Monday, October 17, 2011

எதற்குமே சிரிக்க மாட்டேன் என்ற கொள்கை [ No Smiling Policy ]வைத்திருப்பவரா நீங்கள்?

சின்னச் சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத் துளி!

சிலர் எதற்குமே சிரிக்கமாட்டேன் என்ற கொள்கை உடையவராய் இருப்பார்கள். என் நண்பர் ஒருவர் ஒருநாள் என்னிடம் சொன்ன வார்த்தைகள் என் நினைவுக்கு வருகிறது. "சார்! எப்பவுமே சிரிச்சிகிட்டே இருக்கக்கூடாது சார். நம்மள இளிச்சவாயன்னு முடிவு பண்ணிருவாங்க. ஈஸியா
ஏமாத்திருவாங்க சார். பாத்து பக்குவமா இருங்க" அப்படின்னு சொன்னது என் நினைவுக்கு வருகிறது.
வாழ்க்கையைக் குறித்து இவரைப் போன்ற மனிதர்களின் அளவுகோல் எனக்கு வியப்பை தருகிறது. சில அசாதாரணமான சமயங்களைத் தவிர மற்ற எல்லா சமயங்களிலும் நிரந்தர புன்னகை ஒன்று நம் முகத்தில் பூத்திருப்பதில் தவறொன்றுமில்லை.

பொதுவாக நாம் புகைப்படம் எடுக்கும் நேரங்களில் எல்லாம் சிரித்த நிலையில்தான் இருப்போம். புகைப்பட கலைஞர்களும் நம்மை அப்படி புன்னகைக்கும்படி வற்புறுத்துவார்கள். அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் சில மாநிலங்களில் வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக புகைப்படம் எடுக்கும்போது சிரிக்கக்கூடாது என்று சட்டமே போட்டிருக்கிறார்கள் தெரியுமா? வியப்பாக இருக்கிறதா? ஏன் தெரியுமா? போலி வாகன ஓட்டுனர் உரிமதாரர்களை கண்டுபிடிக்கத்தான். பழைய குற்றவாளிகளை அவர்களின் புகைப்படங்களோடு அவர்களைப் பற்றிய முழு விபரங்களோடு கணினியில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். நீங்கள் புதிதாக லைசென்ஸ் எடுக்கும்போது உங்கள் புகைப்படங்களை பழைய புகைப்படங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். பழைய குற்றவாளிகள் புதிதாக லைசென்ஸ் வாங்கினால் சிஸ்டம் அவர்களை காட்டிக்கொடுத்து விடும். உங்கள் முகங்களை உணர்ச்சி அற்ற நிலையில் வைத்திருந்தால் மட்டுமே தொழில்நுட்பரீதியில் இது சாத்தியமாகும். மாறாக நீங்கள் சிரித்துக் கொண்டோ, கோபப்பட்டுக்கொண்டோ அல்லது வேறு எந்த உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தாலும் கணினி உங்களை அடையாளம் கண்டுகொள்ள திணறும். ஆகவே உங்கள் முகங்களை இப்படி சாதாரண நிலையில் (Neutral Facial Expression) வைக்கும்படி வற்புறுத்துகிறார்கள்.

கணினிக்கு சரி. நம் வாழ்கைக்கு இந்த கொள்கை ஒத்து வருமா? நிச்சயமாக இல்லை. நாம் ஒன்றும் இயந்திர மனிதர்கள் இல்லை. நமக்கு இதயம் என்று ஒன்று இருக்கிறது. நீங்கள் எப்படிப்பட்ட மனிதர்கள் என்பதை உங்கள் முகமே காட்டிக்கொடுத்து விடும். நீங்கள் நல்லவரா அல்லது தீயவரா? என்பதை உங்கள் முகத்தை வைத்து கண்டுபிடித்து விடலாம். ஆகவே எப்பொழும் புன்னகையோடு இருங்கள். உங்கள் கண்களை ஏறெடுத்து பாருங்கள். உங்களைச் சுற்றிலும் தேவையுள்ள எத்தனையோ பாவப்பட்ட ஜனங்கள் இருக்கிறார்கள்தானே? அவர்களை நோக்கி செல்லுங்கள். அவர்களுக்கு எவ்வளவோ தேவைகள் உண்டு. அவர்களை சந்தியுங்கள். அவர்களோடு ஒருவேளை உணவை பகிர்ந்து கொள்ளுங்கள் .குறைந்த பட்சம் அவர்கள் பிரச்சினைகளை காது கொடுத்து கேளுங்கள். அட ஒன்றும் வேண்டாம். அவர்களைப் பார்க்கும்போது ஜஸ்ட் ஒரு புன்னகையாவது புரியுங்கள். இது கூடவா உங்களால் முடியாது! உங்கள் ஒரு புன்னகை அவர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சியை தோற்றுவிக்கும். அட நேற்றுவரை இந்த மனிதர் உம் என்று முகத்தை வைத்துக் கொண்டிருப்பார். இன்று நம்மைப் பார்த்து புன்னகைக்கிறாரே என்று உங்களை வியப்போடும் அன்போடும் பார்ப்பார்கள்.

தன்னலமாக வாழாதிங்க! கொஞ்சம் பொதுநலத்தோடும் வாழ பழகிக்கோங்க ப்ளிஸ். ஆகவே புன்னகை சாதாரண விசயமல்ல அது மனித மனங்களில் மகிழ்ச்சியை கொடுக்கும் மிகச்சிறந்த செயலாகையால் அதை இன்றைக்கே செய்ய ஆரம்பித்து விடுங்கள்.

உங்கள் முகங்களில் புன்னகைப்பூ பூக்கும்போது உங்கள் துன்பப் பூ ஓடிவிடும். மறக்காதிங்க.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

2 comments:

  1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராபின்!

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.