்துவ ரீதியில் அவைகளெல்லாம் உண்மை இல்லை.

சாதாரண சிறு கட்டிகள் (Moles) அபூர்வமாக சில நேரம் கேன்சராக மாறும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதனை எளிதாக கண்டுபிடித்து விடலாம். தோற்றத்தை வைத்து தீர்மானித்து விடலாம். இந்த சிறு கட்டிகள் சில சமயம் நெவஸ் எனப்படும் செல்களின் கட்டுக்கடங்காத வளர்ச்சியினால் கேன்சராக மாறும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது அது ஆரம்ப நிலையில் Melanoma என்று அழைக்கப்படுகிறது.

இந்த மெலனோமா தான் முற்றி கேன்சராக உருமாறுகிறது. இதுவும் ஒரு வகை புற்றுநோய்க்கட்டிதான்.

ஆனால் பொதுவாக எந்த கட்டியாக இருந்தாலும் கட்டுக்கடங்காமல் ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில் வளர்ந்துகொண்டே போனால் அது நிச்சயம் புற்றுநோய் கட்டியாக இருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஒரு ஒழுங்கான வடிவத்தில் வெகு நாட்களாக இருக்கும் சிறு கட்டி நிச்சயமாக கேன்சர் கட்டியாக இருக்க வாய்ப்பு இல்லை.



மேலே உள்ள படம் சாதாரண கட்டிக்கும் புற்று நோய் கட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக விளக்கும். அபரிமிதமான விரைவான ஒழுங்கற்ற வளர்ச்சியுடைய எந்த கட்டியும் கேன்சராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் நலமாகும்.

ஆகவே சிறு கட்டி வந்துவிட்டால் பயந்து செத்து விடாதீர்கள். நல்ல மருத்துவரிடம் சென்று காண்பித்து சிகிச்சை பெறுங்கள்.

வாழ்க நலமுடன்.



.