Wednesday, October 19, 2011

உங்கள் வாழ்க்கை உங்களுக்கு திருப்தியளிக்கிறதா?

சின்னச் சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத் துளி:

நான் சிறுவயதாயிருக்கும்போது என் தந்தை ஒரு சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட ஒரு வரைபடத்தை அல்லது ஒரு ஓவியத்தை என்னிடம் தருவார். அது குழப்பி, கலைத்து வைக்கப்பட்டிருக்கும். அதை ஒன்று சேர்க்கவேண்டும் என்று அவர் எனக்குச் சொல்லுவார். நானும் வெகுநேரம் போராடி கடைசியில் ஒன்று சேர்த்து முழு ஓவியமாக அல்லது வரைபடமாக சேர்த்து ஒரு வெள்ளைத்தாளில் பசை கொண்டு ஒட்டி அவரிடம் கொடுப்பேன். அப்போது எனக்கு உண்டாகும் மகிழ்ச்சி இருக்கிறதே. அப்பப்பா! உலகத்தையே வென்றது போல் இருக்கும்.

நம்முடைய வாழ்க்கையும் இதைப்போல பல துண்டுகளாக சிதறி கிடக்கிறது. கல்வி, வேலை, பணம், மனைவி, பிள்ளைகள், குடும்பம், நண்பர்கள் என்று ஒவ்வொரு துண்டுகளையும் நேர்த்தியாய் ஒரு குயவன் பானையை நெய்வது போல அழகாய் நம் வாழ்க்கை வரைபடத்தில் இணைக்கிறோம். சிறு வயது முதல் இதே வேலையைத்தான் நாம் செய்து வருகிறோம். வயது ஏற ஏற ஒவ்வொன்றாய் இணைக்கிறோம்.


இந்த இணைப்பு வேலைக்கு இரண்டு வகை பசைகளை உயயோகிக்கிறோம். நன்மை எனும் பசை ஒன்று. தீமை எனும் பசை ஒன்று. நன்மை எனும் பசையில் உள்ள கலவை நல்ல எண்ணங்கள், நற்செயல்கள், நன்றியறிகிற தன்மை, பிறருக்கு தீங்கு விளைவிக்காமை முதலிய இன்னும் பெரிய லிஸ்ட்டே போட வேண்டிய அளவுக்கு உள்ள நன்மையான காரியங்களை உள்ளடக்கியது.

அதேபோல தீமை எனும் பசையில் உள்ள கலவை தீய எண்ணங்கள், தீயசெயல்கள், நன்றியறிதலில்லாத தன்மை, பிறருக்கு எப்போதும் தீங்கு விளைவித்தல் முதலிய வேறு என்னென்ன கெட்ட காரியங்கள் உண்டோ அத்தனையைம் உள்ளடக்கியது.

எந்த பசையை உபயோகிக்கவும் உங்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எந்த பசையை நீங்கள் உபயோகிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் வாழ்க்கை இன்பமயமாகவோ அல்லது துன்பமயமாகவோ அமையும். இது நிதர்சனமான மறுக்க முடியாத உண்மை. நீங்களே உங்கள் வாழ்க்கையை அலசி ஆராய்ந்து பார்த்தால் நான் சொல்வதில் உள்ள உண்மை உங்களுக்கு விளங்கும்.

இந்த இணைக்கும் வேலையில் சில நேரங்களில் தவறு நேரிடுகிறது. அப்போது அதனால் ஏற்படும் இன்னல்களினால் துன்பமுறுகிறோம்.

எத்தனை துண்டுகளை எப்படி இணைக்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் உங்கள் வாழ்க்கை. சிலர் இந்த துண்டுகளை காற்றில் பறக்கவிட்டு விடுகிறார்கள். துன்பமுற்று அலறுகிறார்கள்.

சிலர் நேர்த்தியாய் ஒன்று சேர்த்து இன்பமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

எல்லா துண்டுகளையும் ஒரு மனிதன் இணைக்க முடியுமா? முடியாது. ஏன்? என்று கேட்கிறீர்களா?

நீங்கள் எல்லா துண்டுகளையும் இணைக்க வேண்டுமென்றால் அங்குதான் இறைவனோடு உள்ள தொடர்பு குறிதத விஷயம் வருகிறது. நம் வாழ்க்கையில் கடவுளுக்கென்று ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை வேறு யாராலும் நிரப்ப முடியாது. சிகரெட்டோ, மதுவோ, மாதுவோ, சினிமாவோ வேறு எதுவும் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது.

முடிவாக, நம் வாழ்க்கை வரைபடத்தில் கடவுளுக்கென்று ஒரு வெற்றிடம் உண்டு. அதை நிரப்புகிற வரை நமக்கு வாழ்க்கை திருப்தியளிப்பதில்லை.

இப்போது புரிகிறதா? ஏன் நமக்கு வாழ்க்கை திருப்தியளிக்கவில்லை என்று.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

No comments:

Post a Comment

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.