Monday, October 10, 2011

எப்படி வாழ வேண்டும்?

இந்த பேஸ்புக் தலைமுறைக்கு இலக்கியம் என்றால் வேப்பங்காய்தான் என்பது எனக்குப் புரி கிறது. ஆனாலும் சங்க இலக்கியப் பூக்களிலுள்ள சில தேன்துளிகளை உங்களுக்கு பருகக் கொடுப்பது எனக்கு சரி என்று படுகிறது. பருகிய பின் நீங்களும் என் கருத்துக்கு தலையாட்டுவீர்கள் என்று நினைக்கிறேன். தொடர்ந்து படியுங்கள்.

மனிதர்களை இரண்டு வகையாக பிரி க்கலாம். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பவர்கள் ஒரு வகை. இப்படித்தான் வாழவேண்டும் என்பவர்கள் இரண்டாம் வகை. இரண்டாம் வகையினருக்காக சங்க இலக்கியமான தொல்காப்பியம் சில ஆலோசனைகளைச் சொல்கிறது?

என்னவென்று பார்ப்போமா?

பாடலையும் அதன் பொருளையும் தருகிறேன்.

முதலில் பாடல்.

“ பரி வும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊணுன் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்
தானஞ் செய்மின் தனம் பல தாங்குமின்
செய்நன்றி கொல்லன்மின் தீநட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வௌளைக் கோட்டியும் விரசில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லுந் தேகத்துக் குறுதுணை தேடுமின்
மல்லன் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கென. “

பாடலின் பொருள்:

ஆசையையும், ஆசையினால் ஏற்படும் துன்பத்தையும் விட்டொழியுங்கள்: தெய்வம் உண்டு என்று அறிந்துகொள்ளுங்கள்: அறிவுள்ளவர்களை ஆதரியுங்கள். பொய் கூறுவதற்கு பயப்படுங்கள். புறங்கூறலில் ஈடுபடாது (அதாங்க கோள்சொல்லுறது) உண்மையைப் போற்றுங்கள்: புலால் உணவை (அசைவ உணவு) விலக்குங்கள்: உயிர்க்கொலைகளைப் புரியாதீர்கள் (மர்டர் பண்ணாதீங்க): தானம் செய்யுங்கள்: தவம் பல செய்யுங்கள்: செய்ந்நன்றி மறவாதீர்கள்: தீய நட்பினரை இகழந்து நீக்குங்கள்: பொய்சாட்சி சொல்லாதீர்கள்: பயனற்ற சொற்களைப் பேசாதீர்கள்: நல்லோருடன் சேருங்கள்: கெட்டவர்களுடன் சேராதீர்கள்: பிறன்மனை விழைவதற்கு (மற்றவரி ன் மனைவியை செட் பண்றது) அஞ்சுங்கள்: உயிர்கள் யாவையும் நேசியுங்கள் . பாவம் செய்யாதிருங்கள்: பொய், களவு, காமம், அறிவிலார் சேர்க்கை என்பவற்றை விவேகமாக ஒழியுங்கள்: இளமை, செல்வம், யாக்கை (உடல்), நிலையாதன (நிலையற்ற தன்மை) என்னும் உண்மையை நினைவிற் கொள்ளுங்கள்: நாம் வாழுகின்ற நாட்களை எவ்வழியிலும் வீண்நாட்களாக்கி விடாமல் முடிந்தளவில் அறம்புரி யுங்கள்: மேலோர் ஆகுங்கள்: இவ்வாறு வளம் பொருந்திய இப்பூமியில்
வாழ்வாங்கு வாழ்வீர்கள்களாக!

இப்படித்தான் வாழவேண்டும் என்று தீர்மானித்து தொல்காப்பியத்தின் வழிகாட்டுதலின்படி நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைப்போம்.

அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

(எல்லாப் பதிவும் இப்படியே இருக்காது. பயப்படாதீங்க. அப்பப்ப நம்ம வலைப்பூ பக்கம் வர தவறாதீர்கள். இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.)

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

4 comments:

  1. இலக்கியம் வாழ இப்படி சில இடுகைகள் வேண்டும்

    ReplyDelete
  2. பின்னுட்டத்துக்கு நன்றி சகோதரி. உங்களைப் போலவே அந்த ஆதங்கத் த்தினால்தான் அப்பப்ப இதைப் போல இலக்கிய பதிவுகளையும் இடலாம் என்று கருதுகிறேன். பதிவுலகத்துக்கு புதியவனாய் இருப்பதால் சில எழுத்துப் பிழைகளும் சந்திப் பிழைகளும் வருகின்றன. போகப் போக சரிசெய்து விடுகிறேன். பதிவர்கள் பொறுத்தருளவும்.

    ReplyDelete
  3. இடுங்கள் இதுபோல....எனக்கு மின் அஞ்சலில் தெரிவித்துவிட்டால் உடன் வந்துபார்க்கிறேன் நன்றி சகோதரரே.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.