Saturday, October 22, 2011

உங்கள் இதயத்தை டீ-பிராக்மெண்ட் (Defragment) செய்துவிட்டீர்களா?

சின்னச் சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத்துளி:


கணினியில் டீ-பிராக்மெண்ட் என்ற வார்த்தையை கிட்டத்தட்ட கணினி வைத்திருப்பவர்கள் அல்லது கணினியில் வேலை செய்பவர்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்காக ஒரு சிறு விளக்கம்.



கணினியில் நாம் பதியும் தகவல்கள் எல்லாமே கணினியில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பதியப்படும். துண்டு துண்டுகளாக வெவ்வேறு இடங்களில் பதியப்படும் தகவல்கள் குப்பைகள் போல் நிறைந்து, நாளாக நாளாக என்ன ஆகும் என்றால் ஏதாவது ஒரு தகவலை நாம் தேடும்போது கணினி திணறத் தொடங்கும். கணினியில் உள்ள தகவலை தேடும் ஹெட் பகுதி மிகவும் கஷ்டப்பட்டு தகவலை தேடி எடுத்து நமக்குத் தருவதால் மிகுந்த காலதாமதமாகும். கணினியின் வேலை செய்யும் திறன் குறையத்தொடங்கும். அடம்பிடிக்கும். அப்போது தான் டீ-பிராக்மெண்ட் செய்வது அவசியமாகிறது. கணினியில் உள்ள ஒரு புரோக்ராமை (விண்டோசில் அது Default ஆகவே இருக்கும்) நாம் செயல்பட கட்டளையிடும் போது அது டீ-பிராக்மெண்ட் செய்யத்தொடங்கும். ஆங்காங்கே உள்ள பைல்களை எல்லாம் ஒவ்வொரு குழுவாக சேர்த்து வைக்கும். இது வெகு நேரமாக நடைபெறும். ஒரு மணி நேரம் கூட ஆகலாம். குழுரீதியாக சேர்த்து வைக்கும் வேலை முடிந்து விடுவதால் இனி நாம் புதிதாக உருவாக்கி பதியும் பைல்கள் அந்த குழுவில் வரிசையாக அடுக்கி வைக்கப்படும். ஆகவே ஏதாவது பைலை நாம் தேடும்போது எளிதாக தேடித் தரும். கணினியின் வேகம் கூடியிருப்பதை நாம் கண்டுகொள்ளலாம்.

நம்முடைய இதயத்தை கணினியின் நினைவகத்துடன் (ஹார்ட் டிஸ்க்) ஒப்பிடலாம். கணினியின் நினைவகத்தில்தான் நாம் கணினியில் சேமிக்கும் ஒவ்வொரு தகவலும் சேமிக்கப்படுகிறது. அதே போல்தான் நம்முடைய நினைவுகளும், நினைவெச்சங்களும் இதயத்தில்தான் சேர்த்து வைக்கப்படுகின்றன.


கணினியைப் போல நம்முடைய இதயத்திலும் குப்பைகள் போல தேவையில்லாத எண்ணங்களால் நிறைந்து ஒரு கட்டத்தில் சிந்தனைகளும் அசுத்தமான சிந்தனைகளாகி செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது. அதைத்தான் நாம் டென்ஷன், மன அழுத்தம் என பலபேரிட்டு அழைக்கிறோம். இந்நிலையில்தான் நம்முடைய இதயத்தை டீ-பிராக்மெண்ட் செய்யவேண்டிய நிலை உருவாகிறது. நல்ல புத்தகங்களை வாசித்தல், சிறந்த மனிதர்களிடம் ஆலோசனை பெறுதல், தெய்வபக்தி முதலிய காரியங்களால் நாம் நம்முடைய மனதை (இதயத்தை) டீ-பிராக்மெணட் செய்ய அர்ப்பணிக்கும்போது நம்முடைய இதயமும் சுத்தமாகி தெளிந்த கண்ணாடி போல் ஆகிறது. வாழ்க்கையும் இனிக்கிறது.

என்ன உங்கள் இதயத்தை டீ-பிராக்மெண்ட் செய்ய கிளம்பி விட்டீர்களா?

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

2 comments:

  1. எளிமையாகப் புரிய வைத்து விட்டீர்கள். நல்ல உதாரணம்.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.