Monday, October 29, 2012

எதுவுமே தெரியாது




இன்சூரன்சு ஆபீசரும்
ஆளுங்கட்சி மந்திரியும்
அடிக்கடி வந்ததுவும்

ஆளுயர மேடையில
கட்டுப்பணம் கைமாறினதுவும்
பாழான வீட்டுச் சுவரு
புதுசாக மாறினதுவும்

நாலுநாளு அழுத மஞ்சுளா
நாற்பதாவது நாளு
நான் ஈ பார்த்ததுவும்

நானூறு நாள்
வெற்றி விழா கொண்டாட்டமாய்
வெள்ளைச் சேலை
நீலச் சேலையாய் மாறியதுவும்

படிப்படியாய்
அவன்
கறுப்பு வெள்ளை ஓவியம்
கலர் கலராய் மாறியதுவும்

எதுவுமே தெரியாது
இடிவிழுந்து
செத்துப்போன
வெள்ளையனுக்கு.






.

Sunday, October 28, 2012

குடும்ப பாதுகாப்புக்கு சில டிப்ஸ்




ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவர் திடீரென மரணமடைய நேரிட்டால் அந்த குடும்பம் படும் பாடு பெரும்பாடுதான். குடும்பத் தலைவராக இருப்பவர்களும் குடும்பத்தினரும் இவ்வாறு நேரிட்டால் என்ன நடக்கும் என்பதை சிந்திக்கவே மறுக்கிறார்கள். அதை ஒரு அபசகுனமாக கருதுகிறார்கள். இதன் பின்விளைவுகளைப் பற்றி கவலைப் படுவதில்லை. மாறாக கணவனும், மனைவியும் ஒன்றாக அமர்ந்து இதைப் பற்றி பேசி துணிச்சலாக சில முடிவுகளை வரையறை செய்துகொள்ள வேண்டும்.

எனக்குத் தெரிந்த ஒரு நபர் அரசு வேலையில் இருந்தார். நான்கு பிள்ளைகள். இரண்டு பெண்பிள்ளைகளும் உள்ளடக்கம். திடீரென நாற்பத்தைந்து வயதில் அவர் மரணமடைந்து விட்டார். சரியாக வாரிசுதாரர் நியமனத்தை குறிப்பிடாததால் ஏகப்பட்ட குழப்பங்களாகி ஓய்வூதியப் பலன்களை பெறுவதற்கு சில வருடங்களாகி விட்டது.

எனவே உஷாராக உயிரோடிருக்கும்போதே சில நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டும். கணவன் மனைவி இருவரின் பேரிலும் ஜாயிண்ட் அக்கவுண்ட் கண்டிப்பாக இருக்க வேண்டும். வாரிசுதாரர் நியமனம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். மனைவி, பிள்ளைகள் என்று தெளிவாக பதியவேண்டும். பிராவிடன்பண்ட், கிராஜூவிட்டி, இன்ஸ்யூரன்ஸ், இதர கணக்குகளிலும் வாரிசுதாரர் நியமனம் உட்பட மற்ற விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். மறைவிற்குப் பின் எளிதில் பணப்பலன்கள் வாரிசுதாரருக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

இதேபோல் உயிலும் தெளிவாக எழுதி வைக்கப்பட வேண்டும். இல்லையெனில் வில்லங்கம் செய்யும் உறவினர்களால் வாரிசுகள் அவஸ்தைப்பட நேரிடும்.

கணவன் தொழில் செய்பவராக இருந்தால் தொழில் பற்றிய தேவையான விபரங்கள் அனைத்தையும் மனைவிக்கு தெரிவிக்க வேண்டும். தனது மறைவிற்குப் பின் தொழிலை நடத்த தேவையான பயிற்சி மனைவிக்கோ அல்லது வாரிசுதாரருக்கோ கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

தனது மறைவிற்குப் பின் என்னென்ன வரவுகள், செலவுகள், இலாபங்கள் உண்டாகும் என்பதை தெளிவாக ஒரு நோட்புக்கில் குறித்து பத்திரமாக வைக்க வேண்டும். என்னென்ன ஆவணங்கள் எங்கெங்கு உள்ளன. எப்படி பெறுவது? என்பதையும் அதில் தெளிவாக குறிப்பிட வேண்டும். இது குடும்பத்தினர் பணப்பலன்களை உடனடியாகப் பெற வசதியாக இருக்கும்.

மனைவி வேலை பார்த்தால் மனைவியும் இவ்வாறே செய்தல் வேண்டும். கண்டிப்பாக இன்சூரன்ஸ் பாலிசி குடும்பத்தினர் அனைவரும் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். விபத்துப் பாலிசியும், மெடிகிளெய்ம் பாலிசியும் அவசியம்.

கடன் வாங்கி வீடு கட்டினாலும், தவணை முடியும் முன் குடும்பத் தலைவர் மரணமடைய நேரிட்டால் கடனை அடைக்க காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. விசாரித்து இத்தகையை வீட்டுக் கடன் வசதித் திட்டங்களில் கடன் வாங்க வேண்டும். இது மிகவும் பாதுகாப்பானது.

நமது வீடு, வாகனங்கள், நுகர்வோர் சாதனங்கள் ஆகிவற்றைப் பாதுகாக்க பொதுக்காப்பீடு (General Insurance) செய்துகொள்ளுங்கள்.

இவ்வாறெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் செத்த பிறகும் நல்ல பேர் வாங்கலாம். இல்லேன்னா செத்தும் கெடுத்தான் அப்படின்னு கெட்ட பேர்தான் வாங்கணும். ரைட்டுதானே?






.

Tuesday, October 23, 2012

சிறு தொழில் தொடங்க சில ஆலோசனைகள்




நம்மில் பலர், படித்துவிட்டு சுயதொழில் தொடங்க ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்தவித தொழிலை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதில் ஒருவித குழப்ப நிலை இருக்கும்.

அப்படிப்பட்டவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் சிறந்த வழிகாட்டியாக இருந்து தொழிலை தொடங்க உதவுகிறது. தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பவர்களுக்காக, U.Y.E.G.P. திட்டத்திலிருந்து சில ஆலோசனைகளை கேள்வி பதில் வடிவில் பார்ப்போம்.

கேள்வி: லோடு ஆட்டோ வாங்க இந்த திட்டத்தில் கடன் கிடைக்குமா?

பதில்: சிறு வாகன கடன் என்பது சேவைப்பிரிவைச் சார்ந்தது. இதில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட முதலீடு ரூ.3 இலட்சம். மீதமுள்ள தொகையை பயனாளிகள் சொந்த முதலீடாக செய்வதாக இருப்பின், இந்த திட்டத்தில் பயன்பெற அடிப்படையான நலிவுற்றோர் என்ற தகுதி இல்லாமல் போய்விடும். மேலும் வாகன கடன் கேட்டு விண்ணப்பிப்பதற்கு செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம், வில்லை ஆகியன அவசியம்.

கேள்வி: U.Y.E.G.P. திட்டத்தில் கடன் பெற்றால் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படுமா?

பதில்: கண்டிப்பாக வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

கேள்வி: 36 வயது உள்ள ஒருவர் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியுமா?

பொதுப்பிரிவினராக இருந்தால், விண்ணப்பிக்கும் தினத்தில் 35 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது. சிறப்பு பிரிவினராக இருந்தால் 45 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது.

கேள்வி: பட்டப்படிப்பில் அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாமா?

பதில்: இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ட கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே. ஆகையால் தயக்கமின்றி விண்ணப்பிக்கலாம்.

கேள்வி: ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வாரிசுகளுக்கு, முன்னாள் ராணுவத்தினருக்கான வயது வரம்பு சலுகை கிடைக்குமா?

பதில்: முன்னாள் ராணுவத்தினருக்கு என வழங்கப்படும் வயது வரம்பு சலுகை முன்னாள் ராணுவத்தினருக்கு மட்டுமே பொருந்தும். அவர்களின் குடும்பத்திற்கோ, பாதுகாவலில் உள்ளவர்களுக்கோ பொருந்தாது.

கேள்வி: பள்ளி மாற்றுச் சான்று பெறாதவர்கள் விண்ணப்பிக்க முடியுமா?

பதில்: பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு, மாற்றுச் சான்றிதழை பெற்று வந்தால் விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி ஏற்றுக் கொள்ளப்படும்.

கேள்வி: திட்ட அறிக்கை தயாரிக்க எவ்வளவு செலவாகும்?

பதில்: விண்ணப்பதாரர்கள் உத்தேசித்துள்ள திட்டம் குறித்த உத்தேச வரவு-செலவு மற்றும் முதலீட்டு விபரங்களை நீங்களே தயாரிக்கலாம். மாவட்ட தொழில் மையங்களிலும், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டு நிறுவனங்களிலும் கிடைக்கக் கூடிய மாதிரி திட்ட அறிக்கைகளை பார்வையிட்டும் திட்ட அறிக்கைகளை தயாரிக்கலாம்.

கேள்வி: தொலைநிலைக் கல்வி (Distance Education) மூலம் படிப்பவர்களும் விண்ணப்பிக்க முடியுமா?

பதில்: விண்ணப்பிக்க முடியும்.

கேள்வி: பழைய இயந்திரங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் தொழிலுக்கு கடன் கிடைக்குமா?

பதில்: பழைய இயந்திரங்களை விலை நிர்ணயம் செய்து விற்பவர் மற்றும் வாங்குபவர் மட்டுமே தொடர்பானது. எனவே அந்த மதிப்பீடு அரசாங்கத்திலும், வங்கியிலும் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. மேலும் பழைய இயந்திரங்கள் தாம் முதலில் நிறுவப்பட்ட இடத்தில் ஏற்கனவே வேலைவாய்ப்பு உருவாக்குதல் என்ற கடமையை செய்து முடித்துவிட்டதாக கருதப்படுகிறது. எனவே பழைய இயந்திரங்கள் கொள்முதலுக்கு கடன் கிடையாது.

கேள்வி: பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலுக்கு, கூடுதல் இயந்திரம் வாங்க இந்த திட்டத்தில் கடன் கிடைக்குமா?

பதில்: U.Y.G.E.P. திட்டம் புதிய தொழில்களுக்கு மட்டுமே. எனவே இதில் விரிவாக்கத்திற்கு கடனுதவி கிடையாது. நீங்கள் உங்கள் சேவைப்பகுதிக்கான வங்கி மேலாளரை அணுகி சிறு தொழிலுக்கான கடனுதவியை கேட்டு பெற்றபின், மாவட்ட தொழில் மையத்தை அணுகி விரிவாக்கத்துக்கான மானியத்தை பெற்றுக்கொள்ளலாம்.

கேள்வி: U.Y.G.E.P. திட்டத்தில் கடன் பெற்றால் அந்த நிறுவனத்திற்கு தமிழக அரசின் சிறுதொழில் நிறுவனங்களுக்கான மானியங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்குமா?

பதில்: U.Y.G.E.P. திட்ட மானியமாக திட்ட முதலீட்டில் 15 சதவீதம் வழங்கப்படுகிறது. இது தவிர குறைந்த அழுத்த மானியம், வாட் மானியம், மின்னாக்கி மானியம் போன்ற சலுகைகள், விண்ணப்பதாரர் நடத்திவரும் தொழில் மற்றும் நிறுவன அமைவிட அடிப்படையில் மானியம் வழங்கப்படும்.

கேள்வி: ஏற்கனவே வேறு ஒரு மானிய கடனுதவி திட்டத்தில் கடனுதவி பெற்று, கடனை முழுவதுமான திருப்பி செலுத்தியவர்கள், U.Y.G.E.P. திட்டத்தில் புதிதாக கடன் பெற முடியுமா?

பதில்: ஏற்கனவே மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றிருந்தால், இந்த திட்டத்தில் கடன் கேட்டு விண்ணப்பிக்க தகுதி இல்லை. நிதி நிறுவனங்களில் சிறுதொழில் கடனுதவியை பெற்று தகுதி அடிப்படையில் மானியம் பெற்று பயன் அடையவும்.

கேள்வி: ஹாலோ பிளாக் தொழிலுக்கு, சிறு கட்டிடடம் கட்டுவதற்கான உத்தேச மதிப்பீட்டை திட்ட முதலீட்டில் சேர்த்துக் கொள்ளலாமா?

பதில்: தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் உத்தேசித்துள்ள உற்பத்தி தொழில் தொடங்குதவற்கு தேவையான கட்டிடம், இயந்திர தளவாடம் மற்றும் நடைமுறை மூலதனம் ஆகியவற்றின் மொத்த திட்ட மதிப்பு ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பி.கு: உங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறுங்கள்!



..................................................................நன்றி: தினத்தந்தி




.

Saturday, October 20, 2012

சூரிய ஒளியைப் பெற புது டெக்னிக் - தெரியுமா?




உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் எலும்பு பலவீனத்தை பெற்று இருக்கிறார்கள். அதாவது எலும்பில் வலு இல்லாமை. பெரும்பாலான குழந்தைகள் ரிக்கெட்ஸ் எனப்படும் (கால் கைகள் வளைந்த நிலைமை) நோய்க்கு ஆட்பட்டிருக்கிறார்கள். பெரியவர்களும் இந்நிலையைப் (Osteomalacia) பெற்றிருக்கிறார்கள். இந்நோய்க்கு காரணம் விட்டமின் D பற்றாக்குறைதான்.

இந்த ரிக்கெட்ஸ் ஆண்குழந்தைகளை விட பெண்குழந்தைகளையே பெரிதும் பாதிக்கிறது. விட்டமின் டி பற்றாக்குறையால் இவ்வாறு பாதிக்கப்பட்டு வருவது பெரிதும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைக் கவனித்து சிகிச்சை எடுக்காவிட்டால் எலும்பு பலவீனம், தசை பலவீனம், கை, கால்கள் வளைந்த தோற்றம் ஆகிய பாதிப்பகள் வரும்.



விட்டமின் டி போதுமான அளவில் எடுத்துக் கொண்டாலே இந்த பாதிப்புகளை தவிர்த்து விடலாம். பாலில் நிறைய விட்டமின் டி உள்ளது. மீன் மற்றும் பழச்சாறுகளில் உள்ளது.
இது போக இயற்கையே நமக்கு பெருமளவில் போதுமான அளவு விட்டமின் டி தருகிறது. எப்படி? சூரிய ஒளி மூலம்தான். ஆம் சூரிய ஒளியில் நமது உடலுக்குத் தேவையான விட்டமீன் டி நிறைந்துள்ளது.

தினமும் 10 அல்லது 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றாலே போதும். நமக்கு தேவையான அளவு விட்டமின் D கிடைத்து விடும். ஆனால் நிறைய பேருக்கு சூரிய ஒளியில் நிற்பதோ அல்லது அலைவதோ பிடிப்பதில்லை. சங்கடமாக உணர்கிறார்கள். காரணம் எரிச்சல், தோல் பாதிப்பு, தோல் நிறம் மாறுதல் ஆகியவற்றால் பாதிப்பு வருமோ என்ற பயம்தான். புற ஊதாக் கதிர்களினால் பாதிப்பு வரலாம் என்ற அச்சம்தான்.

இந்த தொந்தரவு எல்லாம் இல்லாமல் சூரிய ஒளியிலிருந்து விட்டமின் டி யைப் பெற இயல வழி இருக்கிறா? என்று நீங்கள் கேட்கலாம்.

ஆம். எளிய வழி ஒன்று இருக்கிறது. என்ன வழி?
உங்கள் உடல், முகம், தோல் ஆகியவற்றை முழுவதுமாக சூரிய ஒளியில் காட்ட அவசியமில்லை. உங்கள் உள்ளங்கையை 15 முதல் 30 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் காட்டுங்கள். அது போதும். உடலுக்கு தேவையான விட்டமின் டி உற்பத்தி செய்யப்பட்டு விடும்.



சொல்லப் போனால் உடல் முழுவதையும் காட்டிப் பெற்றுக் கொள்ளும் சூரிய ஒளியை விட, உள்ளங்கையை மட்டும் காட்டிப் பெற்றுக் கொள்ளும் சூரிய ஒளியே அதிகத் திறனுடையதாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த டெக்னிக் அற்புதமானதாகும். தினமும் ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடம் உங்கள் உள்ளங்கையை சூரிய ஒளியில் காட்டி போதுமான அளவில் விட்டமின் D-யைப் பெற்று ரிக்கெட்ஸ் முதலிய எலும்பு பலவீனங்களை வென்று ஆரோக்கியமாக வாழ்வோம்.

வாழ்க நலமுடன்!



.

Friday, October 19, 2012

சீக்கிய மதத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்




இந்தியாவில் இன்று கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களால் பின்பற்றப்பட்டு வரும் சீக்கிய மதம் சீக்கியர் என்னும் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

சீக்கியர்கள் யார்?

கி.மு. 2000-க்கும் கி.மு. 1500-க்கும் இடையே ஆரியர் இந்தியாவில் வந்து குடியேறினர். இவர்களில் பஞ்சாப் பகுதியில் குடியேறிய ஆரியர், போர்த்தொழிலில் முதிர்ச்சி பெற்ற சத்ரியர்கள் எனவும், விவசாயத்தில் ஆர்வமிக்க இராஜபுத்திரர் எனவும் இரு பிரிவினராய் பிரிந்தனர். இந்த சத்ரியரிலிருந்து ‘கட்ரி’ என்ற இனத்தவரும், இராஜபுத்திரர் பிரிவிலிருந்து ‘ஜாட்’ என்ற இனத்தவரும் தோன்றினர். இந்த கட்ரி மற்றும் ஜாட் இனங்களின் கூட்டமைப்பில் உருவான கலப்பு இனமே சீக்கியர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக இவர்கள் கீழ்க்காணும் குணநலன் உடையவர்களாய் காணப்படுகின்றனர்.

1. பக்தியில் ஊறிப்போனவர்கள்
2. துறவறம் வெறுத்து குடும்பப் பற்றுடையோராய் குடும்பத்தோடு சேர்ந்து 3. வாழ்கின்றனர்.
4. பிறரிடம் பரஸ்பர அன்பு காட்டும் இவர்கள் குருக்களின் 5. போதனைக்குக் கட்டுப்பட்டவர்கள்.
5. சமுதாயத் தொண்டும், பிறருக்கு சேவை செய்யும் மனப்பான்மையும் உடையவர்கள்.
6. கடவுளின் சித்தமே நடக்கும் என மதிக்கும் தலைவிதி வாதிகள்.
சுதந்திர உணர்ச்சி மிக்கவர்கள்.

தோற்றம்

சீக்கிய மதத்தை உருவாக்கியவர் குருநானக் ஆவார். எனினும் அவருக்கு முன்பே அது தோன்றுவதற்கு வித்திட்டவர் கபீர் என்பவராவார். முகம்மதிய மார்க்கத்திலும், இந்து மார்க்கத்திலும் நாட்டமுடைய கபீர் என்பவர் இரண்டு மார்க்க கருத்துகளையும் சேர்த்து பொதுவான கருத்து ஒன்றை வெளியிட்டார். இதுவே சீக்கிய மார்க்கமாக உருவாயிற்று. இக்கெள்கைகளை குருநானக் எடுத்துரைத்து அதற்கு மார்க்க உருவம் கொடுத்தமையால் சீக்கிய மார்க்கத்தின் முதல் குரு ஆனார். அவரைத் தொடர்ந்து ஒன்பது குருக்களின் தொண்டுகளால் சீக்கிய மார்க்கம் வளர்ந்தது. குருநானக் முதலான பத்து குருக்களின் போதனையே இன்று சீக்கிய மதத்தின் போதனையாய் விளங்குகிறது.

சீக்கிய மதத்தின் பத்து குருக்கள்

1. குருநானக், 2. குரு அங்கத், 3. குரு அமர்தாஸ், 4.குரு ராம்தாஸ், 5.குரு அர்ஜூன், 6. குரு ஹர்கோபிந், 7. குரு ஹார்ராய், 8. குரு ராம்ராய், 9. குரு தேஜ்பகதூர், 10. குரு கோபிந்த் சிங்.

மேற்கூறிய பத்து குருக்களின் போதனைகளைப் பின்பற்றுகிறர்வகளே சீக்கியர் எனப்பட்டாலும் இன்று அவர்களின் சீக்கியர் மற்றும் சிங் என இரு பிரிவினர் இருப்பதைக் காணலாம். ஒரே மார்க்கத்தைப் பின்பற்றினாலும் இவர்களிடையே வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம்.

வித்தியாசங்கள்

சீக்கியர்

1. நம்மைப் போல் சாதாரணத் தோற்றமுள்ளவர்.
2. ‘சீக்’ என்பதற்கு ‘கற்பவன்’ என்று பொருள்.
3. பூணூல் அணிந்திருப்பவன்.
4. புகை பிடிக்கும் பழக்கமுடையவன்.
5. ஒரே பரம்பரையினர். உயர்குடிப் பிறந்தவர்கள்.

சிங்

1. சீக்கிய மார்க்கத்தில் இணைந்து தலைப்பாகை வைத்திருப்பான்
2. ‘சிங்’ என்பதற்கு ‘வீரம் மிக்கவன்’ என்று பொருள்.
3. பூணூல் அணியமாட்டான்.
4. புகையிலை வஸ்துக்களை பயன்படுத்த மாட்டான்
5. பல இனத்தவர்களிடமிருந்து வந்தவர்கள்.

வேத நூல்

ஆதிகிரந்தம் அல்லது கிரந்தசாஹிப். புத்தகம் என்பது இதன் பொருள். சீக்கியரின் ‘குருமுக்கி’ எனும் மொழியில் எழுதப்பட்டது. கபீர் முதல் 5-ம் குருவின் காலம் வரையுள்ள போதனைகள் பாடல்களாக இதில் இடம் பெறுகின்றன. அத்துடன் இந்து, இஸ்லாமிய மார்க்க பாடல்களும் இடம் பெற்றுள்ளன.

கடவுள்

சத்நாம் என்பவரே கடவுள். இவர் எல்லாம் அறிந்த ஒரே கடவுள். ‘சத்நாம்’ என்பதற்கு ‘உண்மையுள்ள நாமம்’ என்பது பொருள். எங்கும் நிறைந்த இவர் இரக்கமும் அன்பும் மிகுந்தவர் என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.

வழிபாட்டு முறைமை

குருத்துவாரம் (மக்கள் கூடும் இடம்) வழிபடும் இடமாக இருக்கிறது. மக்கள் கூட்டமாய் வந்து அமர்ந்து குருவிடம் உபதேசம் கேட்பர். உள்ளே ஆதி கிரந்தம் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு நேராய் தலை சாய்த்து வணங்க வேண்டும். நாள்தோறும் கிரந்தத்தை காலை அல்லது மாலையில் திறந்து இடது பக்க ஓரத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்க வேண்டும்.

பிற முக்கிய கொள்கைகள்

1. ஆணோ, பெண்ணோ காது அல்லது மூக்கில் துளையிடுதல் கூடாது.
2. திருமணத்தில் ஜாதி, இனம் பார்க்கக் கூடாது. சீக்கியருக்குள்ளேதான் திருமணம் செய்ய வேண்டும்.
3. பலதார மணம் கூடாது. இறந்தவர்கள் தகனம் செய்யப்பட வேண்டும்.
4. நினைவுச் சின்னமோ தூணோ நாட்டக் கூடாது.
5. பயணம் புறப்படும் முன்னும், புதுத்தொழில் ஆரம்பிக்கும் முன்னும் ஆதிகிரந்தம் வாசிக்கப்பட வேண்டும்
6. ஒவ்வொரு சீக்கியனும் குடும்பஸ்தனாய் வாழ்ந்து குடும்பத்தை நன்கு பராமரிக்க வேண்டும்.

பொற்கோவில்

குரு இராம்தாஸ் என்ற 4-வது குருவிற்கு மொகலாய அரசர் அக்பர் பெரும் நிலம் ஒன்றை தானமாக் கொடுத்தார். அதில்தான் குரு தமது பெயரால் இராம்தாஸ்பூர் என்ற நகரத்தை நிர்மாணித்தார். இதுவே இன்று அமிர்தசரஸ் என்று அழைக்கப்படுகிறது. 5-வது குருவாகிய குரு அர்ஜூன் இங்கு சீக்கியர்களின் பொற்கோவிலைக் கட்டினார். சீக்கியர்களிடம் வசூலிக்கப்பட்ட வரிகளால் வந்த பெரும் செல்வம் பொற்கோவிலில் சேர்த்து வைக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் ‘அழியாத சிம்மாசனம்’ என்ற அர்த்தம் கொள்ளும் ‘அகால் தாஹ்ட்’ அல்லது ‘அகாலிதளம்’ என்று அழைக்கப்பட்டது. (இதன் பெயரில் இன்று ஒரு அரசியல் கட்சியும் உள்ளது).

இந்திய விடுதலைப் போரில் சீக்கியர்களின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. பொதுவாக சீக்கியர்கள் மதப் பற்றை விட குடும்பப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் அதிகமுடையவர்கள்.

முற்றிற்று.




.

பரிணாமக் கொள்கையின் நம்பகத் தன்மை - பகுதி 1




பரிணாமக் கொள்கை எப்போதுமே எனக்குப் பிடிக்காத, ஒத்துக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. ஏன் என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்னும் சொல்லப் போனால் அதை ஒரு கேலிக்கூத்து என்றே சொல்வேன். முட்டாள்தனமான ஒன்று என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை. இன்றைக்கு ஆதாரமாக ஒரு விஷயத்தை பார்ப்போம்.


வௌவால்

இந்த வௌவால் அற்புதமான ஒரு படைப்பு. பரிணாமக் கொள்கைக்காரர்களுக்கு சவால் விடும் ஒன்றாக இருந்து வருகிறது. வௌவால் குட்டிப் போட்டு பால் கொடுக்கும் ஒரு பிராணியாகும். வெளவால்களில் மட்டும் 950 வகையான வெளவால்கள் இருக்கின்றனவென்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

வௌவால்களில் மிகச் சிறிய வௌவால்கள் 1.5 கிராம் எடையுள்ளவைகளாகவும் 15 செ.மீ நீளமுள்ள இறக்கைகள் கொண்டனவாயும் இருக்கின்றன. இவைகளுக்கு ஆகாரம் சிறு சிறு பூச்சிகள்தான். பெரிய வௌவால்கள் 1 கிலோ எடை கொண்டவைகளாகவும் சாதாரணமாகவும் பழங்களை உணவாகக் கொண்டவைகளாகவும் இருக்கின்றன. மத்திய அமெரிக்காவிலுள்ள வாம்பையர் என்ற ஜாதி வௌவால்கள் மிருகங்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் வகையைச் சேர்ந்தவை. அவைகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கூர்மையான பற்களால் மிருகங்களின் தோலைக் கிழித்து இரத்தம் கசிந்தவுடன் அந்த இரத்தம் உறைந்து போகாமலிருக்க தங்கள் எச்சிலை கிழிந்த தோலின் மேல் துப்பி 20 கிராம் அளவு இரத்தத்தை குடித்து விடுகின்றனவாம்.

வௌவால்கள் மிருக இனத்தைச் சார்ந்தவைகளாக இருந்தாலும் வேகமாகப் பறக்க தோலினாலான இறக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை மூட மெல்லிய மூடியும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சாதாரணமாக வெளவால்கள் இரவு நேரத்தில்தான் இரை தேடப் போகின்றன. அவைகள் பூச்சிகளைப் பிடிப்பதற்கு கண்கள் உபயோகப்படுவதில்லை. அவைகளிலிருந்து ஒலி அலைகள், வினாடிக்கு 1,00,000 வீதம், அனுப்பப்படுகின்றன (மனிதருக்கு கேட்கும் சக்தி வினாடிக்கு 14,000 ஒலி அலைகள்தான்). இவ்வொலிகள் எதிரொலித்து வருவதை வைத்து பறப்பதற்கும், பூச்சிகளைப் பிடிப்பதற்கும் கடவுள் அவைகளுக்கு அவ்வளவு நுண்ணிய கிரகிக்கும் சக்தியைக் கொடுத்திருக்கிறார். இவைகள் சாதாரணமாக தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும்.

இவைகள் பறவை இனத்திலிருந்து சிறிது சிறிதாக மாறி பிராணி இனத்துக்கு வந்தனவா அல்லது மிருக இனத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி பறவை இனமானதா? பரிணாமக் கொள்கைக் காரர் என்ன கூறுகிறார்கள்? மனிதனுக்கு இல்லாத எதிரொலியைக் கிரகித்து செயல்படும் சக்தி பெரும் அளவில் இந்தச் சிறு பிராணிக்கு கிடைத்திருப்பது தற்செயலாக உண்டான ஒரு காரியமா? அல்லது எல்லாம் வல்ல கடவுள் தமது சிருஷ்டிப்பில் செய்த அற்புதங்களில் இதுவும் ஒன்றா?

மனித இனத்தில் 50 கிலோ எடையுள்ள ஒரு பெண் 2 கிலோ எடையுள்ள ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அதாவது பிள்ளை தாயின் எடையில் பதினாறில்ஒரு பாகம்தான் இருக்கிறது. ஆனால் வெளவாலோ தன் எடையில் நாலில் ஒரு பாகம் குட்டியின் எடையாக இருக்கும் அளவுக்கு பெரிதாக பெற்றெடுக்கிறது. இதுவும் பரிணாமக் கொள்கைக்கு ஒத்து வருமா? அல்லது கடவுளின் படைப்பின் விசித்திரமா?

கடவுள் ஒவ்வொரு பிராணியையும், பறவையையும், தாவரத்தையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே படைத்திருக்கிறார். அந்தந்த ஜாதிகளில் பலபல இனங்கள் பின்னால் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் கடவுளுடைய படைப்பில் ஒவ்வொரு ஜாதிக்கும் தனிப்பட்ட குணாதிசயங்களோடு அவைகளைப் படைத்திருக்கிறார். இந்த விசேஷ குணங்களை கடவுளின் படைப்பு என்பதை விடுத்து பரிணாமக்கொள்கைப்படி படிப்படியாக வந்தது என்பது சர்வ முட்டாள்தனமே அல்லாது வேறொன்றுமில்லை.


தொடரும்....!



.

Wednesday, October 17, 2012

டெங்கு காய்ச்சல் - சில உண்மைகள்




டெங்கு காய்ச்சல் என்பது கொசு கடிப்பதினால் உண்டாகும் ஒரு விதமான வைரஸினால் பரவும் காய்ச்சலாகும்.

டெங்கு காய்ச்சல் உண்டாக்கும் கிருமிகள் கொசுக்கள் மூலம் பரப்பப்படுகின்றன. Aedes aegypti என்ற இந்த கொசுக்கள் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, கரீபியன் தீவுகள் போன்ற வெப்பமண்டல பகுதிகளில் காணப்படுகின்றன.

அறிகுறிகள்

டெங்கு காய்ச்சல் வரும்போது உடல் வெப்பநிலை திடீரென உயரும். அதாவது காய்ச்சல் 104 - 105 பாரன்ஹீட் அளவுக்கு உயரும். அதாவது கிருமி உடலில் பரவ ஆரம்பித்த 4 முதல் 7 நாட்கள் கழித்து இப்படி அதிகப்படியான காய்ச்சல் உண்டாகும்.

ஒரு விதமான தடித்த, சிவப்பு நிறமுடைய சொறி போன்ற தோல் மாற்றம் காய்ச்சல் உண்டான 2 முதல் 5 நாட்களுக்கு பிறகு உண்டாகும். அதன் பிறகு இரண்டொரு நாட்களில் அம்மை போடும்போது உண்டாகும் கொப்புளங்கள் போல் தோல் தடிப்புகள் உண்டாகும்.




தோலில் சொறி போன்ற உணர்வு உண்டாகும். இயல்பு நிலை பாதிக்கும். மனச்சோர்வு, தலைவலி (அதிலும் குறிப்பாக கண்களுக்கு அருகில்), மூட்டு வலிகள், தசை வலிகள், குமட்டல், வாந்தி ஆகிய பிற பாதிப்புகளும் உண்டாகும். இவையே டெங்குவிற்கு அறிகுறிகளாகும். அதிக உடல் நடுக்கம் அல்லது வலிப்பு, கடுமையான நீரிழப்பு ஆகியவை நோயின் தீவிரத் தன்மையைக் குறிக்கும். அப்படியானால் கடுமையான சிகிச்சையும் கண்காணிப்பும் மிக அவசியமாகும.

டெங்குவிற்கான பரிசோதனை

மருத்துவர்கள் முதலில் முழுமையான இரத்தப் பரிசோதனை மேற்கொள்கிறார்கள். Polymerase Chain Reaction (PCR) டெஸ்ட் போன்றவற்றின் மூலம் டெங்கு காய்ச்சலை கண்டறிகிறார்கள்.

சிகிச்சை முறை (Treatment)

டெங்கு காய்ச்சலுக்கென்று தனியாக ட்ரீட்மெண்ட் இல்லை. அசிடாமினோபென் (Acetaminophen) என்ற Tylenol காய்ச்சலுக்கு மருந்தாக அளிக்கப்படுகிறது. ஆஸ்பிரின் உபயோகப்படுத்தக் கூடாது. காய்ச்சல் தணிய ஒரு வாரத்திலிருந்து 15 நாட்கள் வரை நேரம் எடுத்துக்கொள்ளும். ஒழுங்காக ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டால் மரணத்தை ஏற்படுத்தாத வியாதிதான். முழுமையாக குணமடைய முடியும்.

தடுப்பு முறை:

கொசுவின் மூலம் இது பரவுவதால் கொசுதடுப்பு முறைகளை தீவிரமாக பின்பற்றினாலே டெங்கு காய்ச்சலுக்கு தப்பித்துக் கொள்ளலாம். வீட்டில் எப்பகுதியிலும் நீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லையெனில் கொசு உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது போல் ஆகிவிடும். கொசுவலைகள், மேட்கள், கொசுவர்த்திகள் போன்ற கொசுத் தடுப்பு முறைகள் அவசியம்.

விழிப்புணர்வுடன் இருந்து இந்த டெங்கு காய்ச்சலுக்கு தப்பி நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.

வாழ்க நலமுடன்!




.

சிறந்த மனிதர்கள் (Special People)


சின்னச் சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத் துளி.

செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட சொத்துக்கள். ஏழெட்டு பிள்ளைகள். கைதட்டினால் ஓடோடி வரும் வேலைக்காரர்கள். அந்தஸ்து, கௌரவம் என்று படாடோபமாய் வாழ்ந்தார். அவருடைய பிள்ளைகளில் கடைசி பெண்ணுக்கு மட்டும் இரண்டு கால்களும் சூம்பிப் போய் நடக்க முடியாத நிலை இருந்தது. எல்லா பையன்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் முடித்தார். எல்லாருக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தார்.

ஒருநாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக அவரை நிருபர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "உலகிலேயே நீங்கள் அதிகமாக நேசிக்கும் மனிதர் யார்?" என்ற அந்த கேள்விக்கு அந்த மனிதர் அவரது ஊனமுற்ற மகளைக் கைகாட்டினார். "நான் அநேகரை நேசித்ததுண்டு. ஆனால் என்னை மனதார நேசித்த, என் நலனை உண்மையாகவே விரும்புகிற ஒரு ஜீவன் அவள் மட்டுமே. என் செல்ல மகள்" என்று கூறியபோது அந்த சிறு பெண்ணின் கண்களிலிருந்து நீர் கசிந்தது.

அவர் மரணமடைந்த போது இறுதிச் சடங்கு முடித்து எல்லோரும் மயானத்தை விட்டு கடந்தபோதும் அவரது அந்த செல்ல மகள் மட்டும் இருட்டும் வரை சமாதிமுன் கண்ணீருடன் கதறிக் கொண்டிருந்தாள். அந்த அன்பு அப்பேர்ப்பட்டது.

எப்போதுமே எல்லாம் நன்றாக அமைந்தவர்கள் நம்மை நேசிப்பதை விட இதைப்போல உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ குறைபாடுள்ளவர்கள் நம்மை அதிகம் நேசிப்பவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் தேவைகளையும் கவனிப்பவர் எவரும் இலர். இந்த அவசர உலகில் அப்படிப்பட்ட தேவை உள்ளவர்களை சீண்டுவாரும் எவரும் இலர்.

கொஞ்சம் உற்றுப் பாருங்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் உங்களைச் சுற்றிலும் நிச்சயம் இருப்பார்கள். இன்றாகிலும் அவர்களை உற்றுப் பார்த்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்யுங்கள். அவர்கள் என்றென்றும் உங்களுக்கு நன்றிக் கடனும், அன்பும் செலுத்துவார்கள். இதனால் உங்கள் மனமும், இறைவன் மனமும் அமைதிபெறும்; இன்புறும்.

அன்பு எப்படி செலுத்த வேண்டும்? என்று நமக்கு கற்பிப்பவர்கள் குறைபாடுள்ள மனிதர்களே (People with a disability) என்பதை மட்டும் மறவாதிருங்கள்!

மீண்டும் அடுத்த சிந்தனைத் துளியில்.



.

Tuesday, October 16, 2012

உங்கள் வாழ்க்கையின் Dead Line எது?




சின்ன சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத் துளி.

எல்லாவற்றுக்கும் இறுதிக்கெடு (Dead Line) என்று ஒன்று இருக்கிறது. டெலிபோன் பில் கட்ட ஒரு இறுதிக் கெடு; கரண்ட் பில் கட்ட ஒரு இறுதிக் கெடு; வருமான வரி தாக்கல் செய்ய ஒரு இறுதிக் கெடு. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நம் வாழ்க்கையில் நிறைய இறுதிக் கெடுக்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.

சரி எல்லாவற்றுக்கும் இறுதிக்கெடு எது? Dead Line of Dead Lines எது? புத்திசாலியாய் இருந்தால் விடை கண்டுபிடித்திருப்பீர்கள். ஆம். அது மரணம்தான். மரணமே எல்லாவற்றுக்கும் Dead Line ஆக இருக்கிறது. மனிதன் இதனை உணர்வதே இல்லை. இருக்கும் வரை ஆட்டம். இறுதியில் உலகை விட்டே ஓட்டம் என்பதே மனிதர்களின் சிந்தனையாக இருக்கிறது.

நிறைய சம்பாதிக்கிறோம். வீடு கட்டுகிறோம். பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தருகிறோம். சொத்து சேர்க்கிறோம். ஜாலியாக வாழ்கிறோம். கடைசியில் மரணம் அடைகிறோம். இதற்காகத்தான் நாம் படைக்கப்பட்டோமா? மனிதப் பிறவியின் உன்னத நோக்கத்தை நாம் என்று உணர்ந்துகொள்வோம்?

சுயநல வாழ்க்கை துறந்து பொதுநல நோக்கம் கொள்வோம். இல்லாதவர்கள், வறியவர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு உதவி செய்யலாம். ஏதாவது சமூக சேவை இயக்கத்தில் பங்கெடுக்கலாம். ஏதோ நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு செய்வோம். நாம் மட்டும் வாழாமல் மற்றவர்களையும் வாழ வைப்போம். அதுவே உண்மையான சந்தோஷம்.

மரணத்தின் கௌரவம் எது? பாடையின் பின்னே கிளம்பும் புகழ்மொழிதான். அதுதான் வாழ்ந்தற்கு அடையாளம்.

எனவே,

வாழ்க்கை நிலையில்லாதது. மரணம் நிச்சயமானது. மற்றவர்களுக்கு உதவுவோம். 11 மணிக்கல்ல 10 மணிக்கே உதவுவோம். ஏனெனில் 10.30-க்கே மரணத்தை சந்திக்க நேரிடலாம்.

மீண்டும் அடுத்த சிந்தனைத் துளியில்....!



.

Monday, October 15, 2012

வியப்பூட்டும் உண்மைகள் - பகுதி 3




சில விஷயங்களை கேள்விப்படும்போது அட அப்படியா என கேட்கத் தோன்றும். அப்படிப்பட்ட சில வியப்பூட்டும் உண்மைகள் உங்கள் பார்வைக்காக:

1. ஆப்பிள், உருளைக் கிழங்கு, வெங்காயம் இவை மூன்றையும் உங்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு சாப்பிட்டால் மூன்றும் ஒரே சுவையுடையதாகவே இருக்கும். அதாவது இனிப்புச் சுவை.

2. ஒரு மனிதன் புகைபிடிப்பதை விட்டு விட்ட பின் 3 வருடங்கள் கழிந்துவிட்டதென்றால் அவனுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு, இதற்கு முன் புகைபிடிக்கும் பழக்கமே இல்லாத மனிதனுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்புக்கு சமமாகவே இருக்கும்.

3. ஐஸ்லாந்து, அண்டார்டிகா, கிரீன்லாந்து இந்த மூன்று பகுதிகளிலும் எறும்புகளே கிடையாது.

4. தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகள், தாய்ப்பால் குடித்து வளராத குழந்தைகளைவிட இயல்பாகவே 7 புள்ளிகள் அதிகமாக ஐ.க்யூ-வைப் பெற்றுள்ளன.

5. மூங்கில்கள் ஒரு நாளைக்கு 36 இன்ச் உயரம் வளர்கின்றன.

6. ஷாங்காய் நகரத்திலுள்ள சில மருத்துவமனைகள் வேலை பார்க்கும் நேரத்தில் நர்ஸ்கள் கண்டிப்பாக லிப்ஸ்டிக் போட்டிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளன.

7. வாழைப்பழத்தில் ஒரு மனிதனை சந்தோஷ உணர்வுடையவனாக மாற்றும் சில இரசாயனங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன.

8. இன்றைக்கு உலகத்தில் இருக்கிற அத்தனை அணு ஆயுதங்கள் ஏற்படுத்தும் அழிவை விட, 10 நிமிடத்தில் ஒரு சூறாவளிக் காற்று அதிக அழிவை உண்டாக்க முடியும்.

9. தாமஸ் ஆல்வா எடிசன் இருட்டைக் கண்டு மிகவும் பயப்படுவாராம்.

10. பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட அதிக வேகமாக துடிக்குமாம்.



.

Sunday, October 14, 2012

அதிகப்படியான பாரசிட்டமால் மரணத்தை விளைவிக்கும்


இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவக்குழு ஒன்று ஒரு புதிய ஆராய்ச்சி முடிவை வெளியிட்டிருக்கிறது. பாரசிட்டமால் (Paracetamol) மாத்திரைகளை அதிக டோஸ் எடுத்துக்கொண்டால் மரணத்தைக் கூட உண்டாக்கும் என்று கண்டுபிடித்திருக்கின்றனர். அதாவது இங்கிலாந்தில் தற்கொலை செய்து மாண்டுபோகிறவர்களை விட பாரசிட்டமால் அதிகமாக எடுத்துக்கொண்டு அதன் மூலம் ஈரல் பாதிக்கப்பட்டு மரணம் அடைவோர் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக கண்டுபிடித்திருக்கின்றனர்.

மருத்துவ நிபுணர்கள் போதுமான அளவுள்ள பாரசிட்டமால் மாத்திரைகள் வலிக்கும் தடுமத்துக்கும் காய்ச்சலுக்கும் மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அதே வேளையில் ஒரு நாளைக்கு 4 கிராமுக்கு அதிகமாக பாரசிட்டமால் எடுத்துக் கொண்டால் நிச்சயம் மிகப்பெரிய பாதிப்பை கல்லீரலுக்கு அளித்து முடிவில் மரணத்தை உண்டாக்குவதாக கண்டுபிடித்திருக்கின்றனர்.



டாக்டர் கென்னத் சிம்ப்ஸன் என்பவரது தலைமையில் அமைந்த ஒரு மருத்துவர் குழு இதைக் கண்டுபிடித்திருக்கிறது. எடின்பர்க்கிலுள்ள ராயல் மருத்துமனையில் அவரது குழு கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்ட 660 நோயாளிகளை தொடர்ந்து ஆராய்ந்ததில் (1992 - 2008) இதற்கு காரணம் அதிகப்படியாக எடுத்துக்கொண்ட பாரசிட்டமால்தான் எனக் கண்டுபிடித்திருக்கின்றனர். அந்த நோயாளிகளில் 161 பேர் (சராசரியாக 40 வயது கொண்டவர்கள்) இவ்விதமாக அதிக டோஸ் எடுத்துள்ளனர். அவர்கள் மற்றவர்களை விட மரணத்துக்கு அருகில் இருந்தனர்.

அளவாக எடுத்துக்கொண்டால் வலியைக் குறைக்கும். ஆனால் அதிகப்படியாக எடுத்துக்கொண்டால் கல்லீரலைப் பாதித்து மரணத்தை விளைவிக்கும் இந்தப் பாரசிட்டமாலை மருத்துவரின் ஆலோசனைப்படி அளவாக பயன்படுத்துவோம். வளமாக வாழ்வோம்.

வாழ்க நலமுடன்!




.

புரியாத கணக்கு




பல்லைக் காட்டாதே
என்ற
அம்மாவின் குரலுக்கு
பல்லைக் காட்டினாள்

வலதுகையால் எதையும் கொடு
என்ற
அப்பாவின் கேட்டலுக்கு
இடதுகையால் பதில்

தரையைப் பார்த்துத்தான் நடக்கணும்
அக்காவின்
அறிவுறுத்தலுக்குப் பின்
நடக்கவேயில்லை தரையைப் பார்த்து

கழித்தலும்
கூட்டலும்
வகுத்தலும்
அறிந்த அவள் குடும்பத்திற்கு
புரியாமலே போனது
இந்த
எதிர்விகிதக் கணக்கு.





.

Saturday, October 13, 2012

முகமூடி




என் அப்பாவின் முகமூடியை
நான் அணிந்த
அதே நாளில்
என் முகமூடியை
அவர் அணிந்துகொண்டார்

இலேசாக இருக்கிறதாம்
சந்தோஷப்பட்டுக் கொண்டார்

அவர் முகமூடி
கனம்தான்
மகா கனம்

அணிந்த சில நாட்களாக
நாள்தோறும் காயங்கள்
கிழித்து கிழித்து
சிரித்த முகமூடியை
கழற்றி எறிந்தேன்
காணவில்லை
என்
முகத்தில் பாதி.






.

Monday, October 8, 2012

கோட்டு வீடு




நீளமாய் கோடுகள் வரைந்து
கால் நீட்டிப் படுத்துக் கொண்டேன்
அகலம் போதாதென்ற
அறையின் புலம்பலுக்காக
குறுக்காக இரு கோடுகள் வரைந்தேன்
கோரிக்கைகளின் கூட்டத்தால்
வீடே கோடுகளானது
பாதம் பதிக்க இடமில்லாததால்
அழிக்கத் தொடங்கினேன்
பாதங்களை...!




.

Saturday, October 6, 2012

உணவு எப்படி இருக்க வேண்டும்? - மகாத்மா காந்தி



ஹரிஜன் இதழில் 25.01.1942 அன்று காந்திஜி எழுதியிருக்கிற ஒரு சிறிய கட்டுரையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். எதையெல்லாம் நாம் சாப்பிடலாம் என்று நிறைய பேர் நிறைய ஐடியா சொன்னாலும் நம்ம காந்திஜி என்ன சொல்றார்னு பார்த்து விடலாம். இனி நேரடியாக கட்டுரைக்குப் போய்விடலாம்.


குறைந்த அளவு ஆகாரம்

"ஒரு சமயத்தில் ஒரே ஒரு தானியத்தை மட்டும் உபயோகியுங்கள். கறிகாய், பழங்கள் ஆகியவற்றுடன் சப்பாத்தி, சாதம், பருப்புகள், பால், நெய், வெல்லம், எண்ணெய் முதலியவற்றைச் சாதாரணமாகச் சேர்த்து குடும்பங்களில் உபயோகிக்கிறார்கள். இந்தச் சேர்க்கை தேக ஆரோக்கியத்துக்கு ஒவ்வாதது என்று நான் கருதுகிறேன்.

பால், பாலாடைக்கட்டி, முட்டைகள் அல்லது மாமிசம் இவற்றைச் சாப்பிட்டு மிருகப் புரதத்தைப் பெறுகிறவர்கள், தாவரப் புரதம் மாத்திரமே ஏழைகளுக்கு கிடைக்கிறது. பணக்காரர்கள் பருப்பையும், எண்ணெயையும் சாப்பிடுவதை விட்டுவிட்டால் மிருகப் புரதமோ, மிருகக் கொழுப்போ கிடைக்காத ஏழைகளுக்கு அத்தியாவசியமான இவை இரண்டும் தாராளமாகக் கிடைக்கும்.

மேலும், சாப்பிடும் தானியம் நீர் கலந்ததாக இருக்கக் கூடாது. உலர்ந்ததாக, குழம்பு ஊற்றிக் கொள்ளாமல் சாப்பிட்டால் பாதியளவு தானியமே போதுமானது. வெங்காயம், காரட், ராடிஷ் (சிவப்பு முள்ளங்கி), பச்சையாக தின்னக் கூடிய கீரைகள், தக்காளி ஆகியவற்றைப் பச்சையாகக் கலந்து வைத்துக்கொண்டு சாப்பிடுவது நல்லது.

சமைத்த காய்கறிகள் எட்டு அவுன்ஸ் சாப்பிடுவதற்குப் பதிலாக ஒன்று அல்லது இரண்டு அவுன்ஸ் பச்சைக் காய்கறி கலப்பே போதுமானது. சப்பாத்தியையோ ரொட்டியையோ பாலில் நனைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது. இப்படிச் சாப்பிட்டு பழகுவதற்கு, முதற்படியாக ஒரு வேளை பச்சைக் காய்கறியுடன் சப்பாத்தி அல்லது ரொட்டியும், மற்றொரு வேளை சமைத்த கறிகாயுடன் பாலோ தயிரோ சாப்பிடலாம்.

தித்திப்பு பலகாரங்களை அடியோடு விட்டுவிட வேண்டும். அதற்குப் பதிலாக சிறிய அளவில் வெல்லத்தையோ, சர்க்கரையையோ பாலுடனோ, ரொட்டியுடனோ, தனியாகவோ சாப்பிடலாம்.

பழங்களை சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கப் பழங்கள் கொஞ்ச அளவில்தான் தேவை. அதிகப் பணச் செலவாகும் பொருள் இது. பணக்காரர்களை விட பழங்கள் ஏழைகளுக்கும் நோயாளிகளுக்குமே அதிகமாகத் தேவைப்படுபவை. பணக்காரர்கள் அளவுக்கு மீறிப் பழங்களை தின்றுவிடுவதால், அவை ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் கிடைக்காது போய்விடுகின்றன.

ஊட்டச்சத்து சாத்திரத்தை ஆராய்ந்த எந்த மருத்துவரும் நான் யோசனை கூறியிருக்கும் ஆகாரம் உடலுக்கு எந்த தீங்கையும் விளைவிக்காது: அதற்கு மாறாக நல்ல தேக ஆரோக்கியம் பெற உதவும் என்பதற்கு அத்தாட்சி கூறுவர்."

- மகாத்மா காந்தி
25.01.1942.





.

Friday, October 5, 2012

வாய்விட்டு அழுவதும், சத்தமிடுவதும் (Screaming and Grunting) உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது - எப்படி?


ஆரோக்கியமாக வாழ நம் குரலையும், அழுகையையும் பயன்படுத்தலாம். அதைப் பற்றியதே இக்கட்டுரை. அழுகையும், சத்தம் போட்டு கத்துவதும் உங்களது வேலைத் திறனை பன்மடங்கு அதிரிக்கிறது. போராட்டக் குணத்தை அதிகப்படுத்துகிறது. வெற்றியைப் பெற்றுத் தருகிறது. உதாரணமாக கோல்ப் மற்றும் டென்னிஸ் விளையாடுபவர்களைப் பாருங்கள்! ‘ஆ’ ‘ஊ’ (‘Yah’ ‘Yey’) ஏகத்துக்கு கத்துவார்கள். காரணம் தங்களது திறனை மேம்படுத்துவதற்காகவே.


நம்முடைய சுவாசம் (Breathing) நம்முடைய வேலை திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சுவாசத்தை ஒழுங்குபடுத்தும்போது அதிக வேலைத்திறன் நம்மிடமிருந்து வெளிப்படும். சுவாசத்தை ஒழுங்குபடுத்த சிறந்த வழி கத்துவதும் சத்தமிடுவதும்தான். பளுதூக்குகிற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் கவனித்துப் பார்த்திருப்பீர்கள். தொய்ந்து போகிற நேரங்களில் மிகுந்த சத்தமிடுவார்கள். காரணம் சத்தமிடுதல் சுவாசத்தை ஒழுங்குபடுத்துகிறது. சுவாசமானது வேலைத்திறனை அதிகப்படுத்துகிறது. வெற்றியையும் பெற்றுத் தருகிறது. சத்தமிடுகிற வீரர்கள் சத்தமிடாமல் அமைதியாக விளையாடுகிற வீரர்களைவிட அதிக திறனை வெளிப்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.


ஒன்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு சத்தமாக கத்துகிறீர்களோ அவ்வளவு அதிகமாக உங்களுடைய வேலைத்திறனும் வெளிப்படும்.

கத்துதல் அல்லது அழுகையின் பயன்கள் கீழே:

1. டென்சனை குறைக்கிறது
2. மூச்சுத்திறனை அல்லது சுவாசத்திறனை ஒழுங்குபடுத்துகிறது.
3. மனதை ஒருமுகப்படுத்துகிறது
4. கூடுதல் பலத்தை தருகிறது



கராத்தே, குங்பூ போன்ற கலைகளை பழகுபவர்களை கவனித்துப் பாருங்கள் எப்படி கூச்சலிடுகிறார்கள் என்று. காரணம் தங்களது சக்தியை அதிகப்படுத்தவே அப்படி செய்கிறார்கள். மேலும் தங்களது தொழில்நுட்பத்திறன் துல்லியமாகவும், வேகமாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

இது எப்படி விஞ்ஞானரீதியாக சாத்தியமாகிறது?

வாய்விட்டு கத்துவதும் அழுவதும் நமது உடல் இரசாயனத்தில் (Body Chemistry) பெரும் பங்கு வகிக்கிறது. அது நமது மூளையிலிருக்கும் அட்ரினலைனை(Adrenaline) ரிலீஸ் செய்து இதயத்தை நன்கு துடிப்புடன் செயல்பட வைத்து, இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தி, உற்சாகத்தையும் அளிக்கிறது. இதனால்தான் நமக்குப் பிடித்த இசையை சத்தமாக கேட்கும்போது மிகுந்த உற்சாக உணர்வைப் பெறுகிறோம். சக்தியும் பெறுகிறோம்.

சத்தமிடுதல் உங்களது முதுகுப்பகுதி மற்றும் வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகளையும் விரைவாக செயல்பட ஊக்குவிக்கிறது. இதன் மூலம் வேகமாக செயல்பட முடிகிறது. நுரையீரல் சுறுசுறுப்பாக இயங்கவும் இது தூண்டுகிறது.

கடைசியாக, வாய்விட்டு சத்தமிடுதலும், அழுவதும் உங்களது மூளையினை சுறுசுறுப்பாக்கி தன்னம்பிக்கையை அதிரிக்கிறது. எந்த வேலையாக இருந்தாலும் சத்தமாக உங்ககளை நீங்களே உற்சாகப்படுத்திக்கொண்டு செய்யுங்கள். நிச்சயம் முன்பைவிட வேகமாகவும், வித்தியாசமாகவும் வேலை செய்வீர்கள். வேலை செய்யும்போது சத்தமிடுபவர்களை தவறாக புரிந்துகொள்ளாமல் உற்சாகப்படுத்துங்கள்...!


வாழ்க நலமுடன்!





.

Wednesday, October 3, 2012

உங்கள் உடல் கடிகாரமும் (Body Clock) பராமரிக்கும் விதமும்


நாம் அன்றாடம் காலையில் எழுந்திருக்கிறோம். குறிப்பிட்ட நேரத்துக்கு பல் துலக்குகிறோம். குறிப்பிட்ட நேரத்துக்கு பசிக்கிறது. சாப்பிடுகிறோம். இரவு நேரமானதும் குறிப்பிட்ட நேரத்தில் உறக்கம் வருகிறது. தூங்குகிறோம். இப்படி அன்றாடம் நாம் செய்யும் செயல்களை அனிச்சையாக செய்கிறோம் அல்லவா? இதைச் செய்யும்படி நம் உடலுக்குள்ளே உள்ள அமைக்கப்பட்டிருக்கிற அமைப்புதான் இந்த உடல் கடிகாரம் (Body Clock) ஆகும். மருத்துவர்களை இதனை Circadian Rhythm என்கிறார்கள். இதுவே Biological Clock எனப்படுகிற இந்த Body Clock ஆகும்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகள், பூச்சிகள், மரங்கள், பூக்கள், ஏன் சிறு பாக்டீரியாக்கள், வைரஸ்களுக்குக் கூட இந்த Body Clock உடலுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் இது மூளையில் ஒரு சிறுபகுதியில் அமைந்திருப்பதாக நம்புகிறார்கள். நமது உறக்கம் மற்றும் விழிப்பு போன்ற முக்கியமான விஷயங்களை இந்த உடல் கடிகாரமே தீர்மானிக்கிறது.

உடல் கடிகாரம் எப்படி வேலை செய்கிறது?



நமது உடல் சூரிய வெளிச்சத்தையும் நிலவு வெளிச்சத்தையும் வைத்து இது பகல், இது இரவு என்று உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வு எப்படி வருகிறது என்றால் நமது மூளையில் Optic Nerves எனப்படுகிற நரம்பு முடிச்சுகளுக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள Supra Chiasmatic Nucleus (SCN) எனப்படுகிற ஒரு பகுதிதான் இதற்கு காரணமாகிறது. இதுவே இவ்விதமான ஒரு கடிகாரம் போன்ற அமைப்புடன் நம் உடலை இயக்குகிறது. உறக்க விழிப்புக்கு காரணமான Melotonin உற்பத்தி மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றிலும் இந்த SCN தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

25 மணி நேர உடல் கடிகாரம்

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. ஆனால் நமது உடல் கடிகாரமோ 24 மணி நேரத்துக்குப் பதிலாக 25 மணி நேரத்துக்கு ஒருமுறை செயல்படும் விதமாக படைக்கப்பட்டிருக்கிறது. பூமி கடிகாரத்திற்கும், உடல் கடிகாரத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் ஒரு மணி நேரம் ஆகும். அதாவது தெளிவாகப் புரியும்படி சொன்னால் வெளிச்சம் இல்லாத இருட்டறைக்குள் ஒரு மனிதனை அடைத்து வைத்தால் அவன் இந்த 25 மணி நேர உடல் கடிகார அமைப்பின்படியே செயல்படுவான் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுதான் பார்வையற்றவர்களின் தூக்கப் பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது. கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்கு பிரயாணம் செய்யும்போது இந்த 25 மணி நேர அமைப்பினால்தான் நாம் ரிலாக்ஸ் செய்துகொள்ள முடிகிறது. Time Zone மாற்றத்திற்கும் மாறிக்கொள்ள முடிகிறது.

எல்லாவற்றிற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்குங்கள்

நமது உடலில் இரத்த அழுத்தம், இரத்த ஓட்டம், இரத்தம் உறைதல் மற்றும் அனைத்து இயக்கங்களும் இந்த உடல் கடிகாரத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதனால்தான் அறுவை சிகிச்சைகளும், மருந்து கொடுக்கும் நேரங்களும் மருத்துவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் இருக்கும்படியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.




உதாரணமாக புற்றுநோயாளிகளுக்கு ஹீமோதெரபி (Chemotherapy) சிகிச்சை கொடுக்கும்போது இரவு 7 மணிக்கு சிகிச்சையளித்தால் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இந்த இரவு 7 மணிக்கு மருந்து எடுத்துக்கொண்டால் முழுப்பயன் கிடைப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சையிலும் இந்த உடல் கடிகாரமே பெரும் பங்கு வகிக்கிறது. அதிக எடையுள்ளவர்கள் இந்த உடல் கடிகாரத்துக்கு ஏற்ப தங்களது உணவுமுறையை மாற்றிக் கொண்ட போது அவர்களது எடை குறைப்பு மிகுந்த பயனளித்தது.

ஒரு மருத்துவர் தனது உணவுப் பழக்கத்தைப் பற்றி இப்படி சொல்கிறார். தான் தினமும் காலை 6 மணிக்கு காலை உணவும், மதியம் சரியாக 12 மணிக்கு மதிய உணவும், இரவு சரியாக 7 மணிக்கு இரவு உணவும் எடுத்துக்கொள்வதாகவும் இடையில் வேறு எவ்வித உணவும் எடுத்துக்கொள்வதில்லை எனவும். இது நிறைவாகவும், நோயின்றியும், மகிழ்ச்சியுடனும் வாழ வழி செய்வதாகவும் கூறுகிறார்.

Circadian Rhythm of Sleep

நமது பெரும்பாலான உடல்நலக் குறைபாடுகளுக்கு காரணமே இந்த உடல் கடிகாரத்திற்கு ஏற்ப நமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளாதுதான் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சரியான நேரத்துக்கு தூங்குவது, சரியான நேரத்துக்கு எழுந்திருப்பது, சரியான நேரத்துக்கு சாப்பிடுவது ஆகியவற்றை முறையாக கடைப்பிடித்தாலே பெரும்பாலான நோய்களுக்கு நாம் தப்பிவிடலாம்.

இனி இந்த உடல் கடிகாரத்துக்கு ஏற்பவே வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொள்வேன். இதனைச் சீர்குலைக்க வரும் என் வேலை, தொழில், பொழுதுபோக்குகள் எதுவாக இருந்தாலும் அனுமதிக்க மாட்டேன் என்று வைராக்கியத்துடன் ஒரு முடிவெடுத்து வாழ்ந்தால் இனி உங்களது உடல்நலத்துக்கு வானமே எல்லை...!

வாழ்க நலமுடன்!




.


Tuesday, October 2, 2012

வறுமையின் குணம் சிரிப்பு






பேருந்தில்
அந்த பெண்
எவ்வளவு ஏசியும்
எழவில்லை அந்த சிறுவன்

இடமும் வலமுமான
இடப்பெயர்ச்சி
மேலும் கீழுமாக மாறவில்லை

காரமும் உப்புமாக
பொரிந்த
மசாலாப் பேச்சுகளுக்கு
கவிழ்ந்த பார்வையே பதில்

பொறுத்து பொறுத்துப் பார்த்தவள்
குண்டுக்கட்டாய் தூக்கியபோது
பிருஷ்டத்தில் சிரித்தது
வறுமை.




.