Tuesday, February 28, 2012

இடைத்தேர்தல்

முனை உடைந்து போன
கடிகார முட்கள்
கூடிப் பேசி
முடிவு செய்துவிட்டன
கடிகாரத்தை
உடைத்து விடுவதென.





.

Monday, February 27, 2012

ஐந்து பைசா செலவில்லாமல் நம் உடல்நலனை நாமே பரிசோதிக்க ஒரு சின்ன டெஸ்ட்

சில எளிமையான உடற்பயிற்சிகள் (அல்லது உடல் அசைவுகள்) மூலம் நீங்கள் என்றும் இளமையாக ஆரோக்கியமாக வாழலாம். அதற்கு முதலில் ஒரு சின்ன டெஸ்ட் மூலம் உங்கள் உடல் மற்றும் உங்கள் மூளை எந்த கண்டிசனில் இருக்கிறது என்று பார்த்துவிடலாம்.

உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது? உங்கள் மூளை எப்படி இருக்கிறது? இவற்றைக் கண்டறிய பெரிய மருத்துமனைக்கெல்லாம் போகவேண்டாம். ஒரு சின்ன பரிசோதனை எந்த செலவுமில்லாமல் நாமே செய்து பார்த்துவிடலாம். ரெடிதானே?




மேலே உள்ள படத்தில் காட்டியது போல் இரண்டு கைகளையும் நேராக நீட்டிக்கொண்டு, ஒரு காலை உள்பக்கமாக சற்று மடித்துவைத்துக்கொண்டு எந்தப் பிடிமானமும் இல்லாமல் ஒற்றைக் காலில் நின்று கொள்ளுங்கள். உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள். இந்த நிலையில் 10 விநாடிகள் தொடர்ந்து உங்களால் நிற்க முடிந்தாலே போதும். உங்கள் உடலும் மூளையும் ஆரோக்கியமாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். திருப்திதானே?

உங்களால் 5 விநாடிகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லையென்றால் உடல் நிலையும் மனோநிலையும் சரியில்லை என்றுதான் அர்த்தம். நீங்கள் இனி மிகவும் கவனமாக உடல் நிலையையும் மனநிலையையும் பேணவேண்டும். கவனம்.

கீழே உள்ள போட்டோவில் உள்ளது போல் உங்களது குழந்தைகள் அல்லது எந்தக் குழந்தைகளுடனாவது காலை அல்லது கையைத் தூக்கி விளையாடுங்கள். அது மிகவும் நல்லது.




மேலும் கீழே காட்டப்பட்டுள்ள மூளையின் படத்தைப் பாருங்கள்.




சிவப்பு குறியிடப்பட்டுள்ள மூளையின் பகுதிகள்தான் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதற்கான அறிகுறியாகும். இது ஒரு சி.டி. ஸ்கேன் படமாகும். இந்த குறிப்பிட்ட பகுதிகள் ஆரோக்கியமாக இல்லை என்றால்தான் மேலே சொன்ன சிறிய பயிற்சியினை (அதாவது ஒற்றைக் காலில் நிற்பது ) 5 விநாடிகளுக்கு மேல் செய்ய இயலாமல் போகும்.


அப்படிப்பட்டவர்கள் மற்றும் எல்லோருமே கீழ்க்கண்ட படங்களில் கண்டபடி எளிய உடற்பயிற்சிகளை தினமும் ஒரு அரைமணி நேரம் செய்துவந்தாலே போதும். பாதிப்புகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமடையலாம்.







நலமுடன் வாழ்க !.





.

Saturday, February 25, 2012

பின்னோக்கி நடத்தல் மற்றும் ஓடுதல் (Backward Walking and Running) - சில உண்மைகள்




நாம் சாதாரணமாக எப்படி வாக்கிங் அல்லது ரன்னிங் போகிறோம்?
முன்னோக்கி நடக்கிறோம். முன்னோக்கி ஓடுகிறோம். ஆனால் பின்னோக்கி நடத்தல் அல்லது பின்னோக்கி ஓடுதல் (Backward Walking and Running) என்பது முன்னோக்கி நடத்தல் அல்லது ஓடுதலைவிட மிகவும் சிறந்த பலனைத் தருகிறது. அதாவது நம்முடைய கலோரியை அதிகமாக எரிக்கிறது. நம்முடைய கேட்கும் திறனும், பார்வைத்திறனும் அதிகரிக்கிறது. அத்தோடு நம்முடைய உணர்வுகளை கூர்மையாக்குகிறது. எப்படியெனில் பின் நோக்கி நடக்கும்போது ஏதாவது பொருளின் மேல் அல்லது ஆட்களின் மேல் இடித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக நாம் இருப்பதால் நாளடைவில் நம்முடைய உணர்வுத்திறனும் அதிகரிக்கிறது.

நம்முடைய முன்னோர்களாலும் பின்பற்றப்பட்ட அற்புதமான உடற்பயிற்சிதான் இந்த பின்னோக்கி நடத்தல் அல்லது ஓடுதல். இது நம்முடைய மன மற்றும் உடல் உறுதிக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. மேலைநாடுகளில் குறிப்பாக ஜப்பானில் இது ஒரு இயக்கம் போலவே பின்பற்றப்படுகிறது. இப்படி கடந்த 40 வருடங்களாக செய்பவர்கள் மற்றவர்களை ஆரோக்கியமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.




இந்த பின்னோக்கி நடத்தல் நம்முடைய இதயம், நுரையீரல், தசைகள் மற்றும் மூட்டுகள் ஆகியவற்றைப் பலப்படுத்துகிறது. மேலும் நம்முடைய இடுப்பு, கால்கள் ஆகியவற்றையும் பலப்படுத்துகிறது. நம்முடைய வயிறுக்கும் முதுகுக்கும் சரியாக வேலை கொடுப்பதால் இரண்டுமே வலுப்பெறுகிறது.
சுருக்கமாகக் கூறுவதென்றால் நாம் பின்னோக்கி நடத்தலில் நடக்கும் ஒவ்வொரு 100 அடி நடைகளும் முன்னோக்கி நடக்கும் 1000 அடி நடைகளுக்குச் சமமானது.

சிலரைக் கேட்டால வாக்கிங்கோ ஜாக்கிங்கோ போக நேரம் இல்லை என்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இப்படி பின்னோக்கி நடந்தால் அல்லது ஓடினால் நேரம் மிச்சமாகும். அதாவது 100 ஸடெப் நடந்தாலே 1000 ஸ்டெப் நடந்ததற்கு சமமாகும். மேலும் அதை விட பலனும் அதிகமாகும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இப்படி பின்னோக்கி நடத்தலின் போது நம் கால்கள் வளையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நேராக இருந்தால்தான் முழுப்பலனும் கிடைக்கும்.

நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. நம்முடைய வீடு அல்லது அலுவலகம் ஆகியவற்றின் மாடியே போதும். 100 அடி நடந்தால் போதுமானது. மிகுந்த பலன் கிடைக்கும் என்பது உறுதி. பின்னால் கவனமாக பார்த்து நடக்கவேண்டும் என்பதுதான் இதற்கான ஒரே நிபந்தனை. மற்றபடி பலனோ வானளவு.

பின்னோக்கி நடந்து அல்லது ஓடி மிகுந்த பலனைப் பெற்று வாழுங்கள் !

நலமுடன் வாழ்க !





.

தினமும் குறைந்தது ஏழு நிமிடங்கள் சிரித்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால்?



சிலர் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களைப் பார்த்து பலர் சொல்வது எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கக் கூடாது. பைத்தியம் என்று நினைப்பார்கள் என்று. ஆனால் உண்மை என்ன தெரியுமா? பார்ப்போம்.


இன்று நிறைய விஞ்ஞானிகளும், பல்கலைக்கழங்களும் சிரிப்பைக் குறித்தும் அதுவும் பலத்த சிரிப்பைக் குறித்தும் நிறைய ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். அவைகளின் சுருக்கம் சிரிப்பானது அழுகை, கோபம் இவற்றை விட நம் உடலுக்கு நன்மை விளைவிப்பதாகும் என்பதே ஆகும்.



நீரிழிவு நோயாளிகள் நன்றாக அடிக்கடி சிரிக்கும் வழக்கமுடையவர்களானால் சீக்கிரம் குணமடைவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. கேன்சர் நோயாளிகளும் விரைவில் குணமடைகிறார்கள். ஞாபகசக்தி குறைவுள்ளவர்களுக்கு சிரிப்பு வைத்தியம் அளித்ததில் அவர்களுக்கு நன்றாக நினைவுத்திறன் திரும்பியதாம். சிரிப்பு நம்முடைய மூளையையும் இளமையாக வைக்கிறதாம். நோய்களை குணமாக்குவதில் சிரிப்புக்கு உள்ள முக்கியத்துவம் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும்.


ஜப்பானில் ஒரு விஞ்ஞானிகள் குழுவொன்று ஒரு ஆராய்ச்சி செய்தது. எப்படியென்றால் வயதான சில நபர்களை ஒரு நகைச்சுவை நாடகம் ஒன்றிற்கு அனுப்பிவைத்து ரசிக்க வைத்தது. அனுப்பும் முன்பாகவும், நாடகம் முடிந்தபிறகும் அவர்களது இரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டன.



பரிசோதனையின் முடிவு விஞ்ஞானிகளை ஆச்சர்யப்பட வைத்தது. அதாவது நாடகம் முடிந்த பிறகு அவர்களது இரத்தத்தில் ஆச்சர்யப்படத் தக்க விதத்தில் ஒரு இரசாயன மாற்றம் ஏற்பட்டிருந்தது. இரத்தத்தில் உள்ள கூட்டுப்பொருள் ஒவ்வொன்றும் ஆச்சர்யப்படத்தக்கவிதத்தில் ஆரோக்கியமாக மாறியிருந்தன. அதாவது குறுகிய நேரத்தில அவர்களது இரத்த அணுக்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மாறியிருந்தன. நகைச்சுவை உணர்வானது மனதை மட்டுமல்ல உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பது மருத்துவ விஞ்ஞானம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.



உணர்ச்சிகள் நம்முடைய இரத்தத்தில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்துபவை. நன்றாக சிரிக்கும்போது இரத்தத்தில் உள்ள எண்டோதிலியம் (Endothelium) என்ற இரத்த திசுக்கள் நன்றாக விரிவடைகின்றன. ஆகையால் இரத்த ஓட்டம் நன்றாக நடைபெறுகிறது. அதே நேரம் மன அழுத்தத்தின் போது இவை நன்றாக சுருங்குகின்றன. இரத்த ஓட்டமும் தடைபடுகிறது என்று அந்த ஆராய்ச்சி குறிப்புகள் தெரிவிக்கின்றன. நம்முடைய இதய தசைகளும் நன்றாக சிரிக்கும்போது நன்றாக இயங்குவதாகவும், மன அழுத்தத்தின் போது சரியாக செயலாற்ற இயலா நிலையில் இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு நிமிடங்களாவது சிரிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.




நன்றாக நகைச்சுவை உணர்வுள்ள, நன்றாக சிரிக்கும் தன்மையுள்ள குடும்பங்களில் நோய்கள் விரைவில் குணமடைகின்றன என்று மேலும் அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மூச்சுக்குழலும் சீராக இயங்குகிறதாம்.
முடிவாக, நன்றாக சிரியுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். ஏனென்றால் சிரிப்பு உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கிறது என்று சொல்வதை விட வாழும்வரை நோயின்றி வாழலாம் என்ற உறுதியைக் கொடுக்கிறது.


வாழ்க நலமுடன் !




.

Friday, February 24, 2012

ஹைக்கூ கவிதைகள்

தீர்ப்பு வந்த பிறகும்
வழக்கு தொடர்கிறது
காதல் தோல்வி.

.........

பள்ளிக்குப் போன சிறுமி
பெரியாஸ்பத்திரிக்கும் போனாள்
பிரசவத்திற்காக.

.........

பின்னோக்கிச் சென்றது
அரசுப் பேருந்து
டாஸ்மாக் அழைப்பு.

........

காதலித்துப் பார்
முடி நரைக்காது
மரணம் முந்துவதால்.

.......

உடற்பயிற்சி செய்தான்
உடல் வலுத்தது
மனைவிக்கு.

.......






.

Wednesday, February 22, 2012

இந்தியாவின் நிறம்



ஆழக்கடலின் அடிவாரத்தில்
அந்த
நிசப்த கருவறையின்
மெல்லிய இதழ்விரிப்பில்
உட்புகுந்து....
நீந்தத் தொடங்கினேன்

அங்கோர் அழகான உலகம்
அழகானதோர் அரண்மனை
எத்தனையோ நந்தவனங்கள்
அழகழாய்ப் பூக்கள்

விநோத விலங்குகள்
வேடிக்கை பிராணிகள்
விசித்திர தாவரங்கள்

அது ஒரு அற்புத உலகம்
கடவுள் கவிஞர்களுக்கென்றே கட்டிய
அன்பு மாளிகை அது

அங்கிருந்தது ஓர்
மாயக்கண்ணாடி
அதனருகே அழைத்துப்போனான்
அந்நாட்டு அரசன்

பழைய வாழ்க்கையை
படம்பிடித்துக் காட்டுமாம்
அதன் பெருமை பேசினான்

உங்கள் வயதைச் சொல்லுங்கள்
நிகழ்வுகளைக் காட்டி
பரவசப்படுத்தும் என்று
புகழ்மாலை பாடினான்

நேரே நின்று சொன்னேன்
பனிரெண்டு வயது
அவ்வளவுதான்

என் பால்யவயது நாடகங்கள்
மேடையறின அக்கணமே
அம்மாவின் கரம்பற்றி
கடைவீதியில் சுற்றியது
அப்பாவின் பழைய சைக்கிளேறி
ஆட்டம் போட்டது என்று
அமர்க்களப்படுத்தியது
மாயக் கண்ணாடி

இருபது வயது என்று
கூறிய அடுத்தநொடி
பரவசப்படுத்தின அந்த
இளமை நாட்கள்

கைநிறைய ரோஜாக்களோடும்
பைநிறைய கடிதங்களோடும்
நகர்ந்த
அந்த
நந்தவன நாட்களை
மீண்டும் சுவாசித்தேன்

என் எதிர்காலத்தை காட்டுவாயா
கேட்டதும்தான் தாமதம்
வயது மட்டும் கேட்டது
சொல்லச் சொல்ல......ஆஹா...

பார்க்க பார்க்க பரவசம்
கடைசியாக....
என் இதய சட்டசபையில்
ஓர் தீர்மானம் நிறைவேற்றி
கேட்டேவிட்டேன்

மனிதர்களுக்கு மட்டும்தான் காட்டுவாயா
தேசங்களுக்குமா என்று
தேசத்தின் பெயர் மட்டும் சொல்
கண்ணாடியின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்தேன்

அமெரிக்காவென்றேன்
ஆப்பிரிக்காவென்றேன்
நியூசிலாந்தென்றேன்
இங்கிலாந்தென்றேன்
வண்ண வண்ண திரைப்படங்கள்
திரையில் நிழலாடின
ஒவ்வொன்றின் எதிர்காலம் கண்டு
காதுவரை நீந்தின
என் கண்மீண்கள்

கடைசியாக.....
இந்தியா என்றபோது
ஒரே நிசப்தம்....
சற்றுநேரம் கழித்து
திரை விரிந்தது

திரைகண்டு
ஒரு நிமிடம்
சட்டென்று நின்றுபோய்
மீண்டும்
துடித்தது என் இதயம்

காரணம்
இந்தியாவின் நிறம்
கருப்பு......!





.

Monday, February 20, 2012

நம் அரசியல்வாதிகளிடமிருந்து நான் கற்ற வித்தை



(இன்றைய அரசியல்வாதிகள் மேடையில் ஆளாளுக்கு ஒரு குட்டிக்கதை சொல்லி அசத்துகின்றனர். அதைப்பார்த்து நானும் இந்த குட்டிக்கதையை சொல்லத் துணிந்தேன். இதைப் படித்தவுடன் நம்ம அரசியல்வாதிகள் உங்கள் ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல மக்காஸ்...)

அந்தக் காட்டில் கிழப்புலி ஒன்று இருந்தது. அது தங்கியிருந்த இடத்தில் நிறைய எலிகள் இருந்தன. உணவைப் புலி உண்பதற்கு முன்னர் எலிகள் அதை உண்டு காலம் பிழைத்து வந்தன.

பசியால் துடித்த புலி நண்பன் நரியிடம் “ இதற்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டது. “பூனை ஒன்றை இங்கே வைத்திருங்கள்” என்றது நரி.

பூனை ஒன்றை அழைத்த புலி “நீ என்னுடனேயே இருக்க வேண்டும். எலித்தொல்லை எலித்தொல்லை தாங்க முடியவில்லை” என்றது. சூழ்ச்சி நிறைந்த அந்தப் பூனை ‘புலியின் அருகில் அதன் வேலையாளாக இருப்பது தனக்கு சிறப்பு. அப்படியே நிலைத்து இருக்கவேண்டும். அதனால் எலிகளை விரட்ட வேண்டுமே தவிர அவற்றைக் கொல்லக் கூடாது. எலிகள் இருக்கும் வரை புலியும் தன்னை அருகில் வைத்திருக்கும்’ என்று நினைத்தது.

தன் திட்டப்படியே எலிகளைக் கொல்லாமல் அவைகளை விரட்டி வந்தது. இப்படியே பல நாட்கள் சென்றன. ஒரு நாள் புலியைப் பார்த்துப் பூனை “எனக்கு இன்று விடுமுறை வேண்டும். எனக்குப் பதில் என் வேலையை என் குட்டிகள் பார்த்துக்கொள்ளும் “ என்றது.

“எலித்தொல்லை எனக்கு இருக்கக்கூடாது. வேலையை நீ பார்த்தால் என்ன? உன் குட்டிகள் பார்த்தால் என்ன?” என்றது புலி. தன் குட்டிகளை அங்கே விட்டுவிட்டுச் சென்றது பூனை.

வழக்கம் போல எலிகள் அங்கே வந்தன. பூனைக் குட்டிகள் அவற்றின் மீது பாய்ந்து ஒரு எலி விடாமல் கொன்றுபோட்டன. மறுநாள் அங்கே வந்த பூனை எல்லா எலிகளும் இறந்து கிடப்பதைக் கண்டு திகைத்தது.

கோபத்துடன் தன் குட்டிகளைப் பார்த்து “என்ன வேலை செய்துவிட்டீர்கள்? உங்களால் என் பொழப்பு போச்சே ” என்று புலம்பியது.

தாயின் பாராட்டு கிடைக்கும் என்று மகிழ்ச்சியோடு காத்திருந்த குட்டிப் பூனைகளுக்கு பெருத்த ஏமாற்றம். பரிதாபமாக தங்கள் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டன.

சில நாட்கள் சென்றன. புலி பூனையிடம் வந்து “எலிகளின் தொந்தரவு முற்றிலும் நீங்கி விட்டது. இனி உன் உதவி எனக்கு தேவையில்லை. இந்தா பிடி உன் சம்பளம்” என்று கொடுத்து அந்த பூனையை அனுப்பி விட்டது.

பூனையும் அதன் குட்டிகளும் மிகுந்த வருத்தத்துடன் அங்கிருந்து சென்றன.



டிஸ்கி: கதை புரிஞ்சுதுங்களா?............!!....ஹி.....ஹி...





.

Sunday, February 19, 2012

கறுப்பு சந்தைகள்

என் முட்டைகளை
அடைகாத்து அடைகாத்து
மூச்சு முட்டுகிறது
எனக்கு

வெளிவராத என் மவுனங்களிலும்
சக்கர எண்ணங்களிலும்
அழுகித்தான் போகின்றன
ஆயிரம் முட்டைகள்

பொரிக்காத என்
முட்டைகளின் கனம்
கூடிக்கொண்டேதான் போகிறது

பொரித்த முட்டைகள் மட்டும்
விற்று விடுகிறதா என்ன
போகாத சந்தையில்
ஆகாத வீதியில்
ஆளரவமற்று கிடக்கின்றன
என் முட்டைக் கடைகள்

விற்பனைக்கு என்ற
என்
விளம்பரப் பலகையில்
வெற்றுக் காக்கைகளின்
எச்சங்கள்

ஒருநாள் இல்லை ஒருநாள்
என் பெரிய முட்டைகள்
பொரிக்கப்படத்தான் போகின்றன

அன்று....
அந்த
அக்கினிக் குஞ்சுகளின்
ஆசிட் வெள்ளத்தில்
காணாமல் போகப்போகின்றன
இந்த
கறுப்பு சந்தைகள்.



.

Saturday, February 18, 2012

கடைப்பிடிக்க சில நல்ல பழக்கவழக்கங்கள்

எப்பொழுதும் நோய் வந்த பின் அதினின்று விடுபட பரிகாரம் தேடுவதைக் காட்டிலும், நோய் வராமல் தடுத்துக்கொள்வதே மேல். அதற்கென் உடலை நல்ல முறையில் பாதுகாப்பது மிக மிக அவசியமாகும். அதற்கு நம் முன்னோர்கள் கடைப்பிடித்த சில நல்ல பழக்கவழக்கங்களை நாமும் கடைப்பிடிக்க பழகலாமே. தொடர்வோம்.

அவரவர் கடைப்பிடித்து வரும் ஒழுக்கம், பழக்கம், உணவு, உடை, வாழ்க்கையின் சூழ்நிலை இவைதான் நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவதற்கும், நோயின்றி வாழ்வதற்கும் முக்கிய காரணங்களாக அமைகின்றன.

தம் வருவாய்க்கு தக்கவாறு எளிய உணவை உண்டு ஆடம்பரமில்லாத வாழ்வைக் கடைப்பிடித்து மன அமைதியோடு வாழ வழி தெரிந்தால் எவ்வித நோயுமில்லாது என்றும் இளமையோடு வாழலாம். அதைத் தெரிந்து கடைப்பிடிக்க உள்ளுக்குள் அடங்காத ஆவல் ஏற்பட வேண்டும்.

மலச்சிக்கல், மனச்சிக்கல் இவை இரண்டும் மிக நெருங்கிய நண்பர்கள். ஏன் உடன்பிறந்த சகோதரர்கள் என்று கூடச் சொல்லிவிடலாம். மலச்சிக்கல் ஏற்பட்டால் உடனே மனவேதனையுமம் உண்டாகி விடும். நோய்கள் பலவற்றிற்கும் அடிப்படைக் காரணம் மலச்சிக்கலேயாகும். அதனால் மலச்சிக்கலை ஒழித்துவிட்டால் மனவேதனை ஏற்படாதல்லவா?!

மலம் கழிக்க வேண்டிய உணர்ச்சி ஏற்பட்ட உடன் தாமதம் செய்யாமல் அதனைச் செய்ய வேண்டும். தள்ளிப் போடுதல் கூடவே கூடாது. அப்படித் தள்ளிப்போடுவதுதான் மலச்சிக்கல் உண்டாக முக்கிய காரணம். அதே போல அவசரப்படாமல் நிதானமாகவே மலம் கழிக்க வேண்டும்.

மலச்சிக்கலைத் தவிர்க்க இரவு படுக்கப் போகுமுன் இரண்டொரு வாழைப்பழங்கள் சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் வாழைப்பழம் சாப்பிட்டால்தான் மலம் போகும் என்கிற அளவுக்கு பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. படுக்கைக்குப் போகும் போது ஒரு டம்ளர் வெந்நீர் சாப்பிடுவது நலம். காய்ச்சி ஆறிய நீராகவோ அல்லது சுத்தமான பில்டர் வாட்டராகவோ இருந்தால் மிகவும் நல்லது.

பொதுவாக நாள்தோறும் தண்ணீர் நன்றாக பருகி வந்தாலே மலச்சிக்கல் வராது. அவ்வண்ணமே நிரம்ப நீர் குடிப்பதால் சிறுநீரும் மலமும் தாராளமாகக் கழிக்க முடியும். அதனால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

அடுத்து, நாள்தோறும் நாம் உண்ணும் உணவில் ஏதேனும் ஒரு கீரையைப் பயன்படுத்தி வரவேண்டும். தினம் என்றில்லாவிட்டாலும் ஒருநாள் விட்டு ஒரு நாள் கீரை சாப்பிட்டு வந்தால் கூடப் போதும்.

சமையலில் மிளகையும், எலுமிச்சம் பழ ரசத்தையும் தாராளமாக பயன்படுத்திக் கொண்டு, புளியையும் மிளகாயையும் தவிர்த்து விடலாம். அப்படி சாத்தியமில்லாவிட்டால் கூடுமானவரை மிளகாயையும் புளியையும் குறைத்து விடுதல் நல்லது. அடிக்கடி இல்லாமல் அவ்வப்போது மிளகையும் எலுமிச்சைச் சாறையும் பயன்படுத்தி வருதல் வேண்டும்.

தக்காளிப்பழம், வெங்காயம் இவைகளை உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உள்ளிப் பூண்டையும் சேர்த்துக் கொள்வது நல்லதுதான். ஆனால் அதன் வாசனை அநேகருக்குப் பிடிப்பதில்லை. இருந்தும் எந்த வகையிலேனும் அது உள்ளுக்குப் போனால்தான் உடம்புக்கு நல்லது.

மன நிம்மதியுடன் உணவை நன்றாகச் சவைத்து சுவைத்து சாப்பிட வேண்டும். வாயில் போட்டுக்கொண்டு லபக்கென்று விழுங்கி விடுதல் கூடாது. மென்று அவசரப்படாமல் விழுங்க வேண்டும்.

உணவுக்கிடையே அவ்வப்போது தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. பாதியளவிற்கு மேல் உணவு உண்டபின் தண்ணீர் குடிக்கலாம். அதையும் தவிர்ப்பது நல்லது. உணவு உண்டு முடித்தபின் நீர் பருகினால் நல்லது. நீரும் போக காற்றுக்கும் வயிற்றில் இடம் எஞ்சியிருந்தால் நல்லது.

ஒவ்வொருவதும் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதுவும் வெந்நீராகவோ அல்லது காய்ச்சி வடிகட்டிய நீராகவோ இருப்பது மிகவும் நல்லது.

அடிக்கடி காபி, டீ குடிப்பதை நிறுத்திவிட்டு தண்ணீர் பருகுதலே சிறந்தது. அதனால் உடலில் இருக்கும் நோயும் போகும். இனி நோய் வராமலும் இருக்கும். மலச்சிக்கல், தூக்கமின்மை, செரியாமை இவற்றிற்கெல்லாம் தண்ணீர் பற்றாக்குறையே முக்கிய காரணமாகும் என்பதைப் புரிந்துகொண்டால் அனைவருக்கும் நல்லது.

தூங்குவதற்கு முன்பும் தூங்கி எழுந்த பின்னும் தண்ணீர் குடிக்கவேண்டும். காலையில் எழுந்ததுமே வாய் கொப்பளித்து முகம் கழுவிவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் நாள் முழுவதும் மலச்சிக்கலும் அதன் காரணமாக ஏற்படும் கை கால் அசதி, முழங்கால மூட்டுகளில் வலி முதலியவையும் அணுகவே அணுகாது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்றுக்கும் கவலைப்படாமல் அமைதியுடன் வாழப் பழகுங்கள். மேன்மை உண்டாகும்.

நலமுடன் வாழ்க!

.

Friday, February 17, 2012

தலையணையை எப்படி பயன்படுத்த வேண்டும்?

சிலருக்கு தலையணையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவதில்லை. என்ன சார் இது? இதுல தெரிஞ்சிகக என்ன இருக்குது அப்படின்னு கேட்காதீங்க. கட்டுரையைப் படித்து முடிக்கும்போது நீங்களே தெரிஞ்சுக்குவீங்க. ஓ.கே. தொடர்வோம்.

தலையணையை சரியான அளவிலும் சரியான மிருதுத்தன்மையிலும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் பல பிரச்சினைகளிலிருந்தும் தப்பலாம். நம்புகிறீர்களா?

விலங்குகள் கூட இந்த அறிவைப் பெற்றிருக்கின்றன. தெரியுமா? உதாரணமாக யானைகளை எடுத்துக்கொள்ளுங்கள். காட்டு யானைகளை நான் சொல்லுகிறேன். அவை புற்களை சேகரித்து தலையணையாக பயன்படுத்திக்கொள்கின்றனவாம். ஒட்டகச் சிவிங்கிகள் பெரும்பாலும் நின்று கொண்டேதான் தூங்கும் பழக்கம் கொண்டவை. ஆனாலும் சில நேரங்களில் படுத்தும் ஓய்வெடுக்கும். அப்போதெல்லாம் தனது இடுப்பையே தலையணையாக பயன்படுத்துமாம்.

ஒழுங்கற்ற தன்மை, போதுமான மிருதுத் தன்மை இல்லாத தலையணைகளை பயன்படுத்தினால் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன. நம்முடைய கழுத்தெலும்பில் குறுக்குப் பட்டைகள் போன்ற எலும்புகள் (cervical vertebrae bones) தட்டு போல காணப்படுகின்றன.




இந்த எலும்பிலான குறுந்தட்டுகள் இடையே நிறைய இடைவெளிகள் காணப்படுகின்றன. அவற்றில் நூற்றுக்கணக்கான நரம்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை மூளைக்கும், கைகளுக்கும், தோள்களுக்கும் மற்றும் ஏனைய பகுதிகளுக்கும் செல்லும் முக்கியமான உணர்கடத்திகளாகும்.

நீங்கள் உங்கள் கழுத்துக்கு போதுமான அளவு ஓய்வை அளித்தீர்களானால் இவை ஒரு பிரச்சினையில்லாமல் இயங்கி உங்கள் தூக்கத்தை இரட்டிப்பு மகிழ்ச்சியாக்குகின்றன. அதாவது மெல்லிய ஆனால் உறுத்தாத போதுமான அளவு உயரமான தலையணையைப் பயன்படுத்தும்போது.

ஆனால் சரியான தலையணையைப் பயன்படுத்தவில்லை என்றால் கழுத்துப் பகுதியிலிருக்கும் நரம்புகள் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக கழுத்து வலி, தலைவலி, தோள் வலி, கழுத்து அப்படியே நின்று விடுதல் (Stiff Neck) மற்றும் கைகளில் மரத்துப்போய் வாதம் போன்ற நிலைமை ஆகிய விபரீத விளைவுகள் உண்டாகி விடுகின்றன.

ஓ.கே. அப்படியானால் எப்படி தூங்க வேண்டும் என்கிறீர்களா? சொல்கிறேன். தூங்குவதற்கு சரியான கோணம் எது? கழுத்து, தலை மற்றும் தோள் இவற்றை எந்த கோணத்தில் வைக்க வேண்டும். இதற்கு ஏதேனும் முறை உள்ளதா? நிச்சயம் உள்ளது.




நமது கழுத்துக்கு கீழே சரியாக 15 டிகிரி கோணத்தில் தலையணை இருக்க வேண்டுமாம். இதுவே மருத்துவர்கள் ஆராய்ச்சிகளின் முடிவாக நமக்கு தெரிவிக்கும் முடிவு. (உடனே போய் காம்பஸ் டப்பாவ எடுத்து அளந்துருங்க மக்காஸ்)

தலையணையின் தடிமன் எவ்வளவு இருக்க வேண்டும்?

நம்முடைய டர்க்கி டவல் இருக்கிறதே அந்த மிருதுத்தன்மையும், அதை நான்காக மடித்து வைத்தால் எவ்வளவு உயரம் இருக்குமோ அந்த உயரம் போதும். சற்று உயரம் கூட இருந்தாலும் பரவாயில்லை. ரொம்ப உயரம் வேண்டாம். ரொம்ப மிருதுவான தன்மை கூடாது. காட்டன் தலையணை நல்லது.

மல்லாந்து படுத்தல் நல்லது

மல்லாந்து படுத்தலே நல்லது. பக்கவாட்டில் படுத்தல் நல்லதல்ல. காரணம் நம்முடைய இரத்த அழுத்தம் சீராக இராது. நேராக மல்லாந்து படுத்தால் இரத்த ஓட்டமும், அழுத்தமும் சீராக இருக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.





வேலை செய்யும்போது மட்டுமல்ல. உறங்கும்போதும் அதற்கு தேவையான சக்தியை உடல் எடுத்துக்கொள்கிறது. அதனால்தான் காலையில் எழும்போது டயர்டாக இருப்பதைப் போல் உணர்கிறோம். அதுவும் மல்லாந்து படுக்கும்போது எடுப்பதைவிட ஒருக்களித்து பக்கவாட்டில் படுத்து உறங்கும்போது அதிக சக்தியை உடல் எடுத்துக்கொள்கிறது. அதனால் தலைவலி, மனஅழுத்தம், கழுத்து நின்றுவிடுதல் (சுளுக்கு), முதுகு வலி போன்ற இடையூறுகள் உண்டாகின்றன.






1 அல்லது 2 இன்ச் அளவுள்ள உயரம் மற்றும் 15 டிகிரி கோணம் இரண்டுமே தலையணைக்கு மிகச் சரியான அளவாக மருத்துவ விஞ்ஞானம் பரிந்துரைக்கிறது. சற்று அளவு வேறுபட்டால் பரவாயில்லை. மிகுந்த அளவில் வேறுபட்டால் மேற்கண்ட பாதிப்புகள் உண்டாகி நமது அன்றாட வேலைகளை பாதிக்கின்றன. ஓ.கே. வா? சரியான அளவுல தலையணை பயன்படுத்தி சுகமா தூங்குங்க.

நலமுடன் வாழ்க!



.

Wednesday, February 15, 2012

குற்றத்துக்கு கடவுளா பொறுப்பு?




அந்த மாந்தோப்புக்குள் திருடன் ஒருவன் கள்ளத்தனமாக நுழைந்தான். மாமரத்தில் ஏறிய அவன் அதன் கிளையை வேகமாக உலுக்கினான். நிறைய பழங்கள் கீழே விழுந்தன. அந்தத் தோப்பின் உரிமையாளர் சத்தம் கேட்டு அங்கே ஓடி வந்தார்.

மரத்தில் இருந்த திருடனைப் பார்த்து, “டேய்! அயோக்கியப் பயலே! திருடும் எண்ணத்தில் வந்திருக்கிறாயே. இந்தத் தீய செயலுக்காக கடவுளின் முன் கூனிக் குறுகி நிற்க மாட்டாயா?” என்று கத்தினார் அவர்.

கடவுள் நம்பிக்கை உடைய அவரை ஏமாற்ற நினைத்தான் அந்தத் திருடன். அவரிடம் இவ்வாறு கூறினான் “ கடவுளின் வேலையாள் நான். கடவுளின் தோப்புக்குள் நுழைந்தேன். உண்பதற்காக கடவுள் இந்தப் பழங்களை எனக்குத் தந்தார். வேறொன்றுமில்லை அய்யா. தவறாக நினைக்கவேண்டாம் ” என்றான்.

அதற்குள் அந்த தோட்ட உரிமையாளரின் வேலையாட்கள் சிலர் அங்கே ஓடி வந்தனர். “அந்தத் திருடனைப் பிடித்து இந்த மரத்தில் கட்டு ” என்றார் அவர். வேலையாட்களும் அவனைப் பிடித்து மரத்தில் கட்டினார்கள்.

தடி ஒன்றை எடுத்த அவர் அவனை விளாசித் தள்ளினார். வலி தாங்க முடியாமல் அவன் “ அய்யா! என்னை இப்படி அடித்துக் கொடுமைப் படுத்துவதற்காக நீங்கள் கடவுளின் முன் நிற்க வேண்டும். தெரியுமா?” என்று அலறினான்.

“ இந்தத் தடி கடவுளுடையது. கடவுளின் வேலையாள்தான் நான். கடவுளின் ஆணைப்படியே இன்னொரு வேலையாளை அடிக்கிறேன். அடிக்கும் கையும் கடவுளுடையது. ஆதலால் இதில் தவறில்லை ” என்று சொல்லிக்கொண்டே திரும்பத் திரும்ப வெளுத்து வாங்கினார் அவர்.

கடைசியில் அந்தத் திருடன் “ அய்யா! குற்றத்திற்கு நானே பொறுப்பு. கடவுள் அல்ல. இனியும் என்னால் அடி தாங்க முடியாது. என்னை மன்னித்து விட்டு விடுங்கள் ” என்று கெஞ்சினான் அவன். அதன் பிறகே அவர் அவனது கட்டுகளை அவிழ்த்துவிடச் சொல்லி “ இனி இப்படிச் செய்யாதே” என்று அறிவுரை கூறி ஒரு கூடை நிறைய மாம்பழங்களை கொடுத்தும் அனுப்பினார்.


.

எங்க சொந்த ஊரைப் பத்திங்கோ - தொடர் பதிவு




அன்பு சகோதரி சசிகலா அவர்கள் சொந்த ஊரைப் பற்றி ஒரு தொடர் பதிவு எழுத அன்பு வேண்டுகோள் விடுத்தார். அவர் அன்பிற்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. இது விருதுகள் மற்றும் தொடர் பதிவுகள் எழுதும் காலம் போலிருக்கிறது. இருக்கட்டும். இருக்கட்டும்.

எத்தனையோ பதிவுகளை இடுகிறேன். சமீப காலங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை இட்டு வாங்கியும் கட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு பிடித்தது கவிதை. கவிதை மட்டுமே. சொல்லப்போனால் கவிதைகள் மட்டுமே எழுதத்தான் பிளாக் ஆரம்பித்தேன். வெறும் கவிதைகள் எழுதினால் பிரபலமாகாமல் போய்விடுவோமோ என்று பயந்துதான் பல்சுவைப் பதிவுகள் எழுதி வருகிறேன். பார்ப்போம். காலம் கனிந்தால் கவிதைகள் மட்டுமே எழுதலாம். மற்றவைகளை விட்டுவிடலாம் என்று தீர்மானித்திருக்கிறேன். போகட்டும். எதற்காக இங்கே இதைச் சொல்கிறேன் என்றால் என் சொந்த ஊரைப் பற்றியும் கவிதை நடையில் (அப்படித்தான்னு நானா நெனச்சிக்கிடறேன்) சில வாக்கியங்களை மட்டும் சொல்லி விட்டுக் கடந்து போகலாம் என்று இருக்கிறேன்.

என் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல். அழகான கிராமம். அற்புதமான ஊர். தேவதூதர்கள் கூட காற்று வாங்க சில நேரம் இங்கே வந்திடுவார்கள். காரணம் அந்த தாமிரபரணி நதி. அந்த நதிப்பெண்ணிடம் கேட்டாள் சொல்வாள் லட்சோபலட்சம் கதைகள். அந்த நதிக்கரையினில்தான் என் சிறுவயது வாழ்க்கை கழிந்திருக்கிறது. இப்போதும் அங்கே செல்லும் போதெல்லாம் அந்த தோழியிடம் பேசிவிட்டுத்தான் அடுத்த வேலை. இவளைப் பற்றி தனி கவிதை ஒன்றே எழுதி இருக்கிறேன். வாய்ப்பும் வசதியும் இருந்தால் அதைப் படித்துப் பாருங்கள். ( http://www.duraidaniel.blogspot.in/2011/12/blog-post_22.html ).

இயற்கை அழகு சூழ்ந்த அழகு கிராமம். சாயங்கால நேரம் ஆற்றங்கரையில் அமர்ந்தால் நேரம் போவதே தெரியாது. அவ்வளவு ஆனந்தமாய் இருக்கும். அப்புறம் ஊரில் ஒரு பஜார் உண்டு. ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்தில் சுமார் 2000 கடைகள் வரிசையாக இருபுறமும் நேர்த்தியாக அமைந்திருக்கும். இப்படி ஒரு பஜாரை நீங்கள் தமிழ்நாட்டில் எங்குமே பார்க்க முடியாது. அப்படி ஒரு அழகு. முழுவதும் பந்தல் போட்டு மூடி அழகாக பராமரிக்கப்பட்டிருக்கும் அந்த கடைவீதி. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்துக்காரர்களிடம் கேட்டுப் பாருங்கள். அதன் பெருமை தெரியும். சிட்டியில் கிடைக்காத பொருட்களும் அங்கு மலிவாக தரமாக கிடைக்கும். தமிழ்நாட்டிலேயே தங்கவிலை அங்கு கம்மி என்றால் பாருங்களேன். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? A to Z எல்லா சாமான்களும் வாங்கலாம். சுத்துப்பட்டி எல்லா கிராமங்களிலிருந்தும் பொருட்கள் வாங்க இங்கேதான் வருவார்கள். அவ்வளவு அழகிய கடைவீதி.

தாமிரபரணியும், கடைவீதியும்தான் எங்கள் ஊர் சொல்லும் பெருமைக்குரிய விஷயங்கள். வேறென்ன சொல்ல?

- இப்பதிவை எழுதத் தூண்டிய சகோ. சசிகலாவுக்கு மனமார்ந்த நன்றி.

இந்தப் தொடர் பதிவிற்கு கீழ்க்கண்ட 3 நபர்களை மட்டும் அழைக்கிறேன்.

1. சகோ. ரியாஸ் - http://riyasdreams.blogspot.in
2. தனசேகரன் - http://sekar-thamil.blogspot.in
2. என் ராஜபாட்டை ராஜா - http://rajamelaiyur.blogspot.in/

(சகோ. சசிகலா என்னை மன்னிக்கவேண்டும். நேரமின்மையால் நீங்கள் கேட்டுக் கொண்டபடி 10 பேரை என்னால் இந்த தொடர் பதிவிற்கு அழைக்கமுடியவில்லை)

.

எனக்குப் பிடித்த ஏழு விஷயங்கள்




அன்பு சகோதரி ஹேமா அவர்கள் எனக்கு ஒரு விருது வழங்கியிருக்கிறார். அவரது அன்புக்கு மிக்க நன்றி. எனக்கு பிடித்த ஏழு விஷயங்களைச் சொல்லி இதை பகிர வேண்டுமாம்.

பிடித்த 7 விஷயங்கள்:

1.தனிமை

(இதுதான் எனக்கு தரிசனங்களைத் தோற்றுவிக்கிறது)

2.கவிதை
(எத்தனையோ பதிவுகளை எழுதினாலும் கவிதை எழுதும்போதுதான்
எனக்கு இறக்கை முளைக்கிறது. ஒரு நல்ல கவிதை தந்தால்
என்னையே விற்றுவிடுவேன். அவ்வளவு பிரியம் இந்தக் கவிதையின் மீது. கவிதை என் சுவாசம். கவிதை என் காதலி.மற்றவையெல்லாம் சும்மா....)

3.இயற்கை:

எனக்கு துன்பம் வரும்போதெல்லாம் என்னைத் தேற்றுவது ரோஜாக்களும், சூரியகாந்திகளும்தான். நந்தவனங்களில்தான் என் கவிதைத் தேர் நிலைகொண்டிருக்கிறது.)

4.குழந்தைகள்:

(இந்த பூக்களிடம்தான் என் பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன)

5. வானம்

( இதன் வர்ணங்களில்தான் நான் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து என் கவிதைச்சுவர்களுக்கு பூசிக் கொள்கிறேன்)

6. மழை

( நனையாமல் விடுவதில்லை. அப்போதெல்லாம் என் நெஞ்சப்பஞ்சை நனைத்து நனைத்து வைத்துக்கொண்டு, என் வெயில் காலங்களில் உபயோகப்படுத்துகிறேன்)

7. பிச்சைக்காரர்கள்

(வாழ்க்கையின் தத்துவங்களை இவர்களிடம்தான் கற்று வருகிறேன்.)

- இந்த விருதை கீழ்காணும் என் அன்பு சகாக்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.அவர்கள் வாய்ப்பும் வசதியும் இருந்தால் அடுத்தவர்களுக்கு பகிர்ந்து மகிழட்டும்.

1. சகோ. ரியாஸ் - http://riyasdreams.blogspot.in
2. தனசேகரன் - http://sekar-thamil.blogspot.in
2. என் ராஜபாட்டை ராஜா - http://rajamelaiyur.blogspot.in/

நன்றி சகோ. ஹேமாவுக்கும் இதையெல்லாம் சகித்துக்கொள்ளும் உங்கள் பொறுமைக்கும்.


.

Tuesday, February 14, 2012

நானும் இந்த காதலர் தினத்தைக் கொண்டாட தீர்மானித்துவிட்டேன்




நானும்
இந்த
காதலர் தினத்தைக்
கொண்டாட
தீர்மானித்துவிட்டேன்

முந்நூறு நாட்களாய்....
சுமந்து சுமந்து
பிறை நிலவாய்
இருந்த என்னை
முழு நிலவாய் மாற்றி
பூமிக்கு அனுப்பிய
என் தாய்க்காக....

முப்பது வருடமாய்
என் எச்சில்களை
விழுங்கிக் கொண்டு
அமுதங்களையே பரிசளித்த
என் தந்தைக்காக....

தன் காம்பில்
பூத்திருந்தாலும்
வசந்தங்கள் வரும்போதெல்லாம்
வழிவிட்டு வாழ்வளித்த
என்
சகோதரிக்காக....

புயல் காலங்களிலும்
பூக்காலங்களிலும்
என் இன்னொரு தோளாய்
கூடவே வசித்த
என்
நண்பனுக்காக.....

என் வாழ்க்கை ரயிலோடும்
பாதையிலெல்லாம்
இரட்டைத் தண்டவாளமாய்
கூடவே வருகிற
என்
மனைவிக்காக....

நானும்
இந்த
காதலர் தினத்தைக்
கொண்டாட
தீர்மானித்துவிட்டேன்.

Friday, February 10, 2012

சுடச் சுட காயங்கள்




பைத்தியங்கள் குணமடையும் வேளையில்
வைத்தியர்களைக் காணவில்லை
அறிக்கை சமர்ப்பித்தவர்கள்
ஆய்வுக்கு இங்கே வரவில்லை

இரசாயனங்ளில் நிகழும்
மாற்றங்கள்
மனங்களில்
நிகழவில்லை

பட்டிமன்றங்கள்
இங்கே
சூதாட்ட களங்களாயின

வலி இருக்கும்வரைதான்
அடிமைத்தனம் இருக்கும்
என்பதால்...

சூடுபட்ட காயங்கள்
ஆறுமுன்னே
சுடச் சுட
காயங்கள்

சுதந்திரப்பறவைகள்
இருட்டறைக்குள்
கூடுகள் கட்டி
பதுங்கிவிட்டன

வர்க்கவேறுபாடுகள்
களையச் சொன்ன
கருங்காகங்கள்
சொர்க்க விவாதங்களில்
சிகரெட் பொறுக்கும்
சில்லறை வேலையைச்
செய்துகொண்டிருக்கின்றன

இந்திரபுரிவாசிகளின்
இரவுப் பணிக்கு
காவலாளிகளான
சேரிப்பூக்களின்
சேலை முந்தானைகளில்
மூத்திரம் போயின
வெள்ளைக் கொக்குகள்

விடியுமா
விடியாதா என்ற
ஏக்கக்கண்களுக்கு
விடை சொல்லத்தெரியாத
காலமகள்
கடைசியில்......

வெள்ளுடை வேந்தர்களின்
அரசவையில்
நடனமாடி
சம்பாதித்துக்கொண்டிருக்கிறாள்.



.

Tuesday, February 7, 2012

நாம் நிமிடத்திற்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பிரயாணம் செய்துகொண்டே இருக்கிறோம். தெரியுமா உங்களுக்கு?





நீங்கள் இப்போது நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்களா? உங்கள் நாற்காலியை இறுகப்பிடித்துக்கொண்டு ஒரு பெருமூச்சு விடுங்கள். இந்த நேரத்தில் (4 வினாடிகள்) நீங்கள் 100 கிலோ மீட்டர் தாண்டி விட்டீர்கள். மீண்டும் ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விடுங்கள். இப்போது மேலும் 100 கிலோ மீட்டர் தூரம் தாண்டிவிட்டீர்கள். இது உண்மை.

நாம் வசிக்கும் இப்பூமி சூரியனைச் சுற்றி வினாடிக்கு (per second) 25 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. பூமி இந்த குறிப்பிட்ட வேகத்தில் சுற்றுவதனால்தான் சூரியனின் பயங்கரமான ஈர்ப்பு சக்தியினால் இழுக்கப்பட்டுச் சூரியனுடன் மோதி அழிந்து விடாமலிருக்கிறது.

இதைவிட சற்றுக் குறைந்த வேகத்தில் சுற்றினால்கூட போதும். பூமி சூரியனால் இழுக்கப்பட்டு எரிந்து விடும். இதைவிட சற்று அதிக வேகத்தில் சுற்றினால்கூட போதும். பூமி சூரியனைவிட்டு அதிக தூரம் விலகிப்போய் மிகவும் குளிர்ந்து விடும். விறைத்துச் சாகவேண்டியதுதான் (பனிக்கட்டி மூடிவிடுவதினால்).

ஆகவே, பூமி சுற்றும் வேகம் சிறிது மாறினால் கூட போதும். பூமியின் மீது எந்த ஜீவராசியும் (தாவரம், மிருகம், மனிதர்) உயிர் வாழவே முடியாது. இவ்விதமாகவே இப்பூமி இவ்வித இரண்டு பயங்கர ஆபத்தான நிலைமைகளுக்கு இடையே மயிரிழையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு வினாடிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நம்மால் பிரயாணம் பண்ணக் கூடுமானால், நாம் ஐந்தரை நிமிட வேகத்தில் பூமத்திய ரேகையிலிருந்து வட துருவத்தையோ அல்லது தென் துருவத்தையோ அடைந்துவிடலாம். ஆனாலும் அப்பிரயாணம் அலுப்பு மிக்கதாகவும், சலிப்புடையதாகவும் இருக்கும்.

ஏன் தெரியுமா? அவ்வளவு வேகத்தில் செல்லும்போது நம் கண்களால் எதையுமே பார்க்க முடியாது. பார்த்தாலும் எல்லாமே மிகவும் மங்கலாகவும், அதிவேகமாகவும் ஓடுபவையாகவும் காணப்படும். சாதாரணமாக இப்பூமியின் மீது நாம் எங்கேனும் பிரயாணம் செய்யும்போது, நாம் கடந்து செல்கின்ற பொருட்களைக் கொண்டுதான் நாம் பிரயாணம் செய்யும் வண்டியின் வேகத்தையும், அசைவையும் நம்மால் அறிய முடிகிறது.

நாம் தொடர்ந்து செய்யும் விண்வெளிப் பிரயாணத்தைக் குறித்த உணர்வு நமக்கு ஏன் இல்லாமல் இருக்கிறது என்பது இதிலிருந்து நமக்கு புரிகிறதல்லவா? இந்த பூமி எப்போதுமே இப்படித்தான் தொடர்ந்து அண்டவெளியில் பிரயாணம் செய்துகொண்டே இருக்கிறது.

நாம் யாவரும் இதன்மீது பிறந்தவர்களும், இப்பூமியின் வாழ்வாகவும் இருக்கிறோம். வேகத்தைப் பொறுத்தமட்டில் நாமும் இப்பூமியும் ஒன்றுதான். மேலும் இப்பூமியானது அருகிலுள்ள அநேகப் பொருட்களினூடே கடந்து செல்லுமானால் பூமியும் நாமும் அதிவேகமாகப் பிரயாணம் செய்வதை நம்மால் உணர முடியும். அப்படியில்லாது பூமிக்கருகில் நாம் காணக்கூடிய எப்பொருளும் இல்லாதிருப்பதினால் நாம் இப்பூமியோடு சேர்ந்து அதிவேகமாகப் பிரயாணம் செய்வதை நம்மால் சற்றேனும் உணர முடியவில்லை. எவ்வளவு வியப்பாக இருக்கிறது. இல்லையா?

நன்றி!










.

Monday, February 6, 2012

மரண சிந்தனைகள்




மரணம் என்றால் என்ன? உடலை விட்டு உயிர் பிரிவதா? அதுதான் மரணமா?

ஒருவகையில் மரணம் என்பது உடலை விட்டு இந்த உயிர் பிரிவதுதான். ஏன் உடலைவிட்டு இந்த உயிர் பிரிகிறது? இந்த உடல் தான் வாழ தகுதியில்லை என்று உயிர் கருதுகிறபோது இந்த உடலை துறக்கத் தீர்மானிக்கிறது. அதைத்தான் மரணம் என்கிறோம்.

சரி. இது மட்டும்தான் மரணமா? இல்லை. நிறைய மரணங்கள் வாழ்க்கையில் உண்டு. ஒரு குழந்தை பிறக்கும்போது அது தூய்மையாய் இருக்கிறது. நம் இதயத்தில் உள்ள உயிரில் பல உள்ளுயிர்கள் உள்ளன. நாம் வளர வளர அத்தனை உள்ளுயிர்களும் இந்த பேருயிருக்குள் வளரத்துவங்குகின்றன. இந்த உள்ளுயிர்களை நாம் குணங்கள் என்றும் பேரிட்டு அழைக்கிறோம்.

இவற்றின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. கடவுள் ஒருவரே இவ்வுயிர்கள் கணக்கில் வைக்க முடியும். இவற்றை ஒரு மனிதன் எப்படி பயன்படுத்துகிறானோ அவ்விதமாகவே அவன் நல்லவனாகவோ தீயவனாகவோ மாறுகிறான்.

குழந்தையானது வளரும்போது தாய்ப்பாலுக்காக தாயை ஏமாற்றுகிறது பாருங்கள். அங்கே நிகழ்கிறது முதல் உள்ளுயிரின் மரணம். பள்ளியில் படிக்கும்போது, விளையாடும்போது பொய் சொல்கிறது பாருங்கள். அங்கே நிகழ்கிறது அடுத்த மரணம்.

களவு செய்யும்போது அடுத்த மரணம் நிகழ்கிறது. அடுத்தவர் பொருளை இச்சிக்கும்போது அடுத்த மரணம். வளர்ந்து வாலிபனான பிறகு முறையற்ற காதல், காமம் என்று சீரழிகிறது பாருங்கள். அப்போது நிகழ்கிறது அடுத்த மரணம்.

இப்படியாக மரணம் மரணம் மரணம் என்று நமக்குள் மரணங்களே நிகழ்ந்து கொண்டு இருப்பதால் நமக்குள் உள்ள அந்த தீய மனிதனே வளர்ந்துதான் இன்று பேயாட்டம் ஆடுகிறான். கடைசியில் இந்தப் பேருயிர் உடலை விட்டுப் பிரிந்து விடுகிறது.

மாறாக சிறு வயதிலிருந்தே முறையாக நல்லொழுக்கங்களை பெற்றோர் சொல்லிக் கொடுத்து வளர்க்கும்போது நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் (உள்ளுயிர்கள்) வளர்ந்து பெரியவராகும்போது நமக்குள் இருக்கும் அந்த நல்ல மனிதன் வளர்ந்து நமக்கும் நம் குடும்பத்துக்கும் நம் சமுதாயத்துக்கும் நம் நாட்டிற்கும் ஏன் இந்த முழு உலகத்துக்குமே பயன்தரும் அற்புதமான மனிதனாகிறான். பூரண ஆயுள் எனும் கட்டிடத்துக்கு நல்ல குணங்களே அஸ்திபாரங்களாகும்.

ஜீவனுள்ளவனாவதும் மரணவாசனையுடையவனாய் மாறுவதும் நம் கையில்தான் இருக்கிறது.

இறப்பிற்காக நாம் அழ வேண்டுமா? நிச்சயம் வேண்டும். நெருங்கியவர் பிரிந்தால் நெஞ்சம் தாங்குமா?

பட்டினத்தார் என்ன சொல்கிறார் தெரியுமா?

“அழுதால் பயனென்ன? நொந்தால் பயனென்ன? ஆவதில்லை
தொழுதால் பயனென்ன? நின்னை ஒருவர் கடவுரைத்த
பழுதால் பயனென்ன? நன்மையம் தீமையும் பங்கயத்தோன்
எழுதாப்படி வருமோ? சலியாதிரு என்ஏழை நெஞ்சே!”

இதே பட்டினத்தார்தான் தன் தாய் இறந்தபோது பாடிய பாடலைக் கேளுங்கள்:-

“ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்த கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?

முந்தித் தவம்கிடந்து முந்நூறுநாள் சுமந்தே
அந்திப் பகலாய்ச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்?

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன்?

அரிசியோ நான்இடுவேன், ஆத்தாள் தனக்கு?
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு?

வேகுதே தீயதனில், வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ! மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.”

- இந்தப் பாடலை பாடும்போது அல்லது வாசிக்கும் போது அழாமல் இருக்க முடியுமா?



டிஸ்கி:

பதிவர் மாயஉலகம் ராஜேஷ் அவர்களின் நினைவாக நாளை அதாவது செவ்வாயன்று பதிவுகள் இடாமல் துக்கம் அனுஷ்டித்து பதிவர்கள் அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம். நன்றி!.




.

யார் ஏமாற்றுவது? நாமா? அவர்களா?




வெறும் பிதற்றல்களும்
வெட்டி பேச்சுகளுமாய்...
நகர்கிறது
இந்த வாழ்க்கை

பொய்களை விற்றுத்தான்
நிஜங்களை
வாங்க வேண்டியிருக்கிறது

இமைகளை பிடுங்கியபின்
தரிசனங்களின் உதயம்
நகங்களைப் பிடுங்கியபின்
நகப்பூச்சுகளின் நளினம்

யாருக்கும் யார்மீதும் கோபமில்லை
என்றாலும்
எல்லாருக்கும் எல்லார்மீதும் கோபம்

வெள்ளை மனசுக்கார
பட்டங்களுக்குப் பின்னால்
கறுப்பு இதயங்கள்

சுகமா என்கிற
நலம் விசாரிப்புகளுக்குப் பின்னால்
நச்சுப்பாம்பின் விஷப்பற்கள்

சுத்தம் சோறுபோடும் என்ற
போதனைக்குப் பின்னால்
அழுக்குக் கரங்களால்
அர்ச்சனைகள்

யார் ஏமாற்றுவது
நாமா?
அவர்களா?

யாருமில்லை
ஏமாற்றங்களே
ஏமாற்றங்களை
ஏமாற்றிக்கொள்கிறது

இந்த
கோமாளி நாடகத்தில்
கூத்தாடித்தான் ஆகவேண்டும்

நடிக்க மறுத்துவிட்டால்
நாடகங்கள் முடிவதில்லை...
நாமே மடிந்துவிடுகிறோம்.





.

Sunday, February 5, 2012

மரணமே உன்னிடம் ஒரு கேள்வி




மரணமே உன்னிடம் ஒரு கேள்வி
என்ன உன் கணக்கு?
எந்த கால்குலேட்டரில்
கணக்கு போடுகிறாய் நீ?

கூட்டலா
கழித்தலா
பெருக்கலா
வகுத்தலா
எது உன் கணக்கு?

இது எதுவுமே இல்லாத
புதுக் கணக்குதான்
உன் கணக்கு

அதனால்தான்
வாழ்வு தொடங்குமுன்னே
நீ கணக்கை முடித்துவிடுகிறாய்

கொள்ளையடிப்பவர்களின் வயது தொண்ணூறு
கோவில் கட்டுபவர்களின் வயது முப்பது

கற்பழிப்பவனின் வயது எண்பது
கற்பிப்பவனின் வயது இருபது

கொலைகாரரின் வயது எழுபது
மருத்துவரின் வயது நாற்பது

உன் கணக்கு புரியவில்லை

உன்னிடம் ஒரு வேண்டுகோள்
உயிர்ப்பூவை பறிக்குமுன்
ஒரு கணம் யோசி
அப்பூவை நம்பி
எத்தனை நந்தவனங்கள் என்று.





டிஸ்கி: பதிவர் மாயாவின் மரணத்தால் மனம் நொந்து எழுதிய கவிதை.
அவருக்கே அர்ப்பணம் இக்கவிதை.





.

Friday, February 3, 2012

மனஅழுத்தம் (Stress) மூளையைப் பாதிக்கும் - உண்மையா?

மனஅழுத்தம் மூளையைப் பாதிக்கும். எப்படி தெரியுமா? அது நேரடியாக பிட்யூட்டரி சுரப்பியைத் தாக்கும். அதன் காரணமாக மூளை பாதிப்படையும். எப்படி? பார்க்கலாம்.

பிட்யூட்டரி சுரப்பி (Pituitary Gland) எங்கு அமைந்துள்ளது? அது என்ன வேலை செய்கிறது?



பிட்யூட்டரி சுரப்பியானது நம்முடைய மூளையின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது. மேலே உள்ள படத்தைப் பாருங்கள். தெளிவாகப் புரியும். ஹைப்போதாலமஸ் (hypothalamus) என்ற பகுதியுடன் இணைந்து அமைந்துள்ளது. ஆண்டிடியூரெடிக் (antidiuretic hormone), ஆக்சிடாசின், (oxytocin), புரோலாக்டின் (prolactin) போன்ற முக்கியமான சில ஹார்மோன்களை இது சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் நம்முடைய உடல் வளர்ச்சி, இரத்த அழுத்தம், இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. வளரத்தூண்டுகிறது.

ஜப்பானிலுள்ள ஒசாகா பல்கலைக்கழம் வெளியிட்டுள்ள ஒரு ஆராய்ச்சி முடிவில் இவ்வாறு தெரிவிக்கிறது. கடினமான வேலைப்பளுவின் போதும், மிகுந்த மனஅழுத்தம் தோன்றும் போதும், அளவுக்கு மீறிய டென்சன் போன்ற சூழ்நிலைகளிலும் நம்முடைய பிட்யூட்டரி சுரப்பியானது மிகவும் சுருங்கி ஒரு ஸ்பான்ஞ் கேக்கைப் போல ஆகி விடுகிறதாம். சாதாரண நிலையிலிருந்த ஒரு சுரப்பி நம்முடைய டென்சனால் இப்படி பஞ்சுக் கேக்கைப் போல சுருங்கி விட்டால் விளைவுகள் எவ்வளவு விபரீதமாக இருக்கும்? எண்ணிப் பாருங்கள்!

பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்படும்போது நம்முடைய உள்ளுறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்படுகிறது. தற்கொலைகள் நிகழ்வது இதனால்தான். எப்படி தெரியுமா? அதிகப்படியான டென்சன் அல்லது மனஅழுத்தம் நம்முடைய பிட்யூட்டரி சுரப்பியை பாதித்துவிடுகிறது. அதன் பிறகு அது நம்முடைய மூளை செல்களையும் பாதிக்கிறது. உடனே மூளை தவறான சிக்னல்களை நமது எல்லா உள்ளுறுப்புகளுக்கு அனுப்பத் தொடங்கி விடுகிறது.





தவறான சிக்னல்களினால் உள்ளுறுப்புகள் தமது வழக்கமான இயக்கத்திற்கு மாறாக இயங்கத் தொடங்குகின்றன. இவ்வித தவறான சிக்னல்கள் மூளைக்குத் திரும்ப வரத்துவங்கி விடுகின்றன. இப்போது மூளை தாறுமாறாக இயங்கி திடீரென இயக்கத்தை நிறுத்திவிடலாம். அல்லது தற்கொலைக்கு நம்மைத் தூண்டலாம். இப்படித்தான் திடீர் மரணங்களும், தற்கொலைகளும் நிகழ்கின்றன என்று அந்த ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

இப்படித்தான் மிகக் கடினமான வேலைகளும், அளவுக்கு மீறிய கவலைகளும் நமக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கி பிட்யூட்டரி சுரப்பியைப் பாதித்து தொடர்ந்து நம்முடைய மூளையையும் பாதித்துவிடுகிறது.

கவலைதான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று நம்முடைய முன்னோர்கள் எழுதி வைத்த பழமொழியின் அர்த்தம் இப்போது புரிகிறதா?

சரி இதிலிருந்து விடுபடுவது எப்படி?

நம்முடைய உடல் நலத்தைக் காத்துக்கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன. டயட், உடற்பயிற்சி, சுற்றுப்புறச் சூழ்நிலையை சுத்தமாக வைத்தல் என்று எவ்வளவோ வழிகள் உள்ளன.

எல்லாவற்றையும் விட முக்கியமாக மனஅழுத்தம் வராதவாறு உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.

பிரார்த்தனை, நல்ல புத்தகங்களை வாசித்தல், நல்ல மனிதர்கள், நண்பர்களுடன் உரையாடுதல், மகிழ்ச்சியாக, நகைச்சுவையாக பேசுதல் போன்ற செயல்களைச் செய்து பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

இவைதான் மனஅழுத்தத்திலிருந்து விடுபட வழிகள். நோய்களிலிருந்தும் விடுதலைபெறவும் இவைதான் வழிகள். சரி. வரட்டுங்களா?......

நலமுடன் வாழ்க!





.