Sunday, April 22, 2012

இன்று சர்வதேச பூமி தினமாம்




எப்போதும்
மெத்தையில் படுக்கும்
நான்
இன்று மட்டும்
தரையில் படுக்கிறேன்
இன்று சர்வேதச பூமி தினமாம்.





.

Saturday, April 21, 2012

மனித எண்ணங்களை பதிவு செய்ய முடியுமா? - ஒரு விஞ்ஞானப் பார்வை







அமெரிக்காவைச் சேர்ந்த Dr,N.J.ஸ்டோவெல் என்பவர் ஒரு நாத்திகராக இருந்தார். அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அவரை ஆத்திகராகச் செய்தது. ஒரு நாள், இவர் தன் குழுவினருடன் நோய்களைப் பற்றி ஆராயும் ஆய்வுக் கூடத்தில் (Pathological Laboratory) மனித மூளையின் அலைகளின் நீளத்தை அளக்கும் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். எப்படி மனிதனுக்கு மனிதன் கைரேகையில் வித்தியாசம் காணப்படுகிறரோ அவ்வாறே, ஒவ்வொரு மனிதனின் மூளையிலிருந்து வெளிப்படும் அலைகளிலும் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இந்த அலைவரிசைகளைப் பதிவு செய்வதின் மூலம் அவர்களின் சிந்தனையையும் பதிவு செய்ய சாத்தியம் உள்ளது என்பதை முடியும் என்பதை அவர் அறியலானார்.

அடுத்ததாக ஒரு மனிதனின் உயிர் போகும் போது அவன் மூளை எப்படி செயல்படுகிறது, அதன் அலைகளின் மாதிரி எப்படி உள்ளது என்பதைக் கணிக்க விரும்பினர் அவரது குழுவினர். பரிசோதனைக்கு ஒரு பெண்ணைத் தெரிந்து கொண்டனர். மூளையில் ஏற்பட்ட புற்றுநோயினால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டிருந்தாள். இதனால், தடுமாறிக் கீழே விழாமல் அவளால் நடக்க முடியவில்லை. இந்தப் பிரச்சினையைத் தவிர மற்றபடி அவளுடைய சிந்தனை தெளிவாகவே இருந்தது.

அவளுடைய மரணவேளையும் வந்தது. அவள் மரணத்தைச் சந்திக்கப் போகிறாள் என்ற செய்தியும் அவளுக்குச் சொல்லப்பட்டது. அவள் உயிர் பிரியும் வேளையில் அவளுடைய மூளையில் நடைபெறுவது என்ன என்பதைப் பதிவு செய்ய ஓர் இயந்திரம் அமைக்கப்பட்டது. மேலும், அவள் இறுதியாக ஏதாவது கூறினால் அதைப் பதிவு செய்யும்படியாக அந்த அறையில் ஒரு சிறு ‘மைக்ரோபோன்’ வைக்கப்பட்டது. இப்பதிவுகளை ஆய்வு செய்ய ஐந்து விஞ்ஞானிகள் கொண்ட விஞ்ஞானிகள் குழுவும் தயாராக இருந்தது.

அவர்களுக்கு முன்பிருந்த கருவியின் முள்ளானது மையத்தில் (Centre Part) பூஜ்ஜியத்தில் இருந்தது. வலது பக்கத்தில் +500 வரை அளவீடுகள் குறிக்கப்பட்டிருந்தன. இடது பக்கத்தில் -500 வரை அளவீடுகள் குறிக்கப்பட்டிருந்தன. ஐம்பது கிலோ வாட் சக்தி வாய்ந்த ஒலிபரப்பு நிலையத்தின் அலைகளை இக்கருவியில் செலுத்திய பொழுது அந்த முள்ளின் அளவீடு +9 என காட்டியது.

மரணத்தின் இறுதி வேளையை நெருங்கிக் கொண்டிருந்த அந்த பெண் அப்போது பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள். தான் செய்த பாவங்களை மன்னிக்கும்படியும் யாருக்காவது துரோகம் செய்திருந்தால் பொறுத்தருளும்படியும் வேண்டிக்கொண்டும் தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.
இவை அனைத்தையும் மறு அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த விஞ்ஞானிகள் குழு வியப்பில் ஆழ்ந்தனர். திடீரென்று அவர்களுக்கு முன்பிருந்த அந்த கருவியின் முள்ளானது ப்ளஸ் (+) பகுதியில் 500 ஐத் தொட்டு (+500) அதற்கு மேலாக செல்ல முடியாமல் அழுத்திக் கொண்டு நின்றது. மூளையிலிருந்து வெளிப்பட்ட அலைகளின் ஆற்றல் 50 கிலோ வாட் ஒலிபரப்பு நிலையத்தின் ஆற்றலைவிட சுமார் 55 மடங்கு அதிகமாகக் காணப்பட்டது. பின்பு அவள் அமைதியான முறையில் மரணமடைந்தாள்.

அடுத்த பரிசோதனையாக, மரணத் தருவாயில் இருக்கும் மோசமான நடத்தை உள்ள ஒரு மனிதனை இச்சோதனைக்கு உட்படுத்தினர். அவன் எல்லாவித பாவங்களையும் துணிகரமாகச் செய்து வாழ்ந்து வந்தவன். அவனுடைய மரண வேளையில் மூளையில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க விரும்பினர். அவன் அந்த கடைசி மரண வேளையிலும் மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு நர்ஸ் மீது காதல் வெறி கொண்டான். காம வெறி பிடித்து அவளை அடைய முயற்சி செய்தான். அவள் மறுத்த போது மூர்க்க வெறி கொண்டான். அனைவரும் அவனை வெறுத்தனர். அப்படிப் பட்ட அந்த சூழ்நிலையில் அவனை இப்பரிசோதனைக்கு உட்படுத்திய போது அந்தக் கருவியின் முள்ளானது மைனஸ் (-) பகுதியின் கடைசிக்குச் சென்று (-500) முட்டி அலசடிப்பட்டு பிறகு நின்று விட்டது. அதாவது அவன் மரணமடைந்தான்.

விஞ்ஞானிகள் குழு கடவுள் பக்தி கொண்டவர்களின் மூளை ஆற்றலுக்கும், கடவுள் பயமற்ற மோசமான நடத்தை கொண்டவர்களின் மூளை ஆற்றலுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டு கொண்டனர். ஆராய்ச்சியின் முடிவு அவர்களுக்கு பெருத்த ஆச்சர்யத்தை அளித்தது. நமக்கும்தான் அல்லவா?

கடவுள் பக்தி உண்டாகிற போது நமது வாழ்க்கை முறையும் மாறிவிடுகிறது. உடலும் மனதும் ஆரோக்கியமடைகிறது என்பதே மாறாத உண்மை.





.

Friday, April 20, 2012

மேனி ஆயிரம் வேண்டும்






சிறகுகள்
கோடி வேண்டும்
வான சுகம் ருசிக்க

கால்கள்
கோடி வேண்டும்
பூமி சுகம் ருசிக்க

மேனி ஆயிரம் வேண்டும்
இளமைக்கு தீனி

இதயம் மட்டும்
ஒன்று போதும்
இந்த
துன்பங்களுக்கு...!





.


Thursday, April 19, 2012

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது??





மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர் , உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்........


- நான் எனது முகநூல் நண்பர் William Christober என்பவரிடமிருந்து இத்தகவலைப் பெற்று உங்களோடு பகிர்கிறேன்.-


வாழ்க நலமுடன்!





.

Wednesday, April 18, 2012

சேலை உரியும்வரை...

நிறம் மாறும் சிகரம்
குணமும் மாற்றி அனல் உமிழும்
கொதித்தெழுந்த பூமிக்கயிறு
உயிரினம் கட்டி ஓயும்

காற்றின் நிறம் மாற்றும்
காற்றின் சுவை கசக்கும்
தூசிப்போர்வை போர்த்த
பூமியுடல்
தொலைந்த சிறுமிபோல்
நடுங்கும்

பூமியா ஆகாயமா
இனம்காணா
பறவைகள்
கண்சுருக்கி கவிழும்

கண்ணவிந்த
விமானக் காதலர்கள் மோதி
மேகப் பெண்கள்
கற்பிழத்தல் நடக்கும்

பொருளாதாரத் தாடை வீங்கி
பணவீக்க தைராய்டு முளைக்கும்
அடுத்தடுத்த அரசியல் ஆலோசனைகள்
நேரம் விழுங்கும்
காரியமில்லை
காரணம் சாத்தியமில்லை

தன் விஞ்ஞான அழுக்குக் கையை
நீட்டி நீட்டி
பூமிப் பெண்ணின்
சேலை உரியும்வரை...

தொடரும்
இந்த ஆங்காரத்தை
சகித்துத்தான் ஆகவேண்டும்
இந்த அவதாரங்களை
பொறுத்துத்தான் ஆகவேண்டும்.



.

Monday, April 16, 2012

நக்கல் பிடித்த நாரைகள்





நீண்டு கிடந்தது
அந்தக் குளம்
தார்ச்சாலைபோல்

ஆரம்பித்தது அந்த
கொக்குகளின் மாநாடு

நீரருந்த அனுமதிக்கக் கூடாது
நாரைகளை
சொன்னது தலைவர் கொக்கு

குடிக்க என்ன
குளிக்கவே விடக்கூடாது
குமுறியது
ஒரு
வாலிபக் கொக்கு

ஏன் இப்படி எதனால்
வினவியது
புதிதாய் குடியேறிய
கொக்கு ஒன்று

மீன்களின் எண்ணிக்கை
குறைந்துகொண்டே போகிறது
இந்த
நாரைகளின் வரவுக்குப் பின்

அதுபோக
இந்த
மீனவர்களின் தொல்லைவேறு
அள்ளிக்கொண்டு போகிறார்கள்
தினந்தோறும்

ஆகவேதான்
இந்த
கட்டுப்பாடு
வேறு வழியில்லை
அந்நியர்களை
இனியும் அனுமதிக்க மாட்டோம்
சொன்னது நாட்டாமை

இன்னும் சிலபல
தீர்மான நிறைவேற்றலுக்குப் பின்
ஓய்ந்தது மாநாடு

சில நாட்களில்....
ஊர்ச்சண்டையில்
ஒரு விஷமக்கும்பலின்
கைவேலையால்
விஷமானது
ஊர்க்குளம்

சிதறிய தேங்காய்ச்சில்களாய்
மிதந்தன மீன்களெல்லாம்...
முதலுக்கே மோசம் வந்ததால்
குடியிருப்பை நகர்த்தின
கொக்குகளெல்லாம்

விழுந்து விழுந்து
சிரித்தன
நக்கல் பிடித்த
நாரைகள்.


.

Sunday, April 15, 2012

அழுகை (Crying) நல்லதா? - மருத்துவரீதியான ஓர் அலசல்.




அவ்வப்போது கண்ணீர் விட்டு அழும் நபர்களா நீங்கள்? உங்கள் கைகளைக் கொடுங்கள். அழுகை நல்லது என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள பாராசிம்பதட்டிக் சிஸ்டம் (Parasympathetic Nervous System) அழுகையின் போது அசைக்கப்படுகிறது.

இந்த சிஸ்டம் அசைக்கப்ட்டாலே நமக்கு அமைதி (Relaxation) கிடைக்கும். அதாவது நிம்மதியைத் தருகிற, மன அழுத்தத்தைக் குறைக்கிற நரம்புகளை உணர்ச்சி தட்டி எழுப்பும். தொடர்ந்து OPIODS என்கிற இரசாயன வஸ்துவை நமது கண்ணீர் தட்டி எழுப்புகிறது. மேலும் நம்முடைய சந்தோஷத்தைத் தூண்டுகிற இயற்கை இரசாயனங்களையும் சுரக்கவைக்கிறது. மற்றும் ஆக்ஸிடாசின் (Oxitocin) என்ற ஹார்மோனை கண்ணீரானது சுரக்க வைக்கிறது. இது நம்பிக்கை ஊட்டும் அல்லது சந்தோஷத்தை தரும் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது. இதெல்லாம் மருத்துவரீதியான நன்மைகள்.

ஆகையினால்தான் அழுகைக்குப் பிறகு ஒரு பெரிய விடுதலை உணர்வு, பிரச்சினையிலிருந்து வெளிவந்த உணர்வு கிடைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அழுகை நாம் நினைத்த காரியத்தை சாதிக்க வைக்குது பார்த்தீங்களா? அது பெரிய விஷயமா இல்லையா? அவ்வப்போது சிந்தும் கண்ணீருக்கு இவ்வளவு நன்மைகள் இருக்குது. ஆனால் அடிக்கடி அழுபவர்களுக்கு உடல் ரீதியான சில பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் சக்தி வீணாகி பலவீனமடையவும் வாய்ப்புண்டு.

பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?
இதற்கு உடல்ரீதியான அமைப்பே காரணமாக இருக்கிறது. ஆண் செக்ஸ் ஹார்மோனான Testosterone கண்ணீர்ச்சுரப்பிகளை டிஸ்டர்ப் பண்ணுவதைக் காட்டிலும் பெண் செக்ஸ் ஹார்மோனான Prolactin கண்ணீர்ச் சுரப்பிகளை அதிகம் டிஸ்டர்ப் பண்ணுவதுதான். அது தவிர பெண்கள் இயல்பாகவே கொஞ்சம் உணர்ச்சி வசப்படுபவர்களாயிற்றே. அதுவும் ஒரு காரணம்.

ஆகவே மக்களே இனி அழ சந்தர்ப்பம் கிடைத்தால் அழுதுவிடுங்கள். கண்ணீரைக் கட்டுப்படுத்தாதீர்கள். அழுவது நல்லது.

வாழ்க நலமுடன்...!



.

நீ அழைக்கப்படுகிறாய்...!




வெடிக்காத எரிமலையெல்லாம்
சரித்திரங்கள் ஆவதில்லை
துடிக்காத வீரனெல்லாம்
சகாப்தங்கள் ஆவதில்லை

படுக்கைக்கு கீழே
உன் இலட்சியங்களை
புதைத்துவிட்டு
சீற மறந்த நாகமாய்
சிரித்துக்கொண்டிக்கிற
என் இளவலே எழுந்திரு!

பாயைச் சுருட்டிப் போடு
பயத்தையும்தான்

தாலாட்டு கேட்டுக் கேட்டு
தூங்கியதெல்லாம் போதும்
பூபாளம் பாடு

காதலிக்கு கடிதம்
எழுதி எழுதியே
களைத்துப் போனவனே
இங்கே
யுத்தங்கள் உனக்காக
காத்துக்கொண்டிருக்கின்றன

ஒருத்திக்காக
உன் வாழ்வை
தொலைத்துவிடாதே

ஒருகோடி பெண்கள்
உனக்காக
காத்துக்கொண்டிருக்கிறார்கள்

நீ வீட்டுக்குருவி அல்ல
தேசக்கழுகு

தங்கைகளும் தாய்களும்
தவித்துக்கொண்டிருக்கையில்
காம நாடகம்
உனக்கெதற்கு

உன்
அகக்கண் திற
ஆயிரம் காட்சிகள் தரிசிப்பாய்

சாப்பிட்டுவிட்டு
செரிக்கப் போராடும்
ஒரு கூட்டம்

சாப்பிட சோறுகேட்டு
போராடும்
மறுகூட்டம்

வேலை கேட்கும்
ஒரு கூட்டம்
மானம் கேட்கும்
மறு கூட்டம்

உன்னை விட்டால் யாருண்டு
ஏழ்மைப் பசிதீர்க்க
உன்னைத்தான் தேடுகிறான்
உலக ஏழை

புதிய புரட்சிப் போராட்டம்
இங்க தவம் செய்துகொண்டிருக்கிறது
உனக்காக

சிறு கூண்டுக்குள்
ஒடுங்கியவனே
உன் சிறகுகளில் உள்ளது
சூரியக் குஞ்சுகள் என்பதை
நீ அறியமாட்டாய்

பறக்கவிடு
அனைத்தையும்
பிரபஞ்சம் அதிரட்டும்

கடைசியாக...
நீ அழைக்கப்படுகிறாய்
வரலாற்றில் இடம்பெற அல்ல
புது வரலாறு எழுத...!




.

கிழிந்த ஓலை

(இவன் வீச்சு தெரியாமல் போர்வாளை கைப்பைக்குள் வைக்க முயன்ற இவன் வீட்டார். பொறுக்க முடியாத இவன் புயலாய் கிளம்பி அங்கு வந்து சேர்ந்தான். அங்கு....)




அந்த ஒற்றை பனைமரத்தின்
வேர்களை விசாரித்துக் கொண்டிருந்தபோது
கிழிந்த ஓலை ஒன்று விழுந்தது
என் தலைமேல்

நீயாய் வந்தாயா
இல்லை மரம் கழித்துப்போட்டதா

நீண்ட மவுனத்திற்குப்பின்
ஓலை கதறியது
நீ எப்படி இங்கு வந்தாயோ
அதே போலத்தான்
நானும் வந்திருக்கிறேன்

கிழிந்த ஓலையையா வாழ்ககையையா
எதை நினைத்து அழுவது

மவுனக்குழிக்குள் இறங்கினேன்



.

Saturday, April 14, 2012

செருப்பு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்



1. செருப்புகளை தேர்ந்தெடுக்கும் போது அழகு மற்றும் அளவு ஆகியவற்றை பொருத்தமாக இருக்கும்படி கவனித்து வாங்க வேண்டும்.

2. செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்துகொண்டு நான்கைந்து அடி நடந்து பார்த்து
சரியானதாகவும், நடப்பதற்கு வசதியாகவும் இருந்தால்தான் வாங்க வேண்டும்.

3. அதிக இறுக்கமான செருப்புகளை அணியக் கூடாது.

4. விலை குறைந்த செருப்புகளை விட விலை கூடுதல் என்றாலும் தரமான,பாதங்களுக்கு ஏற்ற செருப்புகளையே வாங்க வேண்டும்.

5. தோல் செருப்புகளை தண்ணீரில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நனைந்தால் செருப்பின் ஆயுள் குறையும். பாதங்களுக்கும் பொருத்தம் இல்லாமல் அழகும் கெட்டுவிடும்.

6. தரையில் வழுக்காமல் ‘க்ரிப்’ உள்ள செருப்புகளையே பயன்படுத்த வேண்டும். மேலும் அழுத்தம் இல்லாமலும், அதிக கனமாக இல்லாமலும், மிருதுவாகவும் செருப்பு இருக்க வேண்டும்.

7. மழைக் காலத்தில் ரப்பர் செருப்புகளை அணியக் கூடாது. ஏனென்றால் அது நடக்கும் போது வழுக்கி விடுவதுடன் துணிகளில் சேற்றை வாரி இறைத்து விடும்.

8. இறுக்கமான செருப்புகளையோ, ஷுக்களையோ அணியக் கூடாது. அப்படி அணிந்தால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.

9. பிளாஸ்டிக் செருப்புகளை விட தோல் செருப்புகளும், ஷுக்களுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு பிளாஸ்டிக் செருப்புகளால் உடலில் அதிக உஷ்ணம் ஏறி சோர்வு ஏற்படும். கண்களும் எரிச்சலடையும். மேலும் அதிக வியர்வையும் தோன்றும். எனவே பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்த்தல் நலம்.

10. செருப்பு, ஷுக்களுக்கு அடிக்கடி ‘பாலீஷ்’ செய்ய வேண்டும். இதனால் செருப்புகளுக்கு அழகும், ஆயுளும் கிடைக்கும். பாலிஷ் செய்யும்போது செருப்பில் இருக்கும் ஈரத்தன்மையும் நீங்கி விடும்.

11. உங்களுக்கு செருப்பு வாங்குவதற்காக அளவைக் கொடுத்து இன்னொருவரை அனுப்பாதீர்கள். நீங்களே சென்று தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது.

12. அடுத்தவர்களின் செருப்புகளை அணியக் கூடாது. இதனால் தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

13. ரப்பர், பிளாஸ்டிக் செருப்புகளை தினமும் கழுவி சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும்.

14. புதிதாக செருப்பு வாங்கி உபயோகப்படுத்தும் போது செருப்பு கடித்தால் அந்த இடத்தில் பூண்டு (அ) வெங்காயத்தை அரைத்து தேய்த்தால் குணம் உண்டாகும்.




.

Friday, April 13, 2012

அர்த்தப் புன்னகை




மனம் நிறைய உற்சாகத்தோடு
கிளம்புகிறேன்
அந்த
நந்தவனத்திற்கு

உள்ளே நுழைகிறேன்....

நலமா என்றது
சூரியகாந்தி
தலையசைத்தபோது
சிரித்தது

நாட்டு நடப்பெல்லாம் எப்படி
கேள்விக்கு பதில் சொல்லும்முன்
இடைமறித்தது
வெள்ளை ரோஜா

அவனை விடு
நாடு மறக்க நாடிவந்தவனுக்கு
ஞாபகப்படுத்தும் படலம் எதற்கு

நேசப்புன்னகை செய்தேன்
கண்ணடித்தது ரோஜா

நீ என் காதலன்
என்ன விரும்புகிறாய்
என்றது

சிவப்பு ரோஜா
எனக்குப் பிடிக்கும்
சீண்டலில் சிவந்தது
வெள்ளை ரோஜா

உன் சிகப்பைக் காணவே
இந்த சீண்டலென்றேன்

அரளியக்கா அழுகிறாள்
புகார் தெரிவித்தன
புற்களெல்லாம்

ஏன் என்ற
என் கேள்விக்கு
ஓவென ஒப்பாரி வைத்தது
நந்தியா வட்டை
பூக்காரி மகள்
பூமிக்கு சொந்தமாகிவிட்டாளாம்
காரணம் தான்தானென்று
குற்ற உணர்ச்சியாம்

அரளிச்செடி பக்கம்
ஆதரவாய்ப் போனேன்
அழுகை நிறுத்து
கண்ணீர்ப்படலம் பூர்த்திசெய்

முகம் திருப்பிய அரளி
உற்று நோக்கியது
ஏன் இந்த மனிதர்கள்
சாக நினைக்கும்போதெல்லாம்
என்னை பயன்படுத்துகிறார்கள்

மற்ற பூக்களுக்கு இல்லாத
இந்த சங்கடம்
எனக்கு மட்டும் ஏன்?

சொன்னால் சங்கடப் படாதே
விஷம் கொண்டுள்ள
பூக்களாயினும் சரி
மனிதராயினும் சரி

ஒவ்வொரு நாவலின்
இறுதி அத்தியாயமும்
அவர்களாலேயே
முடித்து வைக்கப்படுகிறது

தவறு உன்பக்கம்
விட்டுவிடு கவலையை
காலம் மாறும்
கவலைகள் தீரும்

பூச்சிநேகம் கலைத்து
வீடு திரும்பினேன்


காலம் கழிந்தது
அன்றொரு நாள்...
அந்த
ஆட்டு மந்தை
பூங்காவிற்குள் நுழைந்தது

பூப்பறவைகள்
வேட்டையாடுகளால்
குதறப்பட்டன

விவரம் அறியாதவனாக
மாலையில்....
மறுபடியும் நுழைந்தேன்
அந்த
நந்தவனத்தில்....

போர்க்களமாய் இருந்தது
நந்தவனம்...
பூக்களின் கைகளும்
கால்களும்
வெட்டப்பட்டு கிடந்தன

பூக்களின் இரத்தத்தால்
சிவந்திருந்தது
பூமி.....

எல்லாப் பூக்களும்
கல்லறைக்கு சென்றுவிட்டதால்
மயானமாகவே இருந்தது
பூந்தோட்டம்

கண்ணீருடன் அலைந்தபோதுதான்
காதுகளில் கேட்டது
பழக்கப்பட்ட குரலொன்று
யாரென திரும்பியபோது
அரளிப் பூ...

வெகுநேரம் உரையாடினோம்
விடைபெறும்போது தெரிந்தது
அரளியின் கண்களில்
அந்த
அர்த்தப் புன்னகை.





.

அரிசி ஒயின் (Rice Wine) சாப்பிட்டிருக்கிறீர்களா?

நம்முடைய உடல் கொழுப்பு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு (Sugar), உடல் பருமன், தோல் பிரச்சினைகள் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் இவை அனைத்தையும் கட்டுப்படுத்தும் அருமையான மருந்துதான் இந்த அரிசி ஒயின் ஆகும். உணவே மருந்து என்று சொல்வார்களே அதுதான் இது. இந்த உணவு மிகச் சிறந்த மருந்தாகும். வயது வந்தவர்கள் மட்டுமல்ல. குழந்தைகளும் இதைச் சாப்பிடலாம். சீனா, கொரியா, ஜப்பான் தேசங்களில் இன்றும் பயன்படுத்தப் பட்டு வருகிற உணவாகும் இது. இதை எப்படித் தயார் செய்வது பார்க்கலாம்.

செய்முறை:

1. ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் போதுமான அளவு அரிசியை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேருங்கள். கஞ்சி போன்ற பதம் வருமாறு தண்ணீரின் அளவு இருக்கட்டும். கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.




2. இப்போது அதனுடன் சிறிதளவு ஈஸ்ட் சேருங்கள். பேக்கரியில் கேக் தயாரிப்பதற்கு பயன்படுத்துவார்களே அதே ஈஸ்ட் தான்.

3. இப்போது அந்த கண்ணாடிப் பாத்திரத்தை காற்றுப் புகாதவாறு இறுக்க மூடி விடுங்கள். உலோக மூடி அல்லது பாலித்தீன் பேக் கொண்டு மூடி விடலாம். அறை வெப்பநிலையில் மூன்று அல்லது நான்கு நாட்கள் அப்படியே வைத்து விடுங்கள்.

4. மூன்று அல்லது நான்கு நாட்கள் கழித்து அந்த அரிசிக் கஞ்சியை திறந்து பாருங்கள். அது நன்றாக உருகி தண்ணீரைப் போல் மாறியிருக்கும். ஒயினைப் போல் ஒரு வாடை அடிக்கும். அப்படியானால் உணவு தயாராகி விட்டது என்று பொருள்.

5. இப்போது அந்த உணவுடன் தேனையோ அல்லது சர்க்கரையையோ போதுமான அளவு சேருங்கள். இப்போது அது இனிப்பான ஒயினைப் போல் அல்லது பால் உணவைப் போல் இருக்கும்.

இதுவே இந்த ஆரோக்கிய பானத்தை தயார் செய்யும் முறையாகும். மங்கோலியா, சீனா, கொரியா மற்றும் ஜப்பான் தேசங்களில் இதைச் சாப்பிடுகிற மக்கள் மேற்கண்ட கோளாறுகளுக்கு இது அற்புதமான மருந்தாகும் என்று சாட்சி சொல்கிறார்கள். தைரியமாக சாப்பிடலாம். பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்றும் சொல்கிறார்கள் அம்மக்கள். ஒரு தடவை சாப்பிட்டாலே இதன் மருத்துவக் குணம் அற்புதமாக வெளிப்படுவதாக சொல்கிறார்கள். நாமும்தான் சாப்பிட்டுப் பார்ப்போமே.



.

Thursday, April 12, 2012

உயிர் பறித்துப் போ சுனாமியே!

மனித முகங்களணிந்த
மிருகக் கூட்டங்கள்
இருக்கும் வேளையில் மட்டும்
வந்து போ!

எங்கள் தேசத்தில்
கூட்டல் கணக்கை விட
கழித்தல் கணக்குதான்
அதிகம் செய்யவேண்டியிருக்கிறது

சுத்திகரிக்கும் பணியை
ஒற்றைச் சூறாவளியாய்
செய்துவிட்டுப் போ!

ஒரு நிபந்தனைதான்
களைகளை மட்டும்
பிடுங்கி எடு
பயிர்களை விட்டுவிடு
அது போதும் எங்களுக்கு!

வா!
வந்து விடு!
எங்களால் இயலவில்லை
நீயாவது
உதவி செய்!


.

Wednesday, April 11, 2012

வியர்வை நாற்றத்தைக் கட்டுப்படுத்த சில டிப்ஸ்...




1.கீரைகள், ஆரஞ்சுப்பழம், அன்னாசிப்பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும் தன்மை கொண்டதால் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கப்படும்.

2.உடலில் அதிக வியர்வையுள்ள பகுதிகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி பவுடர் பூசிக் கொள்ள வேண்டும்.

3.நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

4.பாக்டீரியாக்களின் செயல்பாட்டை குறைக்க தினமும் இரவும் பகலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

5.உடலை மட்டும் சுத்தமாக வைத்தால் போதாது. உடையிலும் சுத்தம் தேவை. முக்கியமாக உள்ளாடைகள் அதிக சுத்தமானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற சரும நோய்கள் ஏற்பட்டு அவ்விடங்களில் சிவந்தும் தடிப்பு ஏற்பட்டும் எரிச்சலை ஏற்படுத்தும்.

6.காட்டன், துணிவகைகள் வியர்வையை உறிஞ்சி எடுக்க ஏற்றவை. ஆதலால் பெரும்பாலும் காட்டன் துணிகளையே உடுத்துதல் நலம்.

7.மனதை எப்போதும் அமைதியாக வைத்திருங்கள். உணர்ச்சிகளை எப்பொழுதும் எல்லை மீற விடக் கூடாது.

8.பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பையே உபயோகிக்க வேண்டும்.

9.உள்ளங்கால் பகுதி சிலருக்கு அதிகமாக வியர்க்கும். அவ்வாறானவர்கள் காற்று படும்படியான செருப்புகளையே அணிய வேண்டும். இறுக்கமான ஷுக்களை அணியக்கூடாது. ஷு அணியும் போது சாக்ஸ்களைத் தினமும் துவைத்து அணிய வேண்டும். பிளாஸ்டிக், ரப்பர் செருப்புகளை அணியக் கூடாது.

10.கை, கால்களை சுத்தமான நீரால் சோப் உபயோகித்துக் கழுவி, சுத்தமான துண்டால் துடைத்து விரல்களுக்கிடையில் பவுடர் பூச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உடல் நாற்றத்திலிருந்து விடுதலை பெறலாம்.




.

Wednesday, April 4, 2012

பால் குடிக்கும் பாம்புகள்




என் பந்தலெங்கும்
நெளிகின்றன
சாரையும் விரியனும்

பூமி துளைத்து
வெளிவரும்
லாவாப் பூச்சிகள்
பொசுக்கிக் கரைக்கின்றன
என் மேனியை

அடி முதல்
முடி வரை
நாற்ற வெள்ளம்

நக்கி நக்கி
பால்குடித்த
என் பாம்புகள்

என் கருப்பையையே
அழிக்க தீர்மானித்த வேளையில்
விஸ்வரூபம் கொண்டது
என் கழுகு

வேட்டை வேட்டை
எங்கும் வேட்டை
ஒரு பிரளயப் போர்...

இப்போது
சுத்தமாகிவிட்டது
என் கோயில்
பூஜை நேரம்
பின்னர் அறிவிக்கப்படும்.




.

Tuesday, April 3, 2012

நான் அவனை எடுத்துக் கொள்ளட்டுமா?


டேவிட் ரோபர் என்ற அறிஞர் கல்லூரியில் படிக்கும்போது அவரோடு ஒரு இளைஞன் படித்தான். அவன் திருமணமானவன். அந்த ஆண்டு இரண்டு சோகங்கள் அவனைத் தாக்கியது. ஒன்று அவனது மகன் இறந்தான். ஒரு சில மாதங்களில் அவனது மனைவியும் புத்தி பேதலித்து இறந்துவிட்டாள். அதிலிருந்து இவனும் சோகமயமாகவே காட்சியளித்தான்.

இந்த நிலையில், ஒருநாள் நண்பர்கள் இருவரும் சாலையில் பேசிக்கொண்டே நடந்துகொண்டிருந்தனர். அங்கே ஒரு இடத்தில் சாலையோரம் ஒரு நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் அழுதுகொண்டிருந்தான். அவனுடைய தாய் அவனை அதட்டிக் கொண்டிருந்தாள்.

நண்பர்கள் இருவரும் அதைப் பார்த்துக்கொண்டு இருந்தனர். அந்தப் பையன் கடையில் ஏதோ வாங்கித் தரக் கேட்டு அடம்பிடித்தான். அவனது தாயோ முதலில் சாதாரணமாக சத்தம் போட்டுக்கொண்டிருந்தவள் பிறகு அவனது பிடிவாதம் கண்டு சபிக்க ஆரம்பித்தாள். கெட்ட வார்த்தைகள் கொண்டு ஏசத் தொடங்கினாள். பின்னும் அவன் பிடிவாதம் பிடிக்கவே இழுத்துப் போட்டு உதைக்கத் தொடங்கினாள்.

டேவிட் ரோபரது நண்பர் திடீரென அந்த சிறுவனது அருகே சென்று அவனைத் தூக்கி கையில் வைத்துக் கொண்டார். அவன் கண்ணீரைத் துடைத்து அவனுக்கு முத்தஞ் செய்து கடைக்கு கூட்டிப் போய் அவன் கேட்ட அந்தப் பண்டத்தை வாங்கிக் கொடுத்து பின்னர் அவனை அவனது தாயருகே கொண்டு வந்து இப்படிக் கேட்டார். “நீங்கள் இவனை விரும்ப வில்லை என்றால் சொல்லி விடுங்கள். நான் இவனைக் கொண்டு போய் வளர்க்கிறேன். சொல்லுங்கள். அவனை நான் எடுத்துக் கொள்ளட்டுமா?” கேள்வி கேட்டதும்தான் தாமதம். அவள் அழத் துவங்கினாள். அழுது கொண்டே இருந்தாள்.

வெகுநேரம் கழித்து அவள் அழுது முடித்தபிறகு, நண்பர் மறுபடியும் அந்தப் பையனை அவளிடம் கொடுத்த போது அவள் கண்கள் தெளிவாகியிருந்தன. கையெடுத்துக் கும்பிட்டாள். எதையோ புரிந்துகொண்ட உணர்வு தெரிந்தது அந்தக் கண்களில்.





.

Monday, April 2, 2012

அருமையான பழமொழிகளும் அவற்றின் ஆங்கில மொழியாக்கமும்




நம் முன்னோர்கள் அருமையான பழமொழிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அனுபவம் பிழிந்தெடுத்து வெளிவந்த அருமை மொழிகள் அவை. பல பெரிய தன்னம்பிக்கை புத்தகங்கள் கூட சொல்லிக் கொடுக்க முடியாத உன்னத விஷயங்களை சில பழமொழிகள் சொல்லிக்கொடுத்து விடுகின்றன. நான் படித்து ரசித்த சில அருமையான பழமொழிகளையும் அவற்றிற்கான ஆங்கில மொழியாக்கங்களையும் கீழே கொடுத்துள்ளேன்.

1. ஏழைப் பிள்ளைக்கு தெய்வமே துணை.
(God is the protector of the helpless children).

2. தூங்காதவனே நீங்காதவன்.
(He is who ever active is never moved.)

3. ஊசி முனையில் தவம் செய்தாலும் உள்ளதுதான் கிடைக்கும்.
(Even if a man make penance standing on the point of a needle, he will not get more than was destined for him.)

4. தாரமும் குருவும் தலைவிதிப்படி.
(You get your wife and your priest according to destiny)

5. வந்த கூத்துக்கு ஆடித்தானே ஆக வேண்டும்.
(If he begins a dance at all, he must finish it.)

6. சுக துக்கம் சுழல் சக்கரம்.
(Joy and grief are a whirling wheel.)

7. முப்பது வருஷம் வாழ்ந்தவனுமில்லை. முப்பது வருஷம் தாழ்ந்தவனுமில்லை.

(There is no one who has prospered for thirty years, and no one who has met with adversity for thirty years.)

8. முத்திலும் சொத்தை உண்டு. பவழத்திலும் பழுது உண்டு.
(There are defects in Pearls and Flaws in coral.)

9. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
(The eye cannot see the defect of the eye-lid)

10. அக்காளைப் பழித்து தங்கை அவசாரியானாள்.
(The Sister who blamed her elder sister became a harlot herself.)
11. முகம் ஆகாதிருந்தால் கண்ணாடி என்ன செய்யும்?
(If your face is ugly, what can the mirror do?)

12. அறிந்து அறிந்து செய்கிற பாவத்தை அழுது அழுது தொலைக்க வேண்டும்.
(One will have to weep endlessly to expiate sin done willfully.)

13. உதைத்த கால் புழுக்கிற போது அல்லவோ புழுக்கும்.
(When the times comes for worms to consume the kicking foot, will they not consume it?)

14. பள்ளத்திலே இருந்தால் பொண்டாட்டி. மேட்டில் இருந்தால் அக்காள்.

(In the valley he treats her as his wife, on the hill he treats her as his elder sister.)

15. உதடு பழஞ் சொறியுமாம். உள்ளே நெஞ்சு எரியுமாம்.

(His lips rains fruit, his heart within is on fire.)

16. அள்ளுவது எல்லாம் நாய் தனக்கு என்றே எண்ணுமாம்.
(The dog seems to think that whatever is taken is intended for it.)

17. போக்கற்ற நாய்க்கு போனதெல்லாம் வழி.
(A dog without an aim, a road that goes in every direction!)

18. இன்றைக்கு இலை அறுக்கிறவன், நாளைக்கு குலை அறுக்க மாட்டானா?
(Will not he who steals leaves today, steal a cluster of fruit tomorrow?.)

19. தாழ்ந்து நின்றால், வாழ்ந்து நிற்பாய்.
(If you be humble, you will remain prosperous.)

20. அரைக் காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் காசு கொடுத்தாலும் கிடைக்குமா?
(Even if you give a thousand gold-pieces, can you regain the chastity lost for half a copper coin?)





.