Wednesday, October 17, 2012

சிறந்த மனிதர்கள் (Special People)


சின்னச் சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத் துளி.

செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட சொத்துக்கள். ஏழெட்டு பிள்ளைகள். கைதட்டினால் ஓடோடி வரும் வேலைக்காரர்கள். அந்தஸ்து, கௌரவம் என்று படாடோபமாய் வாழ்ந்தார். அவருடைய பிள்ளைகளில் கடைசி பெண்ணுக்கு மட்டும் இரண்டு கால்களும் சூம்பிப் போய் நடக்க முடியாத நிலை இருந்தது. எல்லா பையன்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் முடித்தார். எல்லாருக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தார்.

ஒருநாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக அவரை நிருபர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "உலகிலேயே நீங்கள் அதிகமாக நேசிக்கும் மனிதர் யார்?" என்ற அந்த கேள்விக்கு அந்த மனிதர் அவரது ஊனமுற்ற மகளைக் கைகாட்டினார். "நான் அநேகரை நேசித்ததுண்டு. ஆனால் என்னை மனதார நேசித்த, என் நலனை உண்மையாகவே விரும்புகிற ஒரு ஜீவன் அவள் மட்டுமே. என் செல்ல மகள்" என்று கூறியபோது அந்த சிறு பெண்ணின் கண்களிலிருந்து நீர் கசிந்தது.

அவர் மரணமடைந்த போது இறுதிச் சடங்கு முடித்து எல்லோரும் மயானத்தை விட்டு கடந்தபோதும் அவரது அந்த செல்ல மகள் மட்டும் இருட்டும் வரை சமாதிமுன் கண்ணீருடன் கதறிக் கொண்டிருந்தாள். அந்த அன்பு அப்பேர்ப்பட்டது.

எப்போதுமே எல்லாம் நன்றாக அமைந்தவர்கள் நம்மை நேசிப்பதை விட இதைப்போல உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ குறைபாடுள்ளவர்கள் நம்மை அதிகம் நேசிப்பவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் தேவைகளையும் கவனிப்பவர் எவரும் இலர். இந்த அவசர உலகில் அப்படிப்பட்ட தேவை உள்ளவர்களை சீண்டுவாரும் எவரும் இலர்.

கொஞ்சம் உற்றுப் பாருங்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் உங்களைச் சுற்றிலும் நிச்சயம் இருப்பார்கள். இன்றாகிலும் அவர்களை உற்றுப் பார்த்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்யுங்கள். அவர்கள் என்றென்றும் உங்களுக்கு நன்றிக் கடனும், அன்பும் செலுத்துவார்கள். இதனால் உங்கள் மனமும், இறைவன் மனமும் அமைதிபெறும்; இன்புறும்.

அன்பு எப்படி செலுத்த வேண்டும்? என்று நமக்கு கற்பிப்பவர்கள் குறைபாடுள்ள மனிதர்களே (People with a disability) என்பதை மட்டும் மறவாதிருங்கள்!

மீண்டும் அடுத்த சிந்தனைத் துளியில்.



.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

6 comments:

  1. உண்மை...

    குறைபாடுள்ள மனிதர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன...

    ReplyDelete
  2. சரியாக சொல்லி உள்ளீர்கள்....

    ReplyDelete
  3. கொஞ்சம் உற்றுப் பாருங்கள்.

    உண்மைதான் அவர்களுக்கு செய்யும் சிறு உதவியும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றே என்பதை அனைவரும் உணரவேண்டும்.

    ReplyDelete
  4. சிந்தனைத் துளி மனதில் எண்ண அலைகளை எழுப்பத் தவறவில்லை. நன்றாகக் சொல்லியிருக்கிறீர்கள் துரை. அருமை.

    ReplyDelete
  5. நிச்சயமாக உண்மை.....
    (ஆரம்பத்தைப் படித்ததில் சுயம்வரம் படம் நினைவுக்கு வந்தது)

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.